Saturday, November 19, 2016

ராணுவவீரன்

எதுக்கெடுத்தாலும் ராணுவவீரன் எல்லைல நின்னு போராட்றான். ஒனக்கென்னடா வரிசைல நிக்க வலிக்குதுன்னு கெளம்பறது. எனக்குத்தெரிந்து ராணுவத்துல சேருவதுங்கறதெல்லாம் நிரந்தர வேலை,போதுமான அளவு சம்பளம், எக்ஸ் சர்வீஸ்மென் என்ற பலன்கள்,மேலும் பென்ஷன் கிடைக்கும்.அவ்வளவு தான். மேலும் அதற்கென அத்தனை பரீட்சைகள் எழுதி தேர்வாக வேணும்ங்கற அவசியம் இல்லை. கொஞ்சம் உடல்தகுதி பெற்றிருந்தால் போதும்,ரெண்டு மாசம் ஜிம் போய்,ஒக்காந்து சாப்ட்டு உடம்பத்தேத்திக்கிட்டு செலக்ஷனுக்கு போனால் போதும் என்ற மனநிலையில் சென்று ராணுவத்தில் சேர்ந்தவர் தான் அதிகம். 

எனது நெருங்கிய நண்பனுக்கு அத்தனை உடற்தகுதியோ,இல்லை கட்டுமத்தான உடலோ கிடையாது. இத்தனைக்கும் மரக்கறி மட்டுமே உண்டு வாழும் சீவன் அது, கெமிஸ்ட்ரில்லாம் படிச்சான் மதுரைல. எங்கயும் செலக்ட் ஆவல. அத்தனை பொதுத்தேர்வெல்லாம் எழுதிப் பாத்தான் ஒண்ணும் வேலக்காவல. கண்ணில் குறைபாடு எப்பவும் கண்ணாடி அணிந்து கொண்டிருப்பான். எனக்குத்தெரிந்து இரண்டு வயதிலிருந்தே கண்ணாடி தான். அதைக் கழற்றினால் எதுவுமே தெரியாது. காது ஏகத்துக்கு மந்தம். அதிக சத்தம் கூட அவனுக்கு கேட்காது, அப்படிப்பட்டவனை கோவையில் நடந்த ராணுவ செலக்ஷனுக்கு அவனோட அப்பா அனுப்பி வைத்து உள்ளில் கையூட்டு கொடுத்து ராணுவத்தில் சேர்த்தேவிட்டார். அவனைப் பொருத்தவரை ஒரு வேலை, குடும்பத்துக்கு தேவைக்கான சம்பளம்ன்னு அவனுண்டு அவன் வேலையுண்டுன்னு இருக்கிறான். உள்ளுக்குள் தாஜா செய்துகொண்டு அதிகம் பிரச்னையில்லாத இடங்களில் இருந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருப்பான்.

இப்ப இங்க ரியல் எஸ்டேட்ல வேல செய்யும் ஒரு பையன் அதே மாதிரிதான் காலை அஞ்சு மணிக்கு எழுந்து ஓடுவான். இன்னும் ரெண்டு மாசத்துல செலக்ஷன் வருது என்பான். வேல நிரந்தரம் இல்லை ராம், அதான் எப்டியாவது சேர்ந்து கொஞ்ச காலத்த ஓட்டிட்டு அப்பால வீஆரெஸ் வாங்கிட்டு வந்துரலாம்னு இருக்கேன் என்று வெளிப்படையாகவே சொல்வான். அதான் அவங்களும் நம்மப்போல சாதாரண ஆட்கள் தான். பெரிசா வானத்துல இருந்தெல்லாம் குதிக்கிறவன்லாம் இல்லை.பெரும்பாலும் ராணுவத்தில் வேலை செய்யும் எவரும் தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளவே விழைவர். இதுவும் நம்மல்லாம் நம்ம கம்பெனீல/நமக்குத்தெரிந்த இடங்கள்ல பயலுகள சேர்த்து விடுவது போலத்தான்.

