Monday, November 17, 2014

ஸ்ருதி’லயம்




ஸ்ருதிஹாசனுக்கு பெயர் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த நல்ல படமோ இல்லை நடிப்பதற்கான வாய்ப்புகளோ இன்னும் அமையவில்லை இவருக்கு. எனினும் தொடர்ந்தும் நடிப்பிலேயே கவனம் செலுத்தி வருகிறார். அது அவரின் தனி மனித சுதந்திரம்.அதைப்பற்றி கூற வரவில்லை நான். இன்னொரு அழகிய முகம் இருக்கிறது அவருக்கு, அதுதான் இசை! இவர் நல்ல பாடகியும் இசையமைப்பாளரும் கூடத்தான். என்ன கொஞ்சம் வெஸ்ட்டர்னில் பாடுகிறார் அதுதான் குறை. இன்னபிற ராகங்களையும் தொடர்ந்தும் பாட அவரால் இயலும். அழகிய குரல், இப்போதைய பெண் பாடகர்களுள் சில நல்ல பாடல்களைப்பாடுவதற்கான வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

பாடியே தனது திறமையை , தம்மை இந்த கலையுலகிற்கு அடையாளப்படுத்திக்கொண்ட இவர் , நடிக்கவும் செய்கிறார் என்பதும் , எனினும் அது இவரின் இரண்டாவது தெரிவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இதுவரை எந்தப்பெண்ணும் செய்யாத கதாபாத்திரங்களோ இல்லை யாரும் தொடத்தயங்கும் பாத்திரங்களோ இதுவரை அவர் செய்ததாகத்தோணவில்லை. இனியும் இவரின் பாதை ‘ஐந்து’ ஆண்டு சாதாரண எந்த ஒரு கதாநாயகியும் செய்யும் கதாபாத்திரங்களாகத்தான் தொடரவும் போகிறது.

மேலும் அவரின் டாம்பாயிஷ் லுக் , ஒரு கதாநாயகியாக ஏற்க வைக்க மறுக்கிறது என்பது தான் உண்மை.
நளினங்கள், சீண்டல்களுக்கான மடங்கல்கள் எல்லாம் இவரால் சாத்தியமாகக்கூடியதில்லை. அதோடு வேறுமாதிரி பார்ப்பதற்கும் இயலவில்லை. :) வேண்டுமானால் ஒரு ‘லேடி டெர்மினேட்டர்’ போன்று படங்களில் நடித்தால் பெருத்தமாயிருக்குமோ என்னவோ ..:) எனது பார்வையில் சேலையை வைத்து மறைக்காது மார்க்கச்சைகளை வெளிக்காட்டுவதும், முலையிடுக்குகளை ஒருக்கிக்காண்பிப்பதும் இவருக்கு ஒத்துவராத ஒன்று.

சரி அதெல்லாம் இருக்கட்டும் இதை இவர் செய்யத்தான் வேண்டுமா,? ஆன்ரியாவும் நன்றாகத்தான் பாடுகிறார், ஆனால் இதுவரை அவர் இசையமைப்பை இசைக்கோர்ப்பை கையிலெடுத்ததாக தெரியவில்லை. ஆல்பங்களோ இல்லை திரைக்கு இசைக்கவோ எப்போதும் முனைந்ததில்லை. என் எஸ் கே ரம்யா’வையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம். மேலைத்திய/அமேரிக்க பாடகிகளைப்போல ஒரு ப்ரிட்னி ஸ்பியர்ஸ், அல்லது ஒரு மரியா கரே, இப்போது வந்து கலக்கிக்கொண்டிருக்கும் சின்னப்பெண் ‘ஏரியானா க்ராண்டி’ போல இங்கு யாரும் இல்லை. பெண் பாடகிகள் ஆல்பங்கள் செய்யக்கூடிய அளவில் இல்லை என்பது ஒரு குறை. மும்பையில் பாப் டீவா’க்களாக சிலரே கொஞ்ச காலம் வலம் வந்தனர். ‘அலீஷா சினாய்’ ராகேஷ்வரி, ஷரோன் பிரபாகர், சுனிதா ராவ், நம்ம வசுந்தரா தாஸ் போன்றவர்கள் நன்றாகப் பாடக்கூடியவர்கள் என்ற அளவில் நின்றுவிட்டவர்கள். அவர்களின் ஆல்பங்களும் சில முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் உருவானவை, கோர்க்கப்பட்டவை மேலும் கட்டமைக்கப்பட்டவை என்று சொல்லலாம்.



ஆனாலும் ஸ்ருதி பல படிகள் மேலே போய் ,ஒரு திரைப்படத்தின் பாடல்களை மட்டுமே இசைக்காது அதன் பின்னணி இசையையும் சேர்த்தே , மிகவும் ஒரு சேலஞ்சிங்கான படத்தின் – உன்னைப்போல் ஒருவன்’ - பின்னணி இசையையும் அமைத்தவர். பாடல்களுக்கு ராகங்கள் தேர்ந்தெடுப்பது, பாடகர்களைப் பாடவைத்தல் என்பனவெல்லாம் அத்தனை எளிதல்ல. இருப்பினும் பின்னணி இசைக்கோர்ப்பு என்பது மிகவும் சவாலான விஷயம். அதையும் கமல் படத்திற்கு செய்து காட்டி அவரிடமே பாராட்டும் பெற்றவர்.  தமது மகள் என்ற காரணத்துக்காக அவர் அந்த வாய்ப்பை அத்தனை எளிதில் பெற்றுவிடவில்லை. அதை கமலே சில இடங்களில் குறிப்பிட்டிருந்தார். எதோ ஒரு படத்துக்கு இசையமைத்துவிட்டார் என்பதற்காக இந்தக்கட்டுரை இல்லை. இனியும் தொடர அத்தனை திறமைகளையும் தம்முள்ளே கொண்டவர் என்பதால் தான்.

