Tuesday, February 26, 2013

வா



உன் முதுகில் சிறகுகள் இல்லை
நீ தேவதை இல்லை
உன்னைச்சுற்றி ஒளிவட்டம் இல்லை
நீ கடவுள் இல்லை
உன் தலையில் சிறு கொம்புகள் இல்லை
நீ சாத்தானும் இல்லை
இப்படி என்னைப்போல்
ஏதுமில்லாதவள் தான் வேண்டும்
வா.



Thursday, February 14, 2013

கொஞ்சமிரு




என் காதலைச்சொல்லுமுன்
கொஞ்சமிரு
வான்காவிற்கு காதுகள் இருக்கின்றனவா
என்று பார்த்துவருகிறேன்

என் காதலைச்சொல்லுமுன்
கொஞ்சமிரு
அம்பிகாபதியிடம்
முதல் பாடலைக்காதல் பாடலாக
பாடச்சொல்லிவிட்டு வருகிறேன்

என் காதலைச்சொல்லுமுன்
கொஞ்சமிரு
நூலேணி பிடித்தேறிய
ரோமியோவிடம் மேலே எட்டியபின்
ஜூலியட்டைக்கொஞ்சம் ரசித்துவிட்டு
பின் ஜன்னலைத்தட்ட வேண்டிக்கொண்டு
வருகிறேன்

என் காதலைச்சொல்லுமுன்
கொஞ்சமிரு
ஷாஜஹான் தாஜ்மஹாலைப்பார்க்கும் விதம்
அந்தச் செங்கலைக்கொஞ்சம்
கொத்தனிடம்
ஒரே தள்ளில் இடிக்கும்படி
வைக்க வேண்டிக் கேட்டுவிட்டு
வருகிறேன்

என் காதலைச்சொல்லுமுன்
கொஞ்சமிரு
காதலர்தினத்தை
நாட்காட்டியின் அனைத்து
நாட்களுக்குமாக
மாற்றிவைக்க
கிரிகொரியனிடம்
சொல்லிவிட்டு வருகிறேன்.


Tuesday, February 5, 2013

எங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை




“படத்தில் வரும் காட்சிகள் இதுவரை நடந்தவை பற்றியோ , அவை சம்பந்தமான நிகழ்ச்சிகள்/நபர்கள்  பற்றியதோ அல்ல, முழுக்க முழுக்க கற்பனையே” என்று ஆரம்ப எழுத்துகள் பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு இந்தப்படத்தின் முதல் எச்சரிக்கை அதிர்வையே தருகிறது.

ஆக்ஷன் ஃபிலிம் எடுக்கிறதுன்னா இனிமேல் இதுக்குமேலே எடுத்தாதான் உண்டு. அருமையான நடிக/கையர் தேர்வு,அதற்கான களமும், அவர்களின் மொழியும் எல்லாமுமாகச்சேர்ந்து ஒரு விஷுவல் ட்ரீட் தமிழனுக்கு..எங்க ஊர்க்காரன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்துருக்கான்யா .என்று மெச்சிக்கொள்ள ஒரு படம். படத்தை மெதுவாகத்தள்ளிக்கொண்டும் , அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமலும் சிக்கித்தவிப்பது இசை மட்டுமே.! மேலும் ஆஃப்கானி பஷ்த்தூன் பேசுபவனும் பரமக்குடித்தமிழ் பேசுவது கேட்க நன்றாகவே இருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைத்தகர்க்க வரும் தீவிரவாதிகளிடமிருந்து அதைக் காப்பாற்ற ஒரு இண்டியன் ரா ஏஜெண்ட் (Indian RAW Agent ) ஏன் தேவை, உள்ளூர்ல இருக்கும் FBI Agents போதாதா என்று ஒரு வரிக்கேள்வி கேட்டோமானால் , இந்தப்படமே இல்லை. அதனால அத மட்டும் மறந்துவிட்டு படத்தை ரசித்தால் தியேட்டரை விட்டு எழுந்து வரவே தோணாது. நாம நிறைய சாகச ஹீரோக்களை உள்ளூர் சினிமாவிலும் அயலூர் சினிமாவிலும் பார்த்துச்சலித்தாகிவிட்டதே, இனி என்ன புதிதாக கமல் காட்டிவிடப்போகிறார் என்று படம் பார்க்கச்சென்றவனுக்கு ஒரு விஷூவல் ட்ரீட் கொடுத்து அசத்திவிட்டார் கமல்.


கதை சொல்ல ஸ்ட்ரைட் , மற்றும் சில இடங்களில் நான் லீனியர் பாதையும் தேர்ந்தெடுத்திருக்கிறார் கமல். படம் எந்த இடத்திலும் தொய்யவே இல்லை , அதுவே இது மாதிரி படங்களுக்கான தாரக மந்திரம். அது போல முடிச்சுகள் அவிழ்வதான இது நாள் வரை பார்த்திருந்த சராசரித் தந்திரங்களும் இல்லை. கிட்டத்தட்ட அவரவர்க்குக்கொடுத்த வேலையை மிகவும் திறம்படச்செய்துள்ளனர்.

‘இங்கிலீஷ் ஆகஸ்ட்’ படத்தில் இத்தனை மொழி தெரிந்திருந்தும் உனக்கு உள்ளூர் மொழி தெரியவில்லையே என்ற கேட்கும் ஏளனப்பார்வையை தமது அப்பாவி முகம் கொண்டு சமாளித்த ‘ராகுல் போஸ்’ இதில் முக்கிய எதிரி. கண்களை உருட்டிக்கொண்டே , வாட்டர்வேர்ல்ட் படத்தில் வரும் “ஜெரீமி அயர்ன்ஸ்” போல கண்ணை பாட்டிலில் போட்டு வைத்து பின் அவ்வப்போது எடுத்துப் பொருத்திக் கொள்கிறார். அடிக்குரலில் “காட்ஃபாதர் “மார்லன் ப்ராண்டோ மாதிரி நெஞ்சை எக்கிஎக்கி பேச எத்தனிக்கிறார் ( இந்த ஸ்டைல் ஏற்கனவே “கடல் மீன்கள்’ படத்தில் கமலே செய்தது தான் :) ) சரியான பாத்திரத்தேர்வு இவர்.‍!

தமிழ்நாட்டில் சுற்றித்திரிந்தேன் , அங்கு கொஞ்சம் தமிழ் கற்றுக்கொண்டேன் என்பது மட்டும் நம்ப முடியவில்லை. இருப்பினும் இதுபோன்ற சீக்ரெட் ஏஜெண்ட்களும், தகாத வேலைகள் செய்பவர்களும் பல மொழிகள் தெரிந்து வைத்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பதால் அதை ஒதுக்கி விடலாம். புறாக்கால்களில் சீசியம் கட்டிப்பறக்க விடலாம் என்பது, இது நாள் வரை சமாதானத்திற்கு மட்டுமே புறாக்களை பறக்கவிட்டுக்கண்ட நமக்கு ஒரு அதிர்ச்சி தான். புறாக்களுக்கு என்ன தெரியும் ? காலில் எதைக்கட்டிக்கொண்டு பறக்கிறோம் என்று அவை தெரிந்தா பறக்கிறது ?



நாசர் என்ன செய்திருக்கிறார் என்று அவருக்கே தெரியுமா ?! ஹ்ம்.! :) முழுக்க அரபியில் பேசிக்கொண்டு உடல் மொழி கொஞ்சமும் பொருந்தாமல் நாசர் தானா அது ? இது போன்ற தொங்கும் மீசைகள் சைனீஸிடம் மட்டுமே பார்க்கவியலும்.இங்கே அரபியும் அதேபோல ஒட்டவேயில்லை நாசர். கிட்டத்தட்ட Elizabeth புகழ் சேகர் கபூருக்கும் இதே கதி தான்.வந்தார் சென்றார் ரகம். அந்த இங்லீஷ்காரர் யாரு மச்சி, கலக்குறான்யா ,வாய்க்குள் உணவு இருக்கிறது பேச்சு அப்டித்தான் வரும் என்கிறார். ஒற்றை அழுத்தத்தில் மூன்றாக விரியும் புராதனக்கத்தி கொண்டு சொருகி எடுக்கிறார். பின் வரும் காட்சிகளில் அதே கத்தியை பயன்படுத்த முயன்று பரிதாபமாக செத்தும் போகிறார். ‘ஜரீனா வகாப்’ டாக்டராக வந்து என்ன சாதித்தார் என்றே தெரியவில்லை , பூஜா குமாரிடம் இடக்குமடக்காக கேள்வி கேட்டு ..ஹ்ம்..”ஆதாமிண்டே மகன் அபு”வில் கிடைத்த வேடத்தில் ஒரு பங்கு கூட இல்லை. இதே படத்தை ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யும்போது அவர்களுக்குத்தெரிந்த முகமாக இருக்கட்டும் என்று ஒப்புக்குச்சப்பாணி போல இருக்கிறது.

அளவுக்கதிகமாக தமிழரல்லாதவர் என்று படம் முழுதும் இரைந்து கிடக்க , எல்லோரையும் கூடுமான அளவு தமிழிலேயே பேச வைத்து , கீழே தமிழில் சப்டைட்டில்கள் போடாமல் பெருமளவு தவிர்த்து படத்தை தமிழ்ப்படந்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நம்பவைத்திருக்கும் கமலுக்கு ஒரு பெரிய நன்றி.

ஊஞ்சலில் வைத்து ஆட்டநினைக்கும் சிறுவன் , நான் ஒண்ணும் சின்னப்பையனில்லை, எனக்கு ஆடவேண்டாம் என்று குதித்து ஓடுபவனைத்தொடர்ந்து வரும் இளம்பிராயத்தினன் , என்னை வைத்து ஆட்டுங்கள் என்பான். கமல் தொடர்ந்தும் ஊஞ்சலை தள்ளிவிட்டு ஆட்டிக்கொண்டிருப்பார். தொடரும் காட்சிகளில் அதே ஊஞ்சலில் ஆடிய சிறுவன் அமேரிக்கன் ட்ரக்கை உடலில் குண்டுகள் கட்டிக்கொண்டு தகர்க்கிறான். கண்கள் குளமாகும் காட்சி அது.
தீவிரவாதிகள் என்று நாம் கூறுவோர் தாமாகவே உருவாவதில்லை.




முதலில் ரஷ்யாக்காரன் வந்தான், பின்னர் அமேரிக்காகாரன் ,அப்புறம் பாகிஸ்தான்காரன், அப்புறம் தாலிபான் ,இப்ப நீ வந்திருக்க என்று முதியவர் கூறும் இடம், நீங்க சொன்னீங்கன்னா நான் இவனுக்கு இங்கிலீஷ் சொல்லிக்குடுக்கறத நிறுத்திவிடுகிறேன் என ஒமரிடன் மனைவி அவரிடம் பயந்து கொண்டே கூறும் இடம், பொது இடத்தில் வைத்து தூக்கிலிடப்படும் என் புள்ளை தப்பு பண்ணல என்று கைகளை விரித்துக்கொண்டு அந்த வயதான தாயார் கதறும் இடம், நேட்டோ படைகளால் கொல்லப்பட்ட அந்தப்பெண் டாக்டரின் குதிரை உயிருக்குப் போராடும் இடம் எனப்பல இடங்கள் வன்முறை என்பது உலகில் எந்த இடத்திற்கும் பொருந்தாத ஒன்று எனக்கூறுபவை.

இதே போன்ற கதைக்களம், கேமரூன் இயக்கி ஆர்னால்ட் நடித்த ‘True  Lies ( ட்ரூலைஸ்)’ படத்தில் வந்தது தான், கணவனைச் சந்தேகிக்கும் மனைவியின் Knot உட்பட. மற்றும் Offbeat Movieயாக வெளிவந்த Leonardo Di Caprio வின் “Body Of Lies (பாடி ஆஃப் லைஸ்) ” கூடச்சொல்லலாம். அல் கைதா’வின் Training Camp , அந்த ஆப்கானிஸ்தான் பேக்ட்ராப்பில் சூரிய ஒளி மெதுவாக திரை விலகுவது , அமேரிக்காவில் அந்த Snow Flakes Falling என்று அமர்க்களப்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ்.

கமல் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள வழக்கமாக பெரிய ஹீரோக்கள் செய்துகொள்ளும் பெரிய உத்திகள் ஏதுவும் பயன்படுத்தவில்லை. கண்ணாடிக்குப் பின்புறம்  ஆடிப்பாடிக் கொண்டிருக்கும் கோபிகையர்களுடன் அறிமுகமாகிறார். நடக்கும் போதும், ஆடும்போதும் பேசும்போதும் அத்தனையும் பிர்ஜூ மஹாராஜ்! அந்த மைக்ரோவேவ் அவனை திறக்கும்போது கூட அடவு பின்னுகிறது, இவனுக்கு சொல்லியா குடுக்கணும் ?! :) அந்தக்கண்டெய்னர் சிறைக்குள் அத்தனை பேரையும் போட்டுத்தள்ளுகிறார் கமல், 20-25 நொடிகளுக்குள் எல்லாம் தீர்கிறது. ஒரு வேளை ஜாக்கி ஷானின் பயிற்சி கிடைத்ததோ என்று கேட்குமளவுக்கு, பின்னரும் அட இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று நம் மனதில் நினைப்பது கமலுக்கு கேட்டிருக்கும்போல, அத்தனை காட்சிகளும் பிறகு ஸ்லோ மோஷனில், கொள்ளை கொள்கிறது , சீட்டின் நுனிக்கே வந்தே விட்டேன் நான். இவருக்கா 55 வயது ?! :) இதுவரை மறக்கவியலாத எந்திரனின் அந்த எலெட்ரிக் ட்ரெயின் காட்சியை அப்படியே மிஞ்சிக்கொண்டு நிற்கிறது மனதில். ‘என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நொடியும் , நானே செதுக்குனதுடா’ என்று அஜித் அடித்துக்கொண்டே சொன்னதையும் தாண்டிச்செல்கிறது இந்தக் காட்சியின் வேகமும், விறுவிறுப்பும். 

  
‘அந்தப்பையனை டாக்டருக்குப் படிக்கவைக்கலாம்’ என்று கூறுகிறார், ‘தம்மால் தூக்கில் தொங்கி இறக்க நேர்ந்த அந்த மனிதனுக்காக’ வருந்துகிறார், பின்னர் அதற்கான பிராயச்சித்தம் தேடிக்கொள்வதற்காக தொடர்ந்தும் உளவுப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார், ‘இறக்கும் தருவாயில் துடித்துக்கொண்டிருக்கும் குதிரையை சுட்டு’ சாகவைக்கிறார் , துடிக்கும் ஜீவன் இறப்பதே சரியெனெ. எதற்கும் வன்முறை தீர்வாகாது என்று கூறவைப்பதற்கான முயற்சிகளாக.

“ஜிஹாதி கண்ணீர் சிந்த மாட்டான் , ரத்தம் தான் சிந்துவான்” “அமேரிக்கக்காரன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டான்” “இறந்தவன் எல்லாரும் நல்லவன்னா ஹிட்லரும் நல்லவன்னு சொல்லுவீங்க போலருக்கே” மேலும் எள்ளலோடு எழுதியது போன்ற “என் கடவுளுக்கு நான்கு கைகள்” “எங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை”
(We don’t Crucify Our God ) என்பன போன்ற வசனங்கள் அதிகம் யோசிக்கவைக்கின்றன.



வளவளவெனப் பிராமணப்பாஷை பேசும் பூஜா குமார், ( அரச கட்டளை நிமித்தம் அவர் அந்த பாஸின் வீட்டிற்கு செல்லும்போது மட்டும் அளவுக்கதிகமாக க்ளீவேஜ் அபாய கட்டத்தையும் தாண்டி கீழே இறங்கிக்கிடக்கிறது. ) பின்னர் அளவாகப்பேசும் ஆன்றியா, (‘விக்ரம்’ படத்தில் வந்த அந்த கம்ப்யூட்டர் குட்டி’யை விட சிறப்பாகச்செய்திருக்கிறார்) என ரெண்டு ஹீரோயின்கள்,  ஜேம்ஸ் பாண்டைச் சுற்றி வரும் ஏகப்பட்ட பெண்கள் போல, அட்டை போல ஒட்டிக் கொண்டே இருக்கின்றனர் படம் முழுக்க. என்ன ஒன்றுக்கு இரண்டு கதாநாயகிகள் இருந்தும் ஒருவருக்கும் கமல் தம்மிதழ் சேர்ந்து எப்போதும் கொடுப்பதை ஒரு முறை கூடக் கொடுக்கவில்லையே என்பதே என் ஆதங்கம்.

