Monday, April 8, 2019

வாரணசி – அந்திமக்காலங்களின் நிலம்


நேற்று பா.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா ஓசூரில் நடைபெற்றது. ஒரு கலைப்பள்ளியின் மேலுள்ள மொட்டை மாடியில். ஸ்ரீனி நான் மற்றும் செந்தில் மற்றும் இன்னபிற உள்ளூர் நண்பர்கள் கலந்து கொண்டனர். பெரிய சாமி, மனோன்மணி புது எழுத்து, பின்னர் ரமேஷ் கல்யாண் , கவின் மலர், ஆதவன் தீட்சண்யா என பெருந்தலைகளின் முகங்கள் களைகட்டியது.

5 மணிக்கு தொடங்க வேண்டிய விழா வழமை போல 7 மணிக்கு துவங்கியது. ரமேஷ் கல்யாண் வெகு விமரிசையாக பேசினார். பா.வெயின் கதைகளிலிருந்து மேற்கோள் காட்டி. ஓசூரின் மாலைப்பொழுது வெய்யில் தாழ்ந்து காற்று வீசத்தொடங்கியிருந்தது. ஓவியத்தில் வரைந்த மாம்பழத்தின் நிறம் எந்த இடத்தில் பச்சையிலிருந்து மஞ்சளாக மாறுகிறது என்ற வரையறைக்கு உள்ளாக்கப்பட இயலாதது போல பா வெயின் கதைகளில் உள்ளர்த்தங்கள் புரிந்து கொள்ள இயலாதவை மயக்கம் தருபவை என்று கவித்துவமாக உரையாற்றினார்.( இவரது கவிதைகள் வார இதழ்களில் வெளியாகி இருக்கின்றன ) கட்டிடம் கட்டும் கை தேர்ந்த கலைஞனைப்போல ஒரு மாய எதார்த்தத்தை தம் கதைகளில் பொதிந்து வைத்திருப்பார் பாவெ. அத்தகைய கட்டிடங்களினூடே பறந்து செல்லும் பறவைகள். நீர்த்தாரைகள் என சொல்லிக்கொண்டே போனார். பேசிய பேச்சாளர்களிலேயே இவர் அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.



கவின் மலர் பேசியது சிறிது நேரம். என்னைப்போல் இவரும் பயணத்தில் மட்டுமே வாசிப்பவர் போல. எடுத்து வைத்த அத்தனை புத்தகங்களையும் பயணத்தில் வாசிக்க முயற்சி செய்வேன், பாவெ எழுதிய  முந்தைய கதையை இது போல கைப்பையில் எடுத்து வைத்து பயணம் புறப்பட்டால் கைப்பையோடு புத்தகமும் தொலைந்து போனது என்ற அங்கலாய்த்துக் கொண்டார். வாரணசியைப்  பற்றி  பேச முற்பட்டவர்க்கு அங்கு தற்போது போட்டியிடுபவர் தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. வாரணசி ஒரு அந்திமக்காலங்களின் நிலம் என்பதை இந்தக்கதை விளக்குகிறது, மேலும் இந்தக்கதையில் பல புதிய மொழி பெயர்ப்புகள் சொற்கள் வந்திருக்கிறது என்று குதூகலமாக குறிப்பிட்டார். இது நாள் வரை  Independent Journalist என்பதை சுதந்திரப் பத்திரிக்கையாளர், சுயாதீனப்பத்திரிக்கையாளர் என்றே எழுதப்பட்டு வந்தன, அதை மாற்றி பா.வெ ‘விருப்பு சார் பத்திரிக்கையாளர் என்ற பதத்தை பயன்படுத்தியிருப்பது சிறப்பு. தமது விருப்பத்தின் பேரில் கட்டுரைகள், கதை கவிதைகள் எழுதி அதைப்பிரசுரத்துக்கு எந்தப்பத்திரிகைக்கும் அனுப்பி வைப்பது போன்ற ஒரு பத்திரிக்கையாளனை ( ஹிஹி என்னைப் போன்ற,,,, ஹிஹி ) விருப்பு சார் பத்திரிக்கையாளர் என்று விளித்திருப்பது மிகவும் சரியான பதம் என்று சிலாகித்தார்.
  
மேலும் பேசுகையில் இத்தனை புதிய பதங்களை கொண்டு வந்திருப்பினும் குறிப்பிட்டு சொல்லத்தக்க ஒரு பழைய சொல் அதை இப்போது அனவரும் தவிர்த்து வரும் வேளையில் அதற்கிணையாக பல புதிய சொற்கள் பயன்படுத்த தொடங்கியிருப்பினும் அதே பழைய பதத்தை சொல்லியிருப்பது தவறு எனக்கூறி ஆதங்கப்பட்டார். அது வன்கலவிக்கு பழைய சொல்.  இருப்பினும் பின்னர் பா வெ. தமது  ஏற்புரையில் கதை நடக்கும் களம் எழுபது எண்பதுகளில் பழையகாலம் ஆகவே அதே சொல்லைப்பயன்படுத்த வேண்டியதாயிற்று என்று. நவீனம் தவிர்க்கப்பட வேண்டியது.




