கடந்த இரண்டு நாட்கள் அற்புதமாகக்கழிந்தது. ஓசூரில் குருகுலம் பள்ளியில் அக்னி குழு ஏற்பாடு செய்திருந்த ‘பறையிசைப் பணிமனை’யில் கலந்து கொண்டேன். போன அக்டோபர் 2021ல் அக்னி ஷர்மிலா’வை நான் லெ.முருகபூபதியின் ‘இடாகினி மாய அரதம்’ நாடக அரங்கில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அதில் அபிநயித்த தம் மகள் ‘இனியாழ்’ பற்றி. பிறகும் தமது இந்தப்பணிமனை பற்றி குறிப்பிட்டார். வகுப்புகள் எடுக்கிறோம், வணிக எதிர்ப்பார்ப்பின்றி, கட்டமைப்பு வசதிக்கெனமட்டும் ஒரு தொகை கொடுக்க வேண்டி வரும் என. பின்னரும் இடையே ஒரு நிகழ்வு நடந்து முடிந்திருந்தது. ஆகஸ்ட்டில் இன்னொரு நிகழ்வு இருக்கிறது என அறிந்த பின் இணைந்து கொண்டேன்.
ஏற்கனவே கொஞ்சம் இசைஞானம் (!) கிட்டார் என இருப்பதால் எளிதாக இருக்கும் என நினைத்து கொஞ்சம் ஏமாந்தேன், ரிதம் பேட்டர்ன்ஸ் விரைவில் விளங்கி விடும்தான். இருப்பினும் அதைக் குச்சிகள் வைத்துக் கொண்டு பறையை இடது கையில் தொங்க விட்டுக்கொண்டு (இன்னும் தோள்ப்பட்டை வலி தீரவில்லை ) சிண்டுக்குச்சி (மெலிந்த குச்சி) அடிக்குச்சி (குண்டுக்குச்சி) என இரண்டு குச்சிகளை விரல்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு அடித்து ஒலி எழுப்ப வேணும்.ஆஹா.. ரெண்டு நிமிடத்தில் இடது தோள் வலிக்க ஆரம்பித்துவிட்டது. போட்டிருக்கும் ட்டீ ஷர்ட் வேறு வழுக்கிக்கொண்டு போக பறையை நிலை நிறுத்தப் பெரும்பாடு பட வேண்டியிருந்தது.
லெ.முருகபூபதி’யின் நாடகக்குழுவின் முழுநேர நடிகர் நரேஷ் தான் எங்களுக்கு பறையிசை பயிற்றுவிக்க வந்த குரு. அத்தனை நேர்த்தி. எக்ஸெல்லண்ட் ஆர்ட்டிஸ்ட். உடல் மொழி அபாரம். நாடகங்களில் நடிப்பதெனில் சும்மாவா?!. அறிமுகங்கள் முடிந்த பின் பாடம் ஆரம்பித்தது.
பறையின் வரலாறு பற்றி, அதை இசைப்போர் பற்றி, மேலும் இன்றுவரை இந்த தமிழ்ப்பறைக்கென பறை இசைக்கென இசைக்குறிப்புகள் என ஏதும் இல்லை. நாட்டார் வழக்கியல் போல இதுவும் குரு சீடர் பரம்பரை வழி வந்த கலையே. சொல்லிக்கொடுத்து இசைக்க வைத்து பின்னர் அவர்தம் சீடர்களுக்கு என வழிவழி வந்த கலை இது. முதன் முதலாக இசைக்குறிப்புகளை தமிழில் கண்டேன். ஆஹா. இத்தனை நாளும் ஏபிசிடி என ஆங்கில இசைக்குறிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இது ஒரு ஆச்சரியம். ‘த கு கூ தா தீம்’ என ஒவ்வொரு குச்சிக்கும் ஒலிக்குறிப்பு. முதலில் தத்தம் தொடைகளில் சொல்லிக்கொண்டே அடித்து இசைத்து விட்டு போதுமான அளவு மாத்திரைகள் (கால அளவு) மனனம் ஆன பின்பு தமது பறையில் இசைத்துக் காட்டி, எங்களை இசைக்கப் பணித்தார்.
