ஓநாய் பரபரவென அலைகிறது.ஆட்டுக்குட்டி திருதிருவென விழிக்கிறது.
அசட்டுத்தைரியத்தில் மாற நினைக்கும் அது கடைசியில் அடங்கித்தான் போகிறது.
புலி’யின் உறுமலில் நல்ல மலையாள வாடை லால் என்ற பேருக்கேற்றாற்போல. படத்தின் முதற் காட்சியிலிருந்து
கடைசியில் பங்குபெற்ற கலைஞர்களின் பெயர்கள் எழுத்துகளாக உருண்டு செல்லும்வரை ராஜா
ராஜா ராஜா மட்டுந்தான் இந்தக்காட்டில் ஆட்சி செய்கிறார். பெயர்ப்பலகையில்
‘சிங்கம்’ ராஜா என்று வருமென எதிர்பார்த்து ஏமாந்தேன்.வழக்கமான தமிழ்த்
திரைப்படத்திற்குரிய உச்சக்கட்ட காட்சிதான் என்றாலும் ராஜா’ங்கம் நம்மை மந்திபோல
இருக்கை விளிம்பில் தொத்தி நிற்க வைக்கத்தான் செய்கிறது
இசை விமர்சகர் ஷாஜி’க்கு அவரின் இயல்பிற்கு கொஞ்சம் பொருந்தாத பாத்திரம்.
இசைப்பவனுக்கு துப்பாக்கி பிடிக்கத்தெரியாது :).
இத்தனை வலுவான கதாபாத்திரத்திற்கு ஷாஜியால் புலிக்குட்டியின் பாங்கைக்கூட காட்ட
இயலவில்லை. டீப்பாயில் கிடக்கும் அந்தப்புத்தகத்தை
புரட்டிக்கொண்டே வசனம் பேசுவது , என்னவோ அவங்க வீட்டுக்கு காப்பி குடிக்க வந்தது
போல உடல்மொழியில் அத்தனை கலவரமே இல்லை.அதேபோல் பள்ளிக்கூடப்பிள்ளை போல விரல்களை நீட்டி நீட்டி இபிகோ
செக்ஷனைப்பற்றிப்பேசுவது என..! மெயின் வில்லனாக வருபவருக்கு
அதற்கான உடல் மொழி கொஞ்சமும் வாய்க்கவில்லை. கூடவே மூத்திரப்பையை வேறு
சுமந்துகொண்டே செல்கிறார். அவரைப்பார்த்து பயமோ இல்லை பரிதாபமோ கூட ஏற்படவில்லை
நமக்கு. மானைப்பிடிக்க நினைக்கும் ஓநாய்க்கு ஒருபோதும் அது விரைவாக ஓடும்போது
பிடிக்கவே முடியாது. இரவு முழுதும் அதன் கூடவே படுத்திருந்து காலை வேளையில் அதன்
மூத்திரப்பை நிறைந்து காணும்போது விரைவில் துரத்திக் கொன்றுபோடுவது சுலபம். அதையே
தான் இந்த ஓநாயும் செய்கிறது கடைசியில்.
அத்தனை நேரமும் ஒரே ஒரு வார்த்தை, இல்லையெனில் சைகை மூலமே
பேசிக்கொண்டிருக்கும் ஓநாய் அந்த கல்லறைச்சுவரின் அருகே அமர்ந்து மூன்று-நான்கு
நிமிடத்திற்கும் கூடுதலாக கண்ணிமைக்காமல் அதன் கதையைச்சொல்கிறது. பின்னணியில்
இசைக்கும் அந்த அழுத்தமான வயலின் பார்ப்போர் மனதை அறுத்து நம்மையறியாமல் கண்ணில்
நீர் வரவழைக்கிறது. கதையை முடிக்கும்போது வரும் இசை கேட்டுத்தான் அந்த ஓநாய்
அழுதிருக்க வேண்டும். இசையின்றி அழவைக்கும் முயற்சிகள் எப்போதும் வெற்றி
பெறுவதில்லை. பீத்தோவென்,மொஸார்ட் என்றெல்லாம் பேசிக் கொண்டேயிருக்கும் நமக்கு
நம்ம கூடவே இருக்கிறானய்யா நம்ம ராஜா. அவனைத் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம்
அழுவதற்கும், கொண்டாடுவதற்கும்.
திரையில் எந்தக்காட்சியில் ராஜா இல்லை என்று தேடித்தான் பார்க்கவேண்டும்.
அத்தனை நிசப்தமான நள்ளிரவில் தொடர்ந்து இடைவிடாது ஒலிக்கும் சில்வண்டுகளின்
ரீங்காரமும், அனாதையாக நின்றுகொண்டு ஒளியை உமிழ்ந்துகொண்டிருக்கும் அந்த மஞ்சள்
சோடியம் வேப்பர் விளக்குகளும், மெல்ல மெல்லத்தயங்கி பின் ஓங்கி ஒலிக்கும் அந்த
சுவர்க்கோழிகளின் ஒலிகளும் இதுதான் இரவு என்று உறங்கவைக்காது நம்மைப்பரிதவிக்க
வைக்கிறது. என்னவோ எதிர்பாரதது நடக்கப்போகிறது என்று ஒரு தவிப்பிலேயே
அமிழ்த்திவைக்கிறது முன்னணி இசை. பகலில் கூட வரும் காட்சிகளுக்கு தேவையான ஒலி
மட்டுமே கொடுத்திருக்கிறார். காகம் கரைவதும், தூரத்துக்கோயில் மணி அடிப்பதுமென ,
இயல்பாக சப்தங்களை மட்டுமே கொடுத்து காட்சிகளுக்கு உரமேற்றியிருக்கிறார்.
எந்த இடங்களில் இசை தேவையில்லை என்பதை முடிவு செய்துவிட்டு ,அங்கெல்லாம்
இசைக்காது அமைதி காத்து, ஏன் இவ்வளவு மயான அமைதியென நம்மைப்பயமுறுத்தும் இசை.!
தந்தி வாத்தியங்கள் (வயலின் Violin,செல்லோ Cello,டபுள் பாஸ் Double bass) இவையெல்லாம் நம்மை இருக்கையை விட்டு எழாதபடி
சேவகம் பண்ணுகின்றன ராஜாவின் சொற்படி கேட்டு. மெல்லிய அழுகையை உடனே வெளிக்கொணரும்
வயலின், இதயத்தின் அடியாழம் வரை சென்று நம்மையறியாமல் அறுத்துக்கூறு போடும் செல்லோ
மற்றும் அழுந்த ஒலிக்க டபுள் பாஸ் என்று வெளுத்து வாங்கியிருக்கிறார் ராஜா. அடித்து
தாளத்தை உருவாக்க வேண்டியதில்லை , இந்த டபுள் பாஸில் ஒரு முறை இழைத்தால் போதும் ,
அடிமட்ட ஒலி மனதை நிறைத்துவிடும் . ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தை
அதிவேகமாகத் திருப்பும் போது ஏற்படும் அந்த அலைக்கழிக்கும் உணர்வை ஒரு இழைப்பு
உணர்த்திவிடும். ஆனாலும் இது போன்ற அடித்து ஆடும் வன்முறைத்திரைப்படங்களுக்கு
எப்போதும் மிகவும் வலிந்த Percussions வைத்துக்கொண்டு
தான் இசைப்பது வழக்கம். பார்ப்பவனின் கண்களையும் காதுகளையும்
ஒருசேரக்கட்டிப்போடும் அவை. அதற்கெல்லாம் எதுவும் அவசியமில்லை என கம்பியிழைக்கருவிகளை மட்டுமே வைத்துக்கொண்டு நர்த்தனம்
ஆடியிருக்கிறார் ராஜா. விருது நிச்சயம்.
