Sunday, July 16, 2017

I Support Rahman!




எனக்கு முன்னால் பிறந்த ஜெனரேஷன்கள் வேணுமானால் இந்திப்பாடல்களின் பிரியராக இருந்திருக்கலாம். அந்தக்காலக்கட்டத்தில் பிறக்காத/வாழாத என்னால் அதைப்பற்றி கருத்து எதும் கூறவியலாது. இங்கு இந்திப்பாடல்களை ஒவ்வொரு ஐ போனிலும், ஆன்றாய்டிலுமாக பொதிந்து வைத்துக்கொண்டு அலையும் பெண்டுகள்/ பிள்ளைகள் பற்றி என்ன சொல்வது? ராசைய்யாவும் ரஹ்மானிடமும் உள்ள இசைச்செறிவு அவர்களின் இசையில் நான் கேட்டதில்லை. வழக்கம்போன்ற இந்துஸ்தானியில் எந்தவித முயற்சியும் செய்யாது அதை மெருகூட்டக்கூட இயலாது அதன் உண்மை வடிவிலேயே கொடுப்பதே அவர்களின் வழக்கம். ஐயா சாமிகளே கொஞ்சம் இசை பற்றிய அறிவு இருப்பதாலேயே இதை எழுதுகிறேன். சில இசைக்கருவிகளை மேடையில் வாசிக்குமளவிற்கு ஞானமும் உண்டு.

கொஞ்சமும் மாற்றாது அதை அதன் வடிவிலேயே கொடுக்க செவ்வியல் கச்சேரி மேடைகள் இருக்கின்றன. கற்பனை கலக்காத ,மெருகூட்டப் படாத ஒன்று இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன?. கூட இருக்கும் நண்பர்கள் கேலி செய்வர். எப்படி தமிழ்ப்பாடல்களை மட்டுமே சிலாகிக்கிறாய் , விட்டால் இங்கிலீஷுக்கு தாவிவிடுகிறாய் என்று. செறிவு இல்லை மக்கா உங்கள் இசையில். புது முயற்சிகள் இல்லை. விதிவிலக்கு அமித் த்ரிவேதி மட்டுமே. அவரை எத்தனை பேர் விரும்புவர் என விரல் விட்டு எண்ணி விடலாம். சமகாலத்தில் இசைக்கும் அமித் தவிர எவரின் இந்தி இசையையுமென்னால் இரண்டு நிமிடம் கூட கேட்கவியலாது. ஷங்கர் எஹ்ஸான் லாய் செய்வதெல்லாம் கத்துக்குட்டிகள் செய்து விடும் நம்முலகில். நதீம் ஷ்ரவன் பாடல்கள் எல்லாம் பழஞ்சரக்கு.

நவ்ஷாத், சலீல் சௌத்ரி போன்றோரின் இசை கேட்டதேயில்லையா என வினவுவர் என்னிடம். கொஞ்சம் கேட்கிறேன். அடிப்படையாகவே வட ஹிந்தியர்களின் மனப்பாங்கு அங்கனமே. மொழி என்றால் இந்தி , பாடல்கள் என்றால் இந்திப்பாடல்கள், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே இசை. அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நான் கவனத்தில் கொள்கிறேன். ஒட்டுமொத்த குழு மனப்பான்மையாக வேற்று மொழிப்பாடல்கள் என்றாலே கேவலம் அவர்களுக்கு. அதிலும் சவுத் இண்டியன் பாடல்கள் என்றால் 'கல்லை தகர டப்பாவில்' போட்டு குலுக்குவது என்ற பதம். இதையே நான் பத்து ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன் கொஞ்சம் சொலவடையையாவது மாத்துங்கடா.! அடிப்படை வெறுப்பு மண்டிக்கிடக்கிறது அவர்களின் மனதில்.

அடிப்படையில் வட ஹிந்தியர்களுக்கு தாய்மொழிப்பற்று என்பது பற்றி கொஞ்சமும் ஞானம் இல்லை. அவர்கள் குஜராத்தியோ /மராட்டியோ/இல்லை போஜ்புரியோ எல்லாம் நமது தாய் மொழியில் வேணும் என்று கேட்கும் மனப்பாங்கே இல்லை. எதுவாயினும் இந்தியில் கிடைத்தாற் போதும். பெங்காலிகள் இந்திப்பாடல்ளை பொதிந்து வைத்துக்கொண்டு கேட்பதை பல நேரங்களில் விமர்சித்திருக்கிறேன். ஏன் பெங்காலியில் பாடல்களே இல்லையா, இல்லை உருவாக்குபவர்கள் அனைவரும் ஹிந்திக்கு இடம் பெயர்ந்து விட்டனரா என்று.

ராசைய்யா என்ன காரணத்தினால் இந்திப்படங்களுக்கு இசைக்கவில்லை என்ற காரணம் எனக்கு தெரியவில்லை. வந்த வாய்ப்புகளை வேண்டாமென்றாரா இல்லை , அத்தனை உச்சத்திலிருந்த அவரால் இந்தியில் கவனம் செலுத்த இயலவில்லையா என்றும் தெரியவில்லை. அப்படி அங்கும் இசைத்திருப்பாரானால் ஒரு வேளை இந்த வெற்றுக்கூச்சல் அப்போதே கூட கிளம்பியிருக்க வாய்ப்பிருக்கிறது. அமிதாப் பலமுறை சொல்லியிருக்கிறார் ராசைய்யாவை ஏன் இந்திப்படவுலகு பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று.

இதே ரஹ்மானிடம் என்டிடீவி'யில் ஏன் இசைப்பள்ளியை சென்னையில் தொடங்கினீர்கள் என்று கேட்டார் பேட்டி எடுப்பவர். எனக்கு நன்கு ஞாபகமிருக்கிறது. வட நாட்டு ஊடகங்களில் பணி புரிபவர்கள் கூட அந்த வெறுப்பை அடியாழத்தில் சுமந்து கொண்டே திரிகின்றனர். அவரவர் அடையாளத்தோடு வாழவே துணைக்கண்டம். சக புரிதல்களோடு கூடி வாழவே இந்தக்கட்டமைப்பு. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பெங்களூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முதல்வர் சித்தாராமய்யா தமிழர்களைப்போல மொழி உணர்வு கொள்ளவேணும் என அறைகூவல் விடுக்கிறார்.

எனினும் கலைஞர்களுக்கு மொழியில்லை. கேட்பவர்களின் அதை ரசிப்பவர்களின் மனநிலையும் அவ்வாறே மாற வேண்டும். #I Support Rahman



.

No comments:

Post a Comment