குச்சிகள் கையில் நிற்க மறுக்கிறது. இல்லையேல் அடி சரியாக விழ மறுக்கிறது, அடி விழுந்தாலும் ஓசை எழவில்லை, திருப்தி இல்லை. இது என்னது, தேவையில்லாம வந்து மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கே. அதோட இந்த தோள்பட்டை வலி வேறு தொடங்கி விடுகிறது. ஒருவாறு எல்லாமாக ஒன்று கூடி வர மத்தியானம் ஆகிவிட்டது. மொத்தம் ஏழு குறிப்புகள் இசைத்தோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. எளிதாகத்தொடங்கி கொஞ்சம் சிக்கலான குறிப்புகள் வரை. பறையைக் கீழே வைத்துவிட்டு அடித்தால் இன்னமும் செளகரியம் எனத்தோன்றாமலில்லை ட்ரம்ஸ் இசைப்பது போல. அதற்கெல்லாம் வழியே இல்லை சின்னப்பயலே என பறை எனைப்பார்த்து சிரிக்கிறது.
மொத்தம் பத்துப்பேர் முதன்முறையாக இசை பழக வந்தவர். மேலும் இரண்டாம் மூன்றாம் முறை, ( இவாளெல்லாம் சீனியர் பார்த்தேளா ) என பயிற்சிக்கு வந்தவர் பலர். அனைவரும் ஒன்று கூடி இசைக்க முடிந்தது இரண்டாம் நாளில் எங்களுக்கு கொஞ்சம் பிடிப்பு வந்ததும்.
கிட்டாரில் இடது கை விரல்நுனிகள் கிழியும், காய்த்துக் காய்த்து குருதி பெருகும்.பின்னர் மறத்துப் போகும். இங்கோ இடது கை முழுதும் தொங்கிப் போகிறது. தந்திக்கருவிகளை விடவும் இதற்கு உடல் வலிமை அதிகம் தேவைப்படுகிறது. பறை அடிப்பது மட்டும் அல்ல வகுப்பு. அதற்கேற்ப அடவுகள் (உடலால் ஆடுவது, இசைக்கேற்ப) முக்கியம் என ஒவ்வொரு இசைக் குறிப்பிற்கும் ஒவ்வொரு அடவு. சுத்தமாக வரவே இல்லை எனக்கு. ஓரளவு இசைக்கலாம். ஆடவெல்லாம் சொன்னால் எப்படி?..ஹ்ம்.. இருப்பினும் போதுமான அளவு நேரங்கிடைத்தது, ஆக அடவுகளை எடுத்தே ஆகவேண்டுமென்ற கட்டாயம், இங்கு இல்லையெனில் மனம் லயிக்காது என்பது உண்மை. இசை போட்டுவிட்டு இரவு நேர பார்களில் ஆடுவதெல்லாம் ஆட்டமேயில்லை. அது கூத்து. இங்கு ஆடுவது ஒரு ஒழுங்கு முறையில். முறையாக பயிற்சி எடுக்கவில்லை யெனில் மேடையேறிச் சென்று இசைப்பது இயலாத காரியம்.
விஜயின்’டோல் டோலுதான் அடிக்கிறான்’, தனுஷின் ’ஒத்தசொல்லால’, சூர்யாவின் ‘என்னத்தேடி வந்த அஞ்சல’ போன்ற பாடல்கள் பறையிசையில் இசைக்கப்பட்டவை. சட்டென ஞாபகம் வந்தவை இவை. தெம்மாங்கு (மகிழ்விசை), மற்றும் பல இசைக் கோவைகள் பறையிசையில் உள்ளன. ராசைய்யாவின் ‘மார்கழி தான் ஓடிப்போச்சு போகியாச்சு’ கேட்டுப் பாருங்க. இந்தப்பறையொலி எங்கும் கேட்டிராத ஒன்று. அற்புதம்.
