Friday, June 14, 2019

பா.வெ

கடந்த வாரம் ரம்ஜானன்று புதின ஆசிரியர் பா.வெங்கடேசனைச் சந்திக்க வாய்த்தது. ஓசூரில் அவரின் இல்லத்தில் ஸ்ரீனியும் உடன் இருந்தார். வாரணசி புதினத்தின் பாராட்டு விழாவிற்குப்பிறகு அவரை அது குறித்தும் பின்னர் அவரின் பிற படைப்புகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறு மழை தூறல் அன்று. சரளமாக ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறார். பிற எழுத்தாளர்களைப் போலல்லாது விடாப்பிடியான தனித்தமிழில் இல்லாது. எஸ் ரா’வைச்சந்தித்த பிறகு இன்னுமொரு புதின ஆசிரியரை இப்போது தான் சந்திக்கிறேன் என்றேன்.

வர் வேலை விட்டு வருமுன்னதாகவே அவரின் வீட்டிற்கு சென்று விட்டோம். வீட்டில் அவர் இன்னும் வரவில்லை என்றவுடன் திரும்பி நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவரே வண்டியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்துவிட்டார். இன்னிக்கு விடுமுறை இல்லையா என்றேன், எங்களுக்கு ரம்ஜான், கிறிஸ்மஸ்களுக்குல்லாம் விடுமுறை கிடையாது என்றார். எனக் கென்னவோ அது ஒரு செய்தி போலத் தோணிற்று.

பின்னர் அவரின் மேல் மாடியில் எழுதும் அறைக்கு கூட்டி சென்றார். எத்தனையோ நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அலமாரி முழுதும் நிரம்பி தரையிலும் வழிகிறது நூல்கள். வாரணசி வாசிக்க வாய்ப்பிருக்கிறதா என்றேன். சற்றும் யோசிக்காது அலமாரியை திறந்து எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார். ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னமும் வாரணசியின் நெகிழி உறையைப் பிரிக்கவே இல்லை நான். விமர்சனம் வந்துவிட்டதா என வினவினேன். ஹ்ம்.. காலச்சுவடில் ஒருவர் எழுதியிருக்கிறார் என்றார். பாராட்டு விழாவிற்கு வந்திருந்தீர்களா என கவனமாகக் கேட்டார். ஆமாமென்றேன்.

நாவலின் இலக்கணம் குறித்து கேட்டேன். அது நிறைய நாவல்களை வாசிக்கும் போது மட்டுமே புலப்படும் என்றார். சிறுகதைக்கு இருப்பதைப் போல எதேனும் இலக்கணம் இருக்கிறதா என்ற உள்ளூர உழன்று கொண்டிருக்கும் எனது வினாவிற்கான விடையாக அது அமையவில்லை.

தாண்டவராயன் கதை’ புதினத்தை வாசித்த ராஜன் குறை என் இல்லத்திற்கே வந்துவிட்டார் என்னைச் சந்திக்க என குழந்தையின் மகிழ்வில் கூறிக் கொண்டிருந்தார். இதுவரை உங்களின் எந்த புதினத்தையும் நான் வாசித்ததில்லை என்றேன்.அவர் ஒன்றும் மிண்டவில்லை என் பதிலுக்கு.

அதோடு கூடுதலாக ஒரு சிறு கதைத் தொகுப்பையும் கொடுத்தார். அடர்த்தியான சிறுகதைகள்.கோவில் யானை பற்றிய சிறுகதை மனதை விட்டகலாது அந்த ஆனை போலவே அசையாது நின்று கொண்டு இருக்கிறது என் மனதில். இன்னமும் வாசிக்க வேணும். #பாவெ

No comments:

Post a Comment