Monday, June 25, 2012

யார் தொழுவர்?



உலக அழிவினால் இல்லாது போகும்
மனித இனத்தைப்பற்றி அல்ல கவலை இப்போது
இதுகாறும் அவர்களால் கொண்டாடப்பட்ட
கடவுள்களைப் பற்றியே.

தமக்கு கீழ்ப்படிதலுள்ளவர்களை நமக்கு எப்போதும்
பிடித்துத்தான் போகும்
நாம் உருவாக்கிய
கடவுள்களும் அதற்கு விதிவிலக்கில்லை
என்னைக்கேட்டால் அவர்
தற்கொலை செய்துகொள்வார்
என்றே கூறுவேன்.

தமக்கென யாருமற்ற உலகில்
தான் மட்டும் தனித்திருந்து
என்ன செய்துவிடக்கூடும் என்று.


.

Monday, June 18, 2012

எனக்காக யாரும் அழவேண்டாம்




எந்தன் கல்லறையில் மலர்களை வைக்கவேண்டாம்
எல்லா மலர்களின் நிறங்களையும்
அவற்றின் இயல்பான மணங்களையும்
மரபணு மூலம் பிறழச்செய்தவன் நான்

எல்லா ஆண்டுகளிலும் என் நினைவு தினத்தன்று

யாருக்கும் உணவளிக்க வேண்டாம்
எல்லா உணவுகளுக்கும் ஊட்டம் கொடுத்து
அவற்றின் இயற்கைச்சுழற்சியை மாற்றியவன் நான்

என் நினைவாக எனது கல்லறையில்

கனிகளை வைத்துப் படையல் செய்யவேண்டாம்
எந்தக்கனியும் இனிச் செடியில் உருவாகுதல் கூடாது என்று
அவற்றை விதையின்றித் தோன்றச்செய்தவன் நான்.


என் பெயரை மறந்தும் கூட பின் வரும் சந்ததியினருக்கோ
அல்லது தெருவுக்கோ வைத்து விடவேண்டாம்
யாருடைய பெயரும் நிலைத்திருக்கவியலாது
அனைவரின் வரலாற்றையும் திரித்து எழுதியவன் நான்.

என் கல்லறையில் எந்த மொழியிலும்

நான் வந்து சென்றதை எழுதிவைக்கவேண்டாம்
சிறு இனங்களைப் பூண்டோடு அழிக்க அமர்ந்து திட்டம் தீட்டி
முதலில் அவர்களின் மொழியை அறவே அழித்தவன் நான்.

எனக்காக யாரும் அழவேண்டாம்

கண்ணிமைகளின் அழகு கூட்ட முயல்களின் இமைகளைக்
கட்டிவைத்து அவற்றின் மீது ஆராய்ச்சி செய்தவன் நான்.


என் கல்லறையில் எந்தச் சிறு விளக்கையும்
ஏற்றி வைக்கவேண்டாம்
இயற்கையின் எண்ணை வளங்களை
ஆதிக்கச்சக்திகள் தமக்குள் கூறு போட்டுக்கொள்ள
அடிப்படைத்திட்டம் தீட்டிக்கொடுத்தவன் நான்.

உயர்த்திப்பிடித்த மதுக்கோப்பையுடன்

என் இறந்த நாளை நினைவு கூரவேண்டாம்
அருந்தும் அத்தனை மதுவிலும் கலப்படம் செய்து
பல குடிகளைக்கெடுத்தவன் நான்

என் உடலை எடுத்துச்செல்ல

மரத்தாலான பெட்டி செய்ய வேண்டாம்
அத்தனை காடுகளையும் அழித்து
நகரச் சுடுகாடுகளைக் கட்டி எழுப்பியவன் நான்.


என் உடலைப்பதப்படுத்திக் காட்சிப்பொருளாகப்
பிறர் பார்வைக்கு வைக்கவேண்டாம்
பல இனங்களை அவற்றின் சுவடின்றி
அழித்தொழித்தவன் நான்

என்னை எரித்துவிட்டு அந்தச்சாம்பலை

எந்த ஆற்றிலும் கரைக்கவேண்டாம்
அத்தனை ஆறுகளையும் மாசுபடுத்தியவன் நான்

என் சாம்பலை எந்த மலையின் மீதும் தெளிக்கவேண்டாம்
அத்தனை மலைகளின் பனியை இன்னும் இறுகச்செய்யும் வகை
பூமியின் வெப்பத்தை அதிகரிக்கச்செய்தவன் நான்.

