Tuesday, May 3, 2022

Aritmija - ஜுகல்பந்தி

 


போன வாரம் ஒரு இசை நிகழ்ச்சி. வழக்கம்போல
BIC Bangalore International Centerல தான். செந்தில் பாலா இருவரையும் கூப்பிட்டேன். பாலா ஆறரைக்கு வருவதெல்லாம் ஆகாது என்றுகூறிவிட்டார். செந்திலுக்கு வேறு பணி. நான் மட்டுமே கிளம்பிப் போய்விட்டேன். Aritmija என்ற ஒரு குழு. இரண்டு ஸ்லோவினியர்கள், இரண்டு இந்தியர்கள் (ரெண்டு பேரும் வடநாட்டை சேர்ந்தவர்,,இந்தி சரளமாக பொழிந்தது) . நிகழ்ச்சி தொடங்குமுன் , முன்னுரையாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓரிரண்டு வார்த்தைகள் பேசுவது வழக்கம். கேள்விகள் தான் கேட்டார் பேசவில்லை. ஸ்லோவினியா எங்க இருக்குன்னு தெரியுமா? அங்க என்ன மொழி பேசுவாங்கன்னு தெரியுமா?ன்னு கேட்டார். ஆங்கிலத்தில் தான் பேசினார். கொஞ்ச பேர் கையத்தூக்கி எதோ சொன்னார்கள். எனக்கு உண்மையிலேயே தெரிய வில்லை. இத்தனைக்கும் அது ஐரோப்பிய நாடு என அறிந்து தானிருந்தேன். இருப்பினும் கை தூக்க ஒரு தயக்கம்.பின்னர் அவரே தொடர்ந்தார்.

ஸ்லொவினியா யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த நாடு. பெங்களூரைப் போலவே சுற்றளவு கொண்ட நாடு. (அவ்வளவு தானா , ஒரு நாடு??) 80 சதம் மரங்கள் பெங்களூரை விட அதிகம். 60 சதம் பெங்களூரின் மக்கட்தொகையை விடக்குறைவு என்றார். அரங்கில் ஒரு ஈ காக்கை கூட சத்தம் எழுப்பவில்லை. அங்கிருந்து இரண்டு கிட்டாரிஸ்ட்டுகள் வந்திருக்கின்றனர். ஸ்லோவினிய தூதரக வழி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று அறிமுகப்படுத்தினார்.

நிகழ்வு தொடங்கு முன்னரே நான் அரங்கின் வெளியே இருக்கும் தோட்டத்தில் அமர்ந்திருந்தேன் இரண்டு வெளிநாட்டவர் தமக்குள் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தேன், ஒன்றும் புரியவில்லை. இதுவரை கேள்விப்பட்டிராத மொழி. கொஞ்ச காலம் ஐரோப்பாவில் இருந்ததால் இன்ன மொழி தான் எனக்கண்டுபிடித்துவிடுமளவுக்கு தெரியும் தான். அவர்கள் அருகில் தான் அமர்ந்திருந்தேன். ஏற்கனவே போஸ்ட்டர்கள் பார்த்திருந்ததால் இவர்கள் தான் கிட்டார் கலைஞர்கள் எனத் தெளிவானது. சென்று பேசலாம் என எத்தனித்தபோது கட்டிடத்துக்கு கொசு மருந்து அடிக்கும் தொழிலாளி கையில் பெரிய பம்ப்புடன் வந்து புகையைக் கிளப்பிவிட்டார். அத்தோடு எழுந்து போனவர்கள் தான், புகைக்குள் சென்று மறைந்தே விட்டனர். ஆஹா..

