Sunday, March 1, 2020

#சீரியல்பாட்டூ

எந்த சீரியல்களையும் நான் பார்ப்பதில்லை. அதற்கு நேரமும் வாய்ப்பதில்லை என்பது தான் நிஜம். இருப்பினும் இப்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடைப் பொருட்களுக்கான விளம்பரங்களை விட சன் டீவியின் சீரியல்களுக்கான விளம்பரங்கள் தான் பெருகிக் கிடக்கின்றன. பார்த்தே ஆக வேண்டும் இல்லை யெனில் மறுபிறப்பில் கழுதையாகப் பிறப்பாய் என்று பயமுறுத்தாத குறை தான். இருப்பினும் அந்தந்த சீரியல்களின் முகப்புப் பாடல்கள், சொல்லப்போனால் ஜிங்கிள்ஸ்களின் (விளம்பரங்களுக்கான பின்னணிப்பாடல்கள்) தரத்தில் மிகநேர்த்தியாகவே வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்றே சொல்வேன். நிறைய சீரியல்களின் பாடல்கள் மனதைக் கவரும் விதமிருக்கின்றன என்பதே உண்மை.

அதிலும் ஜானர்கள் (பாணிகள்) வைத்துக்கொண்டு இசைப்பது என மெனக்கெடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. மின்னலே’ சீரியலுக்கான பாடல் கொஞ்சம் வெஸ்ட்டர்ன். நாயகி சீரியலுக்கான பாடல் ‘வா வா சந்தோசமா’அப்டியே ரஹ்மான் ஸ்டைல். ராப்’ பாடகரின் குரலில் பாடியது போல அத்தனை புதுமையானது. மகராசி முகப்பு பாடல் ராசைய்யா ஸ்டைல். அப்டியே மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு போட்டது போல அருமை. !அக்னி நட்சத்திரம் சீரியலின் பாடலை அப்படியே முழு மூன்று நிமிடத்துக்கு இசைத்தால் அருமையான மெலடிதான். யாரிசைத்ததப்பா ?... ராசாத்தி சீரியலுக்கான முகப்புப்பாடல் யுவன் இசைத்திருந்த ‘கோவா’ வில் ஒரு பாட்டு போலவே ரஸ்டிக் சென்ஸோட,சொம்மா அதையே காப்பி பேஸ்ட் அட்சா மேரி கலக்கல். இறங்கி வேல பார்க்கிறானுங்க மச்சா. கண்மணி சீரியலும் அப்படியே ராசைய்யா ஸ்டைல். புதுசா எதும் யோசிக்காம வில்லேஜ் ஸ்டோரி தானே அதான் அப்டியே அபேஸ்.! ரோஜா சீரியலுக்கு பச்சமலப்பூவு தான் தாளம். ஹ்ம்.. கேக்கலாம். சித்தி இன்னமும் அதே பழைய பாட்டையே போட்டுக்கிட்டு இருக்கார். அதனால அது வேணாம். ’கல்யாண வீடு’ம் வழக்கமான தமிழ்ப்பாட்டு.

எவ்வளவுதான் பாட்டுகள் வந்தாலும் அது எஸ்பிபி பாட்னா மேரி இருக்குமா.. கொண்டாங்கடா பாலுவ.. அதான் அழகு, எவ்வளவு நாளாச்சு இந்த பாலசுப்பிரமணியன் அண்ணாத்த பாடி. அதான் இருக்கதுலயே டாப்பு.. அழகம்ம்மா. எத்தனயோ பேர் பாடி வெச்சிட்டு போனாலும் அது பாலு பாடினா மேரி இருக்குமோ?! அண்ணாமலையாருக்கே பாலுண்ணா பாட்டுதான் பிடிக்குது,..ஹ்ம்.. #சீரியல்பாட்டூ.

Tuesday, February 11, 2020

மந்தியும் காடுகளும்


விவேக்கின் உறுதிவிழாவுக்கு போகும்போது பின்பக்க கதவை மூடினேனான்னு சரியாக் கவனிக்கலை. மணி மூன்றரை இருக்கும் திரும்பி வந்து பாத்தா தர்பூசணிய தின்றுவிட்டு யாரோ உப்பரிகைல போட்டு வெச்சிருந்தாங்க.. நேத்து சாப்பிட்ட வெள்ளரிக்காயின் தோல்களை குப்பை தொட்டியில் போட்டு வைத்திருந்தேன். அது முழுக்க கீழே சிதறிக்கிடந்தது. யாராவது பிள்ளைங்க மேல் வீட்டுல இருந்து போட்ருப்பாங்க , கம்பிகள் வழியா உப்பரிகைல விழுந்துருக்கும்னு நினைச்சு மேல பாத்தா...ஆஹா.. அனுமார் கூட்டம். மந்திகள் ஒரு குடும்பமா வசதியா கம்பிகள்ல உக்காந்து ஒண்ணொண்ணா சாப்ட்டுட்டு கீழ போட்டுக்கிட்டு இருக்காங்க..


காடு காணாமலாகிறது. பக்கத்துல இருக்கிற நந்தினி பால் கழகத்தின் மரங்களைக்காடு என எண்ணி இங்க கிளம்பி வந்துட்டாங்க போலருக்கு, பாவம்.


