எனது முன்னூறாவது பதிவு
எப்பக்கம்
முன்னேறிச்செல்கிறது
என அறியாத
மண்புழு போல
பின்னிக்கிடந்தனர்.
ஆளரவம் கேட்டதும்
வெட்டுண்ட
மண்புழு போல்
ஆளுக்கொரு
திசையாக
பிரிந்துசென்றனர்.
அதே உயிர்ப்போடு.
****
மைக்கூட்டில்
செருகி வைத்த
பறவையின் இறகு
அவன் வரும் வரை
காத்திருந்து
தன் கதையை எழுதிப்பார்க்கிறது
****
காலணியின்
குதிகால்
டக் டக்கென
ஒலியெழுப்பும்படி
நடந்துவந்துகொண்டிருந்தாள்
என் கூடவே
சாலையில்
திரும்பிப்பார்க்காது
வந்துகொண்டிருந்த
நான் குதிரையோ என
எண்ணிக்கொண்டு
வழி விட்டேன்
பிறகும்
என்னோடேயே
நடப்போர்
கடக்கும் இடத்தை
பட்டைக்கோடுகளினூடே
கடந்தாள்
ஆஹா வரிக்குதிரை
என
எண்ணிக்கொண்டேன்
****
ட’ போன்ற வளைவு
என யாரும்
சொல்வதில்லை
எல் போன்ற
வளைவுதானே
என நீங்களும்
இப்போது
கேட்டீர்கள்.
செருப்பு போடாத
கொக்குகள்
ஊருணிச்சேற்றுக்குள்
கால்களை
விட்டுக்கொண்டிருக்கின்றன
எனக்குத்தான்
என்னவோ
போலிருக்கிறது
****
உடைந்து
அழுகிறேன்
நீர் கசிகிறது
****
அழகற்ற
உடலைப்பற்றிய
கவலை
முதலைகள்
கண்ணீர்
வடிக்கின்றன
****
லகோஸ்ட் ட்டீ
ஷர்ட்டின் முதலை
எப்போதும் என்
நெஞ்சைக்குறி வைக்கிறது
காலணியிலிருக்கும்
பூமா பாய்ந்து
என் விரல்களைப்பற்றித்திங்க
நினைக்கிறது.
எல்லாம் சரிதான்
என
எதிரே
நடந்துவந்தவனின்
காலணியில்
‘ஜஸ்ட் டூ இட்’
என
டிக் மார்க்
காண்பிக்கிறது
*****
மழையைப்பற்றி
எழுத நினைத்தாலும்
நனையாமல்
எழுதினால் தான்
தங்குகிறது
****
அடித்த ஒரு
மணியிலேயே
அழைப்பை
ஏற்றுப்பேச எத்தனித்த
எதிர் முனையாளன்
போல்
இப்போது
விக்கித்து நிற்கிறேன்
****
ஃப்ரிட்ஜில்
வைத்த
நேற்றைய பால்
பாத்திரத்தை
எடுத்து வெளியே
வைத்தேன்
குடிக்க வந்த
என் அன்னத்திற்கு
ஐஸ்
கட்டியைப்பிரித்தெடுக்க
தெரியவில்லை
****
எப்போதும் மழை
நீரை மட்டுமே
அருந்தும் சாதகப்பறவை
ஒன்றை
வளர்த்துவருகிறேன்
பெங்களூரிலும்
இப்போதெல்லாம்
மழை
குறைந்துவிட்டது
வெய்யிற்காலங்களில்
அதற்குத்தெரியாமல்
என் யூபிஎஸ்
பேட்டரிக்கென
வாங்கி
வைத்திருந்த டிஸ்ட்டில்டு வாட்டரை
பருகக்கொடுத்துவிடுவேன்.
குவளையினின்றும்
தெறித்துவிழுந்த நீரைக்கூட
முழுதும்
உறிஞ்சிக்குடித்துவிடுகிறது
*****
.
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் கவிதைநன்றாக உள்ளது.
300வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் :)
ReplyDelete