Sunday, September 13, 2020

Anežka (Agnes) Kašpárková

 



 

Anežka (Agnes) Kašpárková ங்கற ஒரு 90 வயது மூதாட்டி, ஓவியங்களால் தமது வீட்டினை அலங்கரித்து வைத்திருக்கிறார். செக் குடியரசில் உள்ள Louka என்ற கிராமத்தில் வசிக்கிறார். நம்ம ஊர் கிழவிகளுக்கு பொறணி பேசத்தான் நேரமிருக்கும். பழமையான மொரோவியன் ஓவியங்களை தம் கைகளால் எழுதி வீட்டின் சுவர்களை அலங்கரித்து வைத்து இருக்கிறார். கிணறு மற்றும் வாளியைக்கூட விடவில்லை. கை நடுங்காதா இவர் வயதில்?.. அத்தனை பூக்கள் , கலர் சென்ஸ் பாருங்க..அடுத்த ஷங்கர் படத்துக்கு ஆர்ட் டைரக்டரா வருவாங்க போல பாட்டியம்மா #மூதாட்டிஓவியம்

 






 

Sunday, September 6, 2020

பிரபஞ்சத்தில் ஒரு சிறு இலை

 


இப்போ இரண்டு பேரும் இல்லை. சென்ற ஞாயிறன்று அப்பா மறைந்து விட்டார். கடந்த வாரம் முழுதும் பரமக்குடியில் தான் இருந்தேன். ட்ரூ காந்தியன். ரிட்டயர்டு ரயில்வே ஸ்டெஷன் மாஸ்டர். நல்ல ஆங்கிலப் புலமை. தெளிவாக உரையாடுவார். இசை ரசிகர். அம்மா 2013லும் அப்பா 2019லும் ஒருவர் பின் ஒருவராக சென்றடைந்து விட்டனர் இந்தச் சின்னப் பயலை விட்டு விட்டு.எல்லாவற்றையும் நேரத்துக்கு செய்தாக வேண்டும் என்பதில் பிடிமானம் உள்ளவர். ’எப்போதும் எந்நாளும் பொய் சொல்லல் கூடாது’ என வாசற்படியில் நிறுத்தி என் வாயால் சொல்ல வைப்பார். கண்டிப்பானவர், தலை முடி வெட்டுவதி லிருந்து உடை அணிவது வரை எல்லாம் கட்டுப்பாடுகள் தாம்.

அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் நாற்பதுகளில். உங்க அப்பா என்னை மதுரையில சினிமாக்கெல்லாம் கூட்டிட்டு போயிருக்காஹ தெரியமாடா என்று பெருமை பேசுவார். அம்மா உடல் நிலை சரியில்லாது படுத்த படுக்கையாக வீழ்ந்து அழகு குலைந்து போயிருக்கும் போது, சூரியா போதும்டி நீ போயிரு என்றார். அதே நிலைக்கு அப்பாவும் வந்து விட்டார். ஒரு வாரம் முழுதும் இனிப்புகளை மட்டுமே கேட்டு வாங்கி உண்டார். எந்த நோயும் இல்லை. பெங்களூர் வந்திருந்த போது உள்ளூர் மருத்துவர் ஆச்சரியப் பட்டனர். அவர் வயதை அறிந்து. இப்போதும் தொடர்ந்தால் அவருக்கு வயது தொண்ணூற்று நான்கு. நினைவு பிறழ்ந்து விட்டது, யாரையும் அடையாளம் காண இயலவில்லை கடைசியில்.

அப்பாவுக்கு பரமக்குடி வக்கீல் சீனிவாசன் (கமலஹாசனின் தந்தை) நெருங்கிய நண்பர். சாருஹாசன் ‘டேய் கேசவா’ என அப்பாவைக் கட்டிப்பிடித்து நட்புறவு கொண்டாடுவார். காலகாலமாக நட்பு தொடர்ந்தது. அவர்களுக் கிடையில். ஊரில் அவரைத்தெரியாதவர் என யாருமில்லை. பரம்பரையாக வீட்டிற்கு துணி வெளுக்கும் ‘குருவம்மா’ கண்ணீர் உகுத்தார் அன்று. அத்தனை நெகிழ்வாயிருந்தது எனக்கு.

