Monday, October 17, 2022

நான் தான் ஒளரங்கசேஃப்

                           9 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்

நேற்றைய புரவி கூடுகையில் முகிலன்,பத்மபாரதி, ரமேஷ் கல்யாண் பாவெங்கடேசன் மற்றும் முத்தாய்ப்பாக பாலசுப்ரமணியன் பொன்ராஜும் ‘நான் தான் ஒளரங்கசேப்’ பற்றி பேசினர். நல்ல கூட்டம். ஓசுரில் முப்பதுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். (ஒரு இலக்கிய விமர்சனக் கூட்டத்துக்கு இவ்வளவு கூட்டம் நம்ப இயலவில்லை)
 
முதலில் பேசிய பாவெ’க்கு கொஞ்சம் தயக்கமும், பேச்சில் தடுமாற்றமும் இருந்ததைப்பார்க்க முடிந்தது. எழுதுவோர் எல்லாம் நல்ல பேச்சாளர்கள் இல்லை தான்.ஒத்துக்கொள்ளலாம். முகிலன் கேமரா இருப்பதைப்பற்றி ஸ்டேஜ் ஃப்ரைட் இல்லாது   அமையாக பேசினார். போரைப்பற்றிய அசூயை ஒரு பெருந்துயரம் பற்றிய அவரின் பேச்சு சிறப்பு. பின்னர் பத்மபாரதி பேசினார். இடையிடையே கதை வேறுபக்கம் திரும்பி ‘சீலே’ பயணத்தைப்பற்றி 100 பக்கங்கள் இருப்பதைக்கண்டு அதை அப்படியே கடந்து விட்டதாகவும்,கதையின் ஓட்டத்துக்கு தடைக்கல்லாக இருந்ததைக் கூறினார்.
 
ரமேஷ் கல்யாண், தமது டேப்லட்டில் குறித்து வைத்திருந்தவற்றை அவ்வப்போது பார்த்துவிட்டு எந்தத்தயக்கமுமின்றி பேசினார். சாரு நம்மிடம் எல்லாத்தகவல்களையும் கொடுத்துவிட்டு முடிவு வாசகனின் கையில் தான் இருக்கிறது என்ற ஒரு பொறுப்புத்துறப்பு புதினம் இது.
 
(ஒளரங்கசெஃப் , சாரு வெரி சேஃப்) ’எல்லாரும் செய்றான் நானும் செய்றேன்’ என்பது ஒளரங்கசேப்பின் நிலை. அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்’ என்று சொன்னானா என்பதை குறிப்பிடவில்லை. (நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை. )
 
 
                                               1 நபர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்
 
கதையை தானே சொல்லிச்செல்வது ஒரு வகை. ஆசிரியராக இருந்து கொண்டு கதை சொல்லியை வைத்து அவர் மூலமாக கதையை சொல்லிக் கொண்டு போவது இன்னொரு வகை. இந்தப்புனைவு இரண்டாம் வகை. பிக்ஸல்களும் முழுப்படமுமாக இருப்பதை உவமையாகக்காட்டி பேசியது எனக்கு மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. ஆவி ஒரு அகோரி என்ற மீடியம் மூலம் கதை சொல்வது என்பது, மீடியம் ஆவியின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதால் சொல்லும் யாவையும் ஆவியின் கூற்று.மீடியம் அதற்கு ஒருபோதும் பொறுப்பேற்காது. அதுதான் இக்காலத்தில் அத்தனை மீடியாக்களும் செய்து கொண்டிருக்கின்றன, மேலும் சீலே பயணம் மற்றும் கொக்கரக்கோவின் மடைமாற்றும் கேள்விகள் போன்றவை இக்காலத்திய பேஸ்புக்,ட்விட்டர் மற்றும் வாட்ஸப்பைக்குறிக்கும் என்ற விளக்கம் மிக அருமை. இவ்வாறான கருத்துகளை சொல்லும்போது அவர் குரல் தளர்வின்றி முந்தைய தடுமாற்றங்கள் இன்றி ஒரு நிலையில் நின்று சொல்லியது நன்று. கொஞ்சம் நேரம் எடுக்கிறது செட்டில் ஆவதற்கு, 
 
முந்தைய பாரா முழுக்க பாவே கூறியது/பேசியது. கடைசியாக பாலா பேசினார். கடைசிக்கவி’யின் ஆதங்கங்கள் பேச்சில் தெரிந்தது. ஏனெனில் குறித்து வைத்திருந்த பல குறிப்புகளை முன்னர் பேசிய நால்வரும் சொல்லி முடித்துவிட்டதால் ஏற்பட்டது. இருப்பினும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்று எனக்கு இதுவரை கிட்டாத ஒன்றை பாலா கூறினார். புத்தரை காந்தியின் இடத்தில் வைத்துப்பார்க்கலாம், அது போல ஜவஹர்லால் நேருவை அசோகரின் இடத்தில் பார்க்கவேணும். ஏனெனில் அசோக முத்திரைகள் தான் இந்தியாவில் இன்றளவும் பயன்படுத்துப் படுகிறது.
 
பேசிய அனைவரின் கூற்றுகளும் சாரு’வின் புத்தகம் ஒரு ஆவி,தாம் ஒரு மீடியம் மட்டுமே என்ற வாக்கில் அமைந்திராமல் தாம் முன்னரே வாசித்த நூல்களின் தரவுகளையும் குறிப்பிட்டு பேசியது சிறப்பு. (ஒரு வேளை பல ஆவிகள் கூடி வந்து இறங்கியிருக்கலாம் இந்த ஊடகங்கள் மீது 🙂 )
 
அடிப்படையாக இப்படியான கதை சொல்லல், ஒரு வித தப்பித்தலுக்கு வழி வகுப்பதாக அமையும் என்பது என் முடிவு ( இன்னமும் நூலை வாசிக்க வில்லை நான்) அரேபிய இரவுகளில் இப்பாங்கை காணலாம். திரைச்சீலை சொன்ன கதை, மேஜிக் கம்பளம் கூறிய கதை என ஏகக்கதைகள் காணப்படும். பிள்ளையாரும் வியாசருமாக ஒருவர் சொல்ல இன்னொருவர் எழுதினது.
 
மேலும் பாவெ ‘அடுத்த மாத கூட்டத்துக்கென ‘நொய்யல்’ புதினம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி பேசவிழைவோர் முன்கூட்டி பதிவு செய்து கொண்டால் நூலை 20-30 விழுக்காடு கழிவில் வாங்க ஏற்பாடு செய்யப்படும். நூல் விற்பதற்கு விமர்சகர்கள் நம்மாலான உதவி’ என்று வேண்டிக்கொண்டார்.
 
                                               3 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்
 

1 comment:

  1. இலக்கியக் கூட்டம் மிக அருமையாக இருந்தது ஐயா. எனக்கு இது முதல் கூட்டம் கூட்டத்தில் பேசிய கருத்துகளை உள்வாங்க திணறிவிட்டேன். அவ்வளவு அடர்த்தியான,செறிவான, முழுமையான கருத்துகள் விமர்சனங்கள். ஏற்பாடு செய்த ஐயா பா.வெ அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete