Human Space Time and Human கிம்-கி-டுக்-கின் படம் காணக் கிடைத்தது. ஒரு வழியாக தேடிக்கண்டடைந்து பார்த்தேன். அவரது மற்ற படங்களை ஒப்பிடும் போது இங்கு கொஞ்சம் வேறு பாணி. படத்தை முழுதுமாக பார்த்து முடிக்க பொறுமை வேண்டும். ஒரு முகச்சுளிப்பு கிட்டியாலே எனக்கு அது வெற்றி எனக்கூறியவரின் படம் . ஒரு கப்பல், அதில் பயணிகள், மேலும், அரசியல்வாதி, ரெளடிகள் மற்றும் பல பெண்கள் என்று ஒரு கூட்டம் , அதில் ஆச்சரியம் கடவுளும் கூடவே பயணிக்கிறார். கப்பல் வேறொன்றுமில்லை. ‘நோவா’வின் படகு’ தான் அது. அழியப் போகும் உலகிலிருந்து பாதுகாக்க இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஒன்று. அன்னை மரியாவும் அவளின் மகவும் கூடவே.
இப்படி பல புராணக் கதைகளைப் பின்னி வைத்துக் கொண்டு , வழக்கம் போல் கிம்-மின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படும் அதீத வன்முறை, மனித உடலைத்தின்ன கசாப்பு கத்தி வைத்து ஓங்கி ஓங்கி வெட்டி –அத்தனை சுளுவில் மனித உடம்பு கூறு போட முடியாது போல இருக்கிறது எலும்புகள் அத்தனை கடினம் – ரத்தம் தெறிக்க தெறிக்க கூறு போட்டு உண்கின்றனர். இறந்த மனிதனின் உடலைத்தான் ..உணவுப் பஞ்சத்தில் கப்பலே தடுமாறுகிறது.
கப்பலின் கடவுளும்
பிள்ளைக்கறி கேட்ட ருத்ரனைப்போல மனிதக்கறி தான் சாப்பிடுகிறார். கப்பலின் தரைத்தளத்தில்
சேரும் காலடி மண்ணை சேகரித்து வைக்கிறார். செடிகளை நட்டுவைக்க.. கூடவே இரண்டு
கோழிகளை வளர்க்கிறார். எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. நல்லது நடப்பினும்
கெட்டது நடப்பினும் வெறும் பார்வையாளராகவே இருக்கிறார். உண்டது போக மிஞ்சும் மனித எலும்புகளை
அரைத்துக் கூழாக்கி அதை உரமாக செடிகளுக்கு இரைக்கிறார். அத்தனை கொடியவர்.
இருப்பினும் மரியாளைப் பாதுகாக்கிறார். கப்பலில் வன்கலவிக்குள்ளாகி தற்கொலை செய்யத் துணியும் அவளை கழுத்தில் விரல்
வைத்து மயக்கமுறச் செய்து அறைக்கு கூட்டி வந்து கட்டிப்போட்டு வைக்கிறார் இறக்கும் காலம் இன்னமும் வரவில்லை என்று கூறாமல்
கூறுகிறார். உனக்கான பணி இன்னமும் முடியவில்லை என்று அவளாகவே காலம் செல்லச் செல்ல
தமக்குள் சமாதானம் ஆகிக்கொள்ள வைக்கிறார். ஹ்ம்.. கடவுள் என்றாலே இப்படித்தான்
இருப்பர் போலும்.
வழக்கம்போல படிநிலை பிரகடனம், அதிகாரிகளுக்கும் அவர் தம் அடிப் பொடிகளுக்கும் பல விதமான உணவுவகைகள், சாதாரணப்பயணி களுக்கோ ஒரு வேளை அரிசி உணவு மட்டுமே. வழக்கம்போல கலவரம் வெடிக்கிறது. லஞ்சக்காசு கொடுத்தேனும் உணவை வாங்கி விடவேணும் என்று நினைக்கும் கூட்டம். ஒரு வித்தியாசமுமில்லை. எல்லாம் பூமியிலும் நடப்பது தான். The Platform’ என்ற படமும் இதையே அடிப்படையாக கொண்டது தான். 233 படிநிலைகள், அற்புதமான உணவு தயாரிக்கப்ப்ட்டு ஒவ்வொரு தளமாக கீழ் தளத்துக்கு வரும் வரையில் எலும்பு கூட மிஞ்சாது போகும் நிலை. அதில் மேலிருப்போர் வீணாக்கும் உணவுகளைக் கண்டால் பார்ப்போருக்கு ரத்தக்கண்ணீர் வரும். ஒரு வேளை கிம்-மின் இந்தப்படமே தூண்டுதலாக இருந்திருக்கக் கூடும்.
