Monday, June 11, 2012

கூண்டுக்குள் இருப்பினும்



கண்ணாடி சீசாவின் கையகல நீருக்குள்
நீந்த விடப்பட்ட மீன்கள்
கடலையே உருவகப்படுத்திக்கொண்டு
அலைந்து கொண்டிருக்கின்றன


உயிர்க்காட்சி சாலையில் அலைந்துதிரிந்து
கொண்டிருந்த ஒட்டகங்கள் வீசிய காற்றில்
மண்துகள்களை எதிர்கொள்ள தம் கண்களின்
தோல்திரைகளை சிறிது மூடித்திறந்தன


திறந்து வைத்திருந்த ஜன்னலின் வழி
சட்டென என் உள்அறைக்குள் நுழைந்துவிட்ட தேனீக்கள்
சுவரொட்டியிலிருந்த வண்ணவண்ணப்பூக்களில்
தேனெடுக்க முட்டி மோதின


கூடு கட்டப் பொருள் சேகரம் பண்ணிக்கொண்டிருந்த
அந்த நீலப்பறவைகள் அருகிலிருந்த நீல நிற
சாக்லேட் தாள்களையும் கொத்திக்கொண்டு பறந்தன.


திரும்பத்திரும்ப எண்ணிப் பத்தே கம்பிகளில் மட்டுமே
அமர்ந்துகொள்ள முடிந்தாலும் அந்தக் கூண்டுக்குள்
சலிக்காமல் குயில்கள் பாடிக்கொண்டிருக்கின்றன.


வலிந்து வாசிக்க முயலவில்லையெனினும்
வீணையின் தந்திகளின் மேல் தவறுதலாகப்பட்டுவிட்ட
என் கைவிரல்களும் நாதத்தை எழுப்பத்தான் செய்கின்றன.


ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித்திரையில்
துப்பாக்கிசூடு, அதீதவன்முறை, குருதி வடிதல் போன்ற
இன்னபிற பரபரப்பான காட்சிகளினூடே
மெல்லிய மலரின் விரிதல்களையும்
சேர்ந்தே ரசிக்கத்தான் செய்கிறது மனது.




.

7 comments:

  1. ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித்திரையில்
    துப்பாக்கிசூடு, அதீதவன்முறை, குருதி வடிதல் போன்ற
    இன்னபிற பரபரப்பான காட்சிகளினூடே
    மெல்லிய மலரின் விரிதல்களையும்
    சேர்ந்தே ரசிக்கத்தான் செய்கிறது மனது.//

    எப்போதேனும் இதுபோன்ற நல்ல படைப்புகளுக்காக
    ஏங்கிக் கிடக்கிற மனது
    கிடைத்ததும் மயங்க்கித்தான் போகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ரமணி சார், தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.

    ReplyDelete
  3. கவிதைகள் அற்புதமாக இருக்கின்றன
    புகைப்படங்கள் அற்புதமாக இருக்கின்றன
    உங்களுக்கு மட்டும் எப்படிக் கிடைக்கின்றன இந்த அற்புதமான புகைப்படங்கள் ?
    உங்களுக்குள் மட்டும் எப்படி எழுகின்றன இந்த
    அற்புதமான கவிதைகள் ?
    உள்ளே இறங்கிய பிறகு வெளியே வரமுடியவில்லை

    ReplyDelete
  4. கவிதைகள் மிக அற்புதம்
    படங்கள் மிக அற்புதம்
    உங்களுக்கு மட்டும் எப்படிக் கிடைக்கின்றன இந்த
    அற்புதமான படங்கள் ?
    உங்களுக்குள் மட்டும் எப்படி எழுகின்றன இந்த
    அற்புதமான கவிதைகள் ?
    உள்ளே இறங்கி விட்டு வெளியே வர முடியவில்லை
    எவ்வளவு காலம் தான் இரசித்துக்கொண்டு அமர்ந்திருப்பது ?

    ReplyDelete
  5. @ நந்தினி மருதம் : வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.. ஒரு சொல் கிடைக்கக் காத்துக்கிடக்கும் சாதாரணக்கவிஞன் தான் நானும்..கிடைத்தபின் கவிதை அது தானாக எழுதிக்கொள்கிறது...

    ReplyDelete