Thursday, August 31, 2017

தும்பைப்பூத்'தல


'பயத்துக்கு பாஷை இல்லை'.ஹ்ம்,, நல்லாருக்கு சிவா. இது மாதிரி தெறி வசனமெல்லாம் அஜீத் பேசும் போது நல்லாத்தானிருக்கு, ஆனாலும் மொழி தெரியாம படம் பாக்கறவங்கள மனசில வெச்சே ஒவ்வொரு சொல்லையும் இருபது செகண்ட் இடைவெளி விட்டு பேச வெச்சது தான் படத்த ரெண்ற மணி நேரத்துக்கு இழுத்துவிட்ருக்கு. 'சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க' எனப்பாடிக்கொண்டிருந்த அஜித் அழகு அமுல் பேபிய காடு, மேடு, மலை, ஐஸூ, துப்பாக்கி வெடிகுண்டுன்னு கெளப்பி விட்றுக்கார் சிவா.

அஜீத் தாவுகிறார், பைக்கில் எகிறுகிறார், மேலிருந்து குதிக்கிறார், மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கிவிழுகிறார். அவ்வப்போது பில்லாவில் பழகிய நடையை இன்னும் மறக்காது வராண்டாவின் நீளம் அளக்கிறார். கமாண்டோ ஆர்னி போல வலுவான மரம் சுமக்கிறார், துப்பாக்கி குண்டுகளால் சுவரை AK என்றெழுதி நிறைக்கிறார். இடையே கொஞ்சம் மையலும் சமையலும் செய்கிறார். அது பிரியாணியா எனத்தெரியவில்லை. எத்தனையோ தொழில்நுட்ப விஷயங்களை புதுமையாக புகுத்தியவர் , இந்த வாசனையையும் தியேட்டரில் பரவ விடும் தொ.நு'வையும் செய்திருக்கலாம்.அடுத்த படத்தில் செய்வார்.


ஹேக்கர் இந்தப்பதம் இப்போதெல்லாம் பரவலாக புழங்க ஆரம்பித்துவிட்டது. எல்லாம் ரேன்ஸம்வேர் சாறுண்ணியால் வந்த விளைவு. ஹ்ம். நல்லது தான் தமிழ் கூறும் நல்லுலகம் இவ்வாறான பதங்களை சினிமா வாயிலாகவாவது அறிந்துகொள்கிறதே. முன்னெல்லாம் கேன்சர் குணப்படுத்தவே முடியாத வியாதி என்ற அரிய பெரிய உண்மைகளை மட்டுமே கூறி வந்த தமிழ் சினி உலகம் இவ்வாறான தகவல் தொ.நுட்ப அறிவையும் அறிமுகப்படுத்தி வைக்கிறது. ஹாலோக்ராம்' ஏற்கனவே சுஜாதா எழுதியது தானே. என் இனிய இயந்திராவில் கடைசி அத்தியாயங்களில் ஹாலோக்ராம் உருவம் கொண்டே இத்தனை நாள் உலகை ஆண்டது என்ற உண்மையை தெரிய வைப்பார்.ஆகவே இங்கு அதொன்றும் புதிதில்லை.

ஐஸ்குச்சி உறிஞ்சும் ஐந்தாம் வகுப்பு பெண்ணும் சொல்லிவிடுவாள் அடுத்து என்ன காட்சி என.அங்குதான் திரைக்கதை சொதப்புகிறது. எப்பவுமே ஹீரோதான் ஜெயிப்பார் என்று தெரிந்தே பார்க்க முற்படும் படங்கள் மட்டுமே எப்போதும் வருகின்றன. ஒரு மாறுதலுக்கு ஹீரோ தோற்று ஒழியட்டுமே. ஹ்ம்.. அதெல்லாம் நடக்குமா என்ன? நான் லீனியர் திரைக்கதையோ இல்லை இடைவேளைக்குப்பிறகு சடாரென எதிர்பாராத மாற்றமோ எதுவும் இல்லை. இதே கதைக்களத்தை ரேக்ளா ரேஸ் வைத்துக்கொண்டு , உள்ளூர் கண்மாயில் விஷம் கலக்கும் வில்லனை வீழுத்துவது போலவும் எடுக்கலாம். என்ன 'செர்பியா' போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. செம்பரம் பாக்கத்திலேயே எடுத்து ரெண்டு பொங்கல் பாடல்கள் வைத்து முடித்திருக்கலாம். ஆஹா.. அதான் வீரம்'னு ஏற்கனவே எடுத்துட்டார்லப்பூ.


