Wednesday, August 31, 2011

இருத்தலியல்



ஹைடென்ஷன்
ஒயர்களில் கூடு கட்டும்
வீரமிகு குருவிகள்
கைதட்டலுக்குப்பயந்து
வீசிப்பறக்கின்றன

கட்டிட உச்சிகளின்
சிற்பப் பிதுக்கங்களிலும்,
மதில் மேல் நடந்து கொண்டும்
சிந்தனை செய்யும் பூனைகள்
சிறு துளி நீருக்குப்பயப்படுகின்றன.

சூரியனின் எலும்புகளை
தன் குலைத்தல்களாலேயே
பிறாண்டி எடுக்கும் நாய்கள்
கல்லெறிக்குப்பயந்து
ஓடி ஒளிகின்றன.

காட்டையும் துவம்சம்
செய்யும்
மாமத ஆனைகள்
முழ நீள அங்குசத்திற்கு
அடங்கி நிற்கின்றன

அங்கு கில்லட்டின்களை
சாணை பிடிப்பவர்கள்
புறா இறகு வைத்து
காது குடைந்து
கொண்டிருக்கின்றனர்

மானுடத்தைப் புரட்டிப்போடும்
இலக்கியம்
ஒரு துளி பேனா மையைக்
கண்டு விக்கித்து நிற்கிறது.




.

Saturday, August 27, 2011

குற்றமுள்ள குக்கீகள் (cookies)



உனது செல்பேசியைக்
கொந்த முயன்றதில்
எனது சில நழுவிய அழைப்புகளும்
கூந்தல் பராமரிப்பிற்கான
குறுஞ்செய்திகளும்
மட்டுமே கிடைத்தன

உனது மின்னஞ்சலை
புகுந்து படித்ததில்
சில எரிதமும்,
எண்ணவே இயலாத
அளவு பணப்பரிசு
அஞ்சல்களும்
மட்டுமே கிடைத்தன

உனது இணைய
அரட்டைகளை
இடைமறித்து
வாசித்துப்பார்த்ததில்
கட்டுப்பட்டித்தன யுவதியின்
சொல்லாடல்கள்
மட்டுமே கிடைத்தன

உனது சமூக
வலைத்தளங்களின்
பகிர்வுகளில்
எந்த சுவாரசியமுமற்ற
பொதுவான விஷயங்கள்
மட்டுமே கிடைத்தன

எனக்குள்
அழிக்க இயலாத
குற்றமுள்ள
குக்கீகளாய் (cookies)
இவையனைத்தும்
மண்டிக்கிடக்கின்றன
எப்போதும்.


.

Wednesday, August 24, 2011

நூலிழை



கவிதைக்கும்,பொய்க்கும்
உள்ள தூரம்

கனவுக்கும்,நனவுக்கும்
உள்ள தூரம்

நிழலுக்கும்,நிஜத்திற்கும்
உள்ள தூரம்

ஒப்பனைக்கும்,இயல்பிற்கும்
உள்ள தூரம்

அடங்கலுக்கும்,மீறலுக்கும்
உள்ள தூரம்

மனதிற்கும்,நினைவிற்கும்
உள்ள தூரம்

சொல்லுக்கும்,பொருளுக்கும்
உள்ள தூரம்

விழிப்பிற்கும்,உறங்கற்கும்
உள்ள தூரம்

உனக்கும் எனக்கும் இடையே
உள்ள தூரம்….


.

Saturday, August 20, 2011

கல் நெஞ்சு



தவளையின் முதுகில்
கல்லைக்கட்டி அதை
எம்பச்செய்தேன்

வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகளைப் பிய்த்துவிட்டு
அதைப் பறக்கச்செய்தேன்

ஊரிக்கொண்டிருக்கும்
எறும்புகளின் பாதையில்
ஆழமாகக் கோடிழுத்து
அவற்றை அலைபாயச் செய்தேன்

திருப்பிப்போடப்பட்ட
ஆமைகளின்
வயிற்றுப்பகுதியில்
கால் மிதிபட
அவற்றின் மீதோடினேன்

தமது தொண்டைக்குள் மட்டும்
ஒலியெழுப்பி முயங்கிக்கொண்டிருந்த
புறாக்களைத் திடீரெனப் பயங்காட்டி
பறக்கச் செய்தேன்

குட்டி நாயின் காதுகளை
வலிக்குமளவு திருகி
அவற்றை ஊளையிடச் செய்தேன்

என் நெஞ்சு முழுக்க
இப்போது நான் கல் சுமந்து
திரிகின்றேன்.


Wednesday, August 17, 2011

ஆட்டோ ஃபிக்ஷன்



காகத்திற்குப் பசி
களவு பிடிக்காத காகம்
பாட்டியிடம் வடை கேட்டு
இரைஞ்சி நின்றது

பாட்டியும் இரங்கி
ஒரு வடையிலிருந்து
சிறு விள்ளலைக்கொடுத்தாள்

மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்ட
காக்கை மரத்தின் கிளையில்
அமர்ந்து உண்ணத்தொடங்கியது.

