Monday, August 15, 2022

மாமனிதன்

மாமனிதன் பார்த்துக்கொண்டிருந்தேன். படம் துவங்கியவுடனே தோணியது இது இயக்குநர் ‘பாலு மகேந்திரா’ சன் டீவீயில் ‘கதைநேரம்’ என்ற ஒரு தொடர் நிகழ்ச்சி, குறுங்கதைகளை வைத்துக்கொண்டு ஒரு ஆந்தாலஜி போல செய்திருந்தார் தொண்ணூறுகளின் கடைசியில். அதில் ஒரு ஆட்டோ ட்ரைவர்,தமது ஆட்டோவில் பயணித்த ஒரு பெரியவரின் மறந்து வைத்துப்போன நகைப்பை/பணப்பையை எடுத்துக் கொண்டு போய் ஒப்படைத்து பின் அந்தப் பெண்ணை திருமணமே செய்து கொள்வார். இயக்குநர் சீனு ராமசாமியும் பாலு மகேந்திராவின் சீடர். ஒரு வேளை அவரே அந்தச்சிறுகதையை அப்போதே எழுதியிருக்கக் கூடும். அதே சிறுகதை கொஞ்சம் பின்னரும் பிற்சேர்க்கைகளாக சம்பவங்களைக் கோர்த்து இங்கே மாமனிதனாக உருவெடுத்திருக்கிறது.
 
விஜய் சேதுபதி ஆட்டோ ட்ரைவர். ‘ப்பா’ என அவரே பலமுறை சொன்ன அதே பெண் மனைவி. ஓடணும் அப்பதான் கஷ்டங்கள் தொல்லை பண்ணாது என்று ஓடுகிறார். ஓடுகிறார் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுகிறார். எல்லாக்கதாபாத்திரமும் என்னால் செய்யமுடியும் பல வேறு படங்களில் என நிரூபிக்க முயல்கிறார். என்னைக்கேட்டால் விஜய் சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு அப்புறம் கொஞ்சம் தாமாக அபிநயிக்க கிடைத்த வாய்ப்பு இங்கு தான் என்பேன். இதையே செய்யலாம். இருந்தாலும் தொடர்ந்தும் தமது முகம் எங்கும் தெரியவேணும் என்பதற்காக ‘எதிரி’ கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டு செய்கிறார். எனினும் அத்தனை சோபிக்கவில்லை என்பதே நிஜம். ( விக்ரம் படத்தில் அவரின் அத்தனை மேனரிஸமும் ‘அடிமைப்பெண்’ கூன்விழுந்த எம்ஜியார் தான்). ’மின்னல் முரளி’ குரு சோமசுந்தரமிடம் மலயாள தேசம் செல்லுமுன் நள்ளிரவில் பேசும் காட்சிகள், பின்னரும் தினக்கூலி வேலைக்கு சேர வரிசையில் நின்று, பின்னர் கழிவறை சுத்தம் செய்யயும் போதும், மேலும் அந்த சாயாக்கடை பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும்போதும் என நல்ல காட்சிகள்.அவருக்கு தம் இயல்பினனாக திரையிலும் இருக்க கிடைத்த நல்வாய்ப்பு.
 
’எல்லாரும் எல்லாம் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லைப்பா’ எனக்கூறும் வாப்பா பாயாக குரு சோமசுந்தரம், எஃப் ஐஆரில் அவர் பெயர் சேர்க்கவேயில்லையே என்று கூறும் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், மலயாள தேசத்தில் தம்முடன் வசிக்கவைக்கும் அந்த சகபணியாளர், மேலும் கட்டிப்பிடித்து வழியனுப்பி வைக்கும் மலயாள மணிகண்டன். என இப்படி நல்லுங்களைக் காணலாம் படம் முழுக்க. வழக்கம்போல கடைசிக் காட்சிகளில் நல்லவனாக மாறிவிடும் ஷாஜி பாத்திரம் மட்டுமே க்ளீஷே.
 
யுவனின் பெயர் பரவலாக அடிபட்டுக்கொண்டிருந்த படத்தில் பின்னணியும் அவர் செய்திருப்பதைப்போல இல்லையே,இது ராசைய்யாவின் பாணி ஆயிற்றே என படம் முழுக்க முடிவடையும் வரை யோசித்துக் கொண்டே இருந்தவனுக்கு பின்னர் காணக்கிடைத்தது பின்னணி ராசைய்யாதான் என.ஆஹா. இது போன்ற கதைகளுக்கு இசைக்க இக்காலத்தில் அவரைத்தவிர யாருண்டு?. அதற்காக பண்ணைப்புரத்துக்காரன்க.. அதுக்காக இசைஞானி போல வயலினெல்லாம் வாசிக்கத்தெரியாது என்று ஒரு காட்சியில் கூறுகிறார் விஜய் சேதுபதி. இப்படி முகத்துதிகளும் அவ்வப்போது உண்டு.

விஜய் சேதுபதி கடைசிக்காலத்தில் காசி சென்று எனக்கு தீங்கு செய்தவரின் பாவங்களையும் போக்கும் விதம் இங்கு வந்திருக்கிறேன் என்கிறார். கஞ்சா நிறைந்த ஹூக்கா புகைக்கிறார். ஏனோ ஒட்டவேயில்லை. மாமனிதன் அல்ல. மனிதன் தான் அவன் #மாமனிதன்

No comments:

Post a Comment