பெங்களூரில் என் வீட்டுக்கு
பக்கத்தில் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கின்றனர். எட்டு மாதமாக வேலை
நடந்து கொண்டிருந்தது. கொரானா வந்ததும் தாமாக நின்று விட்டது. அந்த கட்டிட மேஸ்த்திரி
அருகிலேயே வசிப்பவர். எப்போதும் ஏழு மணிக்கெல்லாம் அவரை கட்டிட முகப்பில் பார்க்கலாம்.
உள்ளூர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டு அமர்ந்திருப்பார். வேலையாட்கள் தமது வேலையைத்
தொடர்ந்திருப்பர். இப்போதோ அவர் மட்டுமே அமர்ந்து செல்ஃபோனை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
ஆட்கள் யாரும் இல்லை. எல்லோரும் பீகார்,மற்றும் பெங்காலில் இருந்து வேலைக்கு வந்தவர்கள்.அனைவரும்
சென்று விட்டனர். கட்டிடம் அப்படியே நிற்கிறது. பெங்களூர் பேலஸ் கிரவுண்ட்ஸுக்கு வரச்சொல்லி உள்ளூர்
அரசாங்க ஆணை, வேற்று மாநிலத்துக்கு செல்லவேணுமெனில் அதற்கென ஒரு செயலியும் உருவாக்கப் பட்டிருக்கிறது.
அதன் வழி அவர்கள் பதிவு செய்து சென்று மூன்று
நாட்களாக காத்திருக்கின்றனர்.
ஒவ்வொரு இடத்திலிருந்தும்
பேலஸ் க்ரவுண்ட்ஸ் செல்ல (என் இடத்திலிருந்து பத்து அல்லது பனிரெண்டு கிமீ) ஒரு ஆளுக்கு
ஆட்டோவுக்கென ஐநூறு ரூபாய் முதல் அறுநூறு ரூபாய் வரை ஆகிறது. (மீட்டரில் ஆகக்கூடுதல்
ரூ150 மட்டுமே வரும்) அதிலும் சில சமயங்களில் , இந்த கரோனா காலத்திலும் ஷேர் ஆட்டோவாக
செல்லுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆட்டோக்காரகளைச் சொல்லி குற்றமில்லை, இரண்டு மாதமாக
அவர்களுக்கும் தம்பிடி வருமானம் இல்லை. கிடைத்தது லாபம் என கூறுபோடுகின்றனர். அங்கு
சென்ற பிறகும் ஊருக்கு செல்ல அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் டிக்கெட். எடுத்தே ஆக வேண்டிய
கட்டாயம். இரண்டு மாதமாக தினக்கூலி போலும் இல்லை. ஏற்கனவே ஐநூறு ரூபாய் ஆட்டோவுக்கு
மேலும் ஆயிரம் ரயிலுக்கு. காங்கிரஸ் கொடுக்கும்
எனச்சொன்னதெல்லாம் அவர்கள் ஆளும் மாநிலத்தில் மட்டுமே. இங்கோ பிஜேபி அரசு. அதிலும்
இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம். ரயிலில் இடமில்லை என்ற குறைபாடு.
இங்கேயே அவர்கள் தங்க இடம் போலுமில்லை. திரும்பி அவர்கள் வேலை பார்த்த இடத்துக்கே செல்லலாமென
நினைத்தால் மீண்டும் ரூ500 கொடுக்க வேணும்.
இப்போது கர்நாடக அரசு
அவர்களை ஊருக்கு செல்லவேண்டாம் எனக்கூறுகிறது. உள்ளுர் கட்டிட காண்ட்ராக்டர்களுக்கு
ஆட்கள் கிடைக்க சிரமமாக இருக்கிறதாம். மீண்டும் வேலை ஆரம்பிக்க போவதால் அவர்களை தடுத்து
நிறுத்து என கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஊரடங்கு எப்போது மீண்டும் தலையில் விழும்
என்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. வெளி மாநில பணியாளர்களுக்கு ஊருக்கும் செல்ல வழியில்லை.இரண்டு
மாதங்களாக வருமானமும் இல்லை. #சக்தேஇண்டியா
No comments:
Post a Comment