Wednesday, August 16, 2017

புதிதாய்ப்பிறந்த மகள்


நேற்று புதிதாய்ப்பிறந்த கேகேயின் புது மகளைக்காண இன்று ஓசூர் சென்றிருந்தேன் செந்திலுடன். அரைமணி விழித்திருப்பை பார்க்க வாய்க்கவில்லை. பாட்டியின் மடியில் கைகளை அசைத்து உறங்கிக் கொண்டு இருந்தாள். வரவேற்ற பெரியசாமி 'குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்' தொகுப்பைக் கொடுத்து வாசித்துப் பாருங்கள் என்றார். வெளியில் தேநீர் அருந்த வந்த போது அடை மழை. கவிஞனுக்கு பிடித்தது வெறும் சிறுமழை. ஒரு மணிக்கும் கூடுதல் மழை. ஒதுங்கி நின்றோம் நானும் செந்தில் மற்றும் முகிலனும். 

முகிலன் இந்தோனேஷியக்கதைகளை விலாவரியாக விளக்கிக் கொண்டிருந்தார். எட்டு மணி நேர வேலை மட்டும்.பதவி உயர்வே தேவையில்லை, நான் இப்படியே ஓய்வுறும்வரை பணீயாற்றவே விருப்பம் என எழுதிக்கொடுத்து விட்டு வேலை செய்யலாமாம். ஹ்ம். அதெல்லாம் நம்ம ஐ.டி' யில் நடக்கிற காரியமா ? ஆறுமணி நேரப்பயணம் கடந்தே பணிக்கு செல்லவும் வீடு திரும்பவும் அத்தனை ட்ராஃபிக். பொதுப் பேருந்துகளே இல்லை என சொல்லிக்கொண்டே இருந்தார். மழை வலுத்தது. குளம் போல கணுக்கால் வரை நனைத்தது. வீட்டுக்குள் மழை புகுந்துவிட்டதாம் எனக்கூறி விட்டு சென்றுவிட்டார்.

பொழுது போகவில்லை மழையின் ஒச்சை அடங்கமறுத்தது. கிளி ஜோசியக்காரர் மழைக்கு ஒதுங்கி தமக்கு தேநீர் அருந்த வந்திருந்தார். வலுவான மழை. பெட்டியைக்கீழே வைத்துவிட்டு குடித்துக் கொண்டிருந்தார். உள்ளுக்குள் கிளி மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. செந்திலுக்கு ஒரு சிறிய விருப்பம். ராம் கிளி ஜோசியம் பார்க்கலாமா? (என்னைக்கேட்டா கிளிக்கு வேண்ணா ஜோசியம் பார்க்கிறேன்.) வேணுன்னா நீங்க பாருங்க என்றேன். தேநீர்க்கடை உரிமையாளரிடம் அனுமதி வாங்கி கடை விரித்தார். நீங்க உட்காரணும்னு அவசியமில்லை. தட்சிணை வைத்து விட்டு பேர் சொல்லுங்க என்றார். கிளி வெளியே வந்தது, யார் பேருக்கு சீட்டு எடுக்கிறாய் என்றார். செந்திலின் காலடியைத் தொட்டு விட்டு வந்து மூன்றாவது சீட்டை எடுத்துக் கொடுத்து விட்டு தாமாக உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டது.

பலன் சொல்லி முடித்தார். செந்தில் ஏதும் பேசவில்லை. நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன். 'ஐயா நீங்க இந்த கம்பளத்தார்' வகையைச் சேர்ந்தவரா என வினவினேன். ஆமா தம்பி, இப்பல்லாம் யார் தம்பி ஜோசியம் பார்க்கிறா, தொழில் செய்யத்தெரியாதவ ரெல்லாம் இதை செய்ய ஆரம்பித்து விட்டனர். சிபாரிசுகள் மற்றும் அறிந்தவர் மட்டுமே இப்போது தம்மிடம் பார்க்க வருகின்றனர் என்றார். கைரேகையெல்லாம் பார்ப்பீங்களா ..இல்லை தம்பி அது எனக்கு பழக்கமில்லை. கிளியை நீங்க பழக்கினீங்களா என்றேன். இல்லை இது பழக்கியே வைத்திருந்த கிளி அதை வாங்கி இப்போது இருபது வருசமா வைத்திருக்கிறேன், சோறு,பழம், நெல்லு இதை மட்டும் நேரா நேரத்துக்கு கொடுத்துவிட்டால் அது பாட்டுக்கு இருக்கும் தம்பி என்றார். 

அவருக்கும் பொழுது போகவில்லை.மழை விடாது பெய்து கொண்டிருந்தது. கேகேவிடம் சொல்லிவிட்டு இப்படியே பெங்களூர் திரும்பலாம் என்று நினைத்தோம் பின்னரும் இன்ன பிற நண்பர்கள் மருத்துவமனை வந்திருப்பதை அறிந்து ஜீன்ஸை மூட்டு வரை ஏற்றிக் கட்டிக்கொண்டு நீந்தி சென்றடைந்தோம். 

திரும்ப பெங்களூர் வரும்போதும் அடை மழை. பேருந்தில் நிற்கவும் இடமில்லை. கடைசி இருக்கை அருகில் சென்று ஒண்டிக்கொண்டேன். பெரியசாமி'யின் கவிதைப்புத்தகத்தை விரித்து வாசித்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்து ஒரு கவிதை

தாள் ஒன்று
தன்னில் எதையாவது வரையுமாறு
அழைப்பதாகக்கூறிச்சென்றான்
வர்ணங்களைச் சரிபார்த்து
ஒன்றிரண்டை வாங்கிவரப் பணித்தான்
மகாபாரதம் தொடரில் கண்ணுற்ற
ரதம் ஒன்றை செய்யத்துவங்கினான்
ஒளிர்வில் வீடு மினுங்க
நின்றது பேரழகோடு


மற்றொரு நாளில்
புரவிகளை உயிர்ப்பித்துப்பூட்டினான்
அதிசயித்து ஊர் நோக்க
வானில்
பவனி வந்தான்



.

2 comments: