இசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான்
கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த
சப்தநாடியையும் தீர்மானிக்கிறான் என்பதை இந்த ஷமிதாப் ஆல்பம் நிரூபிக்கிறது.. லைவ்
ஆர்க்கெஸ்ட்ரா வைத்து செய்தால் தான் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்றாலும்,இல்லை
சிந்த்’திலேயே எல்லாவற்றையும் இசைத்துவிடலாம் என்றாலும் எல்லாவற்றிற்கும் ரெடி
இந்த ராஜா. பாடல்கள் முழுதுமே அனைத்துமே எழுபது-எண்பதுகளின் இசையைக்கொண்டதாகவே
இருக்கிறது.
“லெட்ஸ்டூ த சன்னாட்டா”
ஆசையைக்”காது”ல தூது விட்டேன்..சன்னாட்டா மட்டுமே இனிமை.
தமது பாட்டையே தாமே ரீமிக்ஸ் செய்வதற்கு எனக்குத்தெரிந்து வாய்ப்புகிடைத்தது
ராஜாவுக்கு மட்டுந்தான்னு எனக்குத்தோணுது.
ஷைலஜாவின் குரலில் அமைந்தது ஒரு தோடர்களின் பாடல். அப்போது சமகாலத்தில்
எத்தனையோ மிகச்சிறந்த பாடகிகள் இருந்தபோதிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தாளக்கட்டுக்கும் அந்த வேய்ங்குழலுக்கும் எல்லோரையும் அடிமையாக்கிய பாடல் அது.
விட்டுவிட்டு அடிக்கும் தென்றலைப்போல அடிக்குரலாக அழுத்தமாக ஒலிக்கும் அந்த
குழலொலி பின்னில் பாடும் அந்த குழுவினரின் சேர்ந்திசை எல்லாமாக ஒரு சிம்ஃபொனி போல
ஒலிக்கும். அதே தாளக்கட்டை இங்கு பாடகர்களின் குரலில் கொன்னக்கோல் வாசிக்கவைத்து
சேர்த்திருக்கிறார் ராஜா.
எல்லாம் எலக்ட்ரானிக் சிந்த்.வெகு சுலபமாக ப்ரோக்ராம்
செய்துவிட இயலும் இந்தப்பாடலை. இருப்பினும் மலைஜாதியினரின் ஃபீல் கொண்டுவரவில்லை
இந்த ‘சன்னாட்டா’. ஒவ்வொருமுறையும் ஒரு வார்த்தையைப்பாடி முடித்துவிட்டு தாளம்
இசைக்க நிறுத்துவார் ஷைலஜா. அதே போலவே இங்கும் இந்த ஸ்ருதிக்குயில் நிறுத்தி
நிறுத்தி நம்மை ஏங்க வைக்கிறது. “மஞ்சம் வந்த தென்றலில்” ஆரம்பித்தும் பிறகு
கூடவேயும் பாடும் ஸாக்ஸ் போல இந்தப்பாடலில் அந்தக்குழல்.
“நெஞ்சம் பாடுது சோடியத்தேடுது பிஞ்சும் வாடுது பாடயிலே
கொஞ்சும் ஜாடையப்போடுது பார்வையில் சொந்தம் தேடுது மேடையிலே” இந்த வரிகள் பாடும் மெட்டு தான்
இந்தப்பாடலுக்கு ஆணிவேர். வெறும் தாளம் மட்டுமே போதும் வரிகளே
தேவையில்லைங்கறமாதிரி. நல்லவேளை இந்த சன்னாட்டாவிலும் அதே ராகத்தை வைத்து
அசத்துகிறார். ஸ்ருதியும் இந்த ராகத்தில அமைந்த வரிகளை வெஸ்ட்டர்னில் பாடிக்களிக்கிறார்.
“நெஞ்சம் பாடுது சோடியத்தேடுது பிஞ்சும் வாடுது பாடயிலே “ இந்த வரிகள் பாடும்போது
வரிசையாக அமைந்திருக்கும் மாடிப்படிகளை ஒன்றன்பின் ஒன்றாக ஏறாமல் கால்களை
இங்கொன்றும் அங்கொன்றுமாக வைத்து ( ஒரு காலை ஒரு படியின் வலது புறத்திலும் மற்றொரு
காலை அடுத்த படியின் இடது புறத்திலுமாக ) குதியோட்டத்துடன் சிறுபிள்ளை
ஏறிப்பார்ப்பது போல இருக்கிறது எனக்கு, நீங்களும் கேட்டுப்பாருங்களேன்.