பாவெ.யின் நூற்கள் உட்புக இயலாதவை. கடினமான பாறை போன்றவை. அதற்கென செய்யப்பட்ட உளியின் சுத்தியும் கொண்டே உடைத்து உட்புக வேண்டிவரும். என்ற அவர் கூற்று கோணங்கி’யின் மொழி பற்றியது. இப்படித்தான் பலரது கவிதைகளும். மிகுந்த சிரமத்திற்கிடையில் அவற்றை பல முறை வாசித்து உட்பொருளைப் புரிந்து கொள்ள வேண்டிவரும் . சித்தர்கள் எழுதி வைத்தவை அனைவரும் புரிந்து கொள்ள இயலாதவை. அதற்கென முயற்சி தேவை. அவயொன்றும் வேற்றுக்கிரக வாசிகளின் மொழியில் எழுதப்பட்டவை அல்ல.

கவின் மலரின் பேச்சில் அவரது களைப்பு மேலோங்கி இருந்தது, ஒலிவாங்கி இருப்பினும் களைப்பு அவரின் குரலை உள்ளிழுத்துக் கொண்டே இருந்தது. சொற்களை வாக்கியத்தை தொடங்கும் வேகம் முடிக்கும்போது இல்லை. அவரது பேச்சு முழுவதும் அங்கனமே இருந்தது. இருப்பினும் கதையின் மையக்கருத்து ஒரு பெண்ணின் ஆடையற்ற நிலை, பின்னர் நிர்வாணம் இரண்டும் தவிர வேறேதும் பேசவில்லை என்ற ஆதங்கம். பொள்ளாச்சி நிகழ்வுகளைக் குறிப்பிட்டு கதையின் மையக்கருத்தும் அதையொட்டியே இருந்ததைப்பற்றி ஆதங்கம் அவரது பேச்சில் தெரிந்தது. 

முன்னதாக நிகழ்வு தொடங்கும் முன்னரே வந்து ஸ்ரீனியுடன் மட்டும் உரையாடிவிட்டு எழுதி வைத்திருந்த குறிப்புகளை சரிபார்க்கப் போய்விட்டார். :) பார்த்தால் எதோ பரீட்சைக்கு படிக்க உட்கார்ந்த சிறுமி போல். :)

 
 
தோழர் ஆதவன் தீட்சண்யாவுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். தோழர் ஓசூர் தொகுதியில் உங்களுக்கு இடமில்லையா என. ஹ்ம். அதற்கெல்லாம் கட்சிக்கென முழுதாக உழைக்க வேண்டும். நேரமில்லை. இருப்பினும் மார்க்ஸிஸ்ட் கட்சி வேட்பாளர்  வேள்பாரி சு வெங்கடேசன் வெற்றி பெறுவது உறுதி. கட்சிப்பணிக்கென வலுவாக உழைப்பவர். நேற்று அவரின் கூட்டத்தில் பங்கெடுக்க மதுரை சென்று வந்தோம் என மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்தார். நிறைய எழுத்தாளர்கள் போட்டியிடும் களம் ஆகி விட்டது தமிழ்நாடு.



கடைசியாக ஆதவன் தீட்சண்யாவின் உரை. எல்லாவற்றையும் பேசி அலசி ஆராய்ந்து என தெள்ளத்தெளிவான உரை. இருந்து அமர்ந்து விவாதிக்கவென ஒரு அறை போலும் இல்லாத ஓசூர் கிளை. இப்பவும் அதே கதிதான். எதோ கோவிலின் பிரகாரத்தில் அமர்ந்து விவாதிப்போம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு.  வெங்கடேசன் தவறாது எல்லாக்கூட்டங்களிலும் கலந்து கொள்வார். விவாதங்களை ஏற்றுக்கொள்வார். குறிப்புகள் எடுத்துக்கொண்டு அவற்றை தம் கவிதை கதைகளில் மாற்றம் செய்ய பயன்படுத்திக்கொள்வார். என மலரும் நினைவுகள் தான் அவரின் பேச்சில். பாவெ’யின் குடும்பம் அவருக்கு அளித்திருக்கும் பூரண ஒத்துழைப்பு அவரை இந்த நிலைக்கு கொணர்ந்திருக்கிறது என்று மகிழ்ந்தார். 