வன்முறைக்காட்சிகளுக்குப் பஞ்சமில்லை, பில்லா-2  வை விடவும் கூடுதலான வன்முறை காட்டப்படுகிறது. அரபி எழுத்தில் பின்புறத்தில் துணியுடன் அந்த அமேரிக்க வீரனை கழுத்தறுக்கும் காட்சி, பின்னர் அவனின் தொண்டை கரகரக்க காமிராவில் மீள ஓடவைத்து சரிபார்க்கும் காட்சி, நிற்க வைத்து அனைவர் முன்னிலும் துரோகியை தூக்கிலிடும் காட்சி, துப்பாக்கியால் சுடவரும் வில்லனை மணிக்கட்டோடு வெட்டி எறியும் காட்சி, அது துண்டாக விழுந்து துடிக்கும் காட்சி, ஹ்ம்... கமல் என்ன காண்பிக்கிறீர்கள் ?! இதற்கு எப்படி U/A சான்றிதழ் கிடைத்தது ?

உலகத்தரமான கிராபிக்ஸ் காட்சிகள் பல இடங்களில் புருவங்களை உயர்த்த வைக்கிறது. முக்கியமாக நீளமான இரண்டு புறமும் இறக்கைகள் கொண்ட உலங்கு ஊர்தியிலிருந்து வீர்ர்கள் இறங்கும் காட்சி ! ஹ்ம்...பிரமாதம்....இருப்பினும் அந்த “முக்கியமான இடத்தை”க் காண்பிக்கும் போது , அந்தக் குகை , அலிபாபாவும் 40 திருடர்களில் வந்த குகையை விடவும் மோசமாக இருக்கிறது. நல்ல அரங்க அமைப்பு என்று தெளிவாகத்தெரிவதும் ஒரு பெரிய குறை. மண் வீடுகள் பற்றி எரிவதும், குண்டுகள் பட்டு தெரித்து விழுவதும் அப்படியே ராம்போ’வேதான். ஹ்ம்..கொஞ்சமும் சளைக்கவில்லை செலவிற்கு..!
 

இசை பற்றி என்ன சொல்வது ?, உலகத்தரமான படத்திற்கு சற்றும் பொருந்தாத பின்னணி மற்றும் பாடல்கள். ‘ஷங்கர் எஹ்சான் லாய்’ என்ற மூவர் கூட்டணி, ஏற்கனவே கமலின் மும்மை எக்ஸ்பிரஸ் படத்திற்கும்,ஆளவந்தானிலும் சோபிக்காத கூட்டணி. அதிரடி ஆக்ஷன் படத்திற்கு இட்டு நிரப்பி மட்டுமே செல்கிறது.பாவம். அந்த கோபிகையர் பாடலும் கூட “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி “ என்றே இசைக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் வரும்  பின்னணி இசை பற்றிச்சொல்லவேண்டுமானால் ..ஹ்ம்...இப்போதெல்லாம் 2D  Computer Games களில் கூட பிரமாதமாக வருகிறது.

