Friday, August 11, 2023

Writing with Fire

 


’Writing with Fire ‘ என்ற ஒரு டாக்குமெண்டரி படம் நேற்று பார்த்தேன். உத்தர் பிரதேசத்தில் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நடத்தப்படும் பத்திரிக்கை/ யூட்யூப் சேனல் பற்றிய ஆவணப்படம். தாழ்த்தப்படுத்தப்பட்ட பெண்களால் முன்னெடுக்கப்பட்டு இப்போது அவர்களின் பத்திரிக்கையும், யூட்யூப் சேனலு நிறைய வாசகர்களை/சந்தாதாரர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

Khabar Lahariya (செய்தி அலைகள்) என்ற பெயரில் பத்திரிக்கை மற்றும் யூட்யூப் சேனல் செயல்படுகிறது. முழுக்க ஹிந்தியில் மட்டுமே செயல்படும் ஊடகம். உள்ளூர் பிரச்னைகளை, தலித்கள் படும் துயரினை, ஆணாதிக்கம் மற்றும் உள்ளூர் தாதாக்களால அவர்கள் நடத்தப்படும் முறை, ஏகப்பட்ட கோரிக்கைகள், முறைப்பாடுகள் போலீஸ் ஸ்டேஷன்களில் செய்யப்பட்டிருப்பினும் ஒன்றின் மேலும் நடவடிக்கைகள் எடுக்காதிருத்தல் என்பன போன்ற சாதாரண மக்களின் பிரச்னைகளை முன்னெடுத்து தம்மாலியன்றவரை அது பற்றிய செய்திகளை சேகரித்து பத்திரிக்கையிலும், சேனலிலுமாக அம்பலப்படுத்தி இருக்கின்றனர். அதற்கான தீர்வும் பல கேஸ்களில் கிடைத்திருக்கிறது. மேலும் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கவிதா என்ற பெண்ணின் முன்னேற்பாட்டில் இந்தச்செய்தி நிறுவனம் செயல்படுகிறது. ஜர்னலிஸம் படித்த யாரும் செய்தி தொகுப்பாளர்கள் எல்லாம் இல்லை. பள்ளிப்படிப்பை முடித்த இல்லை, அது போலும் படிக்க இயலாத கிராமத்துப்பெண்களின் சேனல் இது. இப்போது 1.54 லெட்சம் சந்தாதாரர்களைக் கடந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு ஃபோன் போலும் பயன்படுத்தத்தெரியாத கிராமத்துப் பெண்கள் அவற்றை உபயோகப்படுத்த கற்றுக்கொண்டு பின்னர் அது கொண்டு சேகரித்த வீடியோக்களை, செய்தியை பிரசுரிக்கின்றனர்.

இந்த ஆவணப்படம் Sundance Festival-ல் சிறந்த ஆவணப்படம் என தெரிவாகியிருக்கிறது. நிறைய இது போன்ற விருதுகளை வென்ற ஆவணப் படம் இது. ஆஸ்கார் பட்டியலிலும் இந்தப்படம் இடம் பிடித்திருந்தது. 2017ல் வெளியான இந்த ஆவணப்படம் இங்கு பெங்களூரில் திரையிட பல முறை முயன்றும் இயலாது போய் இப்போது கடைசியாக திரையிடப்பட்டது. ஏனெனில் உள்ளிருக்கும் விஷயம் அப்படி. அப்பட்டமாக உள்ளூர் பெரும்பான்மைக் காவிக்கட்சிக்கு எதிரான பல செய்திகள்/ பேட்டிகள் எல்லாம் படத்தில் காணக்கிடைக்கிறது.

எப்போதும் திரையிடல் முடிந்ததும், ஆவணப்படம் எடுத்தவர்களுடன் உரையாட வாய்ப்பு கிட்டும். இந்த திரையிடல் இரு முறை ஒரே நாளில் நடந்ததால் நான் கலந்துகொண்ட திரையிடலில் இயக்குநர்களை சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது. பெருவாரியான மக்கள் திரையிடலைப் பார்க்க ஆவல் கொண்டு பதிந்துவைத்ததால் இரு முறை திரையிடப்பட்டது.

#WritingwithFire


No comments:

Post a Comment