இப்போது சமீபத்தில் மறைந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் அவர்களின் துணைவியார் தம் கணவருடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு குறைவாகவே வாழ்ந்தார். பின்னர் கணவனின் மறைவிற்குப்பின் கிட்டத்தட்ட எழுபதாண்டுகள் தனிமையில் ஒற்றை மகனுடனே தம் வாழ்வைக்கழித்தார். அவர்களின் மகன் வளர்ந்து பெரியவனான பின் , ஏனம்மா இன்னமும் இந்தக்குப்பைகளை வைத்துக்கொண்டிருக்கிறாய் எல்லாவற்றையும் தூக்கிப்போடு என்று கூறியதாக துணைவியார் சொல்லியிருந்தார். அத்தனையும் பட்டுக்கோட்டையார் எழுதிய கவிதை, கட்டுரை, நூற்கள், அவரது புகைப்படங்கள் இதெல்லாம் தான் அவர்தம் தமையனுக்கு குப்பைகள் ஆகிவிட்டன. பின்னர் மார்க்ஸிஸ்ட் தோழர் அவற்றை எடுத்துக்கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார் என்றவர், அது போன்ற குடும்பத்தைக் கொண்டிராத பா.வெ இன்னமும் தொடர்ந்து எழுதி இன்ன பிற பாராட்டுகளையும் பெற வேண்டும் என வாழ்த்துரைத்தார்.




பெரியசாமி பின்னில் அமர்ந்திருந்த என்னிடமும், அன்னருகில் அமர்ந்திருந்த புது எழுத்து ஆசிரியர் மனோன்மணியிடமும் நீங்களும் போய்ப்பேசுங்க என்றவரிடம் ஒரு வரி போலும் நான் வாசித்ததில்லை பிறகெப்படி பேசுவது என மறுத்தேன். பாராட்டு கூட்டம் வரை வந்தாயிற்று இன்னமும் புதினத்தை கையாலும் தொட்டுப் பார்க்கவில்லை. செந்தில் கதையை முழுமையாக வாசித்திருந்த போதும் போய்ப்பேசவில்லை.

ஏற்புரை ஏற்ற பாவெ. அத்தனை எழுத்துகளையும் நண்பர்களுக்கு, பரிசுகளை நண்பர்கள் குழுவுக்கு சமர்ப்பிப்பதாக உரையாற்றியவர், எனது படைப்புகளை காரசாரமாக விவாதித்து அதன் தவறுகளை சுட்டிக்காட்டி மீண்டும் ஊக்கப்படுத்துவதாகவே நண்பர்களின் பேச்சு மைஅந்திருக்கும் என்றவர் ஜீஸஸ் ஊருக்கு தீர்க்கதரிசியாக போதும் உள்ளூரில் தச்சன் மகன் தான். அதுபோல தமது அத்தனை குறைகள் நிறைகள் அறிந்த குடும்பத்துக்கு நன்றி தெரிவிக்க தயங்கவில்லை. எந்த மகிழ்ச்சியும் வீட்டில் கொண்டாடப் படவில்லையெனில் அதனால் பயனில்லை. 

வாரணசி வாரணசி , வாரணாசி இல்லை. எனக்கு இப்போது தான் தெரிகிறது. அந்திமக்காலங்களின் நிலம். பின்னரும் பேருந்தில் பெங்களூர் திரும்பி வரும்போது அத்தனை உள்ளீடுகளையும் அரசியலையும் பேசிக்கொண்டு தான் வந்தோம் நானும் செந்திலும்.

.

 


Monday, March 18, 2019

யக்ஷகானம்


சனிக்கிழமை மாலையில் ஸ்ரீனி அழைத்திருந்தார். பெங்களூர் டவுன் ஹாலில் இருக்கும் கலாஷேத்ராவில் ஒரு நாடகம் , வாங்க செந்திலும் வருகிறார் என. போய்ப்பார்த்தால் நாடகம் வேறிடத்தில். சரி வந்தாயிற்று உள்ளே வேறு ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஒரு வயதானவர் சாரங்கி வாசிப்பவர் என மேடையில் பேசிக் கொண்டிருந்தார்கள். வயது கேட்டால் 84 ஆம். .. என்னை தூக்கிக் கொண்டுதான் வரவேண்டும். நடக்க இயலாது என்றவர், மேடையில் அமர்த்தி வைத்துவிட்டால் எட்டு மணிநேரம் சாரங்கி வாசிப்பேன் என்கிறார். குரலில் அத்தனை நடுக்கம். இவராலென்ன வாசித்தவிட முடியும் என நாங்கள் மூவரும் அமர்ந்திருந்தோம். நிகழ்ச்சி ஆரம்பித்தது. 