ஆஃப்கானிஸ்தானில் நடக்கும் கமேன்டொ ட்ரைனிங்கிற்கு பின்னணியில் ஆங்கிலப்பாடல் இசைக்கிறது, எந்த ஆப்கானி இங்கிலிஷ் பாடல்கள் ஒலிக்க விட்டுக்கொண்டு ட்ரைனிங்க் எடுப்பான் ஷங்கர்/எஹ்சான்/லாய்? சிரிப்பு மூட்டாதீர்கள்..! யுவன் இசைப்பதாக இருந்தது முதலில் பின்னர் அவர்களிடம் கைமாறி ஒன்றுமில்லாமல் போய்விட்டது. So Sad. “யாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா” என இசைப்பது , விருமாண்டியில் ஜெயிலை உடைத்து வெளியெ வரும்போது இசைத்த ‘கர்ப்பகிரகம் விட்டு சாமி வெளியே வருது”ல புள்ளி 2 சதம் கூட இல்லை.ஹ்ம்...கமல் பேசாம... நீங்க...வேண்டாம்  :) சொல்லவே வேணாம் சொன்னா அப்புறம்.. ஹிஹி.



இவ்வளவு நேரமும் தெளிவாக ஓடிக்கொண்டிருக்கும் படம் FBI வந்து கமலின் முழுக் கூட்டத்தையும் கைது செய்தபிறகு நொண்டியடிக்கிறது.ஏகத்து யூகிக்கமுடியும் காட்சிகள் கொண்டு பின்னர் நிறைகிறது. தியேட்டரில் பாப்கார்ன் ஒலிகள் படபடக்கிறது.இனி இப்படித்தான் முடியுமென்று தெளிவாகத் தெரிந்தும் விடுவது படத்தின் சுவாரசியத்தைக் குலைத்தே விடுகிறது.

அமெரிக்கன், ரஷ்யன் மற்றும் பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் முழுக்கத்தொலைந்து போன ஆஃப்கானிஸ்த்தானில் நிலவிய கடும்பஞ்சத்தில் தாலிபான்கள்,அரசைக் கைப்பற்றிக் கொண்டபோது UNESCO அந்த நாட்டில் இருக்கும் புத்தர் சிலைகளைக்காப்பதற்கு 300 மில்லியன் டாலர்களை ஒதுக்கியது. குழந்தைகள் குடிக்கப்பாலில்லை, கட்டமைப்புகள் இல்லை, சரியாகச்சாலைகள் கூட இல்லை , இங்கு அந்த புத்தர் சிலைகளைக்காத்து என்ன பயன் என்று Rocket Launchers கொண்டு அத்தனை புராதன சிலைகளனைத்தையும் தகர்த்தெறிந்தனர் தாலிபான்கள். அதை மேற்கோள் காட்டியே இங்கு நடந்த அயோத்யா நிகழ்வும் ஒப்புநோக்கப்பட்டது.

‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’ ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான தீவிரவாதி, ‘ஆங் சான் சூ கியி’ மியான்மார் அரசாங்கத்திற்கு எதிரான தீவிரவாதி, ‘நெல்சன் மண்டேலா’ கூடத்தான் தீவிரவாதி அந்த பிரிட்டோரியா அரசாங்கத்திற்கெதிராக, இவ்வளவு ஏன் ‘தமிழ்தேசத்திற்கெனப் போராடிய அனைவரும்’ தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்களே. தீவிரவாதிகள் யாரும் தாமாக உருவாவதில்லை. நீங்களும் நானும் துப்பாக்கி பிடிக்கப்போவதில்லை.

புறாக்கள் காண்பிக்கப்படாத , பறக்காத இடங்களே இல்லை எனலாம் படம் முழுக்க, அது ஆப்கானிஸ்தானாகட்டும், நியூயார்க் ஆகட்டும்..எல்லா இடங்களிலும் புறாக்கள் பறந்து கொண்டே தானிருக்கின்றன. புறாக்கள் மட்டுமே பறந்துகொண்டிருக்கட்டும் உலகம் முழுதும் என்பதே கமலின் விருப்பமும், அதுவே எனதும்.




.



Friday, February 1, 2013

கண்ணாடிக்குவளை

ஆனந்தவிகடன் இதழில் வெளியான கவிதை



தோழியுடன்
உரையாடிக்கொண்டிருந்தபோது
அருகிலிருந்த
கண்ணாடிக்குவளையை
கொண்டு போய் உரிய இடத்தில்
வைத்து விடவேண்டும்
என்பதில் இருந்த
கவனத்தைவிட
அது உடைந்தபின்
அள்ளி எடுக்கும்போது
கூடுதலாயிருந்தது.



.