Wednesday, January 23, 2013

என் மகளின் நாட்குறிப்பு



என்னால் முன்புபோல் சோஃபாவில்
எல்லோர் முன்னிலும்
இப்போதெல்லாம் காலை நீட்டி அமர முடிவதில்லை

ஏழாம் வகுப்பில் முதலிடம் பெற்றதெற்கென
என் அப்பாவைக் கட்டிப்பிடித்து முத்தம்
கொடுத்ததுபோல் இப்போதும்
அங்ஙனமே செய்ய நினைப்பது முடிவதில்லை

என் தம்பியுடனான தலையணைச் சண்டைகளை
இப்போதெல்லாம் நடத்த முடிவதில்லை

அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்குச் செல்வதுகூட
இப்போதெல்லாம் ஆண் துணையின்றி முடிவதில்லை

நடைபாதைக் கடையில்
தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு
தேநீர் அருந்துவதும்
இப்போதெல்லாம் முடிவதில்லை

தற்செயலாகக் காணக்கிடைத்த
என் மகளின் நாட்குறிப்பின்
பக்கங்களைப் புரட்ட
இதற்கு மேலும்
என்னால் முடியவில்லை.


.

Wednesday, January 16, 2013

உதிரச்சுவடு




விடுதலை

எப்போதும் சில்லறைக்கு
சண்டை போடும் நடத்துநர்,
கூடுதல் சாம்பார் கேட்டால்
ஊற்றியபின் இலையின் நடுவில்
குத்தி விட்டு செல்லும் பரிசாரகன்,
இரண்டு நாள் வாடகைத்தாமதத்திற்கு
கூடம் வரை வந்து கூசும்வார்த்தைகளால்
திட்டிச்செல்லும் அறைஉரிமையாளன்,
நீ கேக்ற சீப் ப்ராண்ட் இல்லைஎன்று
எப்போதும் பரிகசிக்கும் பார் டெண்டர்,

இப்படி
எங்கு சென்றாலும்
யாரேனும் என்னைத்தெரிந்தவர்கள்
இருந்துதான் தொலைக்கிறார்கள்

 
யாசிப்பு

தன்னை முடித்துக்கொள்ள
நினைத்த கவிதை
ஒருபோதும் எழுதுபவனை
யாசித்து நிற்பதில்லை


உதிரச்சுவடு

உருகி ஓடும் மெழுகில்
தம்மினத்தின் உதிரச்சுவடு
தேடி அலையும் விட்டில்கள்


பிணம்

வீட்டில் பிணம்
விழுந்து கிடந்தாலும்
பசிக்கத்தான் செய்கிறது



Thursday, January 10, 2013

கருக்கலைப்பு



முட்டையை உடைத்து
இரண்டு கருக்களையும் ஒன்றாகக் கூட்டி
தலைக்குத் தேய்த்து வர முடி நன்றாக வளரும்

விடிகாலையில் வெறும் வயிற்றில்
முட்டையை உடைத்து அப்படியே விழுங்கி, பின்
உடற்பயிற்சி செய்து வர புஜபலம் கூடும்

வேண்டாத கொழுப்பு உம் உடலில் சேராதிருக்க
முட்டையின் மஞ்சட்கருவை நீக்கிவிட்டு
வெள்ளைக்கருவை மட்டும் உட்கொள்தல் வேண்டும்

இவையெல்லாம் செய்வதை விடுத்து
அப்படியே அடைக்காக்க விட்டுவைத்தால்
அதிலிருந்து ஒரு கோழிக்குஞ்சு கூட வரும்.

.

Friday, January 4, 2013

தூரம்



அவனிடம் எந்தக் கடைக்கோ
இல்லை கோவிலுக்கோ
இல்லை பஸ்ஸ்டாண்டுக்கோ
வழி கேட்டால் கூட
கலைச்செல்வி வீடு இருக்குல்ல மச்சான்
அதிலருந்து என் வீடு உள்ள
தூரம் போல இரண்டு மடங்கு
இல்லை ஒரு மடங்கு இருக்கும்
இல்லை அதில பாதி தான்
என்பான் எப்போதும்.

உனக்கும் கலைச்செல்விக்கும்
எவ்வளவு தூரம்டா மச்சான்
என்று கேட்டால் மட்டும்
அவனிடம் கட்டி நிற்கும் மௌனம்
ஒளியாண்டுகள் தொலைவு நீளும்.