இப்போது பிரபலமாக இருக்கும் பியானோ லிடியன் என்ற பொடியன் போல சாரங்கி மழை பொழிகிறது. கூட்டம் அசையவேயில்லை. அவர்தான் ராஜீவ் தாராநாத். வயது 84 , பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். இந்த வயதுக்கு என்னால் கிட்டாரை தூக்கக்கூட இயலுமா என்றெண்ணிக் கொண்டேன். அவர் கைகளுக்கு அத்தனை சக்தி. சளைக்காது ஒரு முழுப்பாடலை அரைமணிநேரத்துக்கும் கூடுதலாக இடை விடாது வாசிக்கிறார். இசை இசை மட்டுமே அவர் பேச்சு. பேச்சில் இருக்கும் நடுக்கம் கொஞ்சமும் கைகளில் இல்லை. தொடர்ந்தும் வாசித்துக் கொண்டே இருந்தார்.  சரி அவர் வாசிக்கட்டும் என நினைத்து கொஞ்சம் வயிற்றுக்கு ஈயலாம் என்றெண்ணி ஒரு மணி நேரம் கழித்து வந்தால் கூட்டம் அப்படியே நிற்கிறது. வாகனங்கள் பார்க் செய்யப்பட்டவை ஒன்றும் அதனிடத்தை விட்டு அகலவில்லை. 


 செளக்கிதார் (ஹிஹி) சொன்னார் உள்ளே இப்ப `யக்‌ஷகானம்` நடந்து கொண்டிருக்கிறது. அதான் கூட்டம். மணி கிட்டத்தட்ட இரவு ஒன்றை தாண்டிவிட்டது. இன்னமும் கூட்டம். அத்தனை பேரும் கண்கொட்டாமல் சீழ்க்கையடித்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எங்களுக்கோ அத்தனை ஆச்சரியம். பெங்களூரில் யக்‌ஷகானம் பார்க்க இத்தனை கூட்டம். அதுவும் இரவு ஒரு மணிக்கு மேல. கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லை. உட்கார இடமேயில்லை. நின்று கொண்டு பார்ப்பவர் பலர். உள்ளே ஒரு சீட் காலியாக இருக்கிறதே என அருகில் போய்ப்பார்தால் அதில் ஒரு மொபைல் வைக்கப்பட்டிருந்தது. யாரோ இடம் பிடித்து வைத்திருக்கிறார் போலும். நம்ம ஊர்ல பிரபல நடிகை வந்து கடை திறந்து வைத்தால் மட்டுமே கூட்டம் கூடும் அதுவும் இரவு இரண்டு மணிக்கு.


 சினிமாவுக்கு அத்தனை முக்கியத்துவம் இந்த உள்ளூர் கன்னடக்காரர்கள் கொடுப்பதில்லை. அது அவர்களின் திரைப்படங்களை பார்த்தாலே தெரியும். அவர்களின் ரசனை இன்னமும் கலைகளில் தான் தங்கியிருக்கிறது. வெகு நேரமாகி விட்டதே என வெளியில் கிளம்பினால் இன்னமும் பத்து பேர் அரங்கிற்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.


Thursday, March 14, 2019

வணக்கம் ராகுல்


நான் இன்றும் இளைஞன் தான் ராகுல்னே கூப்டுங்க.. பெண்கள் கல்லூரியில்லயா எல்லாப்பயலும் இதத்தான் சொல்லுவாங்ய... ஹிஹி அட முதன்முறையா ஒரு அரசியல்வாதி இவ்வளவு திறந்தமனதுடன். இதைப் போல ஒரு சந்திப்பை மிஸ்டர் மோடியை நிகழ்த்தச்சொல்லுங்க என சவால் விடுக்கிறார். ராக் ஸ்டார் போல ராம்ப்பில் நடந்து நடந்து சளைக்காமல் பதிலளிக்கிறார். இவர் இவ்வளவு பேசுவார்னு எனக்கு இப்பத்தான் தெரியுது. இம்ரான் கான் பழைய அரசாங்கங்கள் செய்தவற்றை விட்டுவிட்டு வாங்க பேசலாம் என அழைக்கிறார். நம்ம ராகுல் ராம்ப்பில் நடந்து உரையாடுகிறார். 

