Saturday, October 21, 2023

பிமல் ராய் - The Silent Master

 


நேற்று ஒரு திரைப்பட நிகழ்வு. பெங்காலி இயக்குநர் பிமல் ராய். அவரின் படங்கள், பெங்காலி/ஹிந்தியில் அவர் எடுத்தவை. என முழு நாள் நிகழ்வு. நிறைய பிரபலமான படங்களை எடுத்திருக்கிறார்.பெரும்படமான தேவ்தாஸ் இவர இயக்கியது தானாம். ( எனக்கு இப்ப தான் தெரியும். ஸ்பீல்பெர்க், டரண்டினோ எல்லாம் நமக்கு அத்துப்படி 🙂 ) அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படம், பின்னர் அவர் மகனாருடன் ஒரு உரையாடல். பின்னர் அவரின் முதல் படமான பெங்காலி “உதார் பத்தே’ (வெளிச்சத்தை நோக்கி) திரையிடப்பட்டது. 
 
ஆவணப்படத்தை இயக்கியது அவரின் மகன். இது ஒன்று தான் இயக்கியிருக்கிறேன் என பணிவுடன் தெரிவித்தார். அவரின் நேரடி வாரிசுகள் திரைத் துறைக்கு வரவேயில்லை எனலாம். ஏன் விருப்பமில்லையா தெரியவில்லை. அடுத்த தலைமுறை வாரிசுகள், கலை இயக்கம், ஃபோட்டோக்ராஃபி என தலையெடுக்கின்றனர். ஆவணப்படம், அவரின் திரைப்படங்களிலிருந்து சில முக்கியமான காட்சிகள், பின்னர் அவருடன் பயணித்த கவிஞர் குல்ஸார், நடிகர் திலீப்குமார் என பெருந்தலைகள் பேசுகின்றனர். ஒன்றும் புதிதில்லை. இத்தனை பெரிய இயக்குநரின் மகனுக்கு ஒரு ஆவணப்படத்தை சுவைபட எடுக்க வரவில்லை என்பது தான் சோகம். இது தெரிந்து தான் திரைஇயக்கத்தின் பக்கம் வரவில்லை போலிருக்கிறது.
வாரிசுகளுக்கு இப்பொதைய வயது குறைந்தது அறுபது இருக்கும். முதலில் பிமல் ராய் புகைப்படக்கலைஞராக இருந்திருக்கிறார். பின்னர் எழுதி இயக்க முனைந்திருக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என பல படங்களை எடுத்திருக்கிறார். அதிலொன்று நம்ம ‘நல்லதங்காள்’ படத்துக்கு ஒளிப்பதிவு அவர் தானாம். ஓடிய எழுத்துகளில் அவசரமாக வாசித்தேன். தமிழாக இருந்ததால் சட்டெனெக்கண்ணில் பட்டது. (எனினும் விக்கி ஏதிலும் இவர் தான் ஒளிப்பதிவாளர் எனக் கூறவில்லை).
 
அவரின் மகன் உரையாடலின்போது பல நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவரின் தாத்தாவுடன் எப்போதும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்த ஒருநண்பர் பூர்வீக முழு வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டு பிமல் ராயின் குடும்பத்தை இரவோடு இரவாக பங்களாதேஷ் டாக்காவிலிருந்து விரட்டி அடித்திருக்கிறார். பின்னர் கல்கட்டா வந்து பின்னரும் வாய்ப்புகள் கிட்டாது நியூ தியேட்டர்ஸின் பரிவில் ’உதார் பத்தே’ எனற பெங்காலி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். அதே நேரம் அந்தத் தயாரிப்பு நிறுவனம் ஒரு பெரிய ப்ளாக்பஸ்ட்டர் படத்தில் அதிக கவனம் செலுத்தி இவரை உதாசீனப்படுத்தியிருக்கிறது. இருப்பினும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு எடுத்து முடித்து வெளியிட்டபின் ஓராண்டு அந்தப்படம் ஓடியிருக்கிறது பெங்காலில். அப்போதைய வசூல் அறுபது லெட்ச ரூபாய் சம்பாதித்துகொடுத்தது. (உடன் எடுத்த அந்த ப்ளாக்பஸ்ட்டர் ஊத்திக்கொண்டு போயிருக்கிறது) இப்போதைய மதிப்புக்கு 10-20 கோடிகள் வரும்! .. 
 
பின்னரும் பாம்பேக்கு வந்து சேர்ந்த பின் நல்ல படங்களை கொடுத்த போது, அவரின் மேனேஜர், நம்ம இருப்பதற்கு ஒரு வீடு வாங்கலாமே எனக்கூறிய போது , நான் வீடு/கார்/நிலம் எல்லாம் வாங்குவதற்காக சினிமா எடுக்க வரவில்லை என சொல்லியிருக்கிறார். ( வீட்டை எழுதி வாங்கிய ரணம் அவரின் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது) வாடகை வீட்டிலேயே வசிக்கலாம் என்றே பிடிவாதம் பிடித்திருக்கிறார்.
 
அந்த முதற்படம் உதார் பத்தே’ வந்த போது அந்தப்படத்தில் வந்த நெக்லேஸ் ரொம்ப நாட்களுக்கு ஃபேஷனாக இருந்திருக்கிறது பெங்காலில். மேலும் பிமல் ராய்க்கு ரபீந்தரநாத் தாகூரின் கவிதைகள் மேலே பெரிய மோகமே இருந்திருக்கிறது. இந்தப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே ரவீந்த்ரநாத் எழுதியது தான். (எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை.. ஆங்கிலத்தில் கொட்டை எழுத்துகள் ஓடிய போதும்) படத்தின் முதலில் எழுத்துகள் ஓடும்போது நம்ம தேசியகீதத்தை இசைத்திருக்கிறார். படம் வெளிவந்தது 1944-ல். இந்தப்படம் இப்போது திரையிட்டாலும் பெங்காலில் திரையரங்கில் மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவர் என. ஆனால் நேற்றைய அரங்கில் ஒருத்தர் கூட எழுந்து நிற்கவேயில்லை. ( நான் உட்பட..!) இதைக்குறிப்பிட்டுப்பேசிய அவரின் மகள் மிகுந்த வருத்தப்பட்டார். ஏன் எழுந்து நிற்கத் தோணவேயில்லை ஒருவருக்கும்?... ஹ்ம்... மேலும் இந்தப்படத்தின் வசனங்கள் அடங்கிய புத்தகம் உள்ளூர் பான் கடைகளில் கூட விற்கப்பட்டது. அத்தனை பிரபலம்.
 
1943-ல் பெங்கால் ஃபெமீன் (பெங்கால் பஞ்சம்) ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார் பிமல் ராய். இப்போது ஒரே ஒரு காப்பி இருப்பதாக தெரிவித்தார் அவர் மகள். அவர் எடுத்த அத்தனை படங்களும் இப்போது NFDC கைவசம். மிகப்பெரும் சவாலாக இருக்கிறது ராயல்ட்டி பிரச்னைகளில். மேலும் Criterion என்ற அமேரிக்க நிறுவனம் இந்தப்படங்களின் உரிமையை வாங்கியிருக்கிறது. சத்யஜித்ரேயின் படங்களுக்கு கொடுத்த மரியாதை என் தந்தை படங்களுக்கு கிட்டவில்லை. இருப்பினும் போனால் போகிறது என இப்போது பிமல் ராயின் படங்களையும் மீளுருவாக்கம் செய்ய முனைந்திருக்கிறது. எங்கு சென்றாலும் உருவாக்கும் கலைஞனுக்கு மரியாதையோ ராயல்ட்டியோ அத்தனை எளிதில் கிடைப்பதில்லை. அவன் இறந்தபின்னும் கூட.! 
 
பிமல் ராயின் மனைவி மனோபினா ராய் நல்ல ஸ்டில் ஃபோட்டொக்ராஃபர். நிறைய படங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார். பல விருதுகளையும் பெற்று இருக்கிறார். அந்த 1920-1930களிலேயே. அவரும் அவரின் கூடப்பிறந்த சகோதரியும் சேர்ந்து எடுத்த படங்களை (கறுப்பு வெள்ளை) எக்ஸிபிஷனாக இரண்டாம் தளத்தில் பார்வைக்கு வைத்திருந்தனர். அவரின் மகனுக்கும் மகளுக்கும் பெருமை தாங்க வில்லை. மேற்தளத்தில் என் அம்மாவின் படங்களும், கீழ்த்தளத்தில் அப்பாவின் திரைப் படங்களுமாக பெங்களூர் இண்டர்நேஷ்னல் செண்ட்டர் கொண்டாடிக் கொண்டு இருப்பதைக் கண்டு. பின்னரும் தாம் ஒரு நூல் எழுதியிருப்பதாகவும் அதை கவுண்ட்டரில் ஐநூறு செலுத்திப்பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறினார்.
 
உரையாடிக் கொண்டிருக்கும்போது இசையமைப்பாளர் ’சலீல் செளத்ரி’யின் பேத்தி இங்க தான் இருக்கிறார். எழுந்திரும்மா என்றார். என் பக்கத்தில் இருந்த ஒரு இளம்பெண் சிரித்துக்கொண்டே எழுந்தார். அடப்பாவிகளா மொதல்லயே சொல்லக்கூடாதா என கெதக் என்றிருந்தது. பார்ப்பதற்கு வழக்கமான பெங்களூர் காலேஜ் யுவதிபோல டைட் ஜீன்ஸும் ஒரு டாப்ஸுமாக அமர்ந்திருந்தார். இங்க இதுபோல நிறைய ஆர்ட்டிஸ்ட்டுகள், பெயிண்டர்கள், நடிகர்கள் என எப்போதும் கூட்டம் கூடும். அதுபோல எதோ ஒண்ணு உக்காந்திருக்குன்னு நினைச்சா.. ஆஹா. அம்மா தாயே.. பெயிண்டிங்/கேன்வாஸ் எல்லாம் செய்வாராம். அப்ப சரி. படம் ஆரம்பித்த பின் தாமாக எழுந்து எங்கோ போய்விட்டது இளம் யுவதி சலீல் செளத்ரி.
 
மிக்க மார்க்ஸீஸ பின்னணியில் இவரின் பெரும் பான்மையான படங்கள் அமைந்திருக்கின்றன. காந்திக்கு திரைப்படங்கள் மீது வெறுப்பும் அதே நேரம் நேருவுக்கு படங்களில் விருப்பம் இருந்திருக்கிறது. ( ரஷ்யாவின் லெனின் திரைப்படங்களை கொண்டாடியவர் எனகூறினார்)

இன்றும் பிமல் ராயின் (21 அக்டோபர்’23) புகழ்பெற்ற சில படங்கள் திரையிடப்படுகின்றன BIC-ல். #பிமல்ராய்
 

 

No comments:

Post a Comment