அத்தனை நேரமும் சோகம் இழையோடும் அந்தத்தந்திக்கருவிகளுக்கு கொஞ்சம் ஓய்வு
கொடுத்துவிட்டு கடைசி உச்சக்கட்டக்காட்சியில் அதிரவைக்கும் இசையை
பொழிந்திருக்கிறார் ராஜா. அத்தனை பரபரப்புக்கும் இசை தான் காரணம். மிஷ்கினின் அந்த
மார்ஷியல் ஆர்ட்ஸ் காட்சிகளுக்கு வெறுமனே வாத்தியக்கருவிகள் ஏதுமில்லாது
காற்றைக்கிழிக்கும் இயல்பான சப்தங்களை வைத்துக் கொண்டு படையலே போட்டிருக்கிறார்.
இதே போல ஒரு காட்சி பழஸிராஜா’விலும் வரும். வாட்களின் காற்றைக்கிழிக்கும் சப்தங்கள்
நம்மை இருக்கையின் பின்னில் சாய்ந்து கொள்ளவைக்கும் எங்கே நம்மீது வாட்களின்
வீச்சுகள் பதிந்து விடுமோ என்ற பயத்தில்.
சேவகனுக்குத்தீனி போடுதல் வெகு சுலபம். ராஜா’வை விருந்துக்கழைத்தால்.. ?,அதைச்செவ்வனே
செய்து தான் இருக்கிறார் மிஷ்கின். பழஸிராஜாவிற்குப்பிறகு நல்லதொரு வாய்ப்பு
இந்தப்படத்தில் ராஜாவிற்கு. கிட்டத்தட்ட ‘ஆரண்யகாண்டம்’ போன்ற திரைக்கதை தான்
இங்கும். யுவன் Spanish பின்னணியில்
படம் முழுக்க இசைத்து ஒரு புதிய ட்ரென்டை உருவாக்கினார். ராஜாவோ தமக்கேயுரித்தான
பாணியில் முழு சிம்ஃபொனியைத் தந்திருக்கிறார்.
இடையில் வந்து மாட்டிக்கொண்ட ஆட்டுக்குட்டி ஸ்ரீ’யின் கோபத்தை மௌனமாக
உள்வாங்கிக் கொள்ளத்தான் செய்கிறது ஓநாய். ‘என் குடும்பத்தையே போலீஸ் ஸ்டேஷன்ல
கொண்டுபோய் உக்காத்திவெச்சிட்டாண்டா’ எனும்போது அவரின் இயல்பான கோபமும், சாதாரண
வாழ்க்கை வாழும் நடுத்தர வர்க்கத்தின் ஆற்றாமையும் இழைந்தோடுகிறது. அவரின்
உடல்வாகும் அதற்கேற்றாற்போல் பொருந்திப்போகிறது. Chief Doctor செல்பேசியிலேயே
சொல்லிக்கொடுக்கும் அத்தனை விஷயங்களும் துறை சார்ந்தவைகளாக இருப்பதால்
அக்காட்சிகளில் நாம் கொஞ்சம் மௌனம் சாதிக்கத்தான்
வேண்டியிருக்கிறது.புரியத்தானில்லை. ‘நாம உயிர்
வாழணும்ல அதனால உல்ஃபக்கொல்றது ஒண்ணும் தப்பில்ல’ என்று போலிஸின் ஒரு வார்த்தைக்கு
பயந்து அழும் ஆட்டுக்குட்டியின் அண்ணன் தைரியமாகச்சொல்கிறார்.