நல்ல மாற்றங்கள் கண்ணுக்குப் புலனாகிறது. இப்படியே தொடரலாம். வெறுப்பரசியல் விட்டு விருப்பரசியல் செய்ய கட்டி அணைத்தேன் என்கிறார். செம ட்ரெயினிங் போல இந்த அஞ்சு வருசத்துல. அப்பப்ப ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியை புகழ்கிறார். தைரியமான பேச்சு, முன்னும் பின்னும் நடந்து கொண்டு ...அட இந்தியா மிளிரும் போலருக்குடே.. பாகிஸ்தான் அப்டித்தான் இருப்பாங்க. வட நாட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்த மோடி அரசு. டீமானிட்டைசேஷன் எல்லாம் விட்டு விளாசுறார். முழுநேர அரசியல் வாதியாக மாறிநிற்கும் ராகுலைப்பார் ..ஆஹா.... #வணக்கம்ராகுல்

Tuesday, February 19, 2019

2ஜி கைப்பேசி



கவிதா’வின் பொசல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நேற்று ஒரு செமினார் அதற்காக 335ல் ஏறி ரிச்மாண்ட் ரோட் வரை சென்று கொண்டிருந்தேன் கையில் ‘பொசலோடு’. பேருந்தின் இருக்கை அருகில் ஒரு முதியவர் ,தலையெல்லாம் தும்பைப்பூ. கையில் ஒரு பழைய பட்டன்கள் மட்டுமே கொண்டிருக்கும் 2ஜி கைப்பேசி. பச்சை பட்டன், சிவப்பு பட்டன் மட்டுமே முழுக்க அழிந்து போன ஒரு கைப்பேசி. ஆங்காங்கே சில எண்களின் ஒரங்கள் அழிந்து அழிந்து நடுமத்தி வரை வந்திருந்தன. சிறு கையேடு அதில் மளிகை சாமான் பட்டியல் மட்டுமே எழுதத்தகுந்த கையடக்கமானது. ஒரு புறம் பெயர்களும் அதையொட்டி எண்களும் எழுதி வைத்திருக்கிறார், ஒவ்வொரு பக்கம்மாக புரட்டி புரட்டி எண்களை தெரிவு செய்து அழைக்கிறார். பொத்தான்களை அழுத்தி அழுத்தி. பெரும்பாலும் பெயர்கள் கன்னடத்தில் இனிஷியல் மட்டுமே ஆங்கிலத்தில்.

கண்ணாடியை உயர்த்தி விட்டுக்கொண்டு தலை தூக்கி பார்க்கிறார் சில சமயம். பிறகும் அந்தக்கையேட்டில் உள்ள எண்களைத் தெரிந்தெடுத்து அழைத்துப் பேசுகிறார். பேச்சுக்கொடுக்க எத்தனித்தால் சட்டை செய்ய மறுத்தார். எனது உடைந்த கன்னடத்தில் பேச முயன்ற போது கையில் தமிழ்ப்புத்தகத்தை ஒரு முறை பார்வையிட்டு விட்டு தமிழில் பதில் சொன்னார். ஏன் ஒரு அண்ட்ராய்டு வாங்கிக் கொள்ளலாமே என்றேன். இல்லப்பா அதில பெயர் தேடிக்கண்டு பிடிக்க ஆகுதில்லா. அதான் இப்படி என்றார். கத்துக்கலாமே, ஹ்ம் அதுக்கெல்லாம் எங்க நேரம்?.. யாரைக்கூப்டறீங்க ? எல்லாம் என் நண்பர்களைத்தான், கார்ப்பரேஷன் வரை போய் அவங்களைப் பாக்கணும் அதான் எல்லாரும் கெளம்பிட்டாங்களா என்னான்னு ஒவ்வொருத்தரா அழைச்சிப்பாக்றேன் என்றார்.

கவிதாவின் கதைகளில் இப்படியான பல வெள்ளந்தியான, சமகால நவீனங்களை புறந்தள்ளும் கதா பாத்திரங்கள் உலவுகின்றன. சில கதைகளை அவரின் வலைப்பூவில் வாசித்த ஞாபகம். பல சிறுகதைகள் கட்டுரையாகவே எனக்கு தோன்றியது. இன்னமும் முழுதும் வாசிக்கவில்லை. வாசித்ததில் நூலின் பெயர் கொண்ட சிறுகதை அருமை. இரு காதல் சமகாலத்தில் செய்ய முற்படும் பெண்டிரின் சிறுகதை ஒரு சுஜாதாவின் சிறுகதையை ஞாபகப்படுத்தியது. விரைவில் முழு விமர்சனம் எழுதுவேன். நூல் ஆணை கொடுக்கும்போதே சொன்னேன், காசு கொடுத்து வாங்கும் நூலுக்கு விமர்சனம் எழுதியே ஆவது என்று… ஹாஹா. #பொசல்

.