இந்தப்பதிவின் மூலம் ராணுவவீரர்களை குறை கூறுவதோ/இல்லை சிறுமைப்படுத்துவதோ எனது நோக்கமில்லை. எனது குடும்பத்தில் கிட்டத்தட்ட ஆறு/ஏழு பேர் ராணுவத்தில் முப்படைகளிலும் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் தான். #ஆயிரம்ஐந்நூறுசம்பாத்தியம்

Saturday, November 12, 2016

ராசாளி


எப்பவுமே எஸ்ரா'வுக்கு இந்த வாய்ஸ் ஓவர்ல ஒரு க்றேஸ் உண்டு. இங்க பெங்களூர் வந்திருந்தப்ப அதையே பேசிக்கிட்டு இருந்தார். வாய்ஸ் ஓவர்ல சொல்லி கதைய தொடங்கணும்னு. ஆரம்பிக்கிறது சரி..அதுக்காக இப்டி படம் பூராவுமா? கெளதம்?.. கொடுமைங்ணா. சரக்கு தீர்ந்திருச்சு,அவ்வளவுதான் அவுட்டு அப்டீல்லாம் எழுதப்போறதில்ல நான்..ஏன்னா அவர்கிட்ட இருக்குறத தானே வெச்சு எடுப்பாரு? ஹ்ம் சரிதானே. "என் பேர் தமிழ்ச்செல்வன் , நான்..."  அப்டீன்னு "காக்க காக்க"லருந்து அதயே தான் பண்ணீண்டுருக்கார். ஹிஹி.. நமக்குத்தான் புளிக்கிறது. அண்ணா பியர் புளிச்சா நன்னா கிக்கேறும், இங்க தாங்கல.

ட்ராவலாக்' எடுக்கலாம் தான். ஒரு மோட்டார் சைக்கிள் டயரி மாதிரி அதுலயும் காதல்,வீரம், பாசம் எல்லாம் உண்டு.முக்கியமா சே கபாடா இருந்தார் அதுல. இங்க ? 'கத்துக்கிட்ட வித்தைய மொத்தமா எறக்குன' லிங்குசாமி கூடத்தான் ஒரு ட்ராவலாக் 'பையா' (அடங்கொய்யா)ன்னு எடுத்தார். அதுலயுந்தான் அடிதடி காதல் வீரம், ஹ்ம்...அங்க காரு இங்க ராசாளி'ங்ணா. ராயல் என்ஃபீல்டு. நம்ம பாலா' அதுலதான் ஓசூர்லருந்து வருவார்.இப்ப ஃப்ராங்காய்ஸ் டீ பெங்களூர்ல ஒரு ஹிந்துஸ்தானி கச்சேரி நடந்தது.அதுக்கு கூட அந்த ராசாளீலதான் வந்தார். ஆனா பின்னால ஒரு மஞ்சிமா இல்லை. ஹிஹி..

அதெல்லாம் சரி. ஒரு வீட்டுக்குள்ள ஒரு மாசம்னு வெச்சுக்குங்களேன்.அப்டி இப்டி லீகலா பழகினாங்கன்னும் வெச்சிக்கலாம். குடும்பத்தோட ஒண்ணா இருந்தாங்கன்னும் வெச்சிக்கலாம் தான். அதுக்காக ஒடனே ராசாளீல பின்னால ஒக்காந்துக்கிட்டு ஒலகம் பூரா சுத்துததுக்கு ஒரு பொண்ணு ஒத்துக்குவாளாங்ணா ?..ரெண்டு வர்சம் கோலம் போட்டூமே இங்க பஸ்ல ஒரே சீட்ல பக்கத்துல பக்கத்துல ஒக்கார மாட்டாளுஹ.. இப்டிக்கும் வாஸப்ல நீட் சாட்(மட்டுந்தான்) ஓட்டி மெயின்டென் பண்ணிக்கிட்டு இருந்தாலுமே நடக்காதூ. ஓஹொ..இது சினிமாப்பா அப்டித்தான் ஒடனே பின்னாடி ஒக்காந்து 'தள்ளிப்போகாதே அடியெ' அப்டீன்னு பாடீருவாளுக..ஹிஹி..

