Tuesday, November 6, 2018

ஜானூ.....



இசை அற்புதம். இதுவரை யாரும் இசைத்ததில்லை இத்தனை அருமையான பின்னணி. கோவிந்த வஸந்த். தாய்க்குடம் குழுவிலிருந்து ராசைய்யாவின் நிகழ்ச்சியில் பங்குகொண்டவர். படம் முழுக்க இழையோடும் இசை மாயாஜாலங்களைக் காட்டுகிறது. அளவோடு ராசைய்யாவின் பாடல்களைப் பயன்படுத்திக்கொண்டதில் இனிமை. அவருக்குப்பிறகும் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்திருந்த போதிலும் அவரின் இசையே இக்காலங்களில் மீள் வாசிக்கப்படுகிறது. 96 என்பது இசைப்புயலின் காலம். அவர் உச்சத்திலிருந்த காலம். ஆச்சரியமான இசைக்கோவைகளை ராசைய்யா ஒதுக்கி வைத்தவற்றைத்தொட்டு உச்சம் காட்டிக்கொண்டிருந்தார். ஜானு எப்படி ராசைய்யாவின் பாடலையே பாடிக்கொண்டிருந்தாள். ஆச்சரியம் தான். கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம், ஆசை அதிகம் வெச்சு, தென்றல் வந்து தீண்டும் போது, யமுனை ஆற்றிலே இப்படி நாலே நாலு பாட்டுதான் படமே முடிஞ்சிருச்சிடா. வெறுமனே ராசைய்யாவோட பாட்ட மட்டும் வெச்சிக்கிட்டு கதை தயார் பண்ணி சில்வர் ஜூப்ளி அடிக்கலாம்டே. இன்றைக்கும் பெண்கள் கல்லூரி மாணவிகள் ராசைய்யாவோடு இணைந்து ஹார்மனியாக பாடியதெல்லாம் நிகழ்கால அற்புதம்.

படம் மலர் டீச்சரை ஞாபகப்படுத்தியபோதும் சலிக்கவில்லை. கிளறிவிடவும் தயங்கவில்லை. கடைசி வரைக்கும் காதலையே சொல்லாத இதயம் முரளி மாதிரில்லாம் இல்லை. கொஞ்சம் தைரியம் இருக்கு ராமுக்கு.வீட்டுக்கு கூட்டிப்போகும் வரைக்கும். தொடாமல் தள்ளியே நிற்பது,கூச்சம், இன்னும் இருக்கும் அந்த உள்ளூர அச்சமெல்லாம் அற்புதம் விஜய் சேதுபதி. பண்ணையாரும் பத்மினியும்-க்குப்பிறகு விசேக்கு ஒரு அருமையான படம். நா முத்துக்குமார் எழுதின கவிதை ஒன்று இருக்கிறது. ' இன்னமும் அவள் பத்தாவதில் தான் இருக்கிறாள்'என அந்த ஒன் லைனரை வைத்துக்கொண்டு பிழிந்து எடுத்திருக்கிறார் 96.

மாமி இன்னமும் 35லும் 16 தான். இந்தப்படத்தை டீவியில் அதற்குள் ஏனென்று ட்வீட்டியெல்லாம் பார்த்தார் மாமி. ஒன்றும் நடக்கவில்லை. அந்த ராமச்சந்திரன் ஜானகி தேவியைத்தேடி கடல் கடந்து இலங்கை போனான். இந்த ஜானகி தேவி கடல்கடந்து ராமச்சந்திரனைப்பார்க்க வந்திருக்கிறார்.

அந்த சலூன்காரன் 'எல்லாந்தெரியும் போ' என்பது, வசனங்களே தேவையில்லை. இந்த மாதிரி படங்களுக்கு. முதலில் விஜய் சேதுபதி பாடும் பாடல் சமுராய் படத்தில் விக்ரம் பாடும் பாடல் போலவே அமைந்திருக்கிறது. மற்ற பாடல்கள் கதையோட்டத்தை மைய்யமாக வைத்தே பின்னப்பட்டிருப்பதால் வெளியே தெரியவில்லை.

பிரிந்த காதல் தான் வாழும்.சேர்ந்துவிட்டால் அது காதலே இல்லை. மொத்தமே நாலு கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. யமுனை ஆற்றிலே பாடும் இடம் பொருள் ஏவல் என்னவெல்லாம் சொல்லலாம். அற்புதம்டா! ராமச்சந்திரன்கள் இன்னமும் ஜானகி தேவிக்கென காத்துத்தான் இருக்கின்றனர். ஜானகி தேவிகளுக்குத்தான் இன்னொரு சரவணன் கிடைத்துவிடுகிறார்.




No comments:

Post a Comment