Friday, February 15, 2019

டிஷ் டீவீ

பெங்களூர்ல லோக்கல் கேபிள்காரனுங்க தொல்லை தாங்கமுடியலை. தமிழ் சேனல்களை எப்பவும் மொதல்ல ப்ளாக் பண்ணிருவாங்கள். இல்லைன்னா காவிரிப்பிரச்னை வந்தால் தமிழ் ஆடியோவ மட்டும் ம்யூட் பண்ணி விடுவார்கள். இந்த எழவே வேணாம்னு டிஷ்க்கு மாறலாம்னு யோசிக்குபோது ரிலையன்ஸ் பிக்டீவி விளம்பரம் வந்தது. சரி என்று ஐநூறு செலுத்தி முன்பதிவு செய்து வைத்தேன். 45 நாட்களில் இணைப்பு கொடுக்கப் படும்,டிஷ் நிறுவும் போது 1500 செலுத்தினால் போதும் என்றனர். ஓராண்டு சந்தா இலவசம்.சரி என்று கேபிள் தொல்லை இனி விட்டது என நினைத்து பொறுமையாக காத்திருந்தேன். இரண்டு மாதம் கழிந்தது. ஒரு போன் கால் போலும் இல்லை. இடையிடையில் அவர்களிடம் பேச முயற்சித்தால் எப்போதும் ஹிந்தியில் மட்டுமே பேசுவர், கால் சென்டர் பாம்பெயில் இருக்கிறது. பத்து நாட்களில் வந்து விடும் இருபது நாட்களில் இணைப்பு கொடுக்கப்படும் என்றெல்லாம் சொல்லி சால்ஜாப்பு எப்போதும்  ஓடிக்கொண்டேயிருந்தது.

ஆறு மாதங்களாகி விட்டது. இனியும் இணைப்பு கொடுக்க வில்லையே என கேட்ட போது , இப்போது பெங்களூருக்கான இணைப்பு ஆரம்பிக்கவில்லை. அதனால் இன்னமும் 45 நாட்கள் ஆகும் எனக்கூறினர். சரி பொறுத்தது பொறுத்தோம் இன்னுங்கொஞ்ச நாள் தானே என பொறுமையாக இருந்தேன். எட்டு மாதங்கள் அப்படியே கழிந்தது. பின்னர் விசாரிக்கும் போது பணம் கட்டிய அனைவரின் தகவல்களும் அழிந்து போய்விட்டன. அதை மீட்டெடுப்பதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்றனர். அப்ப என்னோட 500 ரூவாய்க்கு  சங்கு தானா ?! இடையில் பிக் டீவி என்ற பெயரை மாற்றி இன்டிபென்டன்ட் டீவி என்றாக்கி விட்டது. இனி உங்களூக்கான இணைப்பு விரைவில் கொடுக்கப்பட்டுவிடும் என்றனர். உங்களின் தகவல்கள் அனைத்தும் கிடைத்தாகி விட்டது. இனி தாமதம் ஏதும் இல்லை இணைப்பு வழங்கப்படும் என்று கூறும்போது ஏற்கனெவே 12 மாதங்கள் ஆகிவிட்டன.

இனியும் இணைப்பு வரப்போவதில்லை என்ற முடிவானபின், திடீரென பிக் டீவியிடமிருந்து அழைப்பு வந்தது.  நாளை உங்கள் வீட்டுக்கு வந்து டிஷ் நிறுவப்படும் என்று.  என்னால் நம்பவே முடியவில்லை. வந்தவன் கூரை மேலேறி டிஷ்ஷை நிறுவிவிட்டு, கீழிறங்கி வந்து சார் உங்க வீடு க்ரவுன் ஃப்ளோர்ல இருக்கு அதனால டிஷ் லிருந்து டீவி வரை கேபிள் நீளம் ஜாஸ்தி ஆகுது அதுக்கு ஒரு மீட்டருக்கு இவ்வளவு கூடுதலாகும் என்றார். சரி எப்படியோ டிஷ் வேலை செய்ய ஆரம்பித்தால் போதும் என கேட்ட பணத்தை கொடுத்தேன், 1500 கூடுதல் இந்த எக்ஸ்ட்ரா கேபிள் கட்டணம். ( மொத்தமாக மூவாயிரம் ஆகி விட்டது. அப்படிப்பாத்தாலும் மாசம் 250 ரூவா , லோக்கல் கேபிளுக்கு கொடுத்த பணம் தான் ..ஹிஹி ) ஒரு வழியா டிஷ் கேபிள் எல்லாம் நிறுவியாகிவிட்டது. டீவியை திறந்தால் சன் டீவி குழும சேனல்கள் ஏதும் வரவேயில்லை. இரண்டு நாட்கள் போனது. பிற சேனல்கள் எல்லாம் வரத்தொடங்கின. இரண்டு நாட்களுக்கு பிறகு சன் வர ஆரம்பித்தது.