இண்டியன் எக்ஸ்பிரஸ் தான் வாசிப்பார். இந்து பிடிக்காது. ஆங்கில அறிவு வளர வேணும் என வாசிக்கச்சொல்வார். இயன்ற வரை தம் மக்கள் எங்களெல்லாவரையும் ஓரளவுக்கு படிக்க வைத்தார் தீவிர மதப்பற்று உள்ளவர். திருச்சி வானொலியில் இந்துப்பாடல்கள் முடிந்து கிறித்துவ இஸ்லாமியப் பாடல்கள் ஆரம்பித்தால் சடாரென நிறுத்தி விடுவார்.

வேலைகளில் அதிகம் நிலைப்பதில்லை நான். அது குறித்து அதிக விசனப்படுவார். விரதம், சைவம் எல்லாம் கோட்பாட்டோடு வாழ்ந்தவர். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாத போது குருதி கொடுக்க வேண்டியிருந்தது , என்னைக்கொடுக்கலாகாது என தடுத்தார். இவன் எங்கெங்கெல்லாமோ போய் என்னென்னெத்தையோ சாப்ட்ருக்கான் என்று டாக்டரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். கடைசியில் நான் தான் கொடுக்கும் படி ஆயிற்று.

பிரபஞ்சத்தில் என்ன பெரிய மாறுதலை ஏற்படுத்தி விடும் உதிர்ந்து விழும் ஒரு சிறு இலை எனினும் அது என் வீட்டு மரத்தில் இருந்து வீழும் போது பிரபஞ்சம் நின்று தான் விடுகிறது. #அப்பா

https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE?source=feed_text&epa=HASHTAG

Wednesday, September 2, 2020

யுவன்


அவரை மீண்டும் மீண்டும் அலைக்கழித்துக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. இனியும் கிலேசங்களுக்கு இடமில்லை என்றானதும் மனது அமைதி கொண்டு விட்டது. எனினும் அத்தனை அலைக்கழிப்புகளும், இடையூறுகளுமே அவரை தொடர்ந்தும் இயங்க வைத்துக்கொண்டிருந்தது என்பதே உண்மை. கலையின் உச்சம் எட்ட நிலையில்லாத் தன்மை அவசியம் என்பதை அவர் பாடல்களில் கண்டிருக்கிறேன். எல்லாம் கிடைத்து விட்ட பிறகு வேறென்ன அமைதி தான். இப்போது அவர் இசையில் இனிமை குன்றி ரசிக்கவியலாமல் போனது என்னவோ உண்மைதான். அவரின் பழைய பாடல்களையே இன்னமும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை எனக்கும் அமைதி கிட்டினால் அவரின் இப்போதைய பாடல்களையும் ரசிக்க இயலுமோ என்னவோ ?! #யுவன்

Tuesday, September 1, 2020

அப்பா

 


வீட்டுல நடக்கிற அத்தனை கல்யாணத்துக்கும் நான் தான் அனஃபிஷியல் ஃபோட்டோக்ராஃபர். சின்னதா ஒரு நிக்கான் 5.1 மெ.பி. காமிராவை வைத்துக் கொண்டு படமெடுத்துக்கொண்டே அலைவேன். அதுல ஒண்ணும் பெரிசா செய்துவிட இயலாது. இருப்பினும் படங்களின் தரம் நன்றாக இருக்கும். படங்களை எடுத்து முடித்த பின்னர் நிக்கானை டீவீயில் அட்டாச் செய்து ஒவ்வொன்றாக ஸ்லைட் ஷோ ஓட விடுவேன். அப்பாவும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பின்னர் முன்னோட்டம் முடிந்து அதை சின்ன சாஃப்ட்வேரின் துணையுடன் குறும் படமாக்கி காட்சிகளுக்குப் பொருத்தமான இசை சேர்த்து, தமிழில் எழுத்துகள் கூட்டி ஒலி சேர்த்து கிட்டத்தட்ட ஒரு படம் போலவே ஆக்கி (எல்லா வீடியோக்ராபரும் செய்யக்கூடியது தான்) சிடீயில் பதிந்து பரமக்குடி அனுப்பி வைப்பேன் இல்லையேல் போகும் போது டிவிடி ப்ளெயரில் போட்டு காண்பிப்பேன்.

தொடர்ந்து நடக்கும் அத்தனை விழாக்களையும் இது போல் படமாக்கி போட்டு காண்பிப்பது வழக்கம். அப்பா அதையெல்லாம் ரசித்துப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு பின்னர் ஒரு நாள் சாப்பிட உட்காரும் போது ‘டேய் சின்னப் பயலே நீ சினிமால’ சேர்ந்துடா என்றார். எனக்கு ரொம்ப ஆச்சரியம் , இப்டி சொல்லுவார்கள் என ஒருநாளும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. எல்லா பெற்றோரும் தமது குழந்தைகளின் ’பேஸிக் இன்ஸ்டிங்க்ட்’ தெரிந்து தான் வைத்திருக்கின்றனர். நாமதான் கடைசி வரை அவர்களைப் புரிந்து கொள்வதேயில்லை. இன்று அப்பாவின் முதலாவது நினைவு தினம் #அப்பா

.

Tuesday, August 25, 2020

மைனு லேங்கா....

 

டாட்டா ஸ்கைல அப்பப்ப பஞ்சாபி சேனல் பாக்றதுண்டு. அதுல ‘ஷோ பாக்ஸ்’னு ஒரு சேனல் , எப்பத்திருப்பினாலும் இந்த ‘லெங்கா’ பாட்டுத்தான் ஓடும். ஒண்ணும் பிரமாதமல்லாம் இல்லை. இளமையான குரல் மற்றும் உருவம் அந்தப் பையனுக்கு. பஞ்சாபி பொண்ணுங்கல்லாம் கொஞ்சம் ஹைட்டாத் தான் இருப்பாங்க. ஒரு லேங்கா வாங்கிக்குடுன்னு அடம் பிடிக்கிறார் தலைவி. தலைவன்கிட்ட வழக்கம்போல பைசா இல்லை, அதெல்லாம் வேணாம்னு கூட்டிட்டு வந்துட்றார். பசங்க கூட உக்காந்து பார்ட்டில மொதல்ல வர்ற ரிங்’ ஃபோன்காரன் தான் பில் குடுக்கணும்னு சொல்லும்போது தலைவர் எடுத்து நீட்டீர்றார் காசை. அதுல தலைவிக்கு இன்னமும் கோவம்..ஹிஹி..ரொம்ப பெரிய தீமோ இல்லை கருத்து சொல்லவோ எத்தனிக்கலை. சும்மா ஒரு காதல் பாட்டு. அற்புதம். லேங்கா’வ விடுங்க , பாட்டு முழுக்க அந்தப்பையன் போட்டுக் கிட்டு வர்ற அத்தனை சட்டையும் பிரமாதமான டிசைன்கள். ‘லைட் கராதே மேரே காளே பாள் மே’ கொஞ்சம் ஒளி வீசு என் தலைக்கு. இடையிசைல்லாம் கேட்கும் படி இருக்கு. கடைசீல லேங்கா வாங்கி குடுத்தாரா இல்லையா...ஹ்ம்.. முழுப்பாட்டும் பாருங்க.!!

இன்னிக்கும் ஒரிஜினலா பாடல்கள் வருவது என்பது பஞ்சாபில தான். மேலும் ஹிந்திப்பாடல்களால் அழிக்கவே முடியாத இடத்துல இன்னமும் பஞ்சாபி பாடல்கள் இருக்கிறது என்பது தான் நிஜம். மராட்டி மொழியை அழிச்சு ஒண்ணுமில்லாமப் பண்ணினது போல பஞ்சாபி பாடல்களை அழிக்க முடியவில்லை. மேலும் அவர்கள் இசை மார்க்கெட் இன்னமும் வலுவா இருக்க காரணம் இசையை, ஒலிப்பேழையை காசு கொடுத்து வாங்கி கேட்பர் பஞ்சாபிகள். பதிவிறக்கம் பெரும்பாலும் இல்லை. ’தே மர் ஜாண்யா ....!’ #மைனுலேங்கா

