Sunday, October 21, 2018

நாற்குழிச்சதுரங்கம்



வரும் விமர்சனங்கள் காட்டும் அத்தனை ஹைப் இல்லை படத்தில். படத்தில் பெண்கள் காட்டும் கெத்து புதிது. எப்பவாவது சொர்ணாக்கா'வை மட்டுமே பார்த்து வந்த நமக்கு , சூழல் கருதி குரலுயர்த்தி,முஷ்ட்டி காட்டும் பெண்கள்.ம்..நல்ல காட்சிகள். இயல்பில் இப்படி பெண்களை நாம் சந்திக்கத்தான் செய்கிறோம். அநீதி கண்டு பொங்கி ஒலிவாங்கிக்கென ஆக்ரோஷமாக பேசும் பெண்களை இப்படம் பேசவில்லை. எக்கச்சக்க கதா பாத்திரங்கள். இருப்பினும் யாரும் தனித்தனியாக நிற்கவில்லை. கதையில் சூழலில் அனைவருக்கும் தேவை,அவரவர் இடம் இருக்கிறது. தனுஷின் இளமைக்கால முகம் அவர் நடித்த இந்திப்படத்தை(ராஞ்சனா) நினைவூட்டுகிறது. அதே முகம்,களை,ஒப்பனை எல்லாம். ஹிப்பி வைத்து,பெல்பாட்டம் போட்டுக்கொண்டு தடித்த ஃப்ரேம் கொண்ட குளிர் கண்ணாடிகளுடன் கேங்ஸ்ட்டர்ஸ்..80களின் ரசினி பட எதிரிகளை நினைவூட்டுகிறது நிசத்தில் சிறையில் போய் எடுத்தனரா..இல்லை செட்ட்'டா என வியக்க வைக்கும் கலைஇயக்கம்.!.

சாலிடெர் டீவி,சுவரில் பான்ட்ஸ் விளம்பரம், ரோஜா பாக்கு,பின்னர் இரட்டை இலைக்கான தேர்தல் போஸ்ட்டர்கள், ஆல் இன்டியா ரேடியோவின் செய்திகள்,பின்னில் பாயும் புலி போஸ்ட்டர், மூன்றெழுத்து மட்டும் வைத்து பின்னர் எண்கள் கொண்ட பைக்குகள் என 80களை அப்படியே கண்ணில் கொண்டு வருகிறது காட்சிகள். இறங்கி வேலை பார்த்திருக்கின்றனர். இளமைப்பருவம் ராஞ்சனா கெட்டப் என்றால் நடுத்தர வயதில் கொடி கெட்டப் தனுஷுக்கு. ஒவ்வொரு வசனமும் அவரே பேசுவது போல தோன்றுகிறது. இது வெற்றி மாறன் எழுதிக்கொடுத்துப்பேசுவது போலத்தோன்றவேயில்லை எனக்கு.





ஹார்பரில் இரவில் வைத்து பொருள் கொண்டுபோய் வைத்து அங்கேயே கொன்றுபோடும் காட்சி,அத்தனை இரவிலும் அவ்வளவு தெளிவாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு காட்சியும் அது இரவில் நடப்பதாக இருப்பினும் எவ்வித குழப்பமுமின்றி தெளிவாக அமைந்திருக்கிறது. படத்தின் பாதி வரை வெறும் ஆண்களை வைத்தே ஓட்டி இருப்பது சலிப்பு.

"என் பாசையே புரியலை, என் லைஃப் எப்படி ஒனக்குப்புரியப்போகுது ?, சின்ன ஆங்க்கர் தானே அம்மாம்பெரிய கப்பலை நிக்க வெக்கிது ?, என்னை என்ன தேவடியான்னு நெனச்சியா? ராஜன் பொண்டாட்டிடா" பொட்டில் தெறிக்கும் வசனங்கள்.கதை சொல்லும் பாணி நான் லீனியர் என்ற போதிலும்,பார்வையாளனுக்கு எவ்வித சிரமுமின்றி தெளிவாக விளங்குதல் சிறப்பு. விடாது ஒலிக்கும் வசவுகள், பாசாங்கில்லாத வசனங்கள் என பரிமளிக்கிறது. பொண்ணு பார்க்க போகும் காட்சி, நான் கூப்ட்டா வந்துரும், அதான் பயமா இருக்குன்னு சொல்ற தனுஷ்.நெகிழும் அந்த அப்பா.ஆஹா..

அமீர் இத்தனை குள்ளமா? டூட்ஸியின் தமிழ்ப்பதிப்பை விட அடக்கி வாசித்திருக்கிறார். பாரக்க அசப்பில் டி ராஜேந்தர் போலவே தோன்றுவது எனக்கு மட்டுந்தானா? அதற்காகவே டீ ஆரின் பாடலை அவர் திருமணத்தில் ஒலிக்க விட்டிருக்கிறார் சந்தோஷ். 'சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது :) அடிக்குரலில் பேசி தம் நிலைப்பாட்டை விளக்கும் அந்தக்காட்சி போதும். பின்னர் இரவில் ஓட்டலில் அமர்ந்து தம்மைப் போடுவதற்குத்தான் என்பதை அறிந்ததும் களைத்து சேரில் முழுதுமாக தம்மை சாய்த்துக்கொண்டு..ஆஹா. நானே செட்டில் பண்ணி விடுவேனேடா என்று மன்றாடுகிறார். பிடிக்க வந்த காவல் அதிகாரியை உடுப்புகளை அவிழ்த்துவிட்டு படகில் பயணிக்க வைக்கும் காட்சியில் வணிக நாயகன் ராஜன் அமீர்!




சந்தோஷ் பற்றி பேசியே ஆக வேண்டும். அந்த காரம் போர்ட் போட்டி சிறைக்குள் நடக்கும் காட்சியில் இறங்கி அடித்திருக்கிறார். சம்பவம் செய்ய மணித்துளிகள் எண்ணப்படுவது போல இசை. பாடல்கள் ஆங்காங்கெ பின்னில் ஒலிக்கவிட்டு அத்தனை முக்கியத்துவம் தரப்படாததில் கவலை கொள்ளாது பின்னணி இசையில் களம் இறங்கியிருக்கிறார். 80களின் பின்னணி இசை,பின்னர் 2000ம் ஆண்டுகளின் இசை, பின்னர் நவீனம் என புகுந்து விளையாட அனுமதி கிடைத்திருக்கிறது. கானா' மட்டும் எப்போதும் பாடலாம் போலிருக்கிறது. அறிமுக ஐஸ்வர்யாவின் காட்சிகளில் கானா கலக்குகிறது. எங்கு அடக்கி வாசிக்க வேணும், எங்கு ஆர்ப்பாட்டம் தேவை என்பதெல்லாம் புரிந்து வைத்து இசைத்த பண்பட்ட முதிர்ச்சியான இசை.

ஆன்ட்ரியாவின் பழிவாங்கும் முறை, அயன் ரான்ட் எழுதிய 'ஃபொன்டன் ஹெட்' கதையின் தலைவி எதிரியின் உடனே எப்போதும் இருப்பாள். தலைவனுடன் இருந்தால் எப்போதும் அவளே ஒரு பொறாமையின் இலக்காக இருக்கக்கூடும், அவனை வெற்றியை அடைய முடியா இலக்கில் விட்டுச்செல்லும் என்ற நோக்கில் எதிரியுடனேயே பயணிப்பாள். வெற்றி பெற்றவுடன் தலைவனுடன் சேர்வாள்.! 




அன்பு, பத்மா, சந்திரா, ராஜன், குணா, செந்தில் என அத்தனை கதாபாத்திரங்களின் பெயர்களும் ஒரு முறை படம் பார்த்ததில் மனதில் பதிந்துவிட்டது. அரிதான நிகழ்வு. இருந்தாலும் நான் லீனியர் கதை சொல்லலில் வாய்ஸ் ஓவர் எதற்கு ?..இந்த வாய்ஸ் ஓவர் எல்லாம் எஸ்.ரா'வுக்கு ரொம்ப பிடித்த விஷயம். நான் சொல்றேன் நீ கேளுன்னு :) மக்களுக்கு புரியாது போய்விடும் என்ற பயமா வெற்றி மாறன் ?!





No comments:

Post a Comment