நான் பார்க்கும் சேனல்கள் பெரும்பாலும் நேஷ்னல் ஜ்யாக்ரஃபி, மற்றும் டிஸ்கவரி சயின்ஸ்(இந்த சேனலில் எந்த நிகழ்ச்சி எப்போ என்பததெல்லாம் அத்துப்படி எனக்கு ), பிறகு வி ஹெச்1 (ஆங்கில் பாடல் சேனல்) ட்ரேஸ் அர்பன் (இதுவும் ஆங்கிலபாடல் சேனல், ஒரு விளம்பரம் கூட வராது இந்த சேனலில். இருபத்திநாலு மணி நேரமும் விளம்பரங்கள் கிடையாது , இடைவிடாத பாடல்கள் மட்டுமே. இந்த சேனலை மட்டும் பார்க்கலாம் என ரேட் தேடினால் மாசம் 150 ரூவாயாம்..ஹ்ம்...) இதெல்லாம் வருதாவெனப்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒழுங்காக வந்து கொண்டு இருந்தது, இரண்டு நாட்களாக வி ஹெச் 1 ஆஃப். க்ராமி அவார்ட்ஸ் ஃபங்ஷன் அதில் தான் லைவ். எல்லாம் போச்சு. டிஸ்கவரி சயின்ஸ் உங்க ப்ளான்ல இல்லை அதனால வரவே வராது என்றார்கள். தேவையேயில்லாத முன்னூறு இந்தி சேனல்கள் எப்போதும் நிற்காது இடையறாது பொழிகிறது. எல்லாம் ஃப்ரீ சேனல்ஸ் அதனால. இங்க்லீஷ் மூவி சேனலில் எச்பிஓ, ஸ்டார் மற்றும் டபள்யூ பி மட்டும் ஆஜர், மற்றதெல்லாம் பணால். ரொம்ப நாளைக்கு பிறகு அன்ட் ஃப்ளிக்ஸ் வருகிறது.  


யூடிவி வேல்ர்ட் மூவிஸ் என்ற சேனல் எங்கு தான் கிடைக்கிறது என்ற சேதியே இல்லை. ஆங்கிலம் தவிர்த்த பிற உலக மொழிப்படங்கள் எல்லாம் வரும்.என்டீடீவி ,சி என் என், பிபிசி எல்லாம் அவ்வப்போது முகம் காட்டும். தொடர்ச்சியாக ஒரு போதும் இல்லை. சேனல் நம்பர் ஞாபகம் வைத்து சரியாக எண்களை அழுத்தினால் வேறேதாவது சேனல் கதறும்.செயா டீவி குழும சேனல்கள் அனைத்தும் ஆஃப்.  சில்லுண்டி தமிழ் சேனல்கள் மெகா,பாலிமர் எல்லாம் ஒன்றிரண்டு நாள் மட்டும் கண்ணில் தென்படும். பின்னால் அதுவும் ப்ளூ ஸ்கீர்ன் தான் காமிக்கும். பெங்களூரில் கொஞ்சம் மழை இடின்னால் அத்தனை சேனலும் பணால்.

ட்ராய் கட்டுப்பாடுகளில் சிக்கித்தவிக்கிறது இன்டிபென்டென்ட் டீவி. ஐநூறு கட்டும்போது கூறினர், ஓராண்டு சந்தா இலவசம். அத்தனை ஹெச் டீ சேனல்கள் மற்றும் தென்னிந்திய பேக் எல்லாம் உண்டு என. நிறுவின பிறகு தான் தெரியுது என்னெல்லாம் ஃப்ரீன்னு.  இரண்டாம் ஆண்டிலிருந்து எனக்கான பேக்'குகளை நானே தெரிவு செய்ய வேணும். அப்போது லோக்கல் கேபிளுக்கு கொடுத்ததை விட கூடுதல் கொடுத்தே ஆக வேணும் போலிருக்கிறது. கோயிலுக்குப்போனா அங்க ரெண்டு பேய் சிங்சிங்குன்னு ஆடின கதையா இருக்கு. 


இப்ப இந்த டிஷ்ஷைக்கழற்றி விட்டு டாட்டா ஸ்கை, இல்லைன்னா வீடியொகான் இல்லை வேற போடலாம்னு பாத்தா, இத வாங்கி மூணூ மாசங்கூட ஆகலை. அதுக்கு மறுபடியும் அஞ்சாயிரம் செலவழிக்கணும். வெறுமனே பொதிகை டிடியில் ஒலியும் ஒளியும்  பாத்துக்கிட்டு கெடந்திருக்கலாம்னு இப்பத்தான் தோணுது.