நான் இறந்தபின்னும்

இந்தக்கவிதையைப்பிறர் வாசிப்பதை அறிய
உடல் தானம் செய்திருக்கிறேன்
எஞ்சும் உதவாத பாகங்களை
உங்கள் விருப்பப்படி
பிணந்தின்னி வல்லூறுகளுக்குப் படைத்துவிடுங்கள்.



.

Monday, June 11, 2012

கூண்டுக்குள் இருப்பினும்



கண்ணாடி சீசாவின் கையகல நீருக்குள்
நீந்த விடப்பட்ட மீன்கள்
கடலையே உருவகப்படுத்திக்கொண்டு
அலைந்து கொண்டிருக்கின்றன


உயிர்க்காட்சி சாலையில் அலைந்துதிரிந்து
கொண்டிருந்த ஒட்டகங்கள் வீசிய காற்றில்
மண்துகள்களை எதிர்கொள்ள தம் கண்களின்
தோல்திரைகளை சிறிது மூடித்திறந்தன


திறந்து வைத்திருந்த ஜன்னலின் வழி
சட்டென என் உள்அறைக்குள் நுழைந்துவிட்ட தேனீக்கள்
சுவரொட்டியிலிருந்த வண்ணவண்ணப்பூக்களில்
தேனெடுக்க முட்டி மோதின


கூடு கட்டப் பொருள் சேகரம் பண்ணிக்கொண்டிருந்த
அந்த நீலப்பறவைகள் அருகிலிருந்த நீல நிற
சாக்லேட் தாள்களையும் கொத்திக்கொண்டு பறந்தன.


திரும்பத்திரும்ப எண்ணிப் பத்தே கம்பிகளில் மட்டுமே
அமர்ந்துகொள்ள முடிந்தாலும் அந்தக் கூண்டுக்குள்
சலிக்காமல் குயில்கள் பாடிக்கொண்டிருக்கின்றன.


வலிந்து வாசிக்க முயலவில்லையெனினும்
வீணையின் தந்திகளின் மேல் தவறுதலாகப்பட்டுவிட்ட
என் கைவிரல்களும் நாதத்தை எழுப்பத்தான் செய்கின்றன.


ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித்திரையில்
துப்பாக்கிசூடு, அதீதவன்முறை, குருதி வடிதல் போன்ற
இன்னபிற பரபரப்பான காட்சிகளினூடே
மெல்லிய மலரின் விரிதல்களையும்
சேர்ந்தே ரசிக்கத்தான் செய்கிறது மனது.




.

Monday, June 4, 2012

அகத்தூண்டுதல்



எட்டிப்பார்க்க இயலாத ஒட்டகச்சிவிங்கிகள்,
தாவிக்குதிக்க இயலாத ஆனைகள்,
ஓடி வெற்றிகொள்ள இயலாத ஆமைகள்,
பறக்கவே இயலாத கோழிகள்,
தலையை எப்போதும் மண்ணுக்கு வெளியே
நீட்டி வைத்திருக்கும் நெருப்புக்கோழிகள்,
கூடவே தானும் இறந்து விட்டதாகக்
கருதிக்கொள்ளாத வாத்துகள்,
எப்போதும் விரைந்து செல்ல இயலாத நத்தைகள்,
அழகிய குரலுடன் அகவத்தெரியாத மயில்கள்,
திரும்பிப்பார்க்கும்படி மயங்கவைக்க இயலாத அழகற்ற குயில்கள்,
வீசின காற்று நின்ற பிறகு சுற்ற இயலாத காற்றாடிகள்,
பரந்து விரிவதை நிறுத்திக்கொள்ள இயலாத பிரபஞ்சம்,
தனது இசையைத் தம் காதுகளால் அனுபவிக்க இயலாத பீத்தோவன்,
காதல் என்பதே அறியாத உன் மனது.



.