Wednesday, July 5, 2023

ஜாஸ் மாலைப்பொழுது.


 

நேற்றிரவு ஒரு ஜாஸ் பியானோ நிகழ்ச்சி. ஷாரீக் ஹாசன். பெங்களூர்காரர் தான். இப்போது வசிப்பது அமேரிக்காவில். வழக்கம்போல ஐந்து வயதிலேயே பியானோ வாசிக்க கற்றுக்கொண்டு பதினைந்து வயதில் அத்தனை பரீட்சைகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். 
 
Jazz கொஞ்சம் போரடிக்கும்தான். அத்தனை மெலிது, பட்டால் சுருங்கிவிடுமோ என ஆலோசிக்க வைக்க்ம் இசைக்கூறுகள். பொறுமை அவசியம். Jazz பியானோவில் என்பது இதுவே முதன்முறை முழுக்கச்சேரியும் கேட்பது. வழக்கமாக சாக்ஸஃபோனில் கேட்டே பழக்கம். கென்னி ஜீ எல்லோருக்கும் தெரியும், அற்புதமாக பல இசைக் கோவைகளை Jazz-ல் இசைத்துள்ளார். தமிழ்த்திரையில் ஜாஸ் எனில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் என ராசைய்யா, பிறகு தம்பி அநிருத் இப்போது இசைத்த ’மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே’ போன்றவற்றை சொல்லலாம்.
 
பழமையான மேற்குலக ஐரோப்பிய இசைக்கூறுகள் மட்டுமன்றி, தென்னெமெரிக்க நாடுகளான அர்ஜெண்டீனா, பிரேஸில் போன்ற நாடுகளிலும் Jazz இசைக்கப்படுகிறது அவர்களின் பாணியில். இந்த செய்தி புதிது எனக்கு. ஏனெனில் Jazz எனில் அமுத்தலான, அடங்கிய மென்மையான இசை. தென்னெமரிக்க நாடுகளின் இசை என்பது கொண்டாட்டத்துக்கானது, பெரும் அடிதடிகள் நிறைந்தது. ஃபொன்ஸியின் டெஸ்பராட்டோ போலான இசைகளை கேட்டே நாம் பழகியிருக்கிறோம். ஒலிவாங்கியில் அறிவிக்கையில் Jazz தென்னெமரிக்க நாடுகளிலும் இசைக்கப் படுகிறதாவென எனக்கு ஆச்சரியம். 
 
Moskowsky என்ற போலிஷ்/ஜெர்மானிய கம்போஸர், நிறைய Etude எனும் இசைக்கூறுகளை இசைத்து வைத்துள்ளார். அதிலொன்று பியானொவில் இடது கை விரல்களால் மட்டுமே இசைக்கக்கூடிய ஒரு இசைக் கோவை. கிட்டாரில் இடது கை விரல்களால் மட்டுமே வாசிக்க இயலும். இங்கு பியானோவில் இரு கைகளும் விரல்களும் சேரவில்லையெனில் முழுமை பெறாது. எனினும் இடக்கை விரல்கள் மட்டுமே கொண்டு வாசித்தார் ஷாரிக். அற்புதம்,இதுபோல புதுமைகளை அறிமுகப்படுத்தி வாசித்தது நல்ல அனுபவமாக இருந்தது. வழக்கம்போல செவ்வியல் இசைக்கோவைகளை திறம்பட வாசித்து விட்டு செல்வது அனைவரும் செய்வதே. பிறகு ஷாரிக் தாம் உருவாக்கிய Jazzல் அமைந்த இசைக்கோவைகளை வாசித்தார்.
 

 
ChatGPT யிடம் இசைக்கோவைக்கான குறிப்புகளைக் கொடுத்துவிட்டு , (குறிப்புகள் எனில் சூழல், இசையின் போக்கு, ரிதம் பேட்டர்ன்ஸ் போன்றவை), அது இசைத்தது என்று ஒன்றை இசைத்துக் காண்பித்தார்.Melancholy Hero எனப்பெயரிட்டிருக்கிறார். சும்மா விளையாட்டுக்காக சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். உண்மையிலேயே Jazz இசைக்கான அத்தனை இலக்கணங்களையும் கொண்டிருந்தது. ஒருவேளை செயற்கை நுண்ணறிவே இதை இசைத்திருக்குமோ என்ற நம்பிக்கையை அளித்தது.கொஞ்சம் கூட சந்தேகம் எழவேயில்லை.
 
