Saturday, January 7, 2017

முன்பே வா என் அன்பே வா ...




ரஹ்மானின் முதல் பத்தாண்டுகள் என்றும் மறக்கவியலாது எனினும் பின்னில் அவரின் இனிமை குறைந்து பல வித உலக இசைக்கோவைகளை முயற்சி செய்யத்தொடங்கிய போது தமிழுக்கு அந்நியப்பட்டுப்போனார். இனியும் மீண்டு வருவார் என்ற எண்ணமே இல்லாது போனது எனக்கு. இருப்பினும் 2006-ல் அவரின் பிந்தைய பத்தாண்டில் வந்த இந்தப்பாடலை சொல்லலாம்.அவரின் இசை இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்று தமிழ்கூறும் நல்லுலகுக்கென இசைத்தது என்றே கூறுவேன். இந்த ராகம் ஒரு சோக இசைக்கென (Pathos) உண்டானது.அதை கதையையொட்டி பின்னில் வரப்போகும் பிரிவைச்சொல்லக்கூடியதாக இருக்கட்டும் என எண்ணி இசைத்திருக்கிறார் என்றே கூறுவேன். அத்தனை மகிழ்வெனில் பின்னில் துயரம்தான் என்ற மறுக்கவியலாத கூற்றை பறைசாற்றும் இந்தப்பாடல். நிறைய வடநாட்டு ஜோன்புரி, நம்ம ஊரு 'நடபைரவி'. கோபாலகிருஷ்ணபாரதியின் 'எப்ப வருவாரோ' கூட நடபைரவி தான் :) தெரிகிறது பல இடங்களில். 'ஆசை முகம் மறந்து போச்சே'ன்னு பாரதி கூட பாடீருக்கான் :)  சுசீலா பாடின 'சொல் சொல் என் உயிரே' இப்டீ பல எகா'க்களை சொல்லலாம் ஜோன்புரிக்கு.

இது தந்திக்கருவி கொண்டு இசைக்கும் அந்த முன்னிசை/முகப்பு இசை(Prelude)க்கெனவே தொடர்ந்தும் கேட்பதுண்டு.  00:35 வரை அந்த தந்தி கொண்டு இசைக்கும் முன்னிசை மனதைக்கரைக்கும். சந்த்தூர் என்ற இசைக்கருவியாகத்தானிருக்க வேணும். முன்பக்கம் வளைந்த இரண்டு இரும்புக்குச்சிகளை வைத்துக்கொண்டு ( ஆங்கில L போல இருக்குமவை) இரு கைகளிலும் பிடித்து மடியில் கிடத்தியிருக்கும் அந்தக்கருவியில் உள்ள கிடைமட்டமாக இறுக்கி இருபுறமும் கட்டப்பட்டிருக்கும் தந்திகளில் அடித்து ஒலியெழுப்ப வேணும். கொஞ்சம் இம்மி பிசகினும் நாரசமே ஒலிக்கும். முகப்பு ஒலி மட்டுமல்ல பாடல் முழுதும் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் இசைத்திருப்பார்.பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா என்ற கலைஞர் இக்கருவியை இசைப்பதற்கெனவே பிறந்தவர் போல கேட்பவர் அனைவரையும் பைத்தியமாக்கி விடுவார் நம்மை. காஷ்மீரத்தை சார்ந்த இசைக்கருவி இது. மிகவும் அரிதாகவே தமிழிசையில் இடம் பெறும் இது. இந்தக்கருவியை வாசிக்கப்பயில்தல் ஆகக் கொடுமையான பயிற்சியாகவே இருக்கும். பெரும்பாலும் String Instruments வாசிக்கக் கற்றுக்கொள்வதே கடினமான செயல் :)

இந்தப்பாடலுக்கு மெட்டமைத்ததற்குப்பின்னரே வரிகள் வாலி எழுதியிருப்பார் என நம்புகிறேன். சரளி கொண்டு நிரப்ப வேண்டிய இடங்களிலும் சொற்கள் கொண்டே நிரப்பியிருப்பார். முகப்பில் வரும் அந்த ரோஜாத் தோட்டம், கைகளை விரித்துக்கொண்டு பாடும் பூமிகா ஆஹா.. எல்லாம் சுகம்டா. ஊட்டி போயிருந்தப்போ ரோஸ் கார்டன்'ன்னு டிக்கெட்லாம் வாங்கிக்கிட்டு உள்ள விட்டார்கள். நான் இந்த ஞாபகத்துலயே போனா அங்க ஒரு செடீல ரெண்டு பூ மட்டுமே இருந்தது. ஹ்ம்.. சரி அதை விட்டுவிடலாம். 03:07ல் ஆரம்பிக்கும் அதே சந்த்தூர் ஆஹா. ரஹ்மான் எப்பவும் இசைக்கலைஞர்களை இன்ன ராகத்தில் இசையுங்கள் எனக்கூறிவிட்டு அவர் தம் போக்கில் இசைக்கவிட்டு (இப்ப ஒரு ராகம் முழுக்க வாசிக்க வேணுமெனில்  ஆலாபனை, சரளி, மெயின் கோர்ஸ், பக்கவாத்தியம் எல்லாம் வாசித்து அடங்க குறைந்தது 20-25 நிமிடங்கள் பிடிக்கும். அதை அப்படியே வாசிக்கவைத்து விட்டு ) பின்னர் தமக்கு தேவையான பாகங்களை மட்டுமே நறுக்கி எடுத்து தமது பாட்டில் செருகி வைப்பார் என்று அறிவேன். 'டூயட்' படத்தில் கதிரி கோபால்நாத்'தின் சாக்ஸஃபோன் இசையையும் அப்படியே செய்திருந்தார். அது போல இங்கும்.