இத்தனை திறமைகள் இருந்தும் இன்னும் ஏன் இவர் சாதாரண கதாநாயகிகள் போல், எப்போதும் போல மரத்தை சுற்றி டூயட் பாடிக்கொண்டும்,ஹீரோவின் பின் அலைபவர் போலவும் நடித்தே ஆகவேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது அதைச்செய்ய பலர் இருக்கின்றனர். விஜய் டீவி கமல் ஐம்பதில் , சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் பாடிய அந்தப்பாடல் ‘நினைவோ ஒரு பறவை’ என்ற அந்த வானத்தில் சஞ்சரித்தல் போலான ஒரு ஹல்லூசினேஷன் பாடலைப்பாடி அதை ஹேராமின் ’நீ பார்த்த பார்வைக் கொரு நன்றி’யுடன் கொண்டு வந்து சேர்த்தார். ராஜாவே எழுந்து நிற்க எத்தனித்தார் அப்போது, அந்த ராட்சசன் அத்தனை எளிதில் யாரையும் தம் வாய்திறந்து பாராட்டுவதே இல்லை என்பது ஈரேழு பதினாலு லோகங்களும் அறிந்தது. அத்தனை எளிதில் அவரைப்பாடியோ இல்லை தமது இன்னபிற கலைத்திறமைகளைக் காட்டியோ புளகாங்கிதம் அடையச்செய்தல் என்பது பகீரதப்பிரயத்னம் ( ஹ்ம்.. என்ன ஒரு மாதிரி போகுது சொற்களெல்லாம்...’முரசு’ செய்யும் வேலை :) ) தமது சொந்தப்பிளைகளையே மனந்திறந்து பாராட்டாதவர். அவரையே வியப்புக்குள்ளாக்கியவர் நம்ம ஸ்ருதி. மேலும் இந்தக் கட்டுரையின் அடிநாதமே ‘அந்த’ ஒரு நிகழ்வுதான் :)

இத்தனை திறமையுள்ளவர் எதற்காக எல்லோரும் செய்யும் அந்த நடிப்பை செய்யவேணும். கமலும் இவரைவிடவும் இசையில் பல அநாயாசமான லெவல்களைக்கடந்தவர் ,ஆழ்ந்த அறிவைக்கொண்டவர். அவரே இசைக்கத்துணிந்ததில்லை. நடிப்பு, பாட்டெழுதுதல், வசனம். கதை, இயக்கம் என அறுபத்துநான்கு கலைகளையும் அறிந்த அவரே இசைக்க வந்ததில்லை.

இப்போதிருக்கும் ஜெனரேஷனுக்கு ஒரு பாடலை எழுதி மெட்டமைத்து அதை கேசியோ அல்லது யமஹா கீபோர்டில் இசைத்து யூட்யூப்பிலும் ஏற்றி ஊர் சுற்ற விடுவது என்பது சாக்லேட்டின் கவரைக்கழற்றி உண்பது போல மிகச்சுலபமான விஷயமாகி விட்டது. இருப்பினும் பலரையும் திரும்பிப்பார்க்கவைக்கும் படியான அதுவும் அந்தத்துறையில் ஜாம்பவான்களையே வியக்கவைக்கவும் திறமை இவருள் ஒளிந்து கிடக்கிறது.அதை இவர் ஏன் மேலும் மெருக்கூட்டக்கூடாது ?!

இந்தியத்திரையில் இது வரை பெண் இசையமைப்பாளர்கள் என பெயர் சொல்லுமளவிற்கு யாரும் இருந்ததில்லை. இப்போதைய ஸ்நேஹா கன்வல்கர் என்று ஹிந்தியில் ‘கேங்க் ஆஃப் வாஸிப்பூர்’ படத்திற்கு இசைத்து பெயர் பெற்றவர், அவராலும் ஜனரஞ்சக இசை என்ற ஆல்பங்களைக்கொடுக்க வியலுமா என்பதும் சந்தேகம். தென்னிந்திய திரையில் பெண்கள் பாடகிகளாக மட்டுமே வலம் வந்து பின் காலப்போக்கில் மறைந்துவிடுவது தான் நடக்கிறது. பானுமதி ராமகிருஷ்ணா ஒன்றிரண்டு படங்களுக்கு மட்டுமே அந்தக்கலத்தில் இசைத்தார் என விக்கிபீடியா கூறுகிறது. சகலகலாவல்லியான அவராலும் இசையமைப்புத்துறையில் நிற்கவியலவில்லை. பின்னர் சில காலம் முன்பு தெலுங்கில் ஒரு பெண் இசையமைப்பாளர் கொஞ்ச காலம் பணியாற்றினார் என்று நினைக்கிறேன். (பெயர் மறந்துவிட்டது) பிறகு அவரும் முழுமையாகத் தொடரவில்லை.

திரைத்துறையில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், பாடல் புனையும் கவிஞர்கள், நடன இயக்குநர்கள், என எல்லாத்துறையிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கும்போது இந்த இசையமைப்புத்துறையில் மட்டும் ஏன் இல்லை..?! என்ன காரணம் என எனக்கு விளங்கவேயில்லை.

இசையில் இசைத்துறையில் ஒரு வலுவான பின்புலம் உள்ள ஸ்ருதியால் இன்னும் பல சாதனைகள் புரியவியலும், வெறுமனே மரம் சுற்றும் கதாநாயகியாக நடிப்பதைத்துறந்து களமிறங்கினால்.சாதிக்க வேண்டியது எத்தனையோ இருக்கிறது. 


2 comments:

  1. வணக்கம்
    சொல்ல வேண்டியவிடயத்தை மிக விரிவாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete