மீண்டும் மினுக்கியது, அந்த ’ஃப்யூச்சர்புக்’ வலைத்தளத்தின் அஞ்சல் பெட்டி. பெயர் பார்த்தேன் புதிதாக இருக்கிறது ‘நார்ஸி’ , நான்ஸியை ஒரு வேளை தவறாக எழுதியிருக்கக் கூடும் என்று நினைத்தேன். கேட்டு விடலாம் என்று நினைப்பதற்குள், ஒருமுறை அவளின் காலக்கோட்டை பார்வையிட்ட பிறகு கேட்கலாம் என சென்றேன்.அத்தனையும் எனக்குப் பிடித்த படங்களாகவே இருந்தன. எனினும் அத்தனையும் புதியவை. போஸ்ட் மாடர்னிஸத்தின் புதிய பரிமாணங்கள். வேற்று மொழிக் கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்து இட்டிருந்தாள். ஆனாலும் அவளின் ஒரு புகைப்படம் கூட இல்லை. எங்கெங்கிருந்தோ பகிர்ந்தவை மட்டுமே. தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கும் போது ’டிங்’ என்ற ஒலி கேட்டது அவள்தான், மீண்டும் அழைக்கிறாள். ஓடிச்சென்று அஞ்சற் பெட்டியை திறந்தேன்.
”ஏன் இத்தனை காலதாமதம் ? இரவு பதினொன்றரைக்கெல்லாம் நான் உறங்கி விடுவேன் என்று உனக்குத்தெரியாதா ?” என்று உரிமையோடு கேட்டாள். இல்லை காலக்கோட்டில் உலவிக்கொண்டிருந்ததில் கவனம் பிசகிவிட்டது எனச் சமாளித்தேன். ஹ்ம்.. பேசு என்றாள். என்ன பேசுவது ? எப்படி தொடங்குவது .இதே தயக்கம் தான் நூற்றாண்டு காலமாய் அத்தனை பையன்களுக்கும் இருப்பது தானே?..சரி இன்று கேட்டுவிடலாம் என்றெண்ணி ,விசைப்பலகையில் தட்டச்சிடும் போது அவளிடமிருந்து எதிர்பாராக்கேள்வி வந்தது. ‘உனக்கு காலப்பயணங்களில் நம்பிக்கை உண்டா?’ என. ஹ்ம் இருக்கிறது என்றேன். பிறகு நீண்ட நேர மெளனம் இருபுறமும்.
’பொதுச்சார்பியல்
கோட்பாடு சரியாக இருந்து, ஆற்றல் அடர்த்தி நேர்மறையானதாக இருந்தால், காலப்பயணம்
சாத்தியமில்லை’ அல்லவா? என்று வினவினாள். அது ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கூற்று. இருப்பினும்
அதற்காக எல்லாம் அப்படியே தான் இருக்க வேணும் என்று கட்டாயமில்லை ,ஓளியின்
வேகத்தில் பயணிக்க இயலாவிட்டாலும் கிட்டத்தட்ட அதன் வேகத்தை எட்டிப்பிடித்து, எங்கேனும்
புழுத்துளை கிட்டினால் சாத்தியம் தான்.. என்று என்னளவிலேயான காலப்பயண அறிவைக்
கொண்டு விளக்க முயன்றேன். கொஞ்சம் நம்பிக்கை வந்தவளாக மீண்டும் ஏதும் பேசவில்லை.
நேரம் கடந்து கொண்டிருக்கிறது. வழக்கமான கேள்விகளை அவள் விரும்ப மாட்டாள்
போலிருக்கிறது. அதோடு ஒரு முறை போலும் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டதேயில்லை அவள்.
இப்படி ஒரு விசித்திரப்பிறவியா என்று யோசித்தேன். ’உனது பூச்செடிகளுக்கு நீர்
ஊற்றினாயா’ என்று ஒரு முறையேனும் கேட்பாய் என்றெண்ணி ஏமாந்திருக்கிறேன் என்று
சொல்லிவிட வேணும் என நினைத்தேன். ஒரே ஒரு முறை என் வீட்டு உப்பரிகையின்
பூந்தொட்டிப்படத்திற்கு விருப்பக்குறி (மட்டுமே) இட்டிருந்தாள். அதனால் தான்.
சில நொடிகளில் பச்சை நிறம் சாயம் கலைந்து சாம்பல் நிறமாகிவிட்டது அவளின் பெயரில். ஹ்ம்.. இன்றும் கேட்கவில்லை எனச்சலித்துக் கொண்டே நேரத்தைப்பார்த்தேன் , சரியாக பதினொன்றரை. சுழற்றிய கண்களை இன்னமும் வலிக்க விடாது உறங்கி விட்டேன்.
இப்படியே தொடர்கிறது ஒவ்வொரு நாளும் ஒரு முடிவும் இல்லை. எனக்கும் அம்மாதிரியான வழக்கமான காதலர்கள் பரிமாறிக்கொள்ளூம் இதயங்களையோ இல்லை சில நொடிகள் மட்டுமே ஆடிக்களைக்கும் ஜிஃப்களையோ பகிர நான் விரும்புவதில்லை. அவசியத் தேவையான விஷயங்களைப் பற்றி மட்டுமே விவாதிக்க விரும்புபவன் நான் என்பதை அவளும் அறிந்திருக்கக்கூடும். எங்கிருக்கிறாய் என்ன செய்கிறாய் உண்பதற்கும் உடுத்துவதற்கும் என்ன வழிவகைகள், இருப்பிடம் குறித்த எந்தத்தகவலும் உன் தன்விளக்கத்தில் இல்லையே,பிடித்த உணவுகள், நடக்கப்பிடித்த கடற்கரைகள், பறக்கப்பிடித்த வானங்கள் எவை என எத்தனையோ கேள்விகள், இருப்பினும் ஒன்றும் தோன்றுவதில்லை அவள் பெயரில் பச்சை ஒளிரும்போது.
”ஒரு தவறு நடந்திருக்கிறது” என்று சொன்னாள் அவள் தான் அடுத்த நாள். என்னவெனக்கேட்க முயன்றேன். ”பொருளும், எதிர்ப்பொருளும் மிகச் சரியாக, சமமான கணக்கில் உற்பத்தியாகி ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருந்தபோது, எங்கோ சமநிலை ஒரு நூல் அளவு தவறி, எதிர்ப் பொருளை விட, எதிரணுக்களைவிட ஒரு நூலளவு அணுக்களும், பொருள்களும் அதிகமாகிவிட்டன. அந்த நூலளவு பொருள்கள்தான் பல லட்சம் கோடி விண்மீன்களாக, பேரண்டத்தில் உள்ள அத்தனையுமாக உள்ளன, ஆனால், அந்த தவறு எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பதற்குதான் விடை இல்லை.” உனக்குத் தெரியுமா அதைப்பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறாயா என்று வினவினாள். ஹ்ம்.. இப்படி ஒரு கோட்பாடு உலவத்தான் செய்கிறது அனைவரும் விடை தேட முயல்கின்றனர். என்று பதில் தெரியா மாணவன் போல நின்றேன்.
சரி என்றவள்..மேலும் வெகு நேர மெளனத்திற்குப்பின் “எங்கிருக்கிறாய் என்ன செய்கிறாய் உண்பதற்கும் உடுத்துவதற்கும் என்ன வழிவகைகள், இருப்பிடம் குறித்த எந்தத்தகவலும் உன் தன்விளக்கத்தில் இல்லையே, பிடித்த உணவுகள், நடக்கப்பிடித்த கடற்கரைகள், பறக்கப்பிடித்த வானங்கள்” என்று நான் கேட்க நினைத்த அதே சொற்றொடர்களை வரிசையாகக் கேட்டாள். திக்கு முக்காடிப்போனேன். இவளுக்கு எப்படித்தெரிந்தது.... என்ன பதில் சொல்ல மாட்டாயா என்று மீண்டும் வினவினாள். அடிப்படையாக எல்லா விஷயங்களும் ஒத்துப்போகிறதே என்ற பூரிப்பில் நா எழவில்லை. மீண்டும் நேரம் பதினொன்றரை ஆகிவிட்டது தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததில். உறக்கம் சுழற்றியது. அன்று கனவெல்லாம் பறந்து கொண்டிருந்தேன் எனக்குப்பிடித்த வானங்களில். மேகங்களூடாக பயணித்து வந்து ”நான் யாரும் வேற்றாள் இல்லை அது நீயே தான்” என்றாள் நார்ஸி.
No comments:
Post a Comment