சமீபத்தில் மறைந்த தமது நண்பனுக்கென ஒரு இசைக்கோவையை வாசித்தார். அவரே தம்மை Jazz இசைக்கு இழுத்துவந்தவர் என பெருமையாக கூறினார்.பெங்களூர் கோரமங்கலா க்ளப்களில் அமர்ந்து இசை பற்றி விவாதிப்போம், ஒரு லிட்மஸ் டெஸ்ட் என ஒரு இசைக்கோவை இருக்கிறது அதை வாசிக்க வேணும் என்று எப்போதும் கூறுவார் எனச் சொல்லிவிட்டு அந்தக் கோவையை Round Midnight வாசித்துக் காண்பித்தார்.
 
அர்ஜெண்டீனியன் பீஸ் Malambo என ஒன்றை வாசித்துக் காண்பித்தார். அது அவர்களின் நாட்டார் இசை. Folk Music (இந்த இசையை யூட்யூபில் Malambo என்ற பெயரை இட்டு கேட்டுப் பாருங்கள்....ஆஹா பெருங் கொண்ட்டமாக இருக்கும். எ.கா https://youtu.be/aoxMuPguBxc ) பெரிய பெரிய ட்ரம்ஸ்களை வைத்துக் கொண்டு ஆண்கள் இசைக்கும் இசை. பெண்கள் ஆடுவர் அதற்கு. அத்தனை அதிர்வான இசையினை மென்கட்டைகள் கொண்ட பியானோவில் வாசித்தது அருமை. ஆட்டத்திற்கான இசை அது. கிட்டத்தட்ட ‘மைக்கேல் ஜாக்ஸனின்  ‘All I want to say that, they dont really care about us’ பாட்டில் அடித்து நொறுக்கப்படும் ட்ரம்ஸ் போன்ற இசைக் கோர்வை இது. இந்தபாடல் கூட Malambo இசை அதிர்வுகளின் அடிப்படையில் இசைத்திருக்கலாம் தான். (சட்டென நமது நினைவுக்கு வரும் பாடல் அது.) இருப்பினும் பியானோவில் அந்த இசையின் அனுபவத்தை கொணர முயற்சித்தார். 
 
எல்லாம் பரீட்சார்த்த முயற்சிகள் தான். இப்படியான புதுமையான இசை நிகழ்ச்சிகளை காண வேணுமெனில் யூரோவில் கொட்டிக்கொடுக்க் வேணும். ராசைய்யாவின் இப்பொதைய ஜெர்மன் ட்டூர் டிக்கெட் விலை 150 யூரோக்கள், நம் காசுப்படி 15ஆயிரம் உரூபாக்கள். இங்கு பெங்களூர் இண்டர்நேஷனல் செண்டரில் அத்தனையும் இலவசம் வாழ்க நீ எம்மான்.
 
செக் குடியரசு ப்ராக்கில் இருக்கும்போது ஓவ்வொரு வார இறுதியிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு சென்றுவிடுவது வழக்கம். எதுவும் இலவசமில்லை. 500-600 க்ரெளன்கள் இருக்கும் அப்போது. 
 
பின்னரும் Jazz ஜாம்பவான்களின் இசையை செவிகுளிர வாசித்தார். நிறைய பெயர்களை சொல்லி அவர்களின் இசைக்கோவகளை அறிமுகப்படுத்தி , அதில் உள்ள இசைத்தருணங்களை தாம் ரசித்தவற்றை பகிர்ந்து கொண்டார். மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கும் போது தமது இடக்காலை தரையில் தட்டிக்கொண்டே வாசித்தார். கவனித்தேன்.முழு ஈடுபாடு இல்லையெனில் இதுபோன்ற செய்கைகள் வருவதில்லை.!
 

 

       

 

No comments:

Post a Comment