பின்னரும் மாலையானதால் சென்று கொஞ்சம் இளைப்பாற நினைத்தால் சீனியர்கள் குழு பள்ளியின் மண்டபத்தில் அமர்ந்து ஒட்டுமொத்தமாக இசைக்க அது ஒரு ம்யூசிக்கல் ஜாம்’ உருவெடுத்தது. மிகப்பெரிய ட்ரம் ஒன்றினை கீழே வைத்து அனைவரும் பாடி மகிழ்ந்த அற்புத தருணங்கள் அவை. அத்தனை திறமைகள் கொட்டிக்கிடக்கின்றது. குரு நரேஷ் போன்றோர் தொடர்ந்தும் கலை இரவுகளில் ஆறு ஏழு மணிநேரம் தொடர்ந்து பறையிசைப்பர் என்ற ஆச்சரிய தகவலும் கிடைத்தது. அத்தனை எனர்ஜி. சளைக்காத அடி. ஒலி பட்டையைக்கிளப்புகிறது.
இரண்டாம் நாள், ஒயிலாட்ட அடவுகள் என காலை ஏழரை மணிக்கே ஆரம்பித்துவிட்டார். முதல் நாள் களைப்பே தீரவில்லை. அதற்குள் இன்னொரு அடவா?..ஆஹா. இந்த ஒயிலாட்டம் நான் பரமக்குடியில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன். நின்ற இடத்தை விட்டு அகலாது வரிசையாக நின்றுகொண்டு கையில் ஒரு கர்ச்சீஃப் வைத்துக்கொண்டு அத்தனை அழகாக அடவுகள் காண்பிப்பர். முன்னும் பின்னுமாக திரும்பி ஆடிக்கொண்டு. அதே அடவுகள் இங்கு நாங்களும் செய்து பார்த்தோம். ஓரளவு தான் வந்தது. ”குனிந்து இரு கைகளால் பூப்பறித்து நிமிர்ந்து வலது புறம் முதுகின் கூடையில் இடுவது” ஒரு அடவு , ”முழுதும் குனிந்து இரு கைகளால் நாற்று நடுவது” ஒரு அடவு என அத்தனையும் தமிழர் வாழ்வியலை அடையாளங் காட்டும் அடவுகள். ”வலது குதி காலை முன்வைத்து மேல் நோக்கி பார்த்துப்பின் குனிந்து இடது காலில் முன்பாதத்தை மட்டும் தரையில் அழுத்தி குனிந்து பார்ப்பது” என்பன போன்ற அடவுகள் , உடலைப்பதம் பார்த்துவிட்டது.
ஆறு ஏழு மணிநேரம் கையில் பறையையும் வைத்துக் கொண்டு அடித்து ஒலி எழுப்பி பின்னர் சற்றும் தவறாது அடவுகளையும் குழுவாக எடுப்பது அதுவும் மேடையில் என்பதெல்லாம் பெரும் சவாலாகவே இருக்கும், இருப்பினும் ஒரு மனிதனால் ஏழு மணிநேரம் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற என் கேள்விக்கு இடையிடையே சில அடவுகள் உடலைச் சமன் குலையாது காக்க வைக்கும், அது போகப்போக உங்களுக்கு புரிபடும் என குரு நரேஷ் மெதுவாகச் சொன்னார்.
தொடர்ந்தும் பறையிசைப் பணிமனையில் கலந்து கொள்ளவேணும் என்ற ஆர்வம் இல்லாமலில்லை. இந்த அடவுகளை மட்டும் கொஞ்சம் தள்ளி வைத்தால் நலம் என இரவிலும் அடாது பணிபுரியும் அமெரிக்கக் கூலியான என் உடல் என்னிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறது
20,21 ஆகஸ்ட்’ 2022 ல் நடைபெற்ற பறையிசைப்பணிமனை புகைப்பட ஆல்பம் இங்கே.
https://photos.google.com/share/AF1QipONKL3cWdpKvVRe5_zZ43pNMT4A1cQDf6SA7HeZ2JeRw3fQPvzJt6dP4kI_rpqDsg?pli=1&key=MHBmbkp3T291ejNoNF9oa2YyZWRhLWdPSmxTR3RB
அருமை
ReplyDelete