வீட்டில் கொடுக்க பழமோ காய்களோ எதுவும் இல்லை. சரின்னு கொஞ்சம் பேரீச்சம்பழங்களை தட்டில் வைத்து ஏந்தினேன். சண்டை போடாமல் ஒண்ணொண்ணா எடுத்துக்கிட்டாங்க. அட அதில் குட்டிகளும் அடக்கம். கொஞ்ச நேரம் வெய்யிலில் காய்ந்துவிட்டு பிறகு எல்லோரும் சொல்லி வைத்தாற் போல கிளம்பி சென்றுவிட்டனர். #மந்தியும்காடுகளும்

Monday, February 3, 2020

#சாந்திபர்த்டே

பரமக்குடியில் தொடக்கப்பள்ளி எங்களுக்கு ஓம் சண்முகா தியேட்டர் அருகிலிருக்கும் ஆர்.சி.யாதவா பள்ளியாகவே இருந்தது.சர்ச் பள்ளிக்கூடம் என்றழைக்கப்பட்டது. (இன்னும் இருக்கிறது )நானும் என் அக்கா சாந்தியும் (என்னை விட மூன்றே வயது மூத்தவள்) ஒன்றாகத் தான் போவோம் வருவோம். என்னைக் கூட்டிக்கொண்டு போய்விட்டு திரும்ப வீடு வந்து சேர்வதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகிவிடும். சில நேரங்களில் அண்ணன் என்னை சைக்கிள் கேரியரில் கட்டி வைத்து கொண்டு போய் விட்டுவிட்டு வரும். (இல்லையென்றால் சைக்கிளிலிருந்து குதித்து வீடு வந்து விடுவேன்) படிப்பென்றால் அவ்வளவு கசப்பு.

அப்போது நான் மூன்றாவது படித்துக்கொண்டு இருந்தேன். வழக்கமாக அரசுப் புத்தகங்களைத் தான் வாங்க வேணும் என்பார்கள் எல்லாப் பாடத்திற்கும், ஒரு முறை தவறுதலாக வேறு தனியார் வெளியிட்ட புத்தகத்தை வாங்கி வந்துவிட்டார் அப்பா. பாடங்கள் நடத்தத் துவங்கி நாட்களாகி விட்டன. ஆசிரியர் மழைமேகம் (அவர் பெயர் ) என்னை எழுந்து வாசிக்கச்சொல்லும் போதெல்லாம் விழிப்பேன். ஒரு நாள் பிடித்து விட்டார். உடனே என் அக்காவை அழைத்து வந்தேன். எனக்காக சண்டை போட்டாள் அவள். உந்தம்பி எதையோ வாங்கீட்டான்ங் கறதுக்காக அந்தப்பாடத்தை யெல்லாம் நடத்த முடியுமா? என பேசினார். எனக்காக ரொம்பவும் வாதாடுவாள் சாந்தி.!

ஐந்தாவது படிக்கும்போது திங்கட்கிழமை ப்ரேயரில் எதேனும் தலைப்பில் ஒருவர் பேசவேணும். அதற்காக எனது ஆங்கில ஆசிரியர் ஜேம்ஸ் (எல்லாப் பாடத்துக்கும் ஒரே வாத்தியார் தான்..ஹிஹி ) என்னைத் தயார்ப்படுத்தி விட்டார். சும்மா ரெண்டு பக்கத்துக்கு ( என்ன கண்டெண்ட் என்பது மறந்து விட்டது). அதை உருட்டு போடமுடியாமல் தவித்த போது சாந்தி தான் , டேய் பத்தி பத்தியா வாசிச்சி மனப்பாடம் பண்ணுடா என்றாள். அப்படியே செய்தவுடன் தான் பயம் போனது. திங்கட்கிழமை போய் ப்ரேயரில் நின்றாகி விட்டது. ப்ரேயருக்காக முன் உள்ள திடலில் தண்ணீர் தெளித்து நீளமாக நடந்து வருவதற்காக கோடு போல கோலம் போடுவர் பெரிய க்ளாஸ் பிள்ளைகள், அன்று சாந்தி தான் அந்த கோலத்தை போட்டாள். நான் போய் நிற்கிறேன் அங்க. என்னடா பயமில்லாம பேசுவியா என்றாள். எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. ஹ்ம்..அதெல்லாம் பேசிரூவேன் என்றேன். பேச ஆரம்பித்து நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. போட்ட உருட்டில் பாதிக்கும் மேல் மறந்தே போய் விட்டது. அதுவும் மைக்கில் பேசவேணும். அந்தப்பேப்பரை எனக்குத்தெரியாமல் சாந்தி கையில் வைத்துக்கொண்டு தூண் மறைவில் நின்று வரிவரியாக சொல்லிக் கொண்டேயிருக்க எனக்கு வீராவேசம் வந்து அத்தனை வரிகளையும் ஒப்பித்து தள்ளிவிட்டேன். பின்னர் ஆசிரியர் பாராட்டினார். ‘நல்லாப் பேசிட்டடா என்று’ .க்கும். அவ எடுத்துக் குடுக்கலேன்னா எல்லாம் கிழிஞ்சுருக்கும்.

சனிக்கிழமையானால் பள்ளிக்கூடம் மூன்று மணிக்கே முடிந்து விடும். வீட்டுக்கு வரும் வழி எப்போதும் ஒன்றாகத்தானிருக்கும். ஆனாலும் சனி மட்டும் பாதையை மாற்றி ஐந்து முக்குரோடு வரை சென்று பின்னர் அங்கிருந்து இப்போது இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் வழியாக வருவது வழக்கம். அது இன்னும் 10 நிமிடங்கள் கூட ஆகும். ரெண்டு பேரும் பைகளை ஆட்டிக்கொண்டே வருவோம்.அதுல ஒரு ஜாலி!