இதெற்கெல்லாம் காரணம் கூடவே பயணிக்கும் கடவுள், இது காறும் கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலை ஆகாயத்தில் மிதக்க விட்டு விடுகிறார். கடல் காணமலாகிறது. கப்பல் கேப்டன் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம். இது எப்படி , ஒரு போதும் நாங்கள் இப்படி கண்டதேயில்லை என பயணிகளுக்கு கூறுகிறார். உணவுக் கையிருப்பு தீருகிறது. உணவுக்கென வெடிக்கும் போரில் ரெளடிகளும் அதிகாரியும் பங்கு போட்டுக் கொண்டு பிறரை வெட்டி சாய்க்கின்றனர் அனைத்து சாதாரணப் பயணிகளையும். உணவுக்கென ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பயணிகளை கண்ணி வெடிகளை தூக்கி வீசி...அடப்பாவி அரசியல்வாதி. கூடப்பயணிக்கும் அந்த பிரதம ரெளடியே ஒரு கணம் ஆடிப்போகிறான்.
’நீ சாதாரண தெருப்பொறுக்கி ரெளடிடா, உனக்கெல்லாம் என்ன தெரியும்’ என்று கூறும் அந்த அரசியல்வாதி. அவனிடமிருந்த ஒரே துப்பாக்கியை பிடுங்கி ரெளடி போட்டுத்தள்ளுமிடத்தில் நாம் நிமிர்ந்து உட்காரலாம். இறக்கும் தருவாயிலும் எதோ சொல்ல வருகிறான் அந்த அரசியல்வாதி, என்ன வாரிசு அறிவிப்பா எனக்கேட்டு நெற்றியிலேயே சுட்டுத் தள்ளுகிறான் அந்த ரெளடி. அது தான் முடிவு. அவனுக்கு. கைப்பாவைகளை நம்பலாம். ஆட்டி வைப்போரை ஒரு போதும் நம்ப வியலாது.
இனியும் வெட்டிக்கறி எடுக்கமுடியாது என்ற நிலையில் மிகுதியான உடல்களின் வெட்டிப்பிளந்த இடங்களில் விதைகளை ஊன்றி மண்ணை இட்டு வைக்கிறார் கடவுள். புதைக்கப்பட்ட உடலங்கள் விதைகளுக்கு உணவாவதைப் போல. காலம் செல்கிறது. கடவுளும் மரிக்கிறார் மரியாளை வல்லுறவு கொண்டவனின் பசியாற தம்மையே வெட்டிக் கொடுத்து பின்னர் இரத்தக்கால்களால் நடந்து நடந்து 8 என்ற குறியீட்டை இட்டு விட்டு மரிக்கிறார்.இதில்லென்ன குறியீடு என்று விளங்கவில்லை
மிஞ்சுவது மரியாளும் அவளின் மகனும் மட்டுமே. புல்லாகிப் பூண்டாகி பல்கிப் பெருகியிருக்கும் மரங்கள் சோலையாக மாறியிருக்கின்றன., கோழிகளின் கூட்டமும் பெருகி இருக்கிறது. அபரிமிதமாக உண்ண உணவு கிடைக்கிறது. கப்பலும் ஒரு மலை மேல் தரை தட்டி நிற்கிறது.. கடைசிக் காட்சியையும் கூடவே ஜீரணித்துக்கொள்ளலாம். வேறு வழியில்லை. மனித இனத்தின் தோற்றமே இங்கனம் தானே.?!
No comments:
Post a Comment