Thursday, March 16, 2017

கரடிக்காதல்


ஃபெப்ரவரி 2017 தடம் இதழில் 'தேன் வாசித்தேன். புதுவிதமான ஒரு மயக்கம் தரும் சிறுகதையாக இருந்தது (சிறுகதை தானே?) பால் ஜக்காரியா மலையாள மூலம் பவா' தமிழாக்கம். இதுவும் ஒரு மேஜிக்கல் ரியலஸிம் கதை தான்.காடு பற்றிய வர்ணனை மிகவும் அலுப்புத்தட்டியது எனக்கு அதுபோல மீன்களின் வகைகளைப்பற்றி விலாவரியாக விளக்கியிருப்பதும் எதோ விக்கிப்பீடியா வாசிப்பது போன்ற உணர்வைத் தருவது சலிப்பு. ஒருபக்கம்  இத்தனை பெயர்களும் அவர் அறிந்து வைத்திருப்பதை பறைசாற்றினாலும் இன்னொரு புறம் அது ஒரு பொதுஅறிவுத்தகற்குவியலாகவே எனக்கு தென்பட்டது.

இங்கும் எனக்கு மிகவும் பிடித்த இன்றளவும் இம்மி கூட அசைக்காமல் நான் கண்ணுறும் அலிஸ் இன் த வொன்டர் லேன்ட்'டைப்பற்றி பேசுகிறார். ஓரளவு அதையொட்டியே இந்தக்கதையும் அதே உளப்பாங்கில் எழுதப்பட்டது போல , மேலும் யாருக்கும் அறிவுரை எல்லாம் சொல்வது போலல்லாது தாம் நினைத்ததை சொல்லிவிட எத்தனிக்கிறார் பால். இவரின் பிற எழுத்துகளை நான் வாசித்தது இல்லை.

கரடி ஒரு பெண்ணை அதுவும் மானிடப்பெண்ணை காதலிப்பது தான் கதை. இதேபோன்ற ஒரு ஆங்கிலத் திரைப்படம் கூட எனக்கு நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு தேனீ ஆம் தேனீதான் ஒரு பெண்ணை காதலிக்கும். இன்னபிற தேநீக்களிடம் அதைப்பற்றி விசாரிக்கும். இது சாத்தியமா நடக்கக்கூடியதா என்றெல்லாம். அது ஒரு கார்ட்டூன் திரைப்படம் (பெயர் மறந்து விட்டேன் ) இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம் , பியூட்டி அன் த பீஸ்ட் போன்ற படங்களும் விலங்குகளும் மனிதர்களும் விரும்புவதை.

இதில் கரடி என்பது ஒரு உருவகம் மட்டுமே. மனிதரில் பலரும் அவ்வப்போது சூழலுக்கேற்ப சில மிருகங்களாக மாறுவது என்பது சாத்தியம்தானே. வன்மமும் , முன்னற் செய்த தவறுகளை நினைவிற்கொண்டு பழி வாங்குவதில் நரி, கிட்ட நெருங்கவும் விடாத சமயங்களில் புலி/சிங்கம், கொம்பேறி மூக்கனைப்போல எதிரி இறந்து விட்டானா என இடுகாடு வரை போய்ப்பார்ப்பதில் என அவ்வப்போது சில மிருக உணர்வுகளும் நம்மில் இருந்து கொண்டுதானிருக்கின்றன. பரிணாம வளர்ச்சியின் எச்சங்கள்.

கரடிக்கு மொழிப்பிரச்னை. ஹிஹி..எப்படி மனிதமொழி பேசுவது ?..அடடா அவளைக்கண்டதும் பேச்சு வந்துவிடுகிறது :) ஆம்..காதல் வந்துவிட்டால் கவிமழையும் பொழிவர் அல்லவா ?! கரடி போய்க் கடவுளிடம் வேண்டும்போது அவரோ கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருக்கிறார். நல்ல பகடி.!  மேற்கத்திய நாட்டுப்புறக்கதைகளின் பாதிப்பில் எழுதியதாக குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

கதையின் முடிவில் அவளின் அம்மா வினவுகிறாள், எப்படி வைத்துக்கொள்கிறார் கரடியார் உன்னை என. வீடு முழுவதும் தேனடைகள்.,பழங்கள் எல்லாம் நிரப்பி விடுவார், என்னைவிட்டு ஒரு போதும் அகலுவதேயில்லை, வேறெந்தப்பெண்ணையும் ஏறிட்டும் நோக்குவதில்லை, இன்ன பிற விடயங்களில் கில்லாடி என்று அடுக்கிக்கொண்டே போகிறாள். அதற்கு அம்மா அவளிடம் என்ன சொல்லியிருப்பார் ... #கரடிக்காதல்


No comments:

Post a Comment