பரமக்குடி நெல்லை மெஸ் எதிரே ஒரு குச்சி ஐஸ் ஃபேக்டரி ஒன்று இருந்தது. அதில் பத்துக்காசுக்கு ரெண்டு குச்சி ஐஸ் கொடுப்பார்கள். அதோடு ஒரு உப்பு ஐஸும் ஃப்ரீ. உப்பு ஐஸ் என்றால் கலரிடாத, இனிப்பிடாத ஐஸ். அதை ரோட்டில் கீழே போட்டு காலால் எத்தி எத்தி நடந்து வருவோம். அவ்வப்போது கிடைக்கும் அந்த ஜில்லிப்பு. அம்சமாயிருக்கும். அந்த பரமக்குடி சூட்டுக்கு அத்தனை இதமாக இருக்கும்.

இரவில் படுக்க முன்னர் நான்கு புறமும் சிலுவை போட்டு விட்டுத்தான் தூங்குவாள் சாந்தி. வேறு இடத்தில் படுத்திருந்தாலும் , அம்மா தூக்கி பின்னர் வழக்கமான இடத்தில் படுக்க வைக்கும் போது மீண்டும் படுக்கையின் நாலாபுறமும் சிலுவை போட்டுவிட்டுத்தான் தூங்குவாள். கிறீஸ்துவே ரட்சீப்பீராக. (ஒரு கொசுறு செய்தி. இவாளாடே அத்திம்பேர் தான் நல்ல ஸ்ரீதேவி படமெல்லாம் போடுவார்.அதை இங்கே ஒரு முறை பகிர்ந்திருந்தேன்.)

எல்லாப்பசங்களுக்கும் மொதல்ல அக்கா இல்ல தங்கச்சிங்கதான் மொத கேர்ள்ஃப்ரெண்டு அப்புறம் தான் மத்தவங்கள்லாம். இன்னிக்கு அக்கா சாந்திக்கு பிறந்தநாள் அதான்...ஹிஹி ) #சாந்திபர்த்டே

Saturday, January 18, 2020

”தாய் மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன்”



”தாய் மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன்”, இது இங்கிருந்து இன்ஸ்பையர்டு. Joaquin Rodrigo வின் Concierto de Aranjuez (Adagio). கிட்டாருக்கான பல க்ளாஸிக்கல்களை தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன்.கிட்டத்தட்ட நாற்பது இசைக்கூறுகள் அங்கனம் என்னிடம் இருப்புண்டு. அதிலொன்று இந்த அடாஜியோ (Adagio). இந்த தாய் மடியில் பாடலில் முதலில் வந்து விழுந்த அந்த கிட்டார் துணுக்கு உடனடியாக எனக்கு ‘அடாஜியோ’ வை ஞாபகப்படுத்திவிட்டது. இதை கம்ப்போஸ் செய்தவர் ஓக்வின் ரோட்ரிகோ (JOAQUIN RODRIGO) ஸ்பானிய தேசத்தை சேர்ந்தவர். அடாஜியோ என்பது "the music is played adagio with very slight dynamic change" என்று கூகுள் கூறுகிறது. இசையில் இதன் பொருள் இத்தாலியனில் ‘மெதுவாக’ Slowly. இதே கிட்டார் இசைத் துணுக்கிற்கென பிகாஸோ ஒரு ஓவியமே வரைந்திருக்கிறார். ஸ்பானிஷ் மக்கள் கலவரம்’ ஏற்பட்ட போது எழுந்த உணர்ச்சிகளை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த அடாஜியோ’ கம்போஸிஷன், பிகாஸோவின் ஓவியம்.

இந்த ’அடாஜியோ’ கிட்டாரின் அலைதலுடன் 00:09 செகண்டில் ஆரம்பிக்கக்கூடிய அந்த இங்கிலீஷ் ஹார்ன்’ (ட்ரம்பட்/ஷெனாய் போல ஒலிக்கும்) கேட்கும் போது கைலாஷ் கேரின் ஆலாபனை முழுக்கவே அதுதான் எனத்தோணும். பிறகும் பாடலின் நீள அகலத்தில் இந்த ‘அடாஜியோ’வின் பங்கு அளப்பரியது. இருப்பினும் அற்புதமான ரெண்டரிங். போகும் வழிக்கு உன் நினைவே துணை.துயரமும் இழப்பும் அழகும் எப்படி பொருந்திப் போகிறது ?

கைலாஷ் கேர் நல்ல உச்சஸ்த்தாயியில் பாடக் கூடியவர். அவரை அவரின் இயல்பின் சுரத்திலிருந்து மாற்றி அப்படியே கீழறிக்கிக் கொண்டு வந்து அடி மட்டக்குரல் கொண்டு பாட வைத்திருக்கிறார். போனால் போகட்டும் என தொடக்க ஆலாபனை மட்டும் கொஞ்சம் சூஃபியிஸம். கொஞ்சம் நுஸ்ரெத் ஃபதே அலிகானின் ஸ்டைல். அற்புதமான பாடல்.



Friday, January 17, 2020

Pianist and Baritone



ஆப்ரா சங்கீதம் அதை வாய்ப்பாட்டாக இதுவரை நேரில் கேட்டு அனுபவித்ததில்லை. யூட்யூபில் அவ்வப்போது பரோக், ஆரட்டோரியா, சிம்ஃபொனி,ஆப்ரா ஆகியனவற்றைத்தேடும் போது  காணக் கிடைத்தாலும் , ஏனோ அதை உட்கார்ந்து கேட்க மனம் ஒப்புவதில்லை. அதிரடியான குரலில் ஏறத்தாழ நமது ‘மதுரை சோமு’ அவர்களின் கணீர்க்குரலில் காதல், கலகம், ரத்தம், சோகம், ஏமாற்றம், விரகம் என எவ்வித ரசத்திற்கும் ஒரே போன்ற ஹைட்ரஜன் பலூன் போல எப்போதும் உச்சாணியைத் தொடும் குரல் என்றால் சலிப்புத்தான் வருமே தவிர ஏனோ ஒட்டுவதேயில்லை எனக்கு.