நிகழ்ச்சி தொடங்கியது. முழுமொட்டை போட்டிருந்தவர் Bass Guitar இன்னொருவர் Lead Guitar என வாசிக்கத் தொடங்கினர். அவ்வப்போது தபேலா அவர்களின் வாசிப்பிற்கேற்ப தாளக்கட்டுடன் ஒத்திசைத்தது. அபஸ்வரம் எங்கும் இல்லை. மிகச்சரியாக Sync ஆகியிருந்த ஒலி. பின்னில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். ஹோஸ்ட்டிங்-க்காக வந்திருப்பார் போலிருக்கிறது என நினைத்துக்கொண்டேன். முகப்பிசை முடிந்ததும் எழுந்து பேசத்தொடங்கினார். சரளமாக ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக பொழிந்தார். Aritmija குழு எப்படி உருவானது அதை ’அரித்மியா’ என்றே உச்சரிக்கவேணூம். ’அரித்மிஜா’ இல்லை எனத்திருத்தினார். கொஞ்சம் சொந்தக்கத சோகக்கதயும் கலந்து கட்டி அடித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஸ்லோவினியர்களின் நட்பு/தொடர்பு கிடைத்தது. கரோனாவால் எல்லாம் தடைப்பட்டு போனது ஒரு நிகழ்ச்சி கூட கிடைக்க வில்லை. இப்போது ஆரம்பித்துவிட்டோம் என மகிழ்வுடன் கூறினார். கலைஞர்களுக்கு அவ்வளவு காசு கிடைப்பதில்லை என பேத்தோஸ் பாடினார்.(எல்லாருக்குமே இப்டித்தானா ?? )


கைதேர்ந்த இசை.அத்தனை உழைப்பு. விரல்கள் துள்ளி விளையாடுகிறது கிட்டார்களில் இருவருக்கும். கிட்டத்தட்ட ஆயிரம் நிகழ்ச்சிகளுக்கு மேல் செய்திருப்பதாக குறிப்பு தெரிவிக்கிறது. எங்கும் நோட்ஸ் (இசைக் குறிப்புகள்) எழுதி வைக்கவில்லை. ஒரு தயக்கமில்லை. நல்ல ஒத்திகை. அதை செயல்படுத்தியதும் சிறப்பு. தவறுகள் செய்த போதும் மேடையிலேயே அவற்றை யாருக்கும் தெரியாது திருத்திவாசிக்கும் அந்த அனுபவம். ஆஹா. ஹாட்ஸ் ஆஃப் ஸ்லோவினயன்ஸ்.

பாடிய அந்தப் பெண்மணி ஸ்லோவினியா மொழியில் ஒரு பாட்டை முழுதுமாக கிட்டார்களின் மற்றும்  அருமையான தபேலாவின் துணையுடன் பாடி முடித்துவிட்டு , எதேனும் புரிந்ததா எனக்கேட்டார் . பின்னர் சிரித்துக் கொண்டே இது அவர்களின் மொழி. அதான் ஒரு சொல் போலும் உங்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.

ஒரு வித்தியாசமும் தெரியவில்லை அந்தப்பாடலில். ஏற்கனவே கேட்ட பழகிய பாடல் போலவே தோற்றமளித்தது. பின்னரும் ஜுகல்பந்தி ( இந்த சொல்லுக்கு தமிழ்ல என்னப்பா சொல்றது? ) யாகத்தொடர்ந்தது. கிட்டாருக்கும் தபேலாவுக்கும் ஒத்துவராது. ட்ரம்ஸ் தான் சரி அதுபோல நாதஸ்வரத்துக்கு தவில் தான். இங்கே ஒரு வேறுபாடும் தெரியவில்லை. அப்படியே பொருந்தியது தான் வியப்பு. சில இந்திப்பாடல்களின் உருவான சூழல்களை ஒப்பிட்டுப் பேசினார். நதிக்கரையோரம் காதலனைத்தேடிக் காத்திருக்கும் காதலி இங்கு, கடற்கரையோரம் காத்திருப்பது அங்கு என. பெரும்பாலும் ஒத்துப்போகும் விஷயங்களைக் குறித்து பேசினார். இருப்பினும் நம்ம ஊரில் பெங்களூரில்/ சென்னையில் எத்தனையோ பாடல்கள் இசைக்கப் பட்டிருக்கிறது. அதையெல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இத்தனை பிரபலங்களுக்கு அவை யெல்லாம் தெரிந்திராமல் இருக்க வாய்ப்பில்லை தான். பாடல்கள் என்றால் இந்திதான். படங்கள் என்றால் இந்திதானா?? சிம்பொனியும் ஆஸ்கரும் சென்னைல தான் ஒக்காந்திருக்காங்க. கொஞ்சம் அதயும் பேசுங்க.

இதுபோல ரஹ்மான் நிறையச்செய்கிறார். நேரில் சென்று பார்க்க வேணுமெனில் கொட்டிக் கொடுக்கவேணும் டிக்கெட்டுக்கு. கார்ப்பொரேட்டுகளுக்கு மட்டுமே சாத்தியம். நம்மைப்போன்ற கடைக்குட்டிகளுக்கெல்லாம் ஆவதில்லை. கோக் ஸ்டூடியோவில் நிறைய செய்கிறார் யூட்யூபில் பார்த்துக்கொள்ளலாம். ராசைய்யா இது போல எதேனும் செய்கிறாரா எனத்தேடித்தான் பார்க்க வேணும். ஜுகல் பந்திகளுக்கு முழுமையான ஒத்திகை அவசியம், மேலும் இரு புறமும் ஒத்திசைவான ராகங்களையும், தாளக்கட்டுகளையும் தேர்ந்தெடுத்து அந்தப்பாடல்களை மட்டுமே வாசிக்க வேணும். அதெற்கெல்லாம் கனகாலம் பிடிக்கும், அதனாலேயே பெரிய இசைக்கலைஞர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஜக்கியின் சிவராத்திரி கொண்டாட்டங்களில் அவ்வப்போது சில முத்துகள் முகிழ்ப்பதுண்டு இதுபோல. ஆனாலும் அதுவும் ஒரு கார்ப்பரேட் நிகழ்வு தான். கலைஞர்களை ஊக்குவிப்பது என்பது பெருந்தன முதலாளிகள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.!

இந்த நிகழ்ச்சியே ’விப்ரோ’ நந்தன் நிலக்கேனிஐயா’வின் தயவில் அவர் தம் கட்டிடத்தில் நிகழ்த்தப்பட்டதுதான். என்ன ஒன்று அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இலவசம். படமாகட்டும். இசை நிகழ்வுகளாகட்டும். நாடகங்கள், ஆவணங்கள், என அத்தனை நிகழ்வுகளுக்கும் உள்நுழைவு இலவசம். லெ முருகபூபதியின் ’இடாகினி கதாய அரதம்’ நாடகம் இங்கு தான் அரங்கேறியது. நான்கு மாதங்களுக்கு முன்பு.

இந்த Aritmija இசை நிகழ்ச்சிக்கு அரங்கு நிறைந்து தானிருந்தது நேரம் போகப்போக இன்னமும் கூட்டம் கூடி இறங்கிச்செல்லும் படிக்கட்டுகளில் அமரத் தொடங்கினர். வெகு சில நிகழ்ச்சிகளுக்கே இப்படி கூட்டம் சேரும். இசை நிகழ்ச்சிகளெனில் நேரில் சென்று நம் காதால் எவ்வித மிக்ஸரின் உதவியின்றி, உருப்பெருக்கியோ, இல்லை குறைத்தோ என்றில்லாமல் நேரடியாகக் கேட்டால் தான் அதன் அருமை தெரியும். தந்திகள் அதிர்ந்து அதன் ஒலி நம் காதை நேரடியாக வந்தடையும் போது அதன் சுகமே அலாதி. அதுக்கு தான் அடிச்சிக்கிர்றது. லைவ் ஆர்க்கெஸ்ட்ரா தான் பெஸ்ட்.!



No comments:

Post a Comment