ஷ்ரேயா கோஷல் , மற்றும் நரேஷ் பாடிய பாடல். நரெஷின் முதல் பாடல் என்றறிகிறேன்.பொருந்தும் குரல் இருவருக்கும். இதே ஜோடியை ராசைய்யாவும் பாடவைத்தார் பிறகு ( பிரகாஷ்ராஜின் ஒரு கிரிக்கெட் படத்தில் ஒரு பாடல் வரும் ). ஹார்மனியில் ராசைய்யாவை மிஞ்ச ஆளே கிடையாதுதான். பாரதிராஜாவின் வெள்ளுடை உடுத்திய தேவதைகள் சூழ்ந்து கலங்கடிப்பது ஹார்மனிக்குத்தான் :)  இருப்பினும் சிஷ்யர் இந்தப்பாட்டில் கத்துக்கொண்ட வித்தையை மொத்தமாக இறக்கித்தான் வைத்திருப்பார். :) 

நரேஷ் 'நீநீநீ மழையில் வாட' என்னும்போது பின்னில் ஒலிக்கும் அந்த தந்திக்கருவியின் இசை சிறு மழைத்துளிகளால் நம்மை நனைக்கும். 02:59 மற்றும் 04:22 ல் ஷ்ரேயாவின் அந்த  கரப்பான்பூச்சி சங்கதி கவனித்தேதீரணும் அனைவரும். இந்த கரப்பான் பூச்சி சங்கதி என்ற பதம் அனுராதா ஸ்ரீராம் தான் அடிக்கடி பயன்படுத்துவார். ரொம்ப கஷ்டம் அதோட , கரப்பான் பூச்சி நம்மையறியாமல் காலில் ஊறிச்செல்லும்போது படக்கென தட்டிவிடத்   தோன்றுமல்லவா..  அதான் கரப்பான்பூச்சி சங்கதி. இங்க ஷ்ரேயா அப்டியே வெண்ணையில் புதுக்கத்தி நழுவுவதுபோல நழுவிச்சென்றிருப்பார். கேளுங்களேன் :) இப்டீ நிறைய சிலாகித்துக்கொண்டே செல்லலாம். 'நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டில் குடி வைக்கலாமா ?' #முன்பேவாஎன்அன்பேவா

Monday, January 2, 2017

யுவனின் பழைய கோப்பை


காதல் ஒரு கட்டுக்கதை - ஆரம்பம்' படத்தில் ஒரு ராப்' இசைத்திருப்பார் , அந்த இங்லீஷ் வாய்ஸ்ஸை பதிவு செய்து விட்டு பின்னர் தமிழ் குரலை இட்டு நிரப்பியதாக சொல்வார் யுவன். ஸ்டைலிஷ் தமிழச்சி. அதே முறையில் பதிவு செய்யப்பட்ட பாடல் இது. ஹ்ம்..இப்பல்லாம் தமது பாடலைக்கேட்க வைப்பதே பெரும்பாடாகி விட்ட யுவனுக்கு இது கொஞ்சம் ஸ்பெஷல். பாடலின் துவக்கத்தில் வரும் அந்த ஸிந்த்-தில் இசைக்கும் அந்த பிட் அற்புதம்.ஸ்லோ பாய்ஸன் தான் மெல்ல இறங்கும் விஷம். அதுல கொஞ்சம்  Arabian Erotic Style இருக்குது பாருங்க. அது தான் Just Elevating the Song. ராப்'ஐயும் கேட்க வைக்கலாம் தான். கொஞ்சம் ஹிப் ஹாப் கலந்தால். ராப் அப்பன்னா பிள்ளை ஹிப் ஹாப்..ஹிஹி.அதோட கொஞ்சம் Arabian Erotic Style. Beautiful Yuvan! 02:36-ல் தொடங்கும் ஸிந்த் இசையும்,பின்னிலேயே கொஞ்சும் ஆங்கிலக்குரலும், இடைவிடாத தாளமும் தலையை இடப்புறமாக மட்டும் திரும்பத்திரும்ப ஆட வைக்கும். கைகளைக்கட்டிக் கொண்டு முயற்சி செய்யுங்கள்.. 
ஸுஹானுபவா,,,ஹிஹி..

Little Mix-ன் Black Magic பாட்டு கேட்டுப் பாருங்களேன்..ஹ்ம்..அந்தப்பாடல் தான்னு நினைத்துவிட வேண்டாம்..அது முழுக்க பாப்'பில் இசைத்தது .இருந்தாலும் சும்மானாச்சுக்கும் சொன்னேன். கொஞ்சம் மிக்ஸிங்-லாம் அந்தப்பாடலின் அடியொட்டி இருப்பதை அவதானித்தேன். 00:31லிருந்து 00:32 அப்புறம் 01:25-01:26 வரை மேஜிக் கேளுங்க. நடந்துகொண்டிருக்கும்போது  நம்மையறியாமல் வந்து விட்ட படியில் ஏறி இறங்கியது போல ,எதிர்பாரா சாலையின் வேகத்தடையில் மெதுவாக ஏறியிறங்கியது போல உணர்வீர்.



 ஒரு கோப்பை - "உனக்காகவே உயிர் வாழ்கிறேன்"-னு மூன்றுபேர்மூன்றுகாதல்-ல ஒரு பாட்டு இசைத்திருப்பார் யுவன். அதன் சாயல். அதன் நீட்சி என்றே சொல்லலாம். 02:16லிருந்து தொடங்கும் அந்த இடையிசை தெளிவாகச் சொல்லும்.பின்னரும் பாடல் துவங்கும்போது "மின்னலே நீ வந்ததேனடி"ன்னு ரஹ்மான் "மே மாதம்" படத்தில் ஒரு பாடல் இசைத்திருப்பார். அதன் நினைவுகள் என ஏகத்துக்கு பழைய பாடல்களை ஞாபகப்படுத்தும் பழைய கோப்பையாகவே இருக்கிறது .இருப்பினும் மயக்க நிலையை உருவாக்கும் பாடல் ஆர்க்கெஸ்ட்ரெஷனை மெச்சலாம்.Touch by an Angel! யுவனின் பழைய கோப்பை'யில் நாமு'வின் புதிய கள். இதுவரை'ன்னு கோவா'வில் பாடிய ஆன்ட்ரியா இங்க கோப்பையில் குடியிருக்கிறார்.இருப்பினும் இதுவரை'யின் மயக்கம் வேற லெவெல். கோப்பை என்றாலே தள்ளாட்டம் தானே ?! :) Selena Gomezன் Kill Em With Kindness-ல் வரும் அந்த முகப்பு விசில் இசை பின்னரும் பாடல் முழுதும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புழங்க விட்டிருப்பர். சமீப காலத்தில் மிகவும் ரசித்த விசில் இசை , இங்கும் யுவன் பாடலை விசிலோடேயே ஆரம்பிக்கிறார்.

ஆன்ட்ரியாவின் வெஸ்ட்டர்ன் ட்ரீட் ஸ்ருதிஹாசனை விடவும் ரொம்ப ஆதன்ட்டிக். ஸ்ருதி கற்றுக்கொண்டு பாடியது போலவே தோன்றும், ஆன்ட்ரியாவோ இயல்பில் இருப்பதை தாமாக உணர்ந்து பாடுவார். அது தான் ஆன்ட்ரியா! எனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஆதங்கம். இவர் ஏன் இசையமைக்கக்கூடாது? ஏதேனும் ஆல்பமாவது வெளியிடலாம். கேபா ஜெரீமியா' கிட்டாரிஸ்ட்டை வைத்துக்கொண்டு ஒரு தனிப்பாடல் திரட்டு வெளியிடலாம். கேபா ஜெரீமியா'யின் தமக்கையா இவர்..தெரியவில்லை , எனில் இருவருக்கும் ஒரே குடும்பப்பெயர் (ஸர்நேம்) :) "பெண் என்பவள் ஆண் பார்வையில் மோகச்சதை தானா?" என்று நாமு'வும் தம் பங்குக்கு தெளியவிடாது மயக்குகிறார். முகப்பு இசை முடிந்ததும் கூட தெரியாமல் இரண்டு செகன்ட் கழிந்த பின் பாட ஆரம்பிக்கிறார் ஆன்ட்ரியா..அத்தனை மயக்கம் ..ஆஹா! 'சொர்க்கம் மதுவிலே,சொக்கும் அழகிலே'ன்னு ராசைய்யா இசைத்தது மிகவும் போதையில் அதை ஆராதித்து மகிழ்ந்து பாடுதல். இங்கு சோகத்தில் மூழ்கி வெளிவர முயற்சி எடுக்காமலிருக்க பாடுகிறார் ஆன்ட்ரியா.




உன் பதில் வேண்டி - தொடக்கத்திலேயே 'அறுவடை நாள்' படத்தில் ராசைய்யாவின் ஜீவன் முழுதுமாக உருக்கி இடபட்ட பாடல் தெரிகிறதா ? 'தேவனின் கோயில் மூடிய நேரம்'. அதுவே மிக மென்மையான பாடல். அதையும் இன்னமும் மெலிதாக்கி இளைக்கவைத்து கொஞ்சம் ஹிந்துஸ்தானி ட்ரீட்டில் கொடுத்திருக்கிறார் யுவன். ஹிந்துஸ்தானி பாடு உன் குரலுக்கு சூட் ஆகும் என்று ரஹ்மான் சொன்னதாகக்கேள்வி. இங்கு பாடியிருப்பது சித்தார்த் எனத்தெரிகிறது. பெயர் பார்க்காதவரை யுவன் என்றே நினைத்திருந்தேன்.இருப்பினும் யுவனின் ரேஞ்சுக்கு என இசைக்கப்பட்ட பாடல். இது என்னைக்கேட்டால் 'தேவனின் கோயில்' யுவனின் பாணியில் இசைத்தது என்றே கூறுவேன்.

'வழிப்போக்கனின் பாதையில் நிழலாக வருகிறாய்' ஆஹா.. எத்தனை சாதாரணமான வரி இது. இடையிசை முழுக்க அரேபியன் ஸ்டைல் ஸ்டிங்-கின் 'டெஸர்ட் ரோஸ்' (Sting Desert Rose) கேளுங்க. அதே ஃபீலிங். 'பேசு' என்றொரு ஆல்பம், அதன் ஸ்டைலில் தமது வழக்கமான பாணியில் செய்த பாடல் இது. 'உந்தன் வார்த்தையில் எந்தன்' , 'கெட்டிமேளம்' என்ற வரிசையான பாடல்களினூடே 'தப்பு தண்டா செய்யும் வயசு' (ஆதலினால் காதல் செய்வீர்) என்பன போன்ற யுவனின் comfort zone-லிருந்து இசைத்த பாடல். கொஞ்சம் வேறுபடுத்திக்காட்ட அந்த அரேபியன் ஹார்மனி இடையிசையென. ஹிந்துஸ்தானி ட்ரீட் எனில் சொய்வு வந்துவிடும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு, ஆகவே அதையொட்டிய கொஞ்சம் அந்நியமான அரேபியன் ஸ்டைலை எடுத்துக்கொண்டால் நல்லதென இசைத்திருக்கிறார். எல்லாம் மிக்ஸ் தான் சினிமா இசை. ஜுகல்பந்தி - சமபந்தி போஜனம்.




உன்னை உன்னை உன்னை - முகப்பு 'பேசு' ஆல்பமில் உள்ள 'வெண்ணிற இரவுகள்'  என்ற யுவன் 'சோலோ' போல பியானோவின் கட்டைகளை மெதுவே அழுத்தி இசைத்த பாடலை ஒத்திருக்கிறது. வரிகளுக்கு இசைத்த பாடல் அதுதான் எந்த ராகத்துக்குள்ளும் அமர்ந்து கொள்ள இயலவில்லை. வாசித்து ஒப்பேற்றுகிறார் யுவன். முகநூல் ஸ்டேட்டஸ்கள் போல வாக்கியங்கள் தொக்கி நிற்கின்றன. வேணுமெனில் இயக்குநர் ராம் மட்டுமே வாசித்துவிட்டு சென்றிருக்கலாம் இந்த நாமு'வின் வரிகளை. பின்னில் இதே பியானொ'வின் கட்டைகளை மெதுவே அமிழ்த்தி.

"என் பெயரே எனக்கு மறந்து போன இந்த வனாந்தரத்தில் என்னைப்பெயர் சொல்லி அழைத்தது நீயா நீயா ?!"  என எம்எஸ்வி ஐயா,வைரமுத்துவின்("திருத்தி எழுதிய தீர்ப்புகள்" தொகுப்பில் இடம் பெற்ற கவிதை என நினைக்கிறேன்) புதுக்கவிதைக்கு இசைக்கப்படாத பாடு பட்டு இசைத்திருப்பார். இடையிசையில் லால்லா வெல்லாம் போட்டு..ஹ்ம்.. முடியலடா சாமி என்று ஜாம்பவானே தோற்ற இடம் அது. சொற்களில் சந்தம் இல்லையெனில் சப்பென்று உரைநடையாக முடிந்து போகக்கூடியன. அதுக்குத்தான் அப்பப்ப 'மானே தேனே'ல்லாம் போட்டுக்கணும் ..ஹிஹி.  தோதுப்படவில்லை எனில் அதைக்கேட்பவனுக்கு அந்நாள் அருமையான நாளாகவே இருக்கும் ( fine day ..hehehe )

இப்ப ஏன் சொல்றேன்னா என்னதான் வரிகள் எழுதினாலும் அது ராகத்துக்குட்பட்டு உட்காரவில்லையெனில் கேட்கச்சகிக்காது. இவற்றையெல்லாம் பின்னில் ஒரு வயலினோ இல்லை பியானோவோ ஒலிக்கவிட்டு வாசித்துவிட்டு செல்லலாம். இங்கும் ராமும் இதையே செய்திருக்கலாம்.

ரெட்ரோ எனச்சொல்லவியலாத , முழுமையாக தமது பிந்தைய பாணியிலேயே இசைத்த ஆல்பம் இது. பெரும்பாலும் நாம் வழக்கமாக எதிர்பார்க்கும் யுவனின் ஆல்பம் தான் இது. புதுமை என ஏதும் இல்லை. யுவனின் பழைய மொந்தையில் நாமு'வின் புதிய கள்ளூற்றப்பட்டிருக்கிறது. ராமாவாது ஏதாவது புதிதாதத் தந்திருக்கிறாரா ,,படம் வந்ததும் பார்க்கலாம்!



.


Thursday, December 29, 2016

லீஸா ஸ்டாஃபர் - பயோக்ராஃபியா


லீஸா ஸ்டாஃபர் - நெய்தல் கலை ஓவியங்கள் புனையும் கலைஞர். சுவிட்ஸர்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது.  நேஷ்னல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்' பெங்களூரில் சென்றிருந்தேன். நிறைய நூல் நெய்து அதில் ஓவியங்கள் உண்டாக்கி காட்சிப்படுத்தும் கலைஞர். பி ஆர் விஸ்வநாத்' என்ற ஒளிப்பதிவாளர்/ ஓவியக்கலைஞர் அந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். பயோக்ராஃபியா' என்ற பெயரில். "கலை என்பது சமூகத்தை திருத்துவதற்கோ இல்லை பாதிப்பை ஏற்படுத்துவதற்கோ இல்லை" என்கிறார்.

முழுக்க வாழ்க்கை வரலாறு போலல்லாது , அவரின் பணிகளினூடே இவர் காமிராவை வைத்து எடுத்தது போல கொஞ்சமும் சலிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடும் டாக்குமென்ட்டரி. வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார். பல சொற்கள் கிட்டாது தவித்து யோசித்து , ஸ்விஸ் மொழியிலிருந்து தமக்குள் மொழி பெயர்த்துக்கொண்டு பின்னர் சொல்கிறார். அது வரை காமிரா அசையாது அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் அவரவர்க்கான மொழி என்று ஒன்று உண்டு. ஜெர்மன்/இட்டாலியன்/ போல ஸ்விஸ் மொழியும் தமது சொற்களைக்கொண்டு விளங்குவதே. நான் ப்ராக்(செக் குடியரசு)கில் பணி நிமித்தம் தங்கியிருந்தபோது கண்கூடாக அதைக்கண்டிருக்கிறேன். தமிழனுக்கு இந்தி எங்கனம் ஒரு வெறுப்போ, காலனியாதிக்கம் செலுத்தும் மொழி என்ற தேஸ்யம் உள்ளது போல ஐரொப்பிய பிற மொழி பேசும் நாடுகளுக்கு ஆங்கிலம் மேல் அத்தனை வெறுப்பு. எனக்கோ ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் தெரியாது ( இன்னமும் தான் :) ).

அப்போது சிலர் கூறுவர். ஜெர்மனோ இல்லை கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் இங்கு சமாளிக்கலாம் என. கொஞ்சமும் ஸ்னானப்ரப்தியே இல்லாத வேறு குடும்பத்தை சேர்ந்த மொழி அது.  அது போல அவர்களுக்கு ஆங்கிலம் என்றால் பிணக்கு. இருப்பினும் வலுவில் ஆங்கிலத்திலேயே உரையாடுகிறார் லீஸா. என்ன காரணம் என ஊகித்தேன். படம் எடுப்பவர் இந்தியாவில் இருந்து வந்திருப்பதால் தாம் உரையாடுவது அவருக்கு புரிய வேணும் என்று கருதி பேசியிருக்கலாம். இடையிடையே அவர்தம் மகள் சொற்களை எடுத்துக் கொடுக்கிறார். உண்மையைச்சொன்னால் அவரின் பெயரும் அவர்தம் ஓவியங்களும் எனக்குப் பரிச்சயமானது இந்த ஆவணப்படத்தின் மூலமாகத்தான். ஒருவேளை இதையும் அவர் ஊகித்திருக்கலாம் உலகம் முழுக்க பரவ ஆங்கிலத்தில் தான் பேசவேணும் என்று. மொழி மற்றும் சொற்களுக்கு முன்னரே கலை தோன்றிவிட்டது என்று அறுதியிட்டு கூறுகிறார் லீஸா. இதுவும் கூட  காரணமாகக்கூட இருக்கலாம்.

இருப்பினும் என்னியோ மரிக்கொன் தமது 80ஆவது வயதில் ஆஸ்கர் பரிசு மேடையில் தம் தாய்மொழியான இட்டாலியனிலேயே பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு கருத்து.