நேற்று இரவில் கொஞ்சம் நேரம் கிடைத்ததால் பெங்களூர் இண்டர்நெஷ்னல் செண்டரில் வழக்கம் போல இசை நிகழ்ச்சி பியானோ மற்றும் பாரிடோன்,Baritone என்றால் விக்கிப்பீடியா இவ்வாறு கூறுகிறது இது ஒரு வகையான ஆண் குரலில் கீழ்ஸ்த்தாயிக்கும் (Bass) ,மேலான உச்சஸ்த்தாயிக்கும் இடையிலான குரல் கொண்டு பாடுவதை Baritone எனலாம்.  எல்லாப்பாடலும் அப்படித்தானே பாடப்படும் ? அதிலும் ஏகப்பட்ட வரைட்டிகள் இருக்கிறதாம். Bass Baritone தான் இவர் பாடியது என நினைக்கிறேன். லூசியானோ பவரொட்டி அவர்களின் குரல் இந்த கேட்டகரியில் வருகிறது. இதே பாரிடொன் ’Heavy Sounding’ என்றும் வகைப்படுத்தப் படுகிறது. பொதுவாக இந்த ஆப்ரா வகை வாய்ப்பாட்டுகள் இத்தாலியர்களுக்கு மட்டுமே கைவரக்கூடிய குரலாக கலையாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். இல்லை நான் இது வரை கேட்ட இந்த வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் அனைவருமே இத்தாலியர் களாகக்கூட இருக்கலாம்.


இங்கு பாடியவர் நிக்கில் கோயல் என்ற இந்தியக்கலைஞர் , போலண்ட்க்கு போய் அங்கு இக்கலையைக் கற்றுக்கொண்டு பாட ஆரம்பித்திருக்கிறார். ரஷ்யன், ஜெர்மன், போலிஷ், ஃப்ரென்ச், இட்டாலியன், பிறகு ஆங்கிலத்திலும் என கூப்பாடு போட்டு வெளுத்துக்கட்டுகிறார். எனக்கென்னவோ அவர் அனைத்துப் பாடல்களையுமே ஒரே மொழியில் பாடியதைப் போலத்தான் தோன்றியது. என்னதான் பாடுகிறார் எப்படித்தான் இவரின் ஆலாபனைகள் இருக்கின்றன என அறிந்துகொள்ளவே நிகழ்ச்சி முடியும்வரை அமர்ந்திருந்தேன். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஒரு ‘மொளலின் ரூஜ்’ நிகழ்வுக்கு வந்தது போல அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்தது போல இருந்தது எனக்கு.  நம்ம ரஹ்மானும் இந்த சேட்டையை கொஞ்சம் ‘ஐ’ படத்தில் காட்டியிருந்தார். (ஐலா ஐலா)



நிக்கில் கோயல் பாடும்போது மைக்கை கீழே வைத்துவிட்டு, அந்தப் பாடலைப்பற்றி அரங்கத்திற்கு அறியத்தரும்போது கையில் பிடித்துக் கொள்கிறார். அந்தக்குரல் ஒவ்வொரு சுவரிலும் பட்டுத்தெறிக்கிறது. சுமார் ஐநூறு பேர் உட்காரும் வசதியுள்ள டால்பி ஸ்ட்டீரியோ வசதியுடன் கூடிய திரைப்படங்களும் காண்பிக்கும் வகையிலான அரங்கம் அது. மைக் இல்லாது அவர் பாடும் பாடல் எந்த மூலையிலிருந்து கேட்டாலும் அதே அட்சரசுதியுடன் பிசிறின்றி ஒலிக்கிறது. இத்தனைக்கும் அரங்கு நிரம்பி வழிந்தது. இதுவரை இப்படி ஒரு கூட்டம் நான் கண்டதில்லை.  அரங்கு நிறைந்து படிக்கட்டுகளிலும் மக்கள் அமர்ந்திருந்து பார்த்தனர். எப்போதும் நிகழ்ச்சிகள் ஆறு ஆறரைக்கு ஆரம்பித்துவிடும் , நேற்று நிகழ்ச்சிகான நேரம் எட்டரையிலிருந்து ஒன்பதரை வரை. அதனால் தான் கூட்டம் செம்மியது.



மொத்தம் ஆறுபாடல்கள் , ஒவ்வொன்றும் ஒரு ஐரொப்பிய மொழியில் பாடினார். ஜாஸ், பிராட்வே, ஆப்ரா என்று வகைவகையாக. என்னவொரு எனர்ஜி. சளைக்கவேயில்லை. இடையில் மூன்று பாடல்கள் முடிந்ததும் இரண்டே இரண்டு நிமிடம் அரங்கத்தின் திரைமறைவுக்கு சென்றார்.  ஆங்கிலத்தில் விளக்கம் கூறிவிட்டு பின்னர் அந்தந்த மொழியில் பாடுகிறார். தமிழ்த்திரையில் இதுபோல பாட தகுதியானவர் ‘ஆன்டிரியா’ மட்டுமே.  ‘Whos the Hero’ (மன்மதன் அம்பு), இதுவரை இல்லாத கனவிது (கோவா) இந்தப்பாடல்களில் காணப்படும் உச்சஸ்த்தாயியை கொஞ்சம் கேட்டுவிட்டு வாருங்கள். இருந்தாலும் இதெல்லாம் லைட் வெர்ஷன் தான் தமிழ்கூறும் நல்லுலகுக்காக :)  ஏன்னா இதெல்லாம் ஆப்ரா சிங்கிங் கிடையாது. இதெல்லாம் ஆரம்பமாக வெச்சுக்கிட்டு தொடங்கலாம்.!  ஸ்ருதிஹாசனைப்பற்றி சொல்வதென்றால் கற்றுக்கொண்டு பாடுவது போல இருக்கும் அவரது வெஸ்ட்டர்ன் டைப் பாடல்கள். ஆனால் ஆன்ட்ரியா தான் ஆதென்ட்டிக்.



