Wednesday, June 19, 2019

'மொட்ட மாடி மொட்ட மாடி'

'மொட்ட மாடி மொட்ட மாடி' அஞ்சலியில். கேட்க ஆரம்பித்து வெகு நேரம் கழித்தே நம்மை ஒரு சந்தக்கட்டுக்குள் கொண்டு வர நினைக்கும். பாடல் ஆரம்பிக்கும்போது எப்படி இதற்கு தாளம் அமையும் என்ற எதிர்பார்ப்பிலேயே நேரம் கழியும். அப்புறம் 'மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு' தளபதியில். ராசைய்யாவின் தாளங்கள் மறக்கவியலாதவை. இந்தத்தாளம் வெறுமனே 'தப்பு' கொண்டு இசைத்தது போல, நிறைய என்ஹேன்ஸ்மென்ட்ஸோ வேறு எதுவுமோ இல்லாது ,முழுக்கப்பதிந்து போன ஒன்று,என்னால மறக்கவே இயலாத தாளம் இது.
 

 இதே தாளம் ரொம்ப நாளைக்குப்பிறகு ஜெயா மேக்ஸ்ஸில் 'மாமன் ஒரு நா மல்லியப்பு கொடுத்தான்'னு சிவக்குமார் பாடிக் கொண்டிருந்த போது பிடிபட்டது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப்பிறகு அந்தத்தாளம். மறுபடி வந்திருக்கிறது...ஆஹா.. இன்னும் கூட சொல்லணும்.. 'சத்யா'வின் 'வளையோசை கலகலவென' அது தாளத்துக்காக எழுதின பாடலா இல்லை ஓடி ஓடிப்போகும் தென்றல் வரிகளுக்காக இசைத்த தாளமா என மயங்கும் நிலை கேட்கும் யாவருக்கும் வரும்.'ஒத்த ரூபாயும் தாரேன்' நாட்டுப்புறப்பாட்டு படத்தில ..அப்புறம் 'வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்' கிழக்கு வாசல்.. 'ஆலோலங்கிளி தோப்பிலே' கேளுங்க சிறைச்சாலை படத்தில..தாளத்திற்கெனவே இந்தப்பாடல் அதுவும் டூயட்டு..


ரஹ்மானின் இசையில் 'அடியே' கடல் பாடலைத்தாளத்திற்கென சொல்லலாம். இதுவரையில் எப்போதும் யாருடைய இசையிலும் வராத தாளக்கட்டு. பாடலே தாளத்தின் அடிப்படையில் தான் இருக்கும். பின்னில் ட்ரம்ஸோ இல்லை வேறு பேங்கோஸோ தாளமிசைக்க வேண்டியிராத பாடல். இன்னொரு பாடல் கூட அவரின் முதல் படத்தில் வந்த 'தேன் தேன் தித்திக்கும் தேன்' என்ற 'திருடா திருடா' படத்தில் வந்த பாடல். முழுக்க ஜதி சொல்லி இசைக்கும் பரதநாட்டியப் பாடல்கள் போல , எடுத்துக்காட்டுக்கு 'தில்லானா மோகனாம்பாள்' ல வரும் 'மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன'வில் இடையில் அந்த ராகத்துக்கேற்ற கொன்னக் கோலை வாசித்து இசைத்தது போல் , இங்கு ட்ரம்ஸ் வைத்துக்கொண்டு நல்ல ஒரு முயற்சி.
நான் ரசித்த தாளங்கள் இவரிடம் இந்தப் பாடல்கள்.. 


அப்புறம் இன்னொண்ணு கூட சொல்லலாம். கொஞ்சம் வித்தியாசமாக டெக்னொ' ஸ்டைல்ல இசைத்த 'சாட்டர்டே நைட் பார்ட்டிக்குப் போகலாம் வரீயா' என்ற அந்தப்பாடல். தாளமும் பாடலின் வரிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிரிக்கவேயியலாதது போல ஒரு சுக அனுபவம். 'ஒட்டகத்தக்கட்டிக்கோ' கூட சொல்லலாம். மத்தளம் மட்டுமே களை கட்டும். #தாளங்கள்

No comments:

Post a Comment