படத்தில் ஒவ்வொரு காட்சியும் பரபரப்புடனும் அதே நேரத்தில் சரியான கால
அளவுடனுமே பயணிக்கிறது. கதாபாத்திரங்கள் ஏதும் செய்யாது அனைத்தும் அமைதியாக
இருக்கும்போது அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பவனின் மனதை
தவிப்பிற்குள்ளாக்கும் ஒவ்வொரு காட்சியும் விருந்து. பல்வேறு காட்சிகளில், தொடர்ந்து
வரவில்லையெனினும் கிட்டத்தட்ட அனைவருமே ஒத்துக்கொள்கின்றனர் இனி ஓநாயைப்பிடிக்க
இயலாதென்று. ஒநாயைப்போட்டுத்தள்ளவென ஆட்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறான் அந்தத்’தம்பா.’
அத்தனை பேரையும் சமாளித்து திருப்பித்தாக்குகிறான் ஓநாய். வன்முறை அத்தனை வெளியே
தெரியவில்லை. காட்சிகளில் காண்பிக்காது இசையால் அறுத்துக்கூறு போட்டுவிடுகிறார்
ராஜா. இன்னோவா காரில் பயணிக்கும் அந்தப்பரபரப்பான காட்சிக்கு என்ன பெயரிட்டு
அழைப்பது ?. தோட்டாவை குறைத்து எண்ணிக்கொண்டே கடக்கிறான் அத்தனை பெரிய சாலையையும்.
நமக்கே அந்தக்காரில் பயணித்தது போல கேமரா புகுந்து விளையாடுகிறது. எத்தனையோ
ஆங்கிலப்படங்களில் பார்த்திருக்கும் காட்சி தானெனினும் சலிக்கவில்லை.
இத்தனை பரபரப்பிற்கிடையே கேமராவின் கோணங்கள் நம்மை உலுக்குகிறது.
கதாபாத்திரங்கள் அருகே வந்து பேசும்போது கூட அவர்களின் முகத்தை டைட் க்ளோஸப்பில்
காண்பிக்காது உடலின் சில பக்கங்களை மட்டுமே காண்பித்து அவர்கள் பேசும் வசனத்தை
மட்டும் ஒலிக்கச்செய்திருப்பது நன்று.
ஓநாயை ஏற்றிப்பின்னில் வைத்துக்கொண்டு பைக்கில்
தூரம் கடக்கக்கடக்க ஒவ்வொருமுறையும் அழுத்தமாகக்கூரான கத்தியை வைத்துக்கீறிவிடுவது
போல ஒலிக்கும் அந்த Firefly . Hitchcock இன் Psycho வில் வரும் அந்த தொடர்கொலையின் போது கீறிக்கிழிக்கும் வயலின், இத்தனை
நாட்களுக்குப்பிறகு இப்போது தான் கேட்கிறேன். சிலீரென்று பரவி
ரோமக்கால்களைக்குத்திட்டு நிற்க வைக்கிறது. ஆப்பரேஷனின் போது பிரவாகமாக
ஊற்றெடுக்கும் அந்த கற்றை போல ஒலிக்கும் வயலின். புகுந்து விளையாடியிருக்கிறார்
ராஜா. உயிர் கொடுத்து நிமிர்ந்து நிற்க வைக்கும் இசை. உதவி செய்ய
முடிவெடுக்கத்திணறும் அந்த சீஃப் டாக்டர் வீட்டில் பிணம் விழுந்து கிடக்கிறது.
செகண்டி ஒலிக்கிறது பின்னில். இரண்டுக்கும் பொருந்திப்போகும் இசை அது. ஆப்பரேஷன்
செய்யாது விட்டால் அங்கும் விழப்போகும் பிணம். ஹ்ம்... ஐயா..நீர் தான்யா ஞானி. காட்சிகளின்
இடைவெளியில் நிரப்பவும்,அடுத்த காட்சிக்குப் பயணிக்கவும் மட்டுமே பயன்பட்ட இது நாள்
வரையிலான இசை தோள் கொடுத்து நிற்கிறது படம் முழுக்க.