இத்தனை ஆண்குரலில் கணீரென அரங்கத்தையே கட்டிப்போட்டாலும் அவர் நடை நளினமாக ஒரு யுவதியின் நடையைப்போலிருந்தது என்னவெனத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை அரங்கை பியானோவை விட்டு விலகி நடக்கும்போது அங்கனமே தோன்றியது எனக்கு,



கூடவந்த  மிக்கால் க்ருப்பா’ பியனிஸ்ட், பல விருதுகளை வாங்கிக் குவித்தவராம் ஐரோப்பிய மேடைகளில். விரல்கள் நடனமாடுகின்றன. இசைக்குறிப்புகள் ஏதுமின்றி தாமே வாசிக்கிறார். பாடலுக்கு பின்னணியில் மட்டும் இசைக்குறிப்புகளுடன் வாசித்தார்.  ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் பேசுகிறார். அதிலும் பனி பொழிகிறது. ஷோப்பின் மற்றும் லிஸ்ட்’ இவர்களின் சின்ன ராப்ஸோடிகளை பியானோவில் குறிப்பின்றி அனுபவித்து வாசித்துக்காண்பித்தார்.



நிகழ்ச்சி தொடங்குமுன் சிறு புத்தகம் போல நிகழ்வில் பாடப்படும் பாடல்கள் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு, இசைத்துணுக்கின் கம்ப்போஸர் ஆண்டு ஆகியன அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.  ட்ஷைக்காவ்ஸ்க்கியின் பாடலும் இடம் பெற்றது. ராசைய்யா பெருமையாகப் பேசுவார் இவரைப் பற்றி. எல்லோரும் பீத்தோவன்,மொஸார்ட் பற்றிப்பேசும் போது.



நிகழ்வின் இடையில் யாரும் புகைப்படமோ, இல்லை வீடியோப்பதிவோ எடுக்கலாகாது என்று பணிக்கப்பட்டது. நிகழ்வு முடிந்து கலைஞர்களுக்கு பூச்செண்டெல்லாம் கொடுத்தாகிவிட்டது. ஆர்வலர்கள் ஒன்ஸ் மோர் ஒன்ஸ்மோர் எனக்கேட்டதில் மிக்கால் இன்னுமொரு பியானோ மெட்லியும், குறிப்பிடப் படாத ஒரு பாடலை நிக்கிலும் பாடினார். அதுமுடிந்து இன்னொரு நபர் எனக்காக இன்னொரு பாடல் எனக்கேட்டு தொல்லை படுத்த மொத்தம் மூன்று பாடல்கள் எக்ஸ்ட்ரா. எனினும் அதில் ஒன்று கூட துக்கடா இல்லை. எல்லாம் முழுப்பாடல்கள். கலைஞனிடம்  ஒன்ஸ்மோர் கேட்பது என்பது பெங்களூர் சில்க்போர்டு சந்திப்பில் ஒரு வாகனம் கூட இல்லாத சுத்தமாக வழித்தெடுக்கப்பட்ட சாலையை ஒத்ததாகும். :)





Thursday, January 16, 2020

காக்கைப்'பெண்டுலம்'

இதே போன்ற ஒரு பொங்கல் தினத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என நினைக்கிறேன். நண்பர் ஸ்ரீனி அழைத்தார். சமத்துவப் பொங்கல் இங்க நீலசந்திரா’வில மார்க்சிய தோழர் மாரி ,செளரிராஜன் எல்லாம் கொண்டாடுவாங்க அங்க போகலாம் என்றார். சரி என்று கிளம்பி விட்டேன். இடையில் ஸ்ரீனி அழைத்து இல்ல எனக்கு இன்னும் நேரம் ஆகும் என்றவர் வேலையை முடித்து விட்டு பின்னர் அழைக்கிறேன் என்றார். அதுவே மதியத்துக்கு மேலாகிவிட்டது. ஒருவழியாக தேடிச்சென்று பார்த்தால் அதெல்லாம் பத்து மணிக்கு முன்பேயே முடித்துவிட்டோமே என்றார். பொங்கல் வைத்து முடித்த அடுப்புகளில் இன்னமும் நெருப்பு தணியவில்லை. ஆங்காங்கே இலைகளும் மிஞ்சிய மஞ்சள் துண்டுகளும் சிதறிக்கிடந்தன. 

இப்ப என்ன பண்றது? சமத்துவப்பொங்கல் சாப்பிடலாம் என்ற ஆசையில் நேரம் அனைத்தையும் தின்றுவிட்டது. ஸ்ரீனிக்கு சரியான பசி, வா ராம் பக்கத்துல எதாவது கடை இருக்கிறதான்னு பார்க்கலாம் என்றார். பைக்கை எடுத்துக் கொண்டு சென்றோம். பொங்கல் தினம் எல்லா சாப்பாட்டுக் கடைகளும் மூடிக்கிடந்தன. ஹ்ம்.. எல்லாம் என் வேலையால வந்த வினையென நொந்து கொண்டவருக்கு ஒரு முஸ்லீம் ஓட்டல் மட்டுமே திறந்து பசியாற்றக் காத்துக் கொண்டிருந்தது.

ஓட்டலின் வெளியே க்ரில்லில் நான்கு நான்கு கோழிகள் தம் தலையை இழந்து வெற்றுடம்பாக தணலில் சுற்றிக்கொண்டிருந்தன. அப்படி நான்கு வரிசைகளில் மோட்டார் வைத்து சுழல விட்டதைப்பார்த்துக்கொண்டு நின்றேன். என்ன ராம் உள்ள போய் சாப்டலமா ? என்றவரிடன் ஏங்க , பொங்கலும் அதுவுமா இப்படியா என்றவனிடம் பாருங்க எனக்கு செமப்பசி எதாவது உள்ள இறங்கினாத்தான் நடக்கவே முடியும் போலருக்கு என்றார். சரி வேறு வழியில்லை என்று உள்ளே போய் சரிக்கட்டு கட்டிவிட்டு வெளியில் கிடந்த பெஞ்சில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள அமர்ந்தோம்.

அப்போது தான் பார்த்தேன். சாலையின் எதிர்புறத்தில் ஒரு அடர்த்தியான மரங்களடர்ந்த காம்ப்பெளண்டில் ஒரு மரத்தில் இருந்து ஒரு காக்கை தலைகீழாக தொங்கிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தது. யாரோ விட்ட பட்டம் அறுந்து அதன் நூலில் கால்விரல்கள், நகங்கள் சிக்கிக்கொண்டு விடுவிக்க இயலாமல் அலைகிறது. பார்த்தால் ஒரு பெரிய கடிகாரத்தின் பெண்டுலம் போல ஒரு ஐம்பது மீட்டர் ஆரத்தில் அலைந்தது. இருப்பினும் விடா முயற்சி எப்படியேனும் அந்த நூலை அறுத்துவிட்டு பறந்து விட மாட்டோமா என இறக்கைகளை படபடவென அடித்துக்கொண்டு . பட்டத்தின் கயிறு மேலுள்ள மரக்கிளையில் வலுவாக சிக்கிக் கொண்டதில் அங்கிருந்து தொங்கும் பெண்டுலமாக காக்கை மாட்டிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தது.

மேலே இரண்டு மூன்று காக்கைகள் அமர்ந்து கொண்டு என்ன செய்வது என வழி தெரியாமல் அலையும் நண்பனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு கரையாது கல்லென சமைந்து போயிருந்தன. ஸ்ரீனி அங்க பாருங்களேன் என்றவனை , அட ஆமா காக்கா ,போய் மாட்டிக்கிச்சு போலயே என்றவரை அழைத்துக் கொண்டு சாலையைக்கடந்து அந்த காம்ப்பெளண்டு சுவர் அருகே சென்றேன். மேலே ஏறி உள்ளே செல்லலாம் என்றால் மதில் சுவரில் முழுக்க கண்ணாடிச் சில்லுகளைக் கொண்டு வேலி போல் அமைத்திருந்தனர். கால் வைத்தால் குருதி கொட்டுவது உறுதி. மேலே ஏறவும் முடியாது. பின்னர் எங்கனம் காக்கையை காப்பாற்றுவது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது , வேண்ணா இந்த காம்ப்பெளண்டை சுற்றிப் பார்ப்போம் ஏதேனும் உள்ளே செல்ல வழியிருக்குமாவெனப் பார்க்கலாம் என ஸ்ரீனி அழைத்தார். நானும் சென்று பார்க்க நடந்தேன். 

கதவு இருந்தது ஆனால் பழங்காலப்பூட்டு ஒன்று வலுவாகப்போடப் பட்டிருந்தது. இதுக்கு சாவி தேட்றதுக்குள்ள காக்கா போய்ச்சேர்ந்துரும் ராம் என்றார். பின்னரும் நடந்து முன்னர் நின்று கொண்டிருந்த சாலைப் பக்கத்திலேயே வந்து நின்று கொண்டோம். நாங்கள் இருவரும் எதோ முயற்சி செய்கிறோம் என்றறிந்து , சாலையில் பைக்கை ஓட்டிச்சென்ற ஒரு இளைஞர் நின்று பார்த்து விட்டு அவரின் நண்பரை அழைத்தார். கொஞ்ச நேரம் கழிந்து அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இதுக்கு என்ன சார் பண்றது என கழிவிரக்கத்துடன் பைக்கை எடுத்து சென்றுவிட்டார். 

சாலையில் இரண்டு போலீஸ்காரர்கள் ரோந்து சென்றவர்கள் எங்களோடு நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு முயற்சியும் செய்யவில்லை. ஸ்ரீனி எதோ சொல்லிப்பார்த்தார், அவர்கள் அதற்கு எந்த வித இசைவும் தெரிவிக்கவில்லை. நாங்களிருவரும் பின்னர் போலீஸும் இருந்ததால் சாலையில் நடமாட்டத்தில் சுணக்கம் வந்து பலர் நிற்பதும் காக்கையைப் பார்ப்பதும் பின்னர் தமக்குள் எதோ பேசிக்கொண்டு கலைவதுமாக இருந்தனர். நாங்கள் சாப்பிட்ட ஓட்டல் முதலாளியும் எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டார். இது காலைலருந்து இப்டி அலையுது சார் பாவம் என்றார். இன்னமும் அவர் க்ரில்லில் பதினாறு கோழிகள் தணலில் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன. இங்கிருந்து பார்த்தாலே எனக்கு தெரிந்தது. 

போலீஸ்காரர்கள் அங்கிருந்து நழுவிவிடத் தலைப்பட்டனர். தெளிவாகவே தெரிந்தது. என்னாலியன்ற முயற்சியாக ப்ளூ க்ராஸின் நம்பர்களை கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு நம்பரும் சிக்கவில்லை. மேலும் அன்று விடுமுறை நாளென்பதால் ஒரு நம்பரிலும் யாரும் பதில் சொல்வாரும் இல்லை. ரிங் போய்க் கொண்டே தானிருந்தது. மாலையாகிவிட்டது. வெளிச்சம் குறையத்தொடங்கி விட்டது. காக்கை இன்னமும் தமது பெண்டுல ஆட்டத்தை விட்டதாகத் தெரிய வில்லை. இத்தனை வலுவாகவா இருக்கும் அந்தக்கயிறு. இங்கிருந்து பார்த்தால் எந்தக்கயிறும் தெரியவில்லை. இருப்பினும் காக்கை சுதந்திரமாக பறக்கத்தான் முடியவில்லை. 

அப்போது தான் அந்த பெஸ்காம் (பெங்களூர் மின்வாரியக்கழகம்) மாருதி வேன் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. வண்டியின் மேல் ஏணியும் பின்னர் வடக்கயிறும் இருப்பதை தூரத்திலேயே கவனித்துவிட்டேன், மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி. ஸ்ரீனி வண்டி வருது பாருங்க என்றேன். வந்து இறங்கியவர்கள் போலீஸ்காரங்கதான் சொன்னாங்க இங்க காக்கா மாட்டிக்கிட்டு இருக்கிறதா என்றவர்கள் எங்களின் பதிலை எதிர்பாராமல் ஏணியை மதில் மேல் சாய்த்து விட்டு, கொண்டு வந்து சாக்கை மெதுவாக இட்டு மதிற்சுவரில் நடந்து அருகிலிருந்த மரத்தின் மீது ஏறிவிட்டனர். 

மேலிருந்த காக்கைகள் சப்தமிட்டன. மெதுவே ஒவ்வொரு மரமாகத் தாவி ஒருவாறு அந்தக்காக்கை மாட்டிக் கொண்டிருந்த கிளையிற்சென்று அந்த மந்திரக்கயிற்றை அறுத்துவிட்டார். என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சரேலேனப் பறந்த காக்கை தடுமாறி உள்ளேயே விழுந்தது. காலை முதல் மாலை வரை பெண்டுலம் ஆடியதில் களைத்துப் போயிருக்கும், பின்னர் ஒரு விசிறலில் பறந்து மேலெழும்பியது , அருகிலிருந்த நட்புக் காக்கைகளும் ஒரு சேரப்பறந்தன.

அந்தச்சாலையையே அந்த மகிழ்வுத்தருணம் ஒட்டிக் கொண்டது போலும். எதோ தாமே விடுபட்டு விட்டதைப்போல கைதட்டி கொண்டாடினர். நானும் தான். அப்போது தான் அந்த கடைக்காரர் காலைலருந்து எல்லாரும் பார்க்கவும் செல்வதுமாக இருந்தனர்,ஆனால் யாருக்கும் இப்படி உதவணும்னு தோணலையே என்றார்., நானும் இதுபோல ஒரு மந்திரக்கயிறால் கட்டப்பட்டுத் தானிருக்கிறேன், என்னை விடுவிப்பது யார் என....ஸ்ரீனியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் .

Monday, January 13, 2020

மைக்ரோகதைகள்

எழுத்தாளர் ‘பட்டுக்கோட்டை பிரபாகர்’ அவரது ஒரு முகநூல் பதிவில் ’மைக்ரோ கதைகள்’ என்ற பெயரில் எழுதச் சொல்லி சில எடுத்துக் காட்டுகளும் கொடுத்திருந்தார். அதில் சிறந்த 25 கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தமது புத்தகம் ஒன்றைப் பரிசளிக்கிறார். எழுதியதோடு அதை மறந்து விட்டேன்..இன்று மெஸென்ஞரில் வந்து என்ன ராம் உங்க முகவரி கொடுக்கலியே என்றார். எதற்கு கேட்கிறார் என்று கொஞ்சம் சந்தேகம். பிறகு அவரே சொல்கிறார் , எனது புத்தகம் ஒன்றை அனுப்பி வைக்கபோகிறேன் என்று ...ஆஹா....அதோடு மட்டுமல்ல , அந்த 25 கதைகளும் ராணி இதழில் வெளிவருகிறதாம்..! #மைக்ரோகதைகள்
__________________________________________
Pattukkottai Prabakar Pkp
நேற்று, பிற்பகல் 8:23 ·

வீட்டுக்கொரு கற்பனைக்- காரன்/காரி இருப்பதறியாமல் எழுதச்சொல்லிவிட்டேன்.
பின்னூட்டமாகவும் உள் பெட்டியிலுமாக
மொத்தம் வந்த மைக்ரோ கதைகள் 613.

சிலர் கதைகளில் முயற்சி இருந்தது.
சிலர் கதைகளில் பயிற்சி இருந்தது.

பல வகையான கதைகள் சுவாரசியமாக இருந்தன. இதிலிருந்து பத்து கதைகளை மட்டும் தேர்வுசெய்ய சிரமமாக இருந்ததால் 25 மைக்ரோ கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறேன். சுவாரசியம் கூட்ட சில கதைகளை சற்றே திருத்தியமைத்திருக்கிறேன்.
மற்ற கதைகளையும் ரசித்தேன். அவைகள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அர்த்தமல்ல.. இந்த 25 கொஞ்சம் தூக்கலாக மனதில் இடம் பிடித்தவை. அவ்வளவுதான்.
ஆர்வத்துடன் கலந்துகொண்ட அனைவருக்குமே என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
வென்றவர்கள் உள் பெட்டியில் விலாசம் கொடுங்கள். என் அன்புப் பரிசாக நான் எழுதிய ஒரு புத்தகம் தேடி வரும்.
25 மைக்ரோ கதைகள்:
--------------------------------

1. அப்பாவின் மரணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவனிடம் சாக்லேட் கேட்டது குழந்தை.
- ஜெயா சிங்காரம்

2. ஐந்து வயது மகள் விளையாட செல்போன் கொடுத்துவிட்டு வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச் சென்றான்.
- பிரபு பாலசுப்பிரமணியன்

3. எதிர்வீட்டு ரமேஷைத் தெரியாதென்றான் முகநூலில் 5000 நண்பர்களை வைத்திருக்கும் சுரேஷ். - தனுஜா ஜெயராமன்
4. "உன்னைவிட ஒரு அழகியைப் பார்த்ததில்லை'' என்றான் ஆதாம் ஏவாளிடம்.
-சி.பி.செந்தில்குமார்

5. என் சமையலைக் குறைகூறிக்கொண்டே வளரும் உன் தொப்பை!
-கல்யாணி சேகர்

6. பட்டினியால் இறந்த விவசாயி வாயில் போட்டார்கள் விதை நெல்லை!
-கவிதா ஹரிஹரன்

7. ஒரு மெளனத்தின் அலறல்!
சைலண்ட் மோடில் செல்போன்!
-மன்னன் உசைன்

8. சம உரிமை கேட்ட மனைவியிடம் மாதச் செலவுக் கணக்கைக் காட்டி "சமமா பிரிச்சுக்கலாம்'' என்றான்.
-ஆர்.திலகவதி ரவி

9. பேய் வீடென்று குறிப்பிட்ட வீடுகளில் எப்போதும் வாழ்கிறது ஊராரின் பயம்.
-அ.வேளாங்கண்ணி

10."டேய்! நீ இன்னொரு பையனை கட்டியிருந்தாலும் மனசு ஆறும்'' திட்டினார் பெண் ரோபோவுடன் வீட்டுக்கு வந்த மகனை!
-Sri Vidya KM

11. அவன் அதிர்ஷ்டக்காரன்! மனைவி கிடைத்தாள் மார்பில் பச்சைக் குத்திய காதலியின் பெயரிலேயே!
-தயா.ஜி.வெள்ளைரோஜா

12. ''பிள்ளை பெத்துக்கத் துப்பில்ல'' வீட்டில் திட்டு வங்கியவள் பால் கொடுத்தாள் யாரோ பெற்ற பிள்ளைக்கு. "கட்'' என்றார் இயக்குனர்.
-விஜி.முருகநாதன்

13. யானையின் வழித் தடத்தில் அமைந்த இருப்புப் பாதையில் விரைவு ரயில் வருகிறது. யானை மெதுவாகக் கட..க்..கி..ற..!
-பழனீஸ்வரி தினகரன்

14. நாடுகளிக்கிடையில் பேச்சு வார்த்தை!
மேஜைகளுக்கடியில் துப்பாக்கிகள்!
-முரளி, மதுரை

15. "பேய்களில் நம்பிக்கையில்லை'' என்றான் சுடுகாட்டில். கல்லறைக்குள்ளிருந்து சிரிப்புச் சத்தம்!
-ரெஜி தரகன்

16. நடிக்க வந்த குழந்தைக்கு கேரவனில் நடிகை பால் கொடுத்தாள். குழந்தை சிரித்தது. மார்பில் வலி குறைந்தது.
-செல்லம் ஜெரினா

17. 'ஒரு ஊரில்' என்று ஆரம்பித்தார் தாத்தா.
'சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க' என்கிறான் பேரன்.
-இயக்குனர் ஹரி கணேஷ்

18. "விட்டுடு தம்பி!'' என்று கதறிய பெண்ணை விட்டுவிட்டு நகர்ந்தான் அனாதை கொள்ளையன்.
-குமரன் கருப்பையா

19. "Good morning. We are calling from tamil sangam!''
- அப்துல் ரஷீது

20. ஊருக்கே உணவு கொடுத்தான் கொள்ளைப் பசியுடன் ஸ்விக்கி டெலிவரி பையன்.
-ஜே.குமார் ராம்

21. வாசலில் பசியென்ற பிச்சைக்காரனை விரட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றார் அன்னதானம் செய்ய!
-லக்‌ஷ்மன் மோகனசந்திரன்

22.ஆம்புலன்சுக்கு போன் செய்யச்சொல்லி அழுதது குழந்தை- மாடியிலிருந்து தவறவிட்ட பொம்மைக்காக!
-எஸ்.எஸ்.பூங்கதிர்

23. மாமியாருக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்தாள் மருமகள் - திதிக்காக!
-sridevi மோகன்

24. இன்றுடன் உலகம் அழிகிறது!
முழு விபரம் நாளைய நாளேட்டில்!
-ராம் சின்னப்பயல்

25. ஸாஃப்ட்வேர் என்ஜினியர் வேலைக்கான சிபாரிசுக் கடிதத்தில் அரசியல்வாதி வைத்தார் கைநாட்டு!
-கருணாகரன் கருணாகரன்
__________________________________
________________