சுனாமி அடித்தபோது விவேக் ஓபராய் தமிழகம் வந்து ரெண்டு மாதம் தங்கியிருந்து அத்தனை மக்களுக்கும் அந்தப்பகுதியில் சேவை செய்தார். அதற்கு நன்றிக்கடன் வில்லன் வேஷம் போலருக்கு இங்க. என்ன காரணத்துக்காக விவேக் ஓப்ராய் அஜித்துக்கு துரோகம் செய்கிறார்? அவர் சாப்பாட்டில் மண்ணள்ளிப் போட்டாரா ? இல்லை அவர் கேர்ள்ஃப்ரென்டை ஆட்டையத்தான் போட்டாரா அஜித்? அப்படி ஒன்றுமே நடக்கவில்லையே ?. சிவாதான் பதில் சொல்லோணும். ஆ ஊன்னா துரோகம் பண்ணக் கிளம்பிர்றாரு ஆர்யன். ஒரு இணுக்கில் கூட ஆர்யனின் உள்ளர்த்தம் தெரியாமலா பழகியிருப்பார் அஜீத்...நம்பும்படி இல்லை ..ஹ்ம்.. அஜித் தமது பிள்ளைத்தமிழ் பேசி நடித்து வெளிவந்த ஆசை, வாலி போன்ற படங்களே எனது தெரிவு. முறுக்கேற்றி சிக்ஸ் பேக் காட்டி இன்னபிற ஆர்னி வகைறாக்களை எல்லாம் ரசிக்க இயலவில்லை. எல்லாம் சரி கூடவே அலைந்து கொண்டிருக்கும் அந்த வெளிநாட்டு பெண்மணிக்கு காதல் மன்னன் அஜித் மேலே மையலே இல்லையே ஏன்..? அழகை இழந்துவிட்டாரா அஜித்.?

ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் எடுக்கலாம் தான். லாஜிக் முக்கியம் ஞாயம்மாரே. ஏழு தடவ திருப்பி திருப்பி சுட்டா எந்த புல்லட் ப்ரூஃபும் தெறிக்கும். கக்கத்திலேயே கட்டி வைத்துக் கொண்டு இருக்கும் குண்டு பொதிகள் எத்தனை தாவி அடித்த போதும் பொட்டித் தெறிப்பதில்லை, பல நாட்கள் உணவேயின்றி அத்துவானக்காட்டில் அலைந்த போதும் மரக்கிளையில் புல்லப்ஸ் எடுக்க முடியும், பின்னர் அத்தனை ரிவ்யூக்களிலும் சொல்லிக் களைத்த நானூறு பேர் சுற்றிக்கொண்டு சுடும்போதும், நான்கு ஹெலிகாப்டர்கள் கீழ்நோக்கி குறிவைத்தும் தல' தப்புவது தம்பிரான் புண்ணியம் போன்ற காட்சிகள் 'எஸ் வி சேகரின்' நாடக டைட்டில்.

கமலின் விக்ரமில் துபாஷ் ஜனகராஜ் சபாஷ். இங்கு கருணாகரன் வெறும் டப்மாஷ்.



தம்பி அநிருத் புகுந்து விளையாடிருக்கான். இந்தப்பசங்களுக்கு எல்லாம் கீ போர்டு சகிதமே பிறந்த இக்காலப்பிள்ளைகளுக்கு இசை உருவாவது, வாழ்வது பின்னர் சப்தமின்றி மரணிப்பது என்பதெல்லாம் சிந்த்'தில் மட்டுமே. சர்வைவா' ஒரு ரியல் ராக். ஆம், ஹெவி மெட்டல் தான். அடித்து சொல்வேன். ப்ளாக் சப்பாத், லிங்கின் பார்க், ஹார்ட் ராக் கஃபே அயிட்டம் தான். ஆனாலும் அதை வைத்தே ஒப்பேற்ற முடியுமா? தீம் இசை என ஒன்றுமில்லை. பழைய பாணியாகி விட்டது போல. ரெட்ரோ வேண்டாம் என முடிவெடுத்து இசைத்திருக்கிறார். என்றாலும் பின்னணி இசை என்ற ஒன்றிற்கு டால்பி சர்ரவுண்டு சவுன்டு என்றெல்லாம் வந்த பிறகு அடித்து துவைத்தால் போதும் என்பதில்லை இசை. இப்பதான் டன்கிர்க் வந்திருக்கு, அதையாவது கேட்டிருக்கலாம்.

இழையோடும் இசை வேண்டும், ஃபேமிலி செண்டிமெண்ட்டுக் காகவாவது இசைத்திருக்கலாம் ஒரு தீம். எங்குமில்லை. அடிதடி இசை. ஹ்ம்.. இருப்பினும் இன்னமும் வளரவேணும் தம்பி பின்னணி இசையில். ‘உதயம்' பாரு தம்பி ராசைய்யா இறங்கி அடித்த படம். காட்சியே பார்க்கவேணாம். அடிவயிறு சில்லிட்டுப் போகும் ஒவ்வொரு முறை ரகுவரன் தோன்றும் காட்சிகளெல்லாம். இப்போதெல்லாம் இது போன்ற படங்களுக்கு ராசைய்யா இசைப்பதே இல்லை என முடிவெடுத்துவிட்டதே பெரிய குறை. இங்கு பிற பாடல்கள் எடுபடவில்லை. மேலும் பாடல்களை பின்னணியில் இசைத்துவிட்டு போவதால் லயிக்க இயலவில்லை.

அக்ஷரா'வை வரவழைக்கவென வரும் காட்சியில் அந்தத் தெரு இசைக்கலைஞன் இசைக்கும் ட்ரம்ஸ் சம்மதிக்கணும்டா தம்பி அநிருத். முழுக்காட்சி கோவையுமே அற்புதம். சிவா'வை இங்கு மட்டுமே மெச்சலாம். எதிர்பாராத ப்ளான் பி! நைஸ் சிவா. அஜித்தும் சொல்லும் அந்த பிளான் பி என்ற கரகரத்த குரல் ஹ்ம்..ப்யூட்டிஃபுல்.



'மற்றவர்கள் அவரோடு உழைச்சவங்க, நான் அவரோடு பிழைச்சவ' என்ற மாதிரியான சவ சவவென ஒரு வசனம் பேசிக்கொண்டு இருக்கிறார் காஜல். மேக்ஸிம் பத்திரிக்கைக்கு ட்யூப் டாப் கூட இல்லாமல் கைகளை வைத்து 'ஹேண்ட்பிரா' என மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்து மாடலிங்கிற்கென உழைத்ததை விட இங்கு ஆறுகெஜம் புடவையை சுற்றிக் கொண்டு அக்ரஹாரத்து அம்மணி மாதிரி வந்ததற்கு அதிகமாக ஒப்பனை செய்திருக்க வேணும். உழைத்திருக்க வேணும். ‘பயத்துக்கும் பெருமைக்கும் இடையில் வாழ்கிறேன்' என்கிறார். செண்டிமெண்ட் பாகங்கள் ஜேம்ஸ்பாண்டு படங்களில் காணக்கிடைப்பதேயில்லை. இந்த கேர்ள்ஃப்ரெண்ட் இல்லைன்னா இன்னொண்ணுன்னு போய்ட்டே இருப்பார் பாண்டு. இது தமிழல்லவா , மண்ணின் பெருமை காக்கவேணும் தோழா , அதுனால வைஃப் செண்டிமெண்ட். எம்' எப்பவும் பாண்டு வேட்டைக்கு போகும்போது ' Come back alive James’ என்பார். அது போல காஜல் இங்கு திரும்பி வாங்க என்கிறார். அஜீத்திற்கு அந்த 'Ready to Rage’ ஒப்பனை பிரமாதம். ஃபர்ஸ்ட் ப்ளட்டில் சில்வெஸ்ட்டரின் ஒப்பனையை ஒத்திருந்தது.காயங்களும் கிழிந்த சட்டையும், குத்தி துளைத்தெடுத்த சதைத்துணுக்குகளுமென அதகளம்.

வில்லன் கூட்டதில் ஒருத்தனை பிடித்து வைத்து விசாரிக்கும்போது அவனிடம் இருக்கும் வெடி கொண்டு வெடிக்கப்போகிறது, அந்த நேரத்தில் காஜல் அஜீத்தை அழைக்கிறார். இல்லக்கிழத்தி சொல் தவறாக்கணவனாக அந்த இடத்தை விட்டகல்கிறார் ,,ஓ குண்டு வெடிப்பிலிருந்து தப்பிக்கிறார் தலை'வன். அதனால இனிமே பெண்சாதி இருக்கப்பட்டவா'ல்லாம் அவா கூப்பிட்டா ஒடனே எங்கருந்தாலும் ஸ்தலம் விட்ருங்கோன்னேன்... ஹிஹி..அதான் கேட்டேளா?

கிட்டத்தட்ட இதே பின்னணியில் ஆர்னால்டு நடித்த 'ட்ரூ லைஸ்' பாருங்க. கொஞ்சம் ஃபேமிலி செண்டிமெண்ட்டும் கலந்து குழைந்து கொடுத்திருப்பர். காதல் மன்னனை பிறன்மனை நோக்கா பெருமானாக ஆக்கிவிட்டிருக்கிறார் சிவா. இருப்பினும் பிறந்த குழந்தைக்கு , ஆ அதான பாத்தேன்...அது பெண் குழந்தைங்ணா, அக்ஷராவின் பெயரான நடாஷா எனப்பெயர் சூட்டி மகிழ்கிறது ஃபேமிலி. படம் முடியும்போது காரினுள் இருக்கும் அந்தச்சிறிய மானிட்டரில் அடுத்த ஆப்பறேஷன் என்று என்னவோ பச்சைத்திரவம் ஒளிர்கிறது. நமக்குள் புளி கரைகிறது.


No comments:

Post a Comment