அத்தனை நேரமும் அழுது தீர்க்கும் வயலின்,அந்தக்கோவில்
வாசலில் இழைந்து இழைந்து ஒலித்துக் கொஞ்சம் ஆறுதல் தருகிறது.மனதுக்கு இதமாக
கொஞ்சநேரமே ஒலிக்கிறது அந்த இசை (ஒலித்தொகுப்பில் Compassion ) Just a sigh of relief.
மனம் மாறி வெளியில் வந்து அந்த இரவில் தோட்டத்தில்
நின்றுகொண்டே இன்ஸ்ட்ரெக்ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கும்போது பின்னணியில்
ஒலிக்கும் அந்தத்தவளைகள்,சில் வண்டுகள் என பயத்தை இன்னமும் அதிகப்படுத்தும்
பிரமாதமான இசை. ஆப்பரேஷன் முடிந்துமான
அந்தச்சிறு Flute Bit , மனதில் அமைதியைக்கொண்டு வந்து சேர்க்கிறது. மிஷ்கின் படம் எடுத்ததே
ராஜாவின் இசைக்குத்தான் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியும் அவருக்கெனெவே
அமைத்து வைத்தது போலவே இருக்கிறது. இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கொடுத்தவற்றிலும்
கூடுதல் இசைத்துணுக்குகள் படத்தில் எங்கெங்கும் பரவிக்கிடக்கிறது. ‘ராக்கம்மா
கையத்தட்டு’வில் கொஞ்சமே முன்னுரை காட்டிய அந்தக்கற்றை வயலின்கள் இங்கு மூன்று
மணிநேர முழுக்கச்சேரியே செய்திருக்கின்றன.
தொடர்ந்தும் ஒலித்துக்கொண்டிருக்கும் இசை சடாரெனெ நிறுத்தப்படுகிறது
என்றால், அதைத்தொடரும் காட்சியில் என்னவோ தகாதது நடக்கப்போகிறது என்றே நம்பவைத்து
விடுகிறார் இயக்குநரும் இசை அமைப்பாளரும். இருப்பினும் ஒவ்வொரு தடவையும்
சிலிர்த்துப்போகிறது காட்சிகள் நகரும் விதம். கல்லறைக்குள் தேடும் காட்சியில் அந்த
ஷெனாய் Very Much Intriguing. பின்னர் குடும்பம் ஒன்றாகச்சேர்ந்தபின் பியானோவில் தொடங்கி ஒலிக்கும் Somebody Loves us all , ராஜ பாட்டையடா. துப்பாக்கிச்சூட்டை முன்னின்று அந்த திருநங்கை வாங்கிக்கொண்டு
ஓநாயைக் காப்பாற்றும் காட்சியில், ஆட்டுக்குட்டி செய்வதறியாது திருதிருவென விழிக்கிறது.
அவனைப்போலவே பார்வையாளனாகிய நாமும். (திரையில் அந்தக்காட்சிகள் வரும்போது என்
செல்பேசியில் அந்தப்பத்து இசைக்கோவைகளையும் மீள மீள ஒலிக்க விட்டுக்
கேட்டுக்கேட்டு ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தேன்)
இதே போல ஒரு மருத்துவப்பின்னணி கொண்ட ‘இதயம்’
படத்தில் வந்த அந்த தீம் ம்யூஸிக் இன்னமும் என் மனதுக்குள்
நின்று கொண்டேதானிருக்கிறது. இதயத்துடிப்பை முதன்மையாகக் கொண்ட அந்த இசை. இவருக்கு
வயதாகவே ஆகாதா..?! ஹ்ம்,,!? இத்தனை ஆர்ப்பரிப்போடு மிரள வைத்து வன்முறையைக் கிளப்பும்
இசை ‘உதயம்’ (தெலுங்கில் ‘சிவா’)வில் தான் பார்த்திருக்கிறேன். இரண்டுமாகக்கலந்து
ஒலிக்கிறது இங்கு.
