இப்போ இரண்டு பேரும் இல்லை. சென்ற ஞாயிறன்று அப்பா மறைந்து விட்டார். கடந்த வாரம் முழுதும் பரமக்குடியில் தான் இருந்தேன். ட்ரூ காந்தியன். ரிட்டயர்டு ரயில்வே ஸ்டெஷன் மாஸ்டர். நல்ல ஆங்கிலப் புலமை. தெளிவாக உரையாடுவார். இசை ரசிகர். அம்மா 2013லும் அப்பா 2019லும் ஒருவர் பின் ஒருவராக சென்றடைந்து விட்டனர் இந்தச் சின்னப் பயலை விட்டு விட்டு.எல்லாவற்றையும் நேரத்துக்கு செய்தாக வேண்டும் என்பதில் பிடிமானம் உள்ளவர். ’எப்போதும் எந்நாளும் பொய் சொல்லல் கூடாது’ என வாசற்படியில் நிறுத்தி என் வாயால் சொல்ல வைப்பார். கண்டிப்பானவர், தலை முடி வெட்டுவதி லிருந்து உடை அணிவது வரை எல்லாம் கட்டுப்பாடுகள் தாம்.
அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் நாற்பதுகளில். உங்க அப்பா என்னை மதுரையில சினிமாக்கெல்லாம் கூட்டிட்டு போயிருக்காஹ தெரியமாடா என்று பெருமை பேசுவார். அம்மா உடல் நிலை சரியில்லாது படுத்த படுக்கையாக வீழ்ந்து அழகு குலைந்து போயிருக்கும் போது, சூரியா போதும்டி நீ போயிரு என்றார். அதே நிலைக்கு அப்பாவும் வந்து விட்டார். ஒரு வாரம் முழுதும் இனிப்புகளை மட்டுமே கேட்டு வாங்கி உண்டார். எந்த நோயும் இல்லை. பெங்களூர் வந்திருந்த போது உள்ளூர் மருத்துவர் ஆச்சரியப் பட்டனர். அவர் வயதை அறிந்து. இப்போதும் தொடர்ந்தால் அவருக்கு வயது தொண்ணூற்று நான்கு. நினைவு பிறழ்ந்து விட்டது, யாரையும் அடையாளம் காண இயலவில்லை கடைசியில்.
அப்பாவுக்கு பரமக்குடி வக்கீல் சீனிவாசன் (கமலஹாசனின் தந்தை) நெருங்கிய நண்பர். சாருஹாசன் ‘டேய் கேசவா’ என அப்பாவைக் கட்டிப்பிடித்து நட்புறவு கொண்டாடுவார். காலகாலமாக நட்பு தொடர்ந்தது. அவர்களுக் கிடையில். ஊரில் அவரைத்தெரியாதவர் என யாருமில்லை. பரம்பரையாக வீட்டிற்கு துணி வெளுக்கும் ‘குருவம்மா’ கண்ணீர் உகுத்தார் அன்று. அத்தனை நெகிழ்வாயிருந்தது எனக்கு.
இண்டியன் எக்ஸ்பிரஸ் தான் வாசிப்பார். இந்து பிடிக்காது. ஆங்கில அறிவு வளர வேணும் என வாசிக்கச்சொல்வார். இயன்ற வரை தம் மக்கள் எங்களெல்லாவரையும் ஓரளவுக்கு படிக்க வைத்தார் தீவிர மதப்பற்று உள்ளவர். திருச்சி வானொலியில் இந்துப்பாடல்கள் முடிந்து கிறித்துவ இஸ்லாமியப் பாடல்கள் ஆரம்பித்தால் சடாரென நிறுத்தி விடுவார்.
வேலைகளில் அதிகம் நிலைப்பதில்லை நான். அது குறித்து அதிக விசனப்படுவார். விரதம், சைவம் எல்லாம் கோட்பாட்டோடு வாழ்ந்தவர். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாத போது குருதி கொடுக்க வேண்டியிருந்தது , என்னைக்கொடுக்கலாகாது என தடுத்தார். இவன் எங்கெங்கெல்லாமோ போய் என்னென்னெத்தையோ சாப்ட்ருக்கான் என்று டாக்டரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். கடைசியில் நான் தான் கொடுக்கும் படி ஆயிற்று.
பிரபஞ்சத்தில் என்ன பெரிய மாறுதலை ஏற்படுத்தி விடும் உதிர்ந்து விழும் ஒரு
சிறு இலை எனினும் அது என் வீட்டு மரத்தில் இருந்து வீழும் போது பிரபஞ்சம்
நின்று தான் விடுகிறது. #அப்பா
https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE?source=feed_text&epa=HASHTAG
நெகிழ்ச்சி.
ReplyDelete