Friday, February 15, 2019

டிஷ் டீவீ

பெங்களூர்ல லோக்கல் கேபிள்காரனுங்க தொல்லை தாங்கமுடியலை. தமிழ் சேனல்களை எப்பவும் மொதல்ல ப்ளாக் பண்ணிருவாங்கள். இல்லைன்னா காவிரிப்பிரச்னை வந்தால் தமிழ் ஆடியோவ மட்டும் ம்யூட் பண்ணி விடுவார்கள். இந்த எழவே வேணாம்னு டிஷ்க்கு மாறலாம்னு யோசிக்குபோது ரிலையன்ஸ் பிக்டீவி விளம்பரம் வந்தது. சரி என்று ஐநூறு செலுத்தி முன்பதிவு செய்து வைத்தேன். 45 நாட்களில் இணைப்பு கொடுக்கப் படும்,டிஷ் நிறுவும் போது 1500 செலுத்தினால் போதும் என்றனர். ஓராண்டு சந்தா இலவசம்.சரி என்று கேபிள் தொல்லை இனி விட்டது என நினைத்து பொறுமையாக காத்திருந்தேன். இரண்டு மாதம் கழிந்தது. ஒரு போன் கால் போலும் இல்லை. இடையிடையில் அவர்களிடம் பேச முயற்சித்தால் எப்போதும் ஹிந்தியில் மட்டுமே பேசுவர், கால் சென்டர் பாம்பெயில் இருக்கிறது. பத்து நாட்களில் வந்து விடும் இருபது நாட்களில் இணைப்பு கொடுக்கப்படும் என்றெல்லாம் சொல்லி சால்ஜாப்பு எப்போதும்  ஓடிக்கொண்டேயிருந்தது.

ஆறு மாதங்களாகி விட்டது. இனியும் இணைப்பு கொடுக்க வில்லையே என கேட்ட போது , இப்போது பெங்களூருக்கான இணைப்பு ஆரம்பிக்கவில்லை. அதனால் இன்னமும் 45 நாட்கள் ஆகும் எனக்கூறினர். சரி பொறுத்தது பொறுத்தோம் இன்னுங்கொஞ்ச நாள் தானே என பொறுமையாக இருந்தேன். எட்டு மாதங்கள் அப்படியே கழிந்தது. பின்னர் விசாரிக்கும் போது பணம் கட்டிய அனைவரின் தகவல்களும் அழிந்து போய்விட்டன. அதை மீட்டெடுப்பதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்றனர். அப்ப என்னோட 500 ரூவாய்க்கு  சங்கு தானா ?! இடையில் பிக் டீவி என்ற பெயரை மாற்றி இன்டிபென்டன்ட் டீவி என்றாக்கி விட்டது. இனி உங்களூக்கான இணைப்பு விரைவில் கொடுக்கப்பட்டுவிடும் என்றனர். உங்களின் தகவல்கள் அனைத்தும் கிடைத்தாகி விட்டது. இனி தாமதம் ஏதும் இல்லை இணைப்பு வழங்கப்படும் என்று கூறும்போது ஏற்கனெவே 12 மாதங்கள் ஆகிவிட்டன.

இனியும் இணைப்பு வரப்போவதில்லை என்ற முடிவானபின், திடீரென பிக் டீவியிடமிருந்து அழைப்பு வந்தது.  நாளை உங்கள் வீட்டுக்கு வந்து டிஷ் நிறுவப்படும் என்று.  என்னால் நம்பவே முடியவில்லை. வந்தவன் கூரை மேலேறி டிஷ்ஷை நிறுவிவிட்டு, கீழிறங்கி வந்து சார் உங்க வீடு க்ரவுன் ஃப்ளோர்ல இருக்கு அதனால டிஷ் லிருந்து டீவி வரை கேபிள் நீளம் ஜாஸ்தி ஆகுது அதுக்கு ஒரு மீட்டருக்கு இவ்வளவு கூடுதலாகும் என்றார். சரி எப்படியோ டிஷ் வேலை செய்ய ஆரம்பித்தால் போதும் என கேட்ட பணத்தை கொடுத்தேன், 1500 கூடுதல் இந்த எக்ஸ்ட்ரா கேபிள் கட்டணம். ( மொத்தமாக மூவாயிரம் ஆகி விட்டது. அப்படிப்பாத்தாலும் மாசம் 250 ரூவா , லோக்கல் கேபிளுக்கு கொடுத்த பணம் தான் ..ஹிஹி ) ஒரு வழியா டிஷ் கேபிள் எல்லாம் நிறுவியாகிவிட்டது. டீவியை திறந்தால் சன் டீவி குழும சேனல்கள் ஏதும் வரவேயில்லை. இரண்டு நாட்கள் போனது. பிற சேனல்கள் எல்லாம் வரத்தொடங்கின. இரண்டு நாட்களுக்கு பிறகு சன் வர ஆரம்பித்தது.