Monday, August 24, 2020

’நார்ஸி’

 

 

மீண்டும் மினுக்கியது, அந்த ’ஃப்யூச்சர்புக்’ வலைத்தளத்தின் அஞ்சல் பெட்டி. பெயர் பார்த்தேன் புதிதாக இருக்கிறது ‘நார்ஸி’ , நான்ஸியை ஒரு வேளை தவறாக எழுதியிருக்கக் கூடும் என்று நினைத்தேன். கேட்டு விடலாம் என்று நினைப்பதற்குள், ஒருமுறை அவளின் காலக்கோட்டை பார்வையிட்ட பிறகு கேட்கலாம் என சென்றேன்.அத்தனையும் எனக்குப் பிடித்த படங்களாகவே இருந்தன. எனினும் அத்தனையும் புதியவை. போஸ்ட் மாடர்னிஸத்தின் புதிய பரிமாணங்கள். வேற்று மொழிக் கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்து இட்டிருந்தாள். ஆனாலும் அவளின் ஒரு புகைப்படம் கூட இல்லை. எங்கெங்கிருந்தோ பகிர்ந்தவை மட்டுமே. தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கும் போது ’டிங்’ என்ற ஒலி கேட்டது அவள்தான், மீண்டும் அழைக்கிறாள். ஓடிச்சென்று அஞ்சற் பெட்டியை திறந்தேன்.

 

”ஏன் இத்தனை காலதாமதம் ? இரவு பதினொன்றரைக்கெல்லாம் நான் உறங்கி விடுவேன் என்று உனக்குத்தெரியாதா ?”  என்று உரிமையோடு கேட்டாள். இல்லை காலக்கோட்டில் உலவிக்கொண்டிருந்ததில் கவனம் பிசகிவிட்டது எனச் சமாளித்தேன். ஹ்ம்.. பேசு என்றாள். என்ன பேசுவது ? எப்படி தொடங்குவது .இதே தயக்கம் தான் நூற்றாண்டு காலமாய் அத்தனை பையன்களுக்கும் இருப்பது தானே?..சரி இன்று கேட்டுவிடலாம் என்றெண்ணி ,விசைப்பலகையில் தட்டச்சிடும் போது அவளிடமிருந்து எதிர்பாராக்கேள்வி வந்தது. ‘உனக்கு காலப்பயணங்களில் நம்பிக்கை உண்டா?’ என. ஹ்ம் இருக்கிறது என்றேன். பிறகு நீண்ட நேர மெளனம் இருபுறமும்.

 

’பொதுச்சார்பியல் கோட்பாடு சரியாக இருந்து, ஆற்றல் அடர்த்தி நேர்மறையானதாக இருந்தால், காலப்பயணம் சாத்தியமில்லை’ அல்லவா? என்று வினவினாள். அது ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கூற்று. இருப்பினும் அதற்காக எல்லாம் அப்படியே தான் இருக்க வேணும் என்று கட்டாயமில்லை ,ஓளியின் வேகத்தில் பயணிக்க இயலாவிட்டாலும் கிட்டத்தட்ட அதன் வேகத்தை எட்டிப்பிடித்து, எங்கேனும் புழுத்துளை கிட்டினால் சாத்தியம் தான்.. என்று என்னளவிலேயான காலப்பயண அறிவைக் கொண்டு விளக்க முயன்றேன். கொஞ்சம் நம்பிக்கை வந்தவளாக மீண்டும் ஏதும் பேசவில்லை.

நேரம் கடந்து கொண்டிருக்கிறது. வழக்கமான கேள்விகளை அவள் விரும்ப மாட்டாள் போலிருக்கிறது. அதோடு ஒரு முறை போலும் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டதேயில்லை அவள். இப்படி ஒரு விசித்திரப்பிறவியா என்று யோசித்தேன். ’உனது பூச்செடிகளுக்கு நீர் ஊற்றினாயா’ என்று ஒரு முறையேனும் கேட்பாய் என்றெண்ணி ஏமாந்திருக்கிறேன் என்று சொல்லிவிட வேணும் என நினைத்தேன். ஒரே ஒரு முறை என் வீட்டு உப்பரிகையின் பூந்தொட்டிப்படத்திற்கு விருப்பக்குறி (மட்டுமே) இட்டிருந்தாள். அதனால் தான்.

 

சில நொடிகளில் பச்சை நிறம் சாயம் கலைந்து சாம்பல் நிறமாகிவிட்டது அவளின் பெயரில். ஹ்ம்.. இன்றும் கேட்கவில்லை எனச்சலித்துக் கொண்டே நேரத்தைப்பார்த்தேன் , சரியாக பதினொன்றரை. சுழற்றிய கண்களை இன்னமும் வலிக்க விடாது உறங்கி விட்டேன்.

 

இப்படியே தொடர்கிறது ஒவ்வொரு நாளும் ஒரு முடிவும் இல்லை. எனக்கும் அம்மாதிரியான வழக்கமான காதலர்கள் பரிமாறிக்கொள்ளூம் இதயங்களையோ இல்லை சில நொடிகள் மட்டுமே ஆடிக்களைக்கும் ஜிஃப்களையோ பகிர நான் விரும்புவதில்லை. அவசியத் தேவையான விஷயங்களைப் பற்றி மட்டுமே விவாதிக்க விரும்புபவன் நான் என்பதை அவளும் அறிந்திருக்கக்கூடும். எங்கிருக்கிறாய் என்ன செய்கிறாய் உண்பதற்கும் உடுத்துவதற்கும் என்ன வழிவகைகள், இருப்பிடம் குறித்த எந்தத்தகவலும் உன் தன்விளக்கத்தில் இல்லையே,பிடித்த உணவுகள், நடக்கப்பிடித்த கடற்கரைகள், பறக்கப்பிடித்த வானங்கள் எவை என எத்தனையோ கேள்விகள், இருப்பினும் ஒன்றும் தோன்றுவதில்லை அவள் பெயரில் பச்சை ஒளிரும்போது.

”ஒரு தவறு நடந்திருக்கிறது” என்று சொன்னாள் அவள் தான் அடுத்த நாள். என்னவெனக்கேட்க முயன்றேன்.  ”பொருளும், எதிர்ப்பொருளும் மிகச் சரியாக, சமமான கணக்கில் உற்பத்தியாகி ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருந்தபோது, எங்கோ சமநிலை ஒரு நூல் அளவு தவறி, எதிர்ப் பொருளை விட, எதிரணுக்களைவிட ஒரு நூலளவு அணுக்களும், பொருள்களும் அதிகமாகிவிட்டன. அந்த நூலளவு பொருள்கள்தான் பல லட்சம் கோடி விண்மீன்களாக, பேரண்டத்தில் உள்ள அத்தனையுமாக உள்ளன, ஆனால், அந்த தவறு எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பதற்குதான் விடை இல்லை.” உனக்குத் தெரியுமா அதைப்பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறாயா என்று வினவினாள். ஹ்ம்.. இப்படி ஒரு கோட்பாடு உலவத்தான் செய்கிறது அனைவரும் விடை தேட முயல்கின்றனர். என்று பதில் தெரியா மாணவன் போல நின்றேன்.

சரி என்றவள்..மேலும் வெகு நேர மெளனத்திற்குப்பின்  “எங்கிருக்கிறாய் என்ன செய்கிறாய் உண்பதற்கும் உடுத்துவதற்கும் என்ன வழிவகைகள், இருப்பிடம் குறித்த எந்தத்தகவலும் உன் தன்விளக்கத்தில் இல்லையே, பிடித்த உணவுகள், நடக்கப்பிடித்த கடற்கரைகள், பறக்கப்பிடித்த வானங்கள்” என்று நான் கேட்க நினைத்த அதே சொற்றொடர்களை வரிசையாகக் கேட்டாள். திக்கு முக்காடிப்போனேன். இவளுக்கு எப்படித்தெரிந்தது.... என்ன பதில் சொல்ல மாட்டாயா என்று மீண்டும் வினவினாள். அடிப்படையாக எல்லா விஷயங்களும் ஒத்துப்போகிறதே என்ற பூரிப்பில் நா எழவில்லை. மீண்டும் நேரம் பதினொன்றரை ஆகிவிட்டது தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததில். உறக்கம் சுழற்றியது. அன்று கனவெல்லாம் பறந்து கொண்டிருந்தேன் எனக்குப்பிடித்த வானங்களில். மேகங்களூடாக பயணித்து வந்து ”நான் யாரும் வேற்றாள் இல்லை அது நீயே தான்” என்றாள் நார்ஸி.

Saturday, August 15, 2020

பாடும் போது நான் தென்றல் காற்று

 

தமிழ் மற்றும் இன்னபிற மொழியில் பாடும் கலைஞர்களுக்கு இந்திய துணைக் கண்டத்தில் வெளிநாட்டு பாடற்கலைஞர்களைப் போல ஸ்டேஜ் ஷோக்களில் வயர்லெஸ் மைக் வைத்துக்கொண்டு ரசிகர்களிருக்குமிடம் வரை வந்து அவர்களோடு கலந்து பாடும் வாய்ப்போ, அவர்களோடு சேர்ந்து ஆடும் வாய்ப்போ கிடைப்பதில்லை. எத்தனை பாடல்கள் பாடியிருந்தபோதும், ஆர்ப்பாட்டமான பாடல்களும் கூட. கொஞ்சம் கட்டுப்பட்டித்தனம் அவர்கள் மனத்திலேயே ஊறிக்கிடக்கிறது போலு.ம். தனிப்பாடற்திரட்டுகள் (ஆல்பம்) கலாச்சாரம் இன்னமும் தமிழ் மண்ணில் ஊறாதது தான் காரணம். இந்த ஒல்லிப்பிச்சான் அநிருத் அப்பப்ப பாட்றான்.

அந்த இடங்களை வெறுமனே வாயசைக்கும் நடிகர்கள் எடுத்துக்கொண்டு விட்டனர். பாடும் அனைவரும் இதுவரைக்கும் பின்னணிப்பாடகர்கள் என்றே அழைக்கப்படுவது ஒரு சாபம். வெளிநாட்டில் பாடுபவரே ஆடி மகிழ்விப்பது போல இங்கும் இருப்பவர் கொஞ்சமே. அதுவும் இப்போது மட்டுமே கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து தான். அப்பாச்சி இண்டியன், ப்ளேஸ், உஷா உதுப் போன்ற மேற்கத்திய பாணியில் பாடும் கலைஞர்களுக்கு மட்டுமே ஸ்டேஜ் ஷோக்களில் முன் வந்து பாடும் வாய்ப்புகள் கிட்டியது. அதிலும் மாம்பலம் மாமி உஷா உதுப் தமிழ்ச்சேலை கட்டிக் கொண்டே பாடி அசத்துவார். ராசைய்யா எப்போதும் தமது ஆர்மோனியப்பெட்டியை ஒரு ப்ராப்பர்ட்டி போல வைத்துக் கொண்டு ‘இதை; விட்டு அகல மாட்டேன் என்று சிறுகுழந்தை போல அடம் பிடிப்பார். நின்ற இடத்திலேயே பாடிவிட்டு சென்றுவிடுவர் அனைவரும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியமும் அதே போல ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ ’இளமை இதோ இதோ’ ன்னு ஒரு ராக் ஸிங்கர் போல ராம்ப்பில் பாடிக்கொண்டே நடந்து வந்தால் எப்ப்டி இருக்கும்? உடல் பருமனைப்பற்றி யோசிக்க வேண்டாம், அதே போலுள்ளவர் எல்லாம் பாடத்தான் செய்கின்றனர். மீண்டு வருவார் பாடுவார். #பாடும்போதுநான்தென்றல்காற்று.