Saturday, February 2, 2019

’அந்தாதுன்’ - காணவியலாஒலி



நேற்று ’அந்தாதுன்’ பார்த்துக்கொண்டிருந்தேன். என்னா இசையடா பாவி. அமித் த்ரிவேதி ரஹ்மானுக்கு செம டஃப் குடுக்குறதுக்குன்னே பிறந்தவன் போலருக்கு. கண் தெரியாத பியானோ கலைஞன். பியானோ கலைஞன்னவுடனே எனக்கு அந்த ரோமன் போலன்ஸ்க்கியின் பியானிஸ்ட் படம்தான் ஞாபகம் வந்தது. ஹ்ம், அவ்வள வெல்லாம் எதிர்பார்க்காம தொடர்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம். தமக்கு கண் தெரியாதுன்னு அடுத்தவரிடம் சொல்லிக்கொள்வதால் தம்மால் கலையுடன் ஒன்றிப்போக முடியுமாம். காணவியலாஒலி. இந்த சமூகம் எக்கேடும் கெட்டுப் போகட்டும்,எனக்கு எந்தன் தேநீர் அருந்தினால் போதும் என்று புக்கோஸ்வ்க்கி போல வாழும் பியானிஸ்ட்.

நம்ம பாலமுரளி கிருஷ்ணா பாகவதர் கூட பிறர் பாடும் பாடல்களை காது கொடுத்தும் கேட்பதில்லை. அப்படிக்கேட்டால் அவர்களின் பாணி/ஸ்டைல் எனக்குள் ஒட்டிவிடும் என்று கூறுவார். ஒலியை எங்கனம் பார்ப்பது, கேட்கத்தானே முடியும்? அதான் நம்ம தலைவர் இங்க கண் தெரியாதவர் போல அபிநயிக்கிறார். இசை அபாரம் படம் முழுக்க. 80-களின் பின்னணியில் ஒலிக்கும் அத்தனை இசையும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். ஆர் டி பர்மனின் ’யே ஷாம் மஸ்தானி மத்ஹோஷ் கியே ஜா’ அற்புதமாக வாசிக்கிறான் கலைஞன். அது அந்தக்கால பிரமோத் சின்ஹா கலைஞருக்கு மிகவும் பிடித்த பாடலாம்.



அவ்வப்போது க்ளப்களில் வாசிக்கிறார். லண்டன் போகணும் காம்பெடிஷனுக்கு என்று எல்லோரிடமும் உதார் காட்டுகிறார் கலைஞர். ஒவ்வொரு பீஸும் பியானோவில் அற்புதமாக இசைத்திருக்கிறார் அமித்.  இவரின் ‘உட்தா பஞ்சாப்’ பாடல்களில் ஒரு புது ஃப்ரெஷ்னெஸ் தெரிந்தது. அது அப்படியே மங்காமல் தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.

கொலை நடக்கும் இடங்களுக்கு ’யோஹான் செபஸ்ட்டியன் பாக்’கின் இசை எடுத்துக் கையாண்டிருக்கிறார் அமித். அதைக்கேட்டால் கடவுளும் சாத்தானாகிவிடுவான்.  அப்படி ஒரு பிரளயத்தை உருவாக்கும் ஒலி. பரோக் இசை. கிட்டத்தட்ட பத்து நிமிடம் ஓடும் இசை அது. முதலில் சர்ச் ஆர்கனுக்கென எழுதப்பட்டு பின்னர் எல்லா வாத்தியங்களும் கொண்டு வாசிக்கப்படுகிறது. இங்கு ட்ரம்ஸ், பியானோ மற்றும் செல்லோ, அழுத்தமான வயலின் கொண்டு நெஞ்சைக்கீறி எடுக்கிறது. அதான் கொலை. ஹ்ம்.. தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொண்
டார் அமித். இதுதான் அது J.S.Bach – Toccata and Fugue in D minor, BWV 565  https://youtu.be/ho9rZjlsyYY , மிக அற்புதமாக வாசிக்கப்பட்ட இசைத்துணுக்கு. கொஞ்சம் தேடியெடுத்து சுட்டி கொடுத்திருக்கிறேன். கேளுங்க. என்கிட்ட ‘டெக்கா’ என்ற நிறுவனம் வெளியிட்ட பாஃக்கின் ’Essential Bach’ இசைப்பேழை இருக்கிறது. அதில் முதலில் ஒலிக்கும் இந்த சாத்தானின் இசை.! அதன் ஒலி இந்த யூட்யூப் வகைறாக்களில் கிடைக்காது.








நம்ம ஜிப்ரான், நேர ஹான்ஸ் ஸிம்மரின் ‘கடிகார ஒலி’ இசையை அப்படியே உருவி ராட்சசனுக்கு போட்டிருந்தார். அமித் த்ரிவேதி பாக்கின் இசையை எடுத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை ஆண்டுகள் ஆயினும் அது இன்னமும் உயிர்ப்புடன் இருப்பது தான் ஆச்சரியம்.

.