முதற்கணவர் உடல் நலக்குறைவால் விரைவில் இறந்துவிட்டதையும் பின்னர் ஒரு பெயின்டருடன் தாம் இணைந்து வாழ்ந்ததையும் குறிப்பிடுகிறார். இரண்டாவது உறவு அத்தனை சுகமாயில்லை. அந்த பெயின்ட்டர் இவரை கீழ்ப்படிந்து நடக்கும் படி பணித்ததையும் , தமது ஓவியங்களின் மீது பொறாமை கொண்டதாகவும் வருந்துகிறார். தம்பதியருக்குள் இப்படி ஒரு பிணக்கு. Jealous என்ற சொல்லை ஜெலூஸ் என்று உச்சரிக்கிறார். பெண்கள் ஆணை சார்ந்திருக்கவேணும் , பணம் சம்பாதிப்பது ஆணுக்குரியது(ஹ்ம் அங்குமாடா இதெல்லாம் ?!) இப்படிக்கும் இதெல்லாம் 70-80களில் நடக்கிறது. பின்னர் அந்த வலிகொடுக்கும் உறவிலிருந்து மிகுந்த பிரயாசையுடன் வெளிவந்து தம் மகள்களோடு ஓவியப்பணியை தொடர்ந்திருக்கிறார்.

Tapestry என்ற பல நிறங்கள் கொண்ட நூல்களை சட்டகத்தில் வைத்துக்கொண்டு அதில் ஓவியங்களை உருவாக்குதல் இவரின் சிறப்பு. க்ராபிக் டிசைன்ஸ், ஓவியங்கள் என பல படிப்புகளை கல்லூரியில் பயின்று பின்னர் அதையே தொழிலாக கொண்டிருக்கிறார் லீஸா. தமது முதற்கணவர் வேண்டுகோளுக்கிணங்க தாவரவியல் ஓவியங்களை வரைந்திருப்பதை காண்பிக்கிறார். அவர் ஒரு தாவரவியல் நிபுணராக இருந்திருக்கிறார் எனினும் 36 வயதில் இறந்து விட்டதை நினைவு கூர்கிறார். இந்த டாபிஸ்ட்ரி பெண்களுக்கான கலை என்பதில் உறுதியாக இருக்கிறார். இயல்பிலேயே நெய்தலில் பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்றும் கூறுகிறார்.

டாப்பிஸ்ட்ரி மட்டுமல்லாது கண்ணாடியை சிறு கத்தி கொண்டு கீறி அதில் ஓவியங்களை உண்டாக்கி பின் வண்ணம் தீட்டும் கலையும் இவருக்கு கைகூடி வந்திருக்கிறது. அத்தனை தேவாலயங்களிலும் இந்த வகை ஓவியங்களைக்காணலாம். வெளிப்புற வழி சூரிய ஒளி அக்கண்ணாடியில் பட்டு சர்ச்சுக்குள் படரும் நிழலில் ஓவியம் துலங்கும். அத்தனை வண்ணங்களும் ஜெகஜ்ஜோதியாக ஒளிரும். நான்கு காலங்கள் என்ற ஓவியம் நான்கு கண்ணாடிகளில் செய்து அதை சர்ச்சின் ஜன்னல்களில் பொருத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.பதினைந்துக்கு பத்தடி என்ற அளவில் இந்த ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

கம்ப்யூட்டர் க்றாபிக்ஸ் பற்றி அத்தனை விருப்பின்றியே பேசுகிறார். 80களில் அப்போது வெளிவந்த தொழில் நுட்பத்தை அவர் வெறுத்திருக்கிறார். அந்தச்சமயமே அவர் மரபு நோக்கி நகர்ந்து ட்ரெடிஷனல் ஓவியங்களை டாபிஸ்ட்ரியில் நெய்யத்தொடங்கியிருக்கிறார்.  உலகம் முன்னோக்கி கலைகளை வேறு தளத்துக்கு எடுத்துச்செல்ல முற்படும் போது அவர் பின்னோக்கி தன்முனைப்புடன் தம் கைகள் கொண்டு உருவாக்கும் கைவினைக்கலஞராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார்.

அவர் கண்களில் அந்த வெறுப்பு மண்டிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. அதுவரை பென்சிலும் பேப்பருமாக வரைந்து கொண்டிருந்தவர் , மிகுந்த உடலை வருத்தும் டாப்பிஸ்ட்ட்ரியில் கவனம் செலுத்தத்தொடங்கி அவரின் புறங்கைகள் உள்ளுக்குள் வளைந்து போயிருக்கின்றன. கூன் விழுந்து நெஞ்சு முன்பக்கம் நகர்ந்து உருவம் சொல்லிக்கொள்ளும் படியாகவே இல்லை அவருக்கு, கணினியும் தொழில் நுட்பமும் எத்தனை வெறுப்பை அவருள் விதைத்திருக்க வேணும் என்பது தெளிவு. விரல்களும் புறங்கைகளும் அந்த க்றோஷா/கொண்டை ஊசிபோல வளைந்து போனதன் காரணமாக வழக்கமாக வாசிக்கும் பியானோவை இப்போதெல்லாம் வாசிக்க முடியவில்லை என வருந்துகிறார்.

டாப்பிஸ்ட்ரி தவிர, தனியாக உள்ளூர் ஸ்விஸ் கடிகார நிறுவனங்களுக்கு லெட்டர் பேடுகளும், லோகோக்களும் வரைந்து கொடுத்திருப்பதை ஆர்வத்துடன் காட்டுகிறார். எல்லாவற்றிலும் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. பின்னர் விஸ்வநாத்துடன் காரில் பயணித்து தமது ஓவியங்கள் நிறுவப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று காண்பிக்கிறார். ஒரு பெரிய டப்பிஸ்ட்ரி வொர்க், கிட்டத்தட்ட 40 அடிகள் உயரமும், 10 அடி அகலமும் கொண்ட டாப்பிஸ்ட்ரியை ஓவியக் கண்காட்சி நடக்கும் ஆர்ட் கேலரியில் காண்பிக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேலாக அதற்கென உழைத்திருப்பதாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட கலையால் சமூகத்திற்கு என்ன பயன் என்ற விஸ்வநாத்தின் கேள்விக்கு , இதனால் ஒரு பயனும் இல்லை எல்லாம் எனது விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டவையே எனத்தெளிவாக பதிலளிக்கிறார் லீஸா. இருப்பினும் ஸ்விஸ் உள்ளூர் கலைகளில் வேறு வெளிநாட்டுத்தாக்கங்களை குறித்து அச்சம் தெரிவிக்கும் அதே லீஸா, கொரியன் பாதிப்பில் தாம் ஒரு டாப்பிஸ்ட்ரி செய்திருப்பதையும் காண்பிப்பது நகை முரண். இருப்பினும் இவரின் மகள்கள் யாரும் இப்பணியை தொடராது இசை மற்றும் இன்னபிற கலைகளை பயிற்சி செய்பவர்களாகவே இருக்கின்றனர்.  ஒரு விஷயம் சொன்னார் விஸ்வநாத், பொதுவாக தாயை பேட்டி எடுக்கும்போது மகள்களோ/மகன்களோ கூட இருப்பதில்லை தாமுண்டு தம் வேலையுண்டு என்றேயிருப்பது மேற்கத்திய கலாச்சாரம், ஆனால் இங்கு தலைகீழ். கூடவே பயணிக்கின்றனர் ஆவணப்படம் முழுக்க.

பின்னர் படம் முடிந்ததும் விஸ்வநாத் பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நல்ல சுவாரசியமான கேள்விகள் வந்தன. அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார். எனது கேள்விகள் இவை, ஸ்விஸ்ஸீல் நிறைய கலைஞர்கள் இருந்த போதிலும் லீஸாவை தேர்ந்தெடுத்தது ஏன் ? சமூகத்திற்கு என் கலைகள் ஏதும் செய்யப்போவதில்லை என லீஸா கூறுகிறார். அதே கேள்வியை உங்களிடம் (விஸ்வநாத்திடம்) கேட்பின் என்ன பதிலுரைப்பீர்கள், இந்த டாக்குமென்ட்ரியை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததா (ஏனெனில் அவர் 2009-ல் மறைந்து விட்டார்). லீஸாவின் பணியில் அவர்தம் கலையில் ஏற்பட்ட ஈர்ப்பே அவரைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேணும் என்பதும், மேலும் மரபு வழி வந்த அவரின் கலைப்பயணம் குறித்தும் தாம் மகிழ்ந்ததாலும் படம் எடுக்கத்தோணியது என்றார். சமூகத்திற்கென , இந்தப்படத்தை ஒரு சிறுவன் பார்த்து அதன் மூலம் அவனின் கலையை வெளிக்கொணர இது உதவலாம் என்பதே எனது நோக்கம். இந்தப்படத்தின் ரஃப் கட்டை மட்டுமே அவரால் காண முடிந்தது,முழுக்க படம் எடுத்து/இசைக்கோர்ப்பெல்லாம் செய்து முடித்து முழுப்படமாக வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். பலமுறை இந்தப்படத்தின் பல வித நேரங்களில் அவரிடம் காண்பித்து பல மாற்றங்கள் செய்ததாகவும் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய கலைஞர், ஒரு விக்கிப்பீடியா பக்கம் போலும் இல்லை.அவரைப்பற்றிய அவரின் ஓவியங்களின் படங்கள் எவையும் இணையத்தில் கிடைக்கவேயில்லை எனக்கு. (கிடைக்கும் படங்களும் வலைப்பூக்களும் இதே பெயரில் இருக்கும் வேறொரு அமேரிக்கப்பெண்மணியின் ஓவியங்களாகவே இருக்கிறது) ஒருவேளை அதுவே அவரின் எண்ணமாகக்கூட இருக்கலாம். ஏனெனில் கணினி கொண்டு உருவாக்கும் படைப்புகளில் அவருக்கு கிஞ்சித்தேனும் ஆர்வம் இருந்ததில்லை. விஸ்வநாத்தின் ஆவணம் மட்டுமே அந்தப்பணியை செய்திருக்கிறது. மேலும் கலை என்பது பிறரின் அங்கீகாரம் தேடுவதற்கெனச் செய்யப்படுவதில்லை , அது முட்டமுழுக்க அதை உருவாக்கும் கலைஞனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாகவே இருக்கவேணும் என்பதே விஸ்வநாத்தின் கூற்றாக இருக்கிறது. 




.

Sunday, December 25, 2016

"Original Tamils"



நேற்று (24/12/2016) பெங்களூர் காக்ஸ்டவுன் அலொய்ஸிஸ் கல்லூரியின் அரங்கில் ஸ்டாலின் ராஜாங்கம் (அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர்) அயோத்தி தாசர் பற்றி உரையாற்றினார். நிறைய புதிய விஷயங்கள் எனக்குத்தெளிவாகின. 1800 களிலேயே அவரது பணி துவங்கி விட்டதை எடுத்துரைத்தார். "Original Tamils" என்ற வகைப்பாட்டில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்க்கவேணும் என்பது, பெரியார்/அம்பேட்கர் ஆகியோருக்கு முன்னரேயே விடுதலை பற்றிப்பேசியது, சிதம்பரத்தில் தீப்புகுந்து தமது பக்தியை நிரூபித்த நந்தன் ஒரு பெளத்த மன்னன் (ஆண்டான் அடிமை அல்ல), பெரும்பான்மையான இலக்கியங்கள் பெளத்த/ சமண மதத்தை சார்ந்தவை,சங்க இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள் மறைக்கப்பட்டவை, ICS தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேணும், இந்தியாவில் அல்ல, ஏனெனில் இந்தியர்களை ஆளுமையில் ஆங்கிலேயர்கள் சாதிப்பாகுபாடின்றி நடத்துவர் , மேலும் தாதாபாய் நவ்ரோஜி 300 கையெழுத்துகள் கொண்டே இந்த கோரிக்கையை முன்வைத்தார், அயோத்தி தாசரோ மூவாயிரத்துக்கும் மேலான கையெழுத்துகளுடன்  இந்த ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவது குறித்து கோரிக்கை முன்வைத்தார். நீதிக்கட்சியின் முன்னோடி தாசருடையது, இதைப்பற்றி பெரியாரே சில இடங்களில் கூறியிருக்கிறார்.இப்படி பல விஷயங்களை எடுத்துரைத்தார்.

கார்த்திகை தீபம் என்பது கார்' என்றால் இருள் துல' என்றால் துலக்கக்கூடிய என்ற பொருள். மேலும் அடிமுடி காணா அண்ணாமலை என்பதெல்லாம் நம்ப வைக்கப்பட்ட கதைகள். ஆமணக்கு விதையிலிருந்து எங்கனம் எள் எடுத்து பின் அதை செக்கிலாட்டி எண்ணெய் பிழிந்தெடுப்பது போல என்ற முயற்சிகள் கொண்ட எண்ணை கொண்டு எரியவைக்கப்படும் விளக்குகள் என்பதே.



திருவையாறில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆனை மேல் அம்பாரி வைத்து அந்த ஆனையை முதன்மையாக அணியில் வலம் வரச்செய்யும் மரபு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. சங்கீத வைபவத்தில் இன்றும் இருமணிக்கூறு நிகழ்வாக பறையடிக்கும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து நமக்கும் தெளிவாகலாம் தமிழ்ப்பண்ணிலிருந்து தோன்றியது அனைத்தும் என்பது.





ஸ்டாலின் ராஜாங்கம் பேராசியர் என்பதால் அவர் வகுப்பு நடத்துவது போலவே தோன்றியது எனக்கு. ஹிந்து' ரா விநோத்'தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடந்தது. உரை முடிந்ததும் கலந்துரையாடல். பல பேர் கேள்விகள் கேட்டனர். மாணாக்கர்களுக்கு விளக்கம் சொல்வது போல பொறுமையுடன் பதிலுரைத்தார். பின்னர் அனைவருமாக சேர்ந்து ஷாந்தி சாகரில் தேநீர் அருந்திவிட்டு வீடு கிளம்பினோம்.

 

Thursday, December 22, 2016

அழகிய சூடான பூவே


அழகிய சூடான பூவே - ரொம்ப நீட்டான பாடல். ட்ரெம்ப்பெட்டும்/சாக்ஸும், வழக்கமான பெர்குஷனும் வைத்துக்கொண்டு ஜாஸில் இசைத்திருக்கிறார். இப்பதான் அழகா ஒரு ஜாஸ் ஒண்ணு போட்ருந்தார் 'அக்கம் பக்கம் பார்'னு .இருந்தாலும் மக்களுக்கு போரடிக்கும் இதைக்கேட்டு. 02:44-ல் ஆரம்பிக்கும் அந்த வயலின் இனிமை. விஜய்க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் இந்தப்பாடல் டூயட்டா...கொஞ்சம் கஷ்ட்டமாத்தான் இருக்குதுங்ணா.. :) இருப்பினும் குரல்கள் புதிது! சூப்பர் சிங்கர்லருந்து யாரோ ரெண்டு பேரப்புடிச்சுக்கொண்டு வந்து பாடவெச்சமாதிரி இருக்கு :) ஹாரிஸ் ஸ்டைல்ல போட்ட மாதிரி இருக்கு. படம் பாக்கப்போனா எங்கூர்ல அதுவரைக்கும் பீகாரில் வெள்ளம் பிரதம மந்திரி போனார் கொல்லம்னு  போட்டு அறுத்துத் தள்ளிட்டு,மெயின் பிக்சர் போடும்போது ஒரு ம்யூஸீக் போடுவாங்ய சாந்தி தியேட்டர்ல அது மாதிரி இருக்கு பாட்டு ஆரம்ப இசை.

நில்லாயோ - வயலினிசையுடன் துவங்கும் பாடல் , கொஞ்சம் பாப்' மற்றும் ஜாஸ் கலவை.வெகு நாட்களுக்குப்பிறகு இசைக்கருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து இசைத்த மெலடி.! எலெக்ட்ரானிக் பாக்ஸ்களை காண இயலவில்லை. அருமை! பெண்பால் வெயிலோ?! வெளியூர் நிலவோ? பதினாயிரம் ஆண்டுகள் அகவை ஆயினும் இன்னும் இளங்கன்னியாக உலவும் தமிழ் வைரமுத்துவின் வரிகளில்..ஆஹா! கொஞ்சம் முன்னால 'நீர்ப்பறவை'யில்  ரகுநந்தன் இசைத்திருந்தார் 'பற பறவென பறவை ஒன்று' என! ஏறக்குறைய அதேதான். எனினும் இனிமையாக இருக்கிறது இதுபோன்ற இசை கேட்பதற்கு. 'வெரசாப் போகயில'ன்னு இமான் போடிருந்தார் விஜய்க்கென ஜில்லாவில. இப்டி ஏகத்துக்கு க்ளீஷே கிழிஞ்சு தொங்குது! இருப்பினும் ஹரிச்சரன் குரல் பாடலைக்கேட்க வைக்கத்தான் செய்கிறது!


பட்டையக்கெளப்பு - இதெல்லாம் எண்பதுகளில் ராசைய்யா இடதுகையாலயே போட்ட பாடல்களப்பா சலிக்கிறது சநா. 



பாப்பா பாப்பா - டப்பாங்குத்து! வேறொண்ணுமில்லை! இதுல விஜய் வேற பாடீருக்கார். ஹாரீஸ் கூட நல்ல பாடல் கொடுத்திருந்தார் விஜய்க்கு. கூகிள்ல தேடிப்பாக்காமலேயே கேக்கலாம் அந்தப்பாடலை. விஜய் ஆன்டனி மாதிரி ஒரு நாக்க மூக்கா, இல்ல தம்பி அநிருத் 'செல்ஃபி புள்ள' மாதிரி போட்ருக்க வேணாமா சநா. போரடிக்குதூங்ணா.


வர்லாம் வர்லாம் வா - காபாலீஈடாஆ நெருப்புடாஆ ப்ளாக்யிரஸம்டாஆ ..விட்ருங்க சநா போதும் ..இதே மாதிரி 'கொடி'ல தனுஷ்க்காகவும் ஒண்ணு போட்டு எதுக்கு இதெல்லாம்?! ஹ்ம்...இப்ப விஜய்க்காக ஒண்ணு! புதிய இசையாகத் தோன்றவில்லை.பழகிய இசை! எனக்கென்னவோ இது ரெட்ரொ'வாக இசைத்தது போலவே தோன்றுகிறது அரைத்த மாவுக்குப் பேர்தான் ரெட்ரோ'வா ?!..ஹிஹி .... 


 .