கீழிருந்த நரி எனக்கு?
என வினவியது
மீதமான இன்னொரு விள்ளல்
பாட்டி வைத்திருக்கிறாள்
அவளிடம் கேள் என்றது
காக்கை.

ஏமாற்றுவதை விட
தோற்றுப்போதல்
எனக்குப்பிடித்தது என
மீளத்திரும்பி நடந்த
நரியும் பாட்டியிடம்
இரைஞ்சி நின்றது.

வடை மீதமில்லை
பாட்டியிடம்
இப்போது
எனை நோக்கி
வந்து கொண்டிருக்கிறது
அந்த நரி.


Saturday, August 13, 2011

தேவதையும் கோடரியும்



மரம் வெட்டி
தான் தொலைத்த கோடரி
வேண்டி நின்றான்
தேவதையிடம்

தொலைத்த கோடரி தவிர
வேறெந்த உலோகக்கோடரியும்
வேண்டேன் என்றான் அவன்

எந்தக்கோடரியும்
மரத்தை வெட்டவே பயன்படும்
ஆதலால் உனக்கு கோடரிகள்
நான் கொடுப்பதிற்கில்லை

கனி தரும் கன்றுகள்
யாம் தருவோம்
பயிர் செய்து பிழைத்துக்கொள்
என்றாள் தேவதை.

மரக்கன்றுகள் வாங்கி
அவன் சென்று விட்டான்
கொடுத்த மகிழ்வில்
தேவதையும்
மறைந்து விட்டாள்.

இப்போது என்
கையில் இருக்கிறது
அந்தக்கோடரி.


.

Wednesday, August 10, 2011

கிறீச்சிடும் பறவை



நாள் தவறாமல்
வந்து என் ஜன்னல்
கம்பிகளில் அமர்ந்து
ஒரு சிறு பறவை
கிறீச்சிடுகிறது
என் கவனத்தைக்கவர.

எதை ஞாபகப்படுத்த ?
மறந்துபோன
இயற்கையுடனான
நட்பையா ?
அல்லது கடந்து சென்ற
காலங்களை
மீள் நினைவூட்டவா ?

எனினும்
நாளையும் வரும்
என்ற எதிர்பார்ப்பை
என்னில்
ஏற்படுத்துவதைத்தவிர.
அது வேறொன்றும்
செய்வதில்லை.

மேலும் அது
ஒரு இறகையும்
உதிர்த்துச்செல்வதில்லை
எனக்கென.


.

Saturday, August 6, 2011

தாகம்



காக்கை பறந்து வந்து
என் வீட்டுத்திண்டில் அமர்ந்தது.
அருகில் இருந்த குடுவையில்
அடியில் மட்டுமே கொஞ்சம் நீர்.
எப்படித்தான் எடுக்கும்
என்று பார்த்துக்கொண்டிருந்தேன்
அது குடுவையின் அருகே
வந்தமர்ந்து வெறுமனே
பார்த்து விட்டு
பின் நடை பழகியது,
எதையும் எடுத்து
குடுவைக்குள் போடவுமில்லை
நீரும் மேலே வரவில்லை
பறக்கும் காக்கைக்கு
ஒரு சிறிய குடுவையும்
அதன் நீரும் பெரிதா ?
காக்கை பறந்து சென்றுவிட்டது
இப்போது எனக்குத்
தாகம் எடுக்கிறது.


.

Wednesday, August 3, 2011

ஆர்வமழை



மழையில்
எந்த மழை சிறந்தது?
சிறு தூறலா,
இல்லை அடித்துப்பிளக்கும் மழையா?
வெறுமனே போக்குக்காட்டி விட்டு
போகும் மழையா?

அல்லது
சிறிதும் எதிர்பார்க்காத கணத்தில்
கிளையிலிருந்து
சட்டெனப்பறந்து போகும்
பறவை போல,
தூறிக்கொண்டிருந்து விட்டு
சட்டெனக்கலையும் மழையா?

அல்லது
நேற்றுப்பெய்த மழையா ?
இல்லை, அது கொஞ்சமே பெய்தது.
இன்று பெய்து கொண்டிருக்கும் மழையா?
அது இன்னும் பெய்து முடியவில்லையே
பிறகெப்படி சொல்வது ?

அன்று பெய்த மழை
நேற்று பெய்த மழை
இன்றும் பெய்யும் மழை
நாளைக்குப் பெய்தாலும்
பெய்யும் மழை
எதுவானால் என்ன ?

அதுவும் மேலிருந்து
கீழிறங்குவதைப்
பார்ப்பதில் தான்
நமக்கு
எத்தனை ஆர்வம்...?!


.