சற்றும் எதிர்பாராத காட்சிகள் கொண்ட இடைவேளைக்கு
முந்தினதான பகுதி , பின்னரும் அதே பாங்கில் தொடரும் பின் பகுதி அந்த ஷாப்பிங்
மாலின் கீழ்த்தளத்தில் வந்து சேர்ந்ததும் இப்படித்தான் முடியப் போகிறது என்பது போல நொண்டியடிக்கிறது.
அப்படித் தோணவிடாமல் பரபரவென இசைக்கும் அந்த செல்லோ இசை நம்மை இருக்கையின்
நுனிக்குக்கொண்டுவந்து உட்கார வைக்கிறது. ஒநாய் அரற்றுகிறது , நிலை கொள்ளாமல்
தவிக்கிறது. பிரமாதமான எடிட்டிங்கும், மார்ஷியல் ஆர்ட்ஸுமாக இன்னும் கொஞ்ச நேரம்
நீளாதா எனத்தோணவைக்கிறது.
அத்தனை பெரிய அறுவை சிகிச்சைக்குப்பிறகு எல்லோரையும் அடித்து
வீழ்த்துவதும், துப்பாக்கியால் குறி பார்த்துத்தவறாமல் சுடுவதும் ,தெளிவான
யுக்திகளும், திட்டம் போட்டு அந்தப்பார்வையிழந்த குடும்பத்தை சேர்த்துவைக்க முயல்வதும்
நாம் இன்னமும் தமிழ்த்திரைப்படந்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை
உணர்த்தத்தான் செய்கிறது. கூடுதலாக இத்தனை அழகான திரைப்படத்தின் இடைவேளையில் ‘இனி
சந்திரமுகியின் ஆட்டம் ஆரம்பம்’ என்பன போன்ற வணிகக்குறியீடுகள்.
எனினும் உருவாக்க அழகியலில் மிஷ்கினை மிஞ்ச இனி யாரும் இல்லை, சில படங்கள்
தோல்வியாக இருந்தபோதும் அதன் உருவாக்கம், தொய்வின்றிச்செல்லும் திரைக்கதை, வலிந்து
திணிக்காத காட்சிகள் என அழகாகச்செய்து காட்டியிருப்பார். வகை தொகையில்லாத கொலைகள், அதீத வன்முறைக்காட்சிகள், என அவ்வப்போது
மெஜீஷியனின் தொப்பிக்குள்ளிருந்து வெளிக்கிளம்பும் முயல் போல வெளித்தெரியும் குறைகள்.
இருப்பினும் அத்தனை குறைகளையும் மூடிமறைத்து கட்டி எழுப்பி நிற்க வைக்கிறது சிங்கமும்
அதன் கர்ஜனையுமாக இசை. எத்தனையோ காட்சிகளைப்பற்றி எழுத நினைத்தாலும் இசை தான் முன்
வந்து நிற்கிறது.
‘எனக்கொரு கதை சொல்லுங்க’ என்று தொடர்ந்து
கேட்டுக் கொண்டேயிருக்கும் குழந்தைக்குக் கல்லறையில் வைத்து கதை சொல்லுதல்
யாருக்கும் வரக்கூடாதுதான். இங்கு ஓநாய் போல ஊளையிட்டு அழுகிறான் அந்த
ஆட்டுக்குட்டி. (கல்லறைக்காட்சியில் ட்ரெம்ப்பெட்டும், செல்லோவும் சேர்ந்து
அறைகின்றன. இந்தப்பார்வையிழந்த குடும்பத்தை இப்படி ஒரு கதிக்கு ஆளாக்கிவிட்டானே
என்று வெறுப்பு மேலிடுகிறது நமக்கு.) கடைசிக்கு மிஞ்சுவது அந்தக் குழந்தையும் ஆட்டுக்குட்டியும் மட்டுமே. தனித்து
விடப்பட்ட காட்டில் மிக எளிதாகக்கொல்லப்படும் உயிர்கள் இங்கு தப்பிப்பிழைத்திருக்கின்றன.