Wednesday, December 23, 2020

#பாவம் கதைகள்

 


பாவக்கதைகள். சின்ன தீப்பெட்டிக்குள் யானையை அடைக்கச் சொன்னது போல அத்தனை பெரிய இயக்குநர்களையும் கிட்டத்தட்ட 35 நிமிடங்களுக்குள் முழுக்கதையையும் சொல்லிவிடவேணும் என்று பலவந்தப்படுத்தியது போல இருக்கிறது. வெற்றிமாறன் மூன்று மணிநேர பெரிய படமானாலும் சின்னத் திரைக்குள் அரைமணிக்கூறு மட்டுமே ஓடும் சிறு நதியானாலும் உழைப்பு அருமை. அதான் சிறுகதை எழுதுவது தான் கடினம், பெரிய புதினத்தை முன்னூறு பக்கங்களுக்கு எழுதிவிடலாம் மனம் போன போக்கில் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் பல அத்தியாயங்களை வைத்துக் கொண்டு தலையணை உயரத்தில் அடுக்கிவிடுவது சுலபம். 
 
வெற்றி மாறனிடம் எனக்குப்பிடித்ததே அந்த விவரித்தல் தான் (டீட்டெய்லிங்) . இங்கு ஒரு சவால் போல அவருக்கு. ஒரே கதை 35 நிமிடங்கள் மட்டுமே. எடுத்து முடிக்க வேணும் என்ற கட்டாயம். ’வடசென்னை’யில் ஒவ்வொரு கதாபாத்திரமாக எடுத்து அறிமுகப்படுத்தி அது வரை அத்திரைக்கதையின் படுதாவில் பார்த்தேயிராத கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி பின்னர் அவைகளை மைய நீரோட்டத்தில் கலக்க வைத்து என அமர்க்களம் செய்திருப்பார். அதில் ஒன்றே ஒன்றை மட்டுமே எடுக்கவைத்து நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருக்கிறது என்றே தோணுகிறது எனக்கு.
 
பாலச்சந்தர் கூட சின்னத்திரை நாடகங்களுக்கென தம்முடைய உத்தியை சிறிதும் மாற்றாது பெரிய திரைக்கென எடுத்தது போலவே எடுத்திருப்பார். அது போலவே இங்கும் வெற்றி. நல்ல கலைஞர்களை வைத்து எடுத்தாலே பாதி வெற்றிதான். இருப்பினும் இதே கதையை சுந்தர்சி’யும் இன்னபிற பிரபலமற்ற கலைஞர்களும் எடுத்த அதே களம் தான். நிகழ்வுகள் கூட அதே தான். என்ன பெரிய வேறுபாட்டைக் காண்பித்து விட முடியும் ? சொல்லும் விதத்தைத் தவிர,. இங்கும் அதே வடசென்னையின் நான் லீனியரில் தான் முயன்றிருக்கிறார். எங்கோ வாசித்த ஞாபகம் இருக்கிறது எனக்கு, நான் லீனியரில் படமாக்குவது எளிது , அதே வடிவத்தில் எழுதினால் , டெக்ஸ்ட்டாக , யாராலும் வாசிக்க போலும் இயலாது விளங்காது. 
 
சாய் பல்லவி தமது அம்மாவின் வீட்டில் சேர் போட்டு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். எல்லோரோடும் அளவளாவிக்கொண்டு அதன் பின்னர் வரும் காட்சியில் தான் பிரகாஷ்ராஜ் பெங்களூரில் இருக்கும் பல்லவி வீட்டின் வாசலில் தயங்கி தயங்கி அழைப்புமணியை அழுத்துகிறார். பிறகு வரும் காட்சிகள் எல்லாம் லீனியர் தான். இருப்பினும் அழுத்தமும் இறுக்கமும் பிரகாஷ்ராஜுக்கு கை வந்த கலை. இருப்பினும் கடைசியில் ஏன் ஆர்ட்வொர்க் கொண்டு முடிக்கவேணும் படத்தை? டீம்ல யாருக்காச்சும் கொரொனா போட்ருச்சா ?!🙂
 
சுதாவின் கதை அப்பட்டமான லீனியரில் மட்டுமே. ஒரு மாற்றமும் இல்லை. எந்தப்புது விஷயமும் இல்லை. அடிப்படையில் பார்ப்பவர்களின் செண்டிமெண்டை உரசிப்பார்த்ததை தவிர வேறொன்றும் செய்ய வில்லை அது.
 
விக்னேஷ் சிவனின் கதை, அப்பட்டமான கமர்சியல். அபிநயித்த யாருக்கும் அக்கறை இருந்ததாகத் தோன்ற வில்லை. கல்கி உட்பட. அந்தக் குள்ள மனிதன் மட்டுமே சிறப்பு.
 
கெளதமனின் கதை எப்படியோ முடிஞ்சா சரி ரகம். குழந்தைகள் யாருமே அந்தத்தம்பதிக்கு பிறந்தவர்கள் போலவே இல்லை. எதோ மொழி மாற்றுப்படம் போல இருக்கிறது.
 
இந்த ஓட்டீட்டீ’க்காரா எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒரு ப்ளான் வெச்சா நல்லாருக்கும். அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ்,டிஸ்னிஹாட்ஸ்டார், மூபி, இன்னும் எத்தனை எத்தனைக்கு பணம் கட்டி பார்க்கிறது ?? இடைல ஜியோ வேற படம் காட்றேன்கிறான், டாட்டா ஸ்கை மாசம் முப்பது ரூபா குடு,உலகப்படம் காமிக்கிறேன்னு வெளம்பரம் கேட்காமலே ஓட்றான் ஒவ்வொரு தடவையும் டீவீ ஆன் பண்ணும்போது..! ஒரு குடையின் கீழ் அத்தனை ஓட்டீட்டீ’யும் வந்தா நல்லது.
 

No comments:

Post a Comment