Monday, March 18, 2019

யக்ஷகானம்


சனிக்கிழமை மாலையில் ஸ்ரீனி அழைத்திருந்தார். பெங்களூர் டவுன் ஹாலில் இருக்கும் கலாஷேத்ராவில் ஒரு நாடகம் , வாங்க செந்திலும் வருகிறார் என. போய்ப்பார்த்தால் நாடகம் வேறிடத்தில். சரி வந்தாயிற்று உள்ளே வேறு ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஒரு வயதானவர் சாரங்கி வாசிப்பவர் என மேடையில் பேசிக் கொண்டிருந்தார்கள். வயது கேட்டால் 84 ஆம். .. என்னை தூக்கிக் கொண்டுதான் வரவேண்டும். நடக்க இயலாது என்றவர், மேடையில் அமர்த்தி வைத்துவிட்டால் எட்டு மணிநேரம் சாரங்கி வாசிப்பேன் என்கிறார். குரலில் அத்தனை நடுக்கம். இவராலென்ன வாசித்தவிட முடியும் என நாங்கள் மூவரும் அமர்ந்திருந்தோம். நிகழ்ச்சி ஆரம்பித்தது. 


இப்போது பிரபலமாக இருக்கும் பியானோ லிடியன் என்ற பொடியன் போல சாரங்கி மழை பொழிகிறது. கூட்டம் அசையவேயில்லை. அவர்தான் ராஜீவ் தாராநாத். வயது 84 , பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். இந்த வயதுக்கு என்னால் கிட்டாரை தூக்கக்கூட இயலுமா என்றெண்ணிக் கொண்டேன். அவர் கைகளுக்கு அத்தனை சக்தி. சளைக்காது ஒரு முழுப்பாடலை அரைமணிநேரத்துக்கும் கூடுதலாக இடை விடாது வாசிக்கிறார். இசை இசை மட்டுமே அவர் பேச்சு. பேச்சில் இருக்கும் நடுக்கம் கொஞ்சமும் கைகளில் இல்லை. தொடர்ந்தும் வாசித்துக் கொண்டே இருந்தார்.  சரி அவர் வாசிக்கட்டும் என நினைத்து கொஞ்சம் வயிற்றுக்கு ஈயலாம் என்றெண்ணி ஒரு மணி நேரம் கழித்து வந்தால் கூட்டம் அப்படியே நிற்கிறது. வாகனங்கள் பார்க் செய்யப்பட்டவை ஒன்றும் அதனிடத்தை விட்டு அகலவில்லை. 


 செளக்கிதார் (ஹிஹி) சொன்னார் உள்ளே இப்ப `யக்‌ஷகானம்` நடந்து கொண்டிருக்கிறது. அதான் கூட்டம். மணி கிட்டத்தட்ட இரவு ஒன்றை தாண்டிவிட்டது. இன்னமும் கூட்டம். அத்தனை பேரும் கண்கொட்டாமல் சீழ்க்கையடித்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எங்களுக்கோ அத்தனை ஆச்சரியம். பெங்களூரில் யக்‌ஷகானம் பார்க்க இத்தனை கூட்டம். அதுவும் இரவு ஒரு மணிக்கு மேல. கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லை. உட்கார இடமேயில்லை. நின்று கொண்டு பார்ப்பவர் பலர். உள்ளே ஒரு சீட் காலியாக இருக்கிறதே என அருகில் போய்ப்பார்தால் அதில் ஒரு மொபைல் வைக்கப்பட்டிருந்தது. யாரோ இடம் பிடித்து வைத்திருக்கிறார் போலும். நம்ம ஊர்ல பிரபல நடிகை வந்து கடை திறந்து வைத்தால் மட்டுமே கூட்டம் கூடும் அதுவும் இரவு இரண்டு மணிக்கு.


 சினிமாவுக்கு அத்தனை முக்கியத்துவம் இந்த உள்ளூர் கன்னடக்காரர்கள் கொடுப்பதில்லை. அது அவர்களின் திரைப்படங்களை பார்த்தாலே தெரியும். அவர்களின் ரசனை இன்னமும் கலைகளில் தான் தங்கியிருக்கிறது. வெகு நேரமாகி விட்டதே என வெளியில் கிளம்பினால் இன்னமும் பத்து பேர் அரங்கிற்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.


4 comments:

  1. நல்லதொரு பகிர்வு. யக்ஷகானா மிக அருமையான இசை நாட்டிய நாடகம். முன் இருந்த குடியிருப்பில் ராஜ்யோத்ஸவா தினத்தன்று இந்நிகழ்வைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும் இந்நாடகம் குறித்த அறிந்திட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவுமென அந்தப் பதிவின் இணைப்பை இங்கு தருகிறேன்.
    யக்ஷகானா - 'அர்ஜூனா - சுதன்வா யுத்தம்':
    https://tamilamudam.blogspot.com/2015/05/blog-post_25.html

    ReplyDelete
  2. ஆஹா.. அருமை. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல இங்கும் பெண்கள் தான் கதாநாயக/கிகளாக வேடமிட்டு பாடினர். அருமை..நன்றி !

    ReplyDelete
  3. Yakshagana .....sujatha ,wen alive,wrote about it given the chance.....

    ReplyDelete