திரும்பவும் அதே இடத்தில் படியில் நின்று மேலும் அதே விளையாட்டுப்பிள்ளை போல
ஏறிச்செல்லும் “கொஞ்சும் ஜாடையப்போடுது பார்வையில் சொந்தம் தேடுது மேடையிலே” இந்த
வரியிலும் உங்கள் கால்கள்...அப்புறமென்ன... ராஜா எப்பவுமே ரசிகர்களை உச்சத்தில்
கொண்டுபோய் வைத்து மகிழவைப்பவன் தானே :) காட்டில் ஷைலஜா பாடியதை
நாட்டுக்கு தம் தெனாவட்டு குரலால் கொண்டுவந்திருக்கிறார் ஸ்ருதி :) 3:40ல் ‘ஒய்
ஸ்ருதி’ என்று இழுக்கும்போது நான் வெஸ்ட்டர்ன்ல செமயக்காலக்குவேனாக்கும்னு
சொல்றமாதிரி ஒரு ஃபீலிங் எனக்கு!
இடையிசைகள் பற்றிக்கூற ஒன்றும் வாய்க்கவில்லை எனக்கு.
அவரின் பாடல்கள் எல்லாமே எப்போதடா சரணங்கள் முடியும் இடையிசை ஆரம்பிக்க எனத்தவிக்க
வைப்பவை. அவை எல்லாம் இங்கு மிஸ்ஸிங்.இருப்பினும் ரொம்பவே ரசிக்கவைக்கும் அந்த முதலிசை 0:06
லிருந்து 0:24 வரை ஜிவ்வென்று ஆளைத்தூக்கிச்செல்கிறது. இப்ப இந்தப்பாட்டைத்தான்
நான் ரிங்டோனாக வைத்திருக்கிறேன் நான்.. :)
முப்பந்தைந்து ஆண்டுகளுக்குப்பின்னரும் அந்த ஆசையத்தேடுது’
இன்னமும் இளமையோடேயே இருக்கிறது. எத்தனை மீளுருவாக்கம் செய்தாலும் சட்டியில்
இருக்கும் ஒரிஜினல் சரக்கு இன்னமும் கெடாமல் அதே உயிர்ப்போடு இருப்பதாலேயே எல்லா
மீளுருவாக்கங்களும் காதுக்கு இனிமையாகவே இருக்கின்றன. வடநாட்டவர்களை தொடர்ந்து
நல்ல பாடல்களை கேட்கவைக்கும் பால்கிக்கு நன்றி.
ஷாஷாஷா மிமிமி
டிஸ்கோ காலத்திய இசை. மணிரத்னம் வேகமான பாடலையே கேட்பார்
எனத்தெரிந்தே அதற்கு எதிரிடையாக ரொம்ப ஸ்லோவாகப் போட்ட பாடல் அந்த அக்னி நட்சத்திரம்
படத்தில ‘ஒரு பூங்காவனம்’ நீச்சல் குளப்பாடல். அதே போல் டிஸ்கோ பாடல்கள்
என்றாலே துள்ளலிசையும் கொஞ்சம் தாளத்தின் வேகமும் அதிகமாகவுமே இருக்கும்.
அதற்கெல்லாம் இங்கு எதிரிடை :) எக்கோ அடிப்பதுபோல ஒரே
சொல்லை இரண்டு முறை சொல்லிச்சொல்லி பாடுவது அந்த டிஸ்கோ காலத்திய முறை..அதே தான்
இங்கும் :) பப்பி லஹரி ஸ்டைல்
டிஸ்கோ .அவர் அங்கு பிரபலமாக இருந்த போது இங்கு காதல் பரிசு படத்தில் வரும் ‘ஏய்
உன்னைத்தானே‘ என்ற அந்தப்போட்டிப்பாடல் பின்னர் ரஜினியின் தங்கமகன் படப்பாடல்கள்
வரிசையில் சுலபமாக இந்தப்பாடலை நுழைத்துவிடலாம். ஒரு வித்தியாசமும் தெரியாது :) 1:25ல் தொடங்கி 1:51ல்
பின்னர் சேரும் அந்த இசையுடனும் 2:07ல் ‘தேக்கா துஜ்கோ சப்ஸே சப்ஸே’ என்று அவர்
பாடும்போது அந்த ஃபீல் கண்டிப்பாக உங்களுக்கு வந்தே தீரும். கூடவே பெரிய கண்ணாடி
உருண்டையில் பட்டு பலவித நிறங்களில் ஒளி சிதறுவதையும் அகக்கண்ணால காணலாம் :) அப்படியே அச்சசல் டிஸ்கோ
தீவானேவேதான் :)
குர்பானி படத்தில் வந்த அந்த நாஸியா ஹஸன் பாடிய ‘ஆப்
ஜைஸாக்கோயி மேரி ஜிந்தகி மே ஆயி’ என்ற டிஸ்கோ பாடலைக்கேட்டு பசுக்களெல்லாம்
அதிகமாகப்பால் சொரிந்தன என்ற ஒரு பழைய செய்தி. இந்த டிஸ்கோவைக்கேட்டும் அவை
இன்னமும் கூடுதலாகப்பொழியக்கூடும். அந்த ஆப் ஜைஸாவைப்போல எனக்கும் ஒரு பாடல்
வேணும் என்று பால்கி கேட்டிருப்பார் போல ,அதுக்கும் மேலேயே ஒன்றைக் கொடுத்துவிட்டார்
நம்ம ராஜா.. இரண்டு பாடல்களையும் கேட்டுப்பாருங்களேன்.. மேலும் இந்த ஷாஷாஷா பாடலில்
2:40ல் தொடங்கி முடியும் அந்த ஹார்மனிக்கு மயங்காதவன் காது கேளாதவனாகத்தான் இருக்க
வேணும். இந்தப்பாடலைக்கேட்கும் போது ‘பாடும் வானம்பாடி’ பாடல்களைக்கொஞ்சம்
கேட்டுப் பாருங்களேன்.. உரிச்சி வெச்சது போல் இருக்கும் அந்தப்பாணி டிஸ்கோ பாடல்களை.
படத்தில் இந்தப்பாட்டுக்கு அந்தப் பூனைக்கண்ணி
அக்ஷரா தான் ஆடுவார் என்ற ஏக எதிர்பார்ப்புடன்...ஹிஹி.. காத்துக்கெடக்கிறோம்
மச்சா... ஏமாத்திப்புடாதீஹ.. :)
பிட்லி
ஒரு பாப் பாடல் இசைப்பதற்கு எனக்கு இரண்டு நொடிகள் போதும்
என்று எப்போதும் சொல்வார் ராஜா. அது போல நொடிகளில் இசைத்ததாகத்தானிருக்க வேணும் இந்தப்பாடலும்.
தர்மத்தின் தலைவனில் வந்த அந்த ‘தென்மதுரை வைகை நதி’ போல ஃபுட் ட்டாப்பிங்க்
நோட்ஸ் இந்தப்பாடலில். அதிலும் கூடுதலாக சிங்கத்தின் கர்ஜிக்கும் குரலோடு மிரட்டும்
பாடல் இது. கை விரல்களைச்சுண்டி விட்டுக்கொண்டு ஆடியபடி ரசிக்கலாம் இந்தப்பாடலை.
இரண்டு கிழட்டுச்சிங்கங்களுக்கும் வயதே ஆவதில்லை போல அமைந்து இருக்கிறது இந்தப்‘பாப்
பிட்லி’
தப்படு
மெல்லிய ராப்’பில் கலக்கும் இந்தப்பாடல். நம்ம
பழைய ராஜா ராஜாதிராஜனிந்த ராஜா பாணியில் ஒலிக்கும் இந்தப்பாடலும் சார்ட்
பஸ்ட்டரில் எப்போதும் நிலைத்திருக்கும். இசையமைப்பு கோர்வை எல்லாம் அதே பாணியில்
அமைந்திருக்கிறது.
இவருக்குப்பின்னால்
வந்தவர் உலகெங்கும் சென்று புகழ்பெற்று இன்னபிற விருதுகள் பெற்ற போதிலும் அத்தனை
பெரிய இசை வெளியீட்டு விழா இங்கு சென்னையில் இரண்டாண்டுகளுக்கு முன்பு கௌதம் மேனன்
நடத்தினார். அதே போல் இன்று பாலிவுட்டிலும் இவருக்குப்பின் வந்தவர் இசைத்துப்புதிய
பாணியை உருவாக்கி வைத்திருந்த போதிலும் மீண்டும் அங்கு சென்று இத்தனை பெரிய
வரவேற்பைப் பெற்ற இசைப்பேழையின் வெளியீட்டு விழாவை இந்தியாவே பார்க்கும் வண்ணம் ஒரு
பெரிய விழாவாக ஏற்பாடு செய்து பெருமை சேர்த்திருக்கிறார் பாலிவுட் பாதுஷா.இன்னும்
எத்தனை பேர் வந்தாலும் இவன் புகழ் அழியாது நிலைக்கும். #என்றென்றும்ராஜா.
.