தலைவி பேர் தெரியாம, இந்த சின்னப்பசங்களுக்கு முட்டாயி,அப்புறம் கேட்பரீஸ் எல்லாம் குடுத்து தலைவன் தலைவியோட பேரைத்தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுவார். அப்டித்தான் நாமெல்லாம் பாத்து பழகிருக்கோம். இங்க ஹிஹி தலைவி பேரை முதல்லயே சொல்லீர்றார் கெளதம். "பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா"ன்னு சிம்பு பாடீருவாரோன்னு பயந்தே போயிட்டேன். ஹ்ம்.அங்க ஹெலிகாப்டர்ல ..இங்க இது ராசாளீ.. ராசாளீ... அந்த சோகம் உன்னத்தாக்கிடுமோன்னு நினைக்கும்போது நின்னுடுது..அதான் காதல். லாட்ஜ்ல ரூம் புக் பண்ணும்போது கூட பேரச்சொல்ல மாட்டேங்றார்னா பாத்துக்கோங்களேன். அதுக்கு நமக்கு கடசீல ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்கார் கெளதம். ஆனா தேட்டர்ல அதப்பாக்றதுக்குத்தான் யாருமேயில்ல. ஹ்ம்..அந்தக்கொடுமய அப்பால சொல்றேன். இடைவேளைக்கி அப்பால பின்னாடி கேட்டுக்கிட்ருந்த வாஸப் சவுண்டு ஆஃப்..பின்னாடி பாக்றேன். சுத்தம் யாருமேயில்லை.

வசனம் எப்பவுமே வசனமாவே தோணாது அதுவும் காதல் வசனங்களெல்லாம் கெளதம் படங்கள்ல. "ஒரு ஃப்ளாஷ்ல வந்திருச்சு மச்சான்" "சொன்ன டைமிங்தான் தப்பு ஆனா மேட்டர் கரெக்ட்டு". அதேபோல தலைவனும் தலைவியும் வேறு வேறு சமயங்களில்  காதலைச் சொல்லுமிடமும் ஹ்ம்..கெளதம்க்கு ஒரு பூச்செண்டு. அதுக்கப்புறம் அந்த பூந்தொட்டியவே தூக்கி அடிக்கிற அளவுக்கு..படம் பயணிக்குது .ஹ்ம்...சரி வேணாம். "பயத்தப்பாத்து நாம ஓடக்கூடாது , நம்மளப்பாத்துதான் அது ஓடணும்" இப்டி கொஞ்சம் அப்பாலிக்காவும் ஓட்ற வசனங்கள்லாம் கீது.


கமல் ஒரு படம் எடுத்தார் ஹேராம்னு. ஒரு நாப்பத்தெட்டு பாஷா பேசீருப்பாளா அந்தப்படத்துல. இங்க ஒரு நாலஞ்சு பாஷா பேசறா. அதுல "நான் தமீழண்டா"ன்னு வேற ஒரு வசனம். மொதல்ல கெளதமே தமிழன் கெடயாது. அது சரி.பரவால்ல. விட்ரலாம். சிம்புவா வர்ற நண்பர் மகேஷ் , அருமை. மச்சான் மச்சான்னு கலக்குறார்.  இனிமே ஈரோவுக்கு பெரண்டா நிறையப் படங்கள்ல தோன்றுவார். சதீஷ்,சந்தானம், இவாளுக்கெல்லாம் வயசாயிடுச்சில்லியா அதனால. ஆமா சந்தானத்த எங்க காணம் அதுவும் சிம்பு படத்துல.. என்னவோ தெரியல.

