லீஸா ஸ்டாஃபர் - நெய்தல் கலை ஓவியங்கள் புனையும் கலைஞர். சுவிட்ஸர்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. நேஷ்னல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்' பெங்களூரில் சென்றிருந்தேன். நிறைய நூல் நெய்து அதில் ஓவியங்கள் உண்டாக்கி காட்சிப்படுத்தும் கலைஞர். பி ஆர் விஸ்வநாத்' என்ற ஒளிப்பதிவாளர்/ ஓவியக்கலைஞர் அந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். பயோக்ராஃபியா' என்ற பெயரில். "கலை என்பது சமூகத்தை திருத்துவதற்கோ இல்லை பாதிப்பை ஏற்படுத்துவதற்கோ இல்லை" என்கிறார்.
முழுக்க வாழ்க்கை வரலாறு போலல்லாது , அவரின் பணிகளினூடே இவர் காமிராவை வைத்து எடுத்தது போல கொஞ்சமும் சலிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடும் டாக்குமென்ட்டரி. வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார். பல சொற்கள் கிட்டாது தவித்து யோசித்து , ஸ்விஸ் மொழியிலிருந்து தமக்குள் மொழி பெயர்த்துக்கொண்டு பின்னர் சொல்கிறார். அது வரை காமிரா அசையாது அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் அவரவர்க்கான மொழி என்று ஒன்று உண்டு. ஜெர்மன்/இட்டாலியன்/ போல ஸ்விஸ் மொழியும் தமது சொற்களைக்கொண்டு விளங்குவதே. நான் ப்ராக்(செக் குடியரசு)கில் பணி நிமித்தம் தங்கியிருந்தபோது கண்கூடாக அதைக்கண்டிருக்கிறேன். தமிழனுக்கு இந்தி எங்கனம் ஒரு வெறுப்போ, காலனியாதிக்கம் செலுத்தும் மொழி என்ற தேஸ்யம் உள்ளது போல ஐரொப்பிய பிற மொழி பேசும் நாடுகளுக்கு ஆங்கிலம் மேல் அத்தனை வெறுப்பு. எனக்கோ ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் தெரியாது ( இன்னமும் தான் :) ).
அப்போது சிலர் கூறுவர். ஜெர்மனோ இல்லை கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் இங்கு சமாளிக்கலாம் என. கொஞ்சமும் ஸ்னானப்ரப்தியே இல்லாத வேறு குடும்பத்தை சேர்ந்த மொழி அது. அது போல அவர்களுக்கு ஆங்கிலம் என்றால் பிணக்கு. இருப்பினும் வலுவில் ஆங்கிலத்திலேயே உரையாடுகிறார் லீஸா. என்ன காரணம் என ஊகித்தேன். படம் எடுப்பவர் இந்தியாவில் இருந்து வந்திருப்பதால் தாம் உரையாடுவது அவருக்கு புரிய வேணும் என்று கருதி பேசியிருக்கலாம். இடையிடையே அவர்தம் மகள் சொற்களை எடுத்துக் கொடுக்கிறார். உண்மையைச்சொன்னால் அவரின் பெயரும் அவர்தம் ஓவியங்களும் எனக்குப் பரிச்சயமானது இந்த ஆவணப்படத்தின் மூலமாகத்தான். ஒருவேளை இதையும் அவர் ஊகித்திருக்கலாம் உலகம் முழுக்க பரவ ஆங்கிலத்தில் தான் பேசவேணும் என்று. மொழி மற்றும் சொற்களுக்கு முன்னரே கலை தோன்றிவிட்டது என்று அறுதியிட்டு கூறுகிறார் லீஸா. இதுவும் கூட காரணமாகக்கூட இருக்கலாம்.
இருப்பினும் என்னியோ மரிக்கொன் தமது 80ஆவது வயதில் ஆஸ்கர் பரிசு