Friday, December 16, 2016

சொப்னசுந்தரி


சொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு  என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக்கும் மேல வாய்ஸ் ஓவர் தான் ஓடுது. கிரிக்கெட்டெல்லாம் பாத்து ரொம்ப நாளாச்சு எனக்கு. இருந்தாலும் ஷார்க்ஸ் டீம் ஆடுனா கண்டிப்பா பார்க்கலாம். நிதின் சத்யா ஆவேசமா , ஆமா பத்து நாள் நான் இப்டித்தான் இருப்பேன் எனக்கு ஃப்ரென்ட்ஸ்ங்க தான் முக்கியம்னு குமுறுதல் அழகு. படத்துலயே சிவா'வுக்கு தான் மொக்க ரோல்.ரெண்டு முட்டை உடையும் சீன் மட்டுமே சிரிப்பு :) சொப்னசுந்தரி சலூனுக்கு வந்திருக்கான்னு ஃபோனப்போட்டு எல்லாரையும் வரவழைக்கிற டெக்னிக் ப்ரேம்ஜியோட சொந்த டெக்னிக்காதான் இருக்கும்.ஹிஹி. அதே ஃப்ரென்ட்ஸ், அதே எடக்கு மடக்கான வசனங்கள். இருந்தாலும் ஜெய்க்கு கல்யாணம் நின்னுபோயி , யாரும் யாரையும் பாக்க வேணாம்னு முடிவு பண்ணீட்டு அப்புறம் அதே க்ரவுன்டல சண்டை போடுவதற்காக வந்துவிட்டு எல்லாருமா சேர்ந்து கல்யாணம் பண்ணி வைப்போம்னு நெகிழ்வா மாறும் சீன்..ஆஹா அற்புதம்.



இப்டி ஒரு உச்சக்கட்ட காட்சில்லாம் வெக்கிறதுக்கு பாக்யராஜைத்தவிர வேற யாருக்கும் திராணி இருக்கான்னு தெரியல. செம செம. எல்லோரும் அவங்களோட பங்கை சரியாக செய்திருக்க யுவன் மட்டுமே டக் அவுட் , படத்தின் பின்னணி முழுக்க தேனியாகி விட்டதால் ராசைய்யாவின் பழைய பாடல்களையே ஓடவிட்டு இதற்கெல்லாம் யுவன் தேவையா? ஹ்ம்... தீம் ம்யூஸிக் ஜெய்க்கு சோகம் வரும்போதெல்லாம் எரிக் க்ளாப்டனின் 'wonderful night'ஐயே ஒலிக்க விடுகிறார். 'வாழ்க்கைய யோசிங்கடா'ன்னு ஒரு க்ளாஸிக்கை இசைத்தவரா இப்படி ?!.. ஸ்கோப் இல்லாமல் இல்லை. அழகான காதல் தருணங்கள் இருக்கத்தான் செய்கிறது , அந்த உறுதிவிழாவில் கூட பாடல் எடுபடவில்லை....அந்த அருவியின் பின்னணியில் ஒலிக்கும் பாடலும்..முதல் பாகத்தின் முழு வெற்றிக்கு கீப்பராக இருந்தவர் இங்கு லெவென்த் மேன் கூட இல்லை. சோகம். வைபவ் புகுந்து வெளாட்றார். எப்டியாவது hook or crook மேட்ச் ஜெயிச்சே ஆகணும்னு ஆஹா. செம டெப்த்தான கேரக்டர்..... சென்னை 28 த்ரீ எப்ப பிரபு சார் ?!#சொப்னசுந்தரி




Sunday, December 4, 2016

சைத்தான்.....ஆ



அரே சைத்தான் கீ பச்சே.. 'சுஜாதா'வையே கொன்னுட்டியே... ஜெயலட்சூமீ... இது ஏதோ 'சித்தீஈஈ' மாதிரி படம் பூரா ஓலம் போடுது. சுஜாதா 'ஆ' கதைய எப்டி முடிச்சார்னு எனக்கு ஞாபகமில்ல. ஏதோ கேப்டன் படம் இப்பல்லாம் வர்றதில்லங்கறதுக்காக இப்டியா விஜய் ஆன்டனி ?! ஆர்கன் திருட்டு,பூச்சி மருந்து கொலை,பிறன்மனை நோக்குன்னது இப்டீல்லாமா போட்டு கொழப்புறது ?

டோட்டல் ரீக்கால்னு ஒரு படம் , ஆர்னால்ட் நடிச்சது. எல்லாமே நமக்கு நினைவுகள்தானே.? எங்க ஊர் சுத்தீட்டு வந்தாலும், வெளிநாடே போனாலும் ஒரு மாசம் தாய்லாந்து மசாஜ் அடிச்சாலும் கடைசிக்கு மிஞ்சுவது நினைவுகள் தான். வேற்றுக் கிரகங்களுக்கு பயணம், பயணம்னா நெஜமாவே போறதில்லை.. அந்தப் பயணம் பற்றிய நினைவுகள் உங்கள் மனதில் பல ஆண்டுகள் அழியாதிருக்கும்னு ஒரு கார்ப்பொரேட் கம்பெனி விளம்பரம் பாத்துட்டு ஆர்னி அங்க போவார், ஊர் சுத்துறதுன்னா கூடவே ஒரு அம்மணியும் வருவாங்க , யாரை வேணாலும் செலக்ட் பண்ணுங்கன்னு நிறைய படங்கள் காட்டுவார்கள்.  

ஆர்னி கொஞ்சம் எடக்கு மடக்கான பொண்ண தேர்ந்தெடுத்து அவா'வுடன் பயணிக்க நினைப்பார். ஊசி ஏற்றப்பட்டதும் மூளையில் படாத இடத்தில் பட்டு அதே பிறப்பில் அவருக்கு வலுக்கட்டாயமாக அழிக்கப்பட்ட தனது செவ்வாய்க்கிரக போராளியின் நினைவு வந்துவிடும். அப்புறம் அடுத்த ராக்கெட் பிடிச்சு செவ்வாக்கெரஹம் போயி எதிரிய அழிப்பார்னு வெச்சுக்குங்களேன்.. என்ன சைத்தான் மாதிரி இருக்கா...ஹிஹி.. அதே தான்.. ஆனா ஆர்னி 18 இஞ்ச் ஆர்ம்ஸ் வெச்சு சொம்மா மெரட்டீருப்பார். இங்க விஜய் ஆன்டனி ..சரி வேணாம்..ஆ..!


.