"மேம் பீ மடோன்னா"ன்னு ஆல்பம்லாம் போட்டுக்கிட்டிருந்தார் பாபா சேஹ்கல். கொஞ்சம் ஹிப் ஹாப்/ராப் வெச்சிண்டு பொழுது ஓட்டி ஓய்ஞ்சு போனவர். இங்க மொட்ட போலீஸ். நான் கூட 'விசாரணை'ல வந்த அந்த மொட்ட போலீஸ்காரராக்கும்னு நினைச்சிட்டேன். கொஞ்சம் மராட்டியும், பாம்பே இந்தியுமா பேசறார். வில்லனுக்கு ஒத்துவரல அவரது உடல் மொழி.

பாடல்கள் இடம்பெறும் காலங்கள், அதற்கான காரணங்கள், புகுத்தும் இடங்கள் எல்லாமே எப்போதும் கெளதம் படங்களில் பிரமாதமாக இருக்கும். நீஎபொவ' மாதிரியே இங்கும்/எங்கும் பாடல்கள்  பொருந்தும் காட்சிகள். அதிலும் "தள்ளிப்போகாதே" பாடல் யாருமே எதிர்பாரா இடத்தில்.. ஆஹா சபாஷ் கெளதம். இதுவரை இப்படி இந்தியப்படங்களிலே வந்ததேயில்லை. 



மஞ்சிமா , ஆமாம்மா இந்த அம்மாவப்பத்தி ரொம்பவே சொல்லத்தான் வேணும். செம ஃபிஸிக்.நல்ல ஓங்குதாங்கா இருக்கா. விட்டா நன்னா ஆர்ம்ஸ்/ பைசெப்ஸ்லாம் காமிப்பா போலருக்கு சாக்ஷி மாலிக் மாதிரி சிம்புவத்தூக்கி அந்தால போட்டுர்றா மாதிரி ஒரு உருவம். சன் டீவீல எட்டு மணிக்கு ஒரு சீரியல் வருமே 'தெய்வ மகள்' அதுல காயத்ரி கேரக்டர்ல ஒரு வில்லி வருவா ( அவா ஊதினா இவா வருவா..ஹிஹி ) அது மேரி இருக்குறாங்கோ இந்த மஞ்சிமா. ஒருவேள அவாளோட தங்கச்சியோன்னு நினைக்க வைக்கும் உருவம். இப்டி ஒரு ஈரோயினா. ஹ்ம்.. தமிழ்ப்படங்கள்ல எப்பவுமே பூஞ்சையா, தலைவன் வந்து தான் காப்பாத்த வேணூம்னு நினைக்கிற தலைவிகளைத்தானே இதுவரை பாத்ருக்கோம். அப்டியும் இந்தப்படம் வழக்கமான ஈரோ ஓரியன்ட்டடு சப்ஜெக்ட்டூ.    





ஈரோயினுக்கு எக்கச்சக்க க்ளோஸப் வெச்சு, இன்னும் அழகா காட்ட முயற்சி செய்திருக்கார். தலைமுடி நீவிவிடுவதும், கோதி விடுவதும், ராசாளியின் பின்புறம் பயணிப்பதும் அவ்வப்போது தின்னக்கொடுப்பதும், உள்ளங்கைகளை சிம்புவின் தொடயில் வைப்பதும் என அத்தனை க்ளோஸப் ஷாட்கள்.அத்தனையும் அருமை. பாலச்சந்தர் இதுமாதிரிதான் கொஞ்சமே பாக்றா மாதிரி இருக்கிற பெண்டுகளை அவர்கள் அழகாக இருக்கும் சில கோணங்களில் மட்டுமே காண்பித்து காண்பித்து பிடிக்க வைத்து விடுவார்.அதேதான் இங்கே.

சிம்புவுக்கு என்னா இப்டீ ஒரு மேக்கப்பு , பிட்டு பட ஈரோ மேரி. தாடி கீடில்லாம் வெச்சிக்கிட்டு. செம சதை வேற போட்ருக்கு, 'வெட்டி'ன்னு சொல்லி அத ஜஸ்டிஃபை பண்ணீர்றார் கெளதம். அவரோட தங்கை 'அவ கேரளா'ன்னு சொல்லும்போதும், அதானெ பாத்ததேன்னு சொல்லும் போதெல்லாம் சிம்பு உள்ளேன் ஐயா. ட்ரெயின் ஃபைட்டு தான் நம்பறா மேரி இருக்கு. மத்ததெல்லாம் வேஸ்ட்டு வெத்து வேட்டு. இதுல கெளதம் ஒரு கேமியோ ரோல்ல வேற. பெரிய ஹிட்ச்காக்'ன்னு நெனப்பு.



ரஹ்மான் இருக்கார். ரொம்பநாளைக்கப்புறம் நானும் ஃபீல்டுல இருக்கேன்னு காட்றார். என்ன எப்ப பாத்தாலும் "கண்ணுக்கு மையழகு கவிதைக்கு சொளகழகு"ன்னு ஒரு பாட்டு மின்னாடி போட்ருந்தார் அதையே இங்கே தந்திக்கருவிகளில் வாசித்து வாசித்து போரடிக்க வெச்சிட்டார். என்ன சொன்னாலும் பின்னணி இசை என்பது அவருக்கு தான் வாய்க்கும். சரி அரசியல் பேச வேணாம். ராப்/ஹிப் ஹாப்களில் மலிந்து போகிறார் ரஹ்மான். என்ன சொல்வது அவரைப்பற்றி.

படத்தின் பின்பகுதி முழுக்க இருட்டு.அத்தனையும் அடிதடி. சலித்துப்போய் எழுந்து வரத்தோணுவது படத்தின் பெருங்குறை. சகிக்கவே இயலவில்லை. ஒருவேளை யாராவது அஸீஸ்டென்டு கிட்ட குடுத்து எடவேளைக்கப்றம் எடுக்க சொல்லீட்டாரோன்னு நினைக்க வைக்கும் சொய்வு, இதெல்லாம் கெளதம் தானா என சோதிக்கும் பல காட்சிகள். ஹ்ம்.. முதல் பாதி அருமை, ஹ்ம்...எல்லாக்காதலிலும் முதல் பாதி எப்போதுமே அருமையாகத்தானே இருக்கும்.




Friday, November 11, 2016

அக்கம் பக்கம் பார்


ஜாஸ் இசை என்று எடுத்துக்கொண்டால் கொஞ்சம் பழைய,மெல்லிய ரொம்பவும் அதிரடியில்லாத, காதுக்கு இனிமையான இசை என்றே அறியப்படும். ரொம்பவே மெதுவாகச்செல்லும் என்பதால் எல்லோருக்கும் போரடிக்க ஆரம்பித்துவிடும். ஜாஸ் கேட்கவென வேறேங்கும் போகவேணாம். இப்பவும் வின்டோஸ்7 பயன்படுத்துபவராயிருந்தால் டீஃபால்ட் ம்யூஸிக் ஃபோல்டரில் பாப் அக்ரி'யின் Sleep Away' வைக்கேளுங்கள். அத்தனை சுகமான மெல்லிய மெலடி. கேட்டும் உறக்கம் வரவில்லையெனில் உங்களுக்கு வேறேதோ பிரச்னை இருகிறது என அர்த்தம். பியானொவில் வாசித்திருப்பார் முழுப்பாடலும். கேட்க ஆரம்பித்தால் இடைவிடாது சுழற்சியில் இட்டு தொடர்ந்தும் கேட்டுக்கொண்டே இருக்கத்தோணும்.

ஜாஸ் இசையில் வெகுவாக பெர்குஷன்ஸ் அதாவது சிறிதே அதிர வைக்கும் ட்ரம்ஸும், பியானொ, மற்றும் சாக்ஸஃபோன் போன்ற வாத்தியங்களே பயன்படுத்தப்படும். கேட்டால் காதுக்கு இனிமை, அதிரவைக்காது கூர்ந்து கவனிக்க வைக்கும் இசை. ஒண்ணு சொல்றேனே வயிறுமுழுதுக்குமாக பிரியாணி சாப்பிட்டு விட்டு, நல்ல வெக்கையில் வெண்டாவி அத்து வரும் வேளையில்  காகம் கரைய,வேப்ப மர நிழலில் இருந்து கேட்டுப்பாருங்க.ஆஹா. சொல்லவே அருமையாக இருக்கிறது. சொக்கிப் போடும் உங்களை , அதற்குத்தான் சொன்னேன்.

இந்த ஜாஸ்'ஐ ராசய்யா தமது முழு ஸ்டைலாகவே/ பாணியாகவே கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே ஆக்கிக்கொண்டார் என்றே சொல்லவேணும். நீஎபொவ அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இன்னபிற இசை வகைகள் (genre)அந்தப்பாடல்களில் தென்பட்டபோதிலும் அடிப்படையான இசை ஜாஸ் தான். கிழவர்களுக்கான இசை..ஹிஹி. அப்படி இல்லை. யாரையும் அதிரடியாக இசைத்து இம்சைப்படுத்துவதில்லை என முடிவெடுத்த ராசைய்யாவிற்கு இந்த ஜாஸ் பிடித்துப்போனதில் ஆச்சரியமில்லை. இன்னொரு பாடலை என்னால் மிகச்சரியாகச்சொல்ல முடியும்.  'கண்ணன் வந்து பாடுகின்றான்' என ஜானகி பாடிய பாடல் 'ரெட்டை வால் குருவி'யில். 


பின்னில் சாக்ஸஃபோன் இசைக்க மைக்கை பிடித்தபடியே ஆடுவார் ராதிகா. இன்னுமொரு பாடல் 'இது ஒரு கனாக்காலம்' டிக் டிக் டிக் படத்தில். பெரும்பாலும் தாளத்திற்கென ட்ரம்ஸின் அந்த சிம்பல்ஸ்'களில் இசைத்ததையே காணலாம். பெரும்பாலும் மேடைப்பாடல்களாகவே ராசைய்யாவிடம் ஜாஸ் ஒலிக்கும். 'மன்றம் வந்த தென்றலையும்' கூட ஜாஸில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்காக மென்மையான பாடல்களெல்லாம் ஜாஸ் இல்லை.

ரஹ்மான் என்றும் இன்ன இசை என அறியவிடாது தமது ஸ்டைலில் ரஹ்மானியாவாக கொடுப்பதில் வல்லவர். படையப்பாவில் விசிலடித்துக்கொண்டே மனோ பாடும் 'ஓஓஓ கிக்கு ஏறுதே' அந்தப்பாடல் ஜாஸை ஒட்டியது. நிறைய ஹிந்துஸ்தானி பாணியில் இசைத்தே பழகியவர். இப்போது கூட 'கடல்' திரைப்படத்தில் 'சித் ஸ்ரீராம்' பாடிய அந்த 'அடியே' பாடல் நல்ல ஜாஸ். இல்லையெனச் சொல்லுபவர்கள் என்னுடன் சண்டை பிடிக்க வரலாம். ஜாஸுக்குண்டான அத்தனை சாத்தியக்கூறுகளும் அதில் உண்டு. பியானொவின் சிணுங்கல்கள், சிம்பல்ஸின் சிதறல்கள் என எல்லாம் சிறப்பு. ஜாஸின் இலக்கணம் மாறாது இசைத்த பாடல். மணி ஒத்துக்கொண்டார் போலருக்கு, அந்தப்படமே ஒரு மாதிரி தான் இருக்கும்.ஹிஹி.

கென்னி ஜி கேட்காதவர் இருக்கவியலாது. எல்லாப் பாடல்களையும் ஜாஸின் ஸ்டைலில் கொண்டு வந்து விடுவார். அதான் டெம்ப்போவைக் குறைத்து இன்னும் பாடலாம் மெதுவாக என்று தோணும் போது ஜாஸாக மாறிவிட வாய்ப்புண்டு. எம்எஸ்'ஐயா இசைக்காததில்லை. 'என்னைத்தெரியுமா சிரித்துப்பழகி கருத்தைக்கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா'ன்னு ஜாஸில் பிடித்துக்காட்டுவார். பாடலின் கடையிசையைக் கேளுங்கள் புரியும்.ட்விஸ்ட் ஆடலுக்கான பாடல்களுக்கும் ஜாஸ் ஒத்துவரும். 'கண் போன போக்கிலே கால் போகலாமா' நல்ல எகா.

இப்ப எதுக்கு ஜாஸ் புராணம்னா...ஒண்ணும் இல்லை. இப்போ எல்லாருமா சேர்ந்து வாரிக் கொண்டிருக்கும் (நானுந்தான்) சந்தோஷ் நாராயண் கூட ஜாஸில் ஒரு பாடல் போட்டு இருக்கிறார். 'காதலும் கடந்து போகும்' படத்தில் 'அக்கம் பக்கம் பார்' பாடல் பக்கா ஜாஸ். ஹ்ம்.. இத்தனை மெதுவாக அத்தனை அழகாக இலக்கணம் மாறாது இசைத்தது. இங்கும் மனோதான் பாடியிருக்கிறார். போரடிக்க வைக்கும் தாளக்கட்டு. பாடல் முழுமைக்கும் கூடவே பாடும் பியானோ. சொற்களெல்லாம் தனித்தனியே தொங்கிக்கொண்டு இருக்கும். இணைத்துக்கொண்டு வருவது சங்கிலி போல அந்தப்பியானோதான். இந்தப்பாணி பலருக்கு சொய்வு அடிக்கச் செய்துவிடும். ( நெருப்புடான்னு ராக்/ஹிப் ஹாப்' ல பிளந்து கட்டியவர்தான் இப்படியும் பாடல் போட்டிருக்கிறார் ) இந்தப்பாடலை அத்தனை சிரத்தையாக நான் கவனிக்கவேயில்ல, அன்று ஒரு நாள் இசையருவியில் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் கூர்ந்து கவனிக்க நினைத்தபோது தான் புரிந்தது. அவரின் அத்தனை பாடல்களுமே அப்படி சிரத்தை எடுத்துக் கவனித்தால் தான் புரியும். ஹ்ம்.. என்ன பண்றது. 0:55 ல் ஆரம்பிக்கும் ரூரூஊரூஊ.'வுடன் கூடப்பாடும் அந்தப்பியானோ 01:13ல் உங்களுக்கு பாப் அக்ரி'யை ஞாபகப்படுத்தினால் நான் பொறுப்பில்லை. ஹிஹி.. இடையிடையே வசனம் வரும்போது அதை இடர்ப்படாமல் இசைக்கும் பியானோவைக் கண்ணுல ஒத்திக்கலாம் சநா.

போத்தல் நுரைக்கும் சோமபானச்சாலைகளில் இந்த மாதிரியான பாடல்களுக்கு தான் கிராக்கி.ஏற்கனவே மூழ்கிக்கிடக்கும் வாற்கோதுமைக்கள்ளர்களுக்கு உறக்கம் வரவழைக்க பொருத்தமான இசை. இவ்வளவு பேர் ஜாஸில் பிளந்துகட்டியிருக்கும்போது தம்பி அநிருத் இதுவரை அந்தப்பக்கமே போகவில்லை. ஹ்ம்.. எதுக்கு போகணும். அதுதான் கிழபோல்ட்டுகளின் இசையாச்சே.. ஹிஹி.. #அக்கம்பக்கம்பார்


https://youtu.be/iy3j9Hg-QAM - அக்கம் பக்கம் பார் (ககபோ)
https://youtu.be/I6PHgtdxFrY - bob acri (sleep away)
https://youtu.be/rwEt-PTrbmI - கண்ணன் வந்து பாடுகின்றான் (ரெவா குருவி)
https://youtu.be/X-Ilp8QNNfQ - அடியே ( கடல் )
https://youtu.be/ZlhaOQSgD_M - என்னைத்தெரியுமா (குடியிருந்தகோயில்)