நான் பார்க்கும் சேனல்கள் பெரும்பாலும் நேஷ்னல் ஜ்யாக்ரஃபி, மற்றும் டிஸ்கவரி சயின்ஸ்(இந்த சேனலில் எந்த நிகழ்ச்சி எப்போ என்பததெல்லாம் அத்துப்படி எனக்கு ), பிறகு வி ஹெச்1 (ஆங்கில் பாடல் சேனல்) ட்ரேஸ் அர்பன் (இதுவும் ஆங்கிலபாடல் சேனல், ஒரு விளம்பரம் கூட வராது இந்த சேனலில். இருபத்திநாலு மணி நேரமும் விளம்பரங்கள் கிடையாது , இடைவிடாத பாடல்கள் மட்டுமே. இந்த சேனலை மட்டும் பார்க்கலாம் என ரேட் தேடினால் மாசம் 150 ரூவாயாம்..ஹ்ம்...) இதெல்லாம் வருதாவெனப்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒழுங்காக வந்து கொண்டு இருந்தது, இரண்டு நாட்களாக வி ஹெச் 1 ஆஃப். க்ராமி அவார்ட்ஸ் ஃபங்ஷன் அதில் தான் லைவ். எல்லாம் போச்சு. டிஸ்கவரி சயின்ஸ் உங்க ப்ளான்ல இல்லை அதனால வரவே வராது என்றார்கள். தேவையேயில்லாத முன்னூறு இந்தி சேனல்கள் எப்போதும் நிற்காது இடையறாது பொழிகிறது. எல்லாம் ஃப்ரீ சேனல்ஸ் அதனால. இங்க்லீஷ் மூவி சேனலில் எச்பிஓ, ஸ்டார் மற்றும் டபள்யூ பி மட்டும் ஆஜர், மற்றதெல்லாம் பணால். ரொம்ப நாளைக்கு பிறகு அன்ட் ஃப்ளிக்ஸ் வருகிறது.  


யூடிவி வேல்ர்ட் மூவிஸ் என்ற சேனல் எங்கு தான் கிடைக்கிறது என்ற சேதியே இல்லை. ஆங்கிலம் தவிர்த்த பிற உலக மொழிப்படங்கள் எல்லாம் வரும்.என்டீடீவி ,சி என் என், பிபிசி எல்லாம் அவ்வப்போது முகம் காட்டும். தொடர்ச்சியாக ஒரு போதும் இல்லை. சேனல் நம்பர் ஞாபகம் வைத்து சரியாக எண்களை அழுத்தினால் வேறேதாவது சேனல் கதறும்.செயா டீவி குழும சேனல்கள் அனைத்தும் ஆஃப்.  சில்லுண்டி தமிழ் சேனல்கள் மெகா,பாலிமர் எல்லாம் ஒன்றிரண்டு நாள் மட்டும் கண்ணில் தென்படும். பின்னால் அதுவும் ப்ளூ ஸ்கீர்ன் தான் காமிக்கும். பெங்களூரில் கொஞ்சம் மழை இடின்னால் அத்தனை சேனலும் பணால்.

ட்ராய் கட்டுப்பாடுகளில் சிக்கித்தவிக்கிறது இன்டிபென்டென்ட் டீவி. ஐநூறு கட்டும்போது கூறினர், ஓராண்டு சந்தா இலவசம். அத்தனை ஹெச் டீ சேனல்கள் மற்றும் தென்னிந்திய பேக் எல்லாம் உண்டு என. நிறுவின பிறகு தான் தெரியுது என்னெல்லாம் ஃப்ரீன்னு.  இரண்டாம் ஆண்டிலிருந்து எனக்கான பேக்'குகளை நானே தெரிவு செய்ய வேணும். அப்போது லோக்கல் கேபிளுக்கு கொடுத்ததை விட கூடுதல் கொடுத்தே ஆக வேணும் போலிருக்கிறது. கோயிலுக்குப்போனா அங்க ரெண்டு பேய் சிங்சிங்குன்னு ஆடின கதையா இருக்கு. 


இப்ப இந்த டிஷ்ஷைக்கழற்றி விட்டு டாட்டா ஸ்கை, இல்லைன்னா வீடியொகான் இல்லை வேற போடலாம்னு பாத்தா, இத வாங்கி மூணூ மாசங்கூட ஆகலை. அதுக்கு மறுபடியும் அஞ்சாயிரம் செலவழிக்கணும். வெறுமனே பொதிகை டிடியில் ஒலியும் ஒளியும்  பாத்துக்கிட்டு கெடந்திருக்கலாம்னு இப்பத்தான் தோணுது.

No comments:

Post a Comment