Saturday, February 19, 2022

Reacher

   Reacher (TV Series 2022– ) - IMDb

ரீச்சர் – இசையை ரசிக்கும் ஒரு போர்வீரன் , உவமையே ஒரு மாதிரி இருக்குல்ல.? ப்ளூஸ் இசை (பெரும்பாலும் கறுப்பினத்தவரால் இசைக்கப்படும் ஒரு வகை இசை, கேட்பதற்கு ஜாஸ் போல தோற்றமளிக்கும் ) யில் பெருவெற்றி பெற்ற ஒரு இசைக்கலைஞரின் ஊருக்கு பயணமாக வருகிறான். அவரைப்பற்றி அறிந்துகொள்ள.  சவரம் செய்துகொள்ள வரும் அவனை சலூன் வைத்திருக்கும் ஒரு கறுப்பின முதியவர் , ஹ்ம் ஒரு வெள்ளையினத்தவன் , ஒரு ப்ளூஸ் இசைக்கும் ஒரு கறுப்பினத்தவனைத் தேடி ஊரெங்கும் பயணித்து வந்ததோடல்லாமல் , அந்த இசையின் மேல் காதலும் கொண்டிருக்கும் ஒரு வெள்ளையினத்தவனை இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன் என்கிறார். 

இந்த அமேசான் ப்ரைம் சீரீஸில் எல்லாவினத்தவரிலும் நல்லவரும் உளர், கெட்டவரும் உளர், கடைசி நேரத்தில் தம் உண்மை நிறங்காட்டும் பச்சோந்தியும் உளர். அடிப்படையில் இன்னவினத்தவன் மட்டுமே கெட்டவன் கேடுநினைப்பவன் எனக்காட்டாது அனைவரையும் அவரவரின் இயல்பில் காட்டியது நன்று.

’ஆத்தாடி என்ன ஒடம்பு’ என்று சொல்லவைக்கும் உடல் வாகு. போர்வீரன் என்றால் கண்ணைத்திறந்துகொண்டு சம்மதிக்கலாம். வீஎஃபெக்ஸ்’ஸெல்லாம் தேவையின்றி. நம்ம ஊர்லதான் 70 வயது முதியவரை இன்னிக்கு நாளைக்கி என்று எண்ணிக் கொண்டிருப்பவரை புஜபலபராக்ரமசாலியாகக்காட்டி நம்ம சோலிய முடித்துவிடுவர். கார் டிக்கிக்குள் நால்வரை கொன்று முடக்கி வைக்க முயற்சி செய்து இயலாமல் போக, ஒவ்வொருவனின் கால்களை முறுக்கி அப்படியே உடைத்து செருகி வைக்கும் காட்சி , ஹ்ம்… இன்னொரு அர்னால்ட். இதே இயல்பினால் ராணுவத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படுகிறார் நம்ம ரீச்சர். ’You are too Violent’ என்ற முத்தாய்ப்புடன். 

பேசிப்பேசியே பாதி எபிஸோடுகளை முடிக்கின்றனர். இப்டி ஒரு அர்னால்டை வைத்துக்கொண்டு புளிச்சமாவைப்போல வசனம் பேசியே கொல்லவெச்சா என்னதான் பண்றது.. அதான் ஸ்லைட் எரிச்சல். கள்ளநோட்டு கும்பல், அடியாட்களை வைத்துக்கொண்டு அரசாட்சி செய்கிறது. இங்கிருந்து பணம் அடிச்சு வெனிஸூவேலா (அதானே பாத்தேன்…. இப்படியாப்பட்ட நாடுகள் தானே ஹாலிவுட்டில் பேசப்படும்) வுக்கு அனுப்பி பின்னங்கிருந்து மீண்டும் அம்பேரிக்காவுக்குள் புழங்க விடப்பட என வில்லன் கோஷ்ட்டி வேலை செய்கிறது. சரிக்குச்சரியாக அந்த போலீஸ் அதிகாரியாக வருபவரும் அருமை. வழக்கம்போல ஒரு பெண்போலீஸ். அவாளுக்கும் நம்ம காட்டெருமை ரீச்சருக்கும் ..ஹிஹி.. அதெல்லாம் இல்லாம எப்பூடீ?... அந்த போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒரேயொரு பெண்போலீஸ். அதுசரி.

ஃபேஸ்புக், இன்ஸ்ட்டா, ட்விட்டர் எதுலயுமே இவன் இல்லியே, என்னா ஒரு கேரக்டரு என்று பெண்போலீஸ் கூறுகிறது. அப்பால இவர் ராணுவ அதிகாரி என்று கண்டுபிடித்து சப்ஜெயிலுக்கு அனுப்பியவரை வெளியெ விட்றலாமேன்னு கொஞ்சுது.

சிறிதும் உணர்ச்சியே காட்டி விடக்கூடாதூன்னு டைரக்டர் சொலீட்டார் போலருக்கு, நம்ம மகேசு பாவு’ படம் பார்த்து.. இருந்தாலும் ரீச்சர் அர்னால்ட்டை மிமிக் பண்ண நினைப்பது தெள்ளெத்தெளிவு. காந்தஹாரில் வேலை பார்த்தார். அஃப்கானிஸ்தானில் அமைதி நிறுவினார் என்று காந்தி ரேஞ்சுக்கு அடிச்சு ஏத்தறது தான் சகிக்கலை.  

எட்டு எபிஸோடெல்லாம் பாக்ற அளவுக்கு சரக்கு ஒண்ணும் இல்லை. புதிர்களை அவிழ்க்கவே வேணாம். எல்லாம் நமக்கே நல்லாத்தெரியுது. மூணு இல்ல நாலு எபிஸொட்லயே முடிச்சி விட்றுந்தா புண்ணியமாப் போயிருக்கும்ணே … #ரீஈஈஈச்சர்.

Why 'Reacher' Was Renewed So Quickly, What Had to Change From Books | TVLine

No comments:

Post a Comment