Monday, September 17, 2018

இளையராஜா



ராசைய்யாவின் நேற்றைய நிகழ்ச்சி அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. குரல் உடைந்து இருக்கிறது ராசைய்யாவிற்கு. பயணக்களைப்பா இல்லை உடல் சோர்வா என எண்ணவைத்தது. இருப்பினும் முடியும் வரை இருந்து பார்த்துவிட்டுத்தான் உறங்கினேன். எழுபத்தைந்து வயதில் இத்தனை தூரம் பயணம் செய்து அத்தனை ஆர்க்கெஸ்ட்ராவையும் தயார் செய்து ,ஒருங்கிணைத்து வாசிப்பது என்பதெல்லாம் பெரிய விஷயம். அத்தனை களைப்பிலும் தன்னைக் காண வந்திருக்கிறார்கள் என்ற ஒரே நோக்கத்திற்கென வலிந்து தம்மை ஆட்படுத்திக்கொள்கிறார். பாட இயலவில்லை. பல வரிகளை இரண்டு முறை பாடுகிறார் அதே வரிகளை. இனியும் வதைக்க வேணுமா?!. கண்டெக்டர் லாஸ்லோ கவாக்ஸ் முன் வந்து தலை சாய்க்கிறார் பலமுறை எத்தனையோ சிம்ஃபொனி. ஆர்க்கெஸ்ட்ராவை வழி நடத்துபவர்.

விஜய் பிரகாஷின் குரல் கிஞ்சித்தும் எட்டவில்லை பாலுவின் உயரத்துக்கு. அப்படி என்னதான்யா சண்டை ஒண்ணாப் பாடிட்டுப் போகவேண்டீது தானே?! மொத்தமே பதினைந்து பேர் இசைக்குழுவில் இருந்திருப்பர் என நினைக்கிறேன். அதிலும் அதே பிரமிப்பு. கன கச்சிதமாக இசைக்கோர்வை. எனினும் பாடிய பலர் புதுமுகங்கள். என்னவோ ஒன்று குறைகிறதே என்ற எண்ணம் மேலிடாமலில்லை. ராசைய்யாவே வெளிநாடு சென்று நிகழ்வுகள் நடத்தவேணுமா என யோசிக்க வைக்கிறது. ஸ்கைப், வீடியோ கான்ஃபெரன்ஸிங் என பல அறிவியல் ஊடகங்கள் வளர்ந்துவிட்ட போதிலும் நேரில் தோன்றித் தான் நிகழ்ச்சி நடத்த வேணுமா?! முதுமை வாட்டுகிறது அவரை.

’என் ஜோடி மஞ்சக்குருவி’யில் 04:00 லிருந்து 04:10 வரை வரும் வரிகள், அதில் குரல் எது குழல் எதுவெனத்தெரியவே தெரியாது.ஆஹா. சித்ரா அதைக்கொணர முயன்றார். முயன்றார் மட்டுமே. அந்த இடங்களில் வரும் ”கூக்கூ”வைப்பாடினது சித்ரா தானே? இல்லை ஷைலஜாவா ?

”இசைக்கு என்னைப்போல குழலுக்கு இவர்” என அருண்மொழியைக் கைகாட்டினார். இசைத்திமிர் ஆணவம் :) இன்னமும் ஆணவக்கொம்பு இளைக்கவேயில்லை. மனோவைப்பார்த்து நீ தான் பாடுகிறாயா இல்லை வேறு யாராவது பாடுகிறார்களா? என பாலுவை கிண்டலடிக்கவும் செய்கிறார். இதெல்லாம் கட்டையோட தாண்டி போகும்.அம்புட்டும் ஆணவம். அவருக்கிருக்கிற திறமைல 0.0001 விழுக்காடு எனக்கு இருந்திருந்தாலும் இத விடப்பல்லாயிரம் மடங்கு திமிரோட பேசுவேன் நான்..!

இதற்குப்பிறகு இன்ன நோட்’தான் என ஊறிப்போன ராகம்,தாளம் என்றாலும் நேரில் வாசிக்கும்போது சிலிர்க்கத்தான் செய்கிறது. மிக்ஸிங் குறைபாடு இருப்பினும் இல்லையே இங்க இது வரணுமே என்ற எண்ணம் மேலிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. நனவிலி மனது அறியும் அந்த இசைக்குறிப்புகளை! அடுத்த வாரமும் பார்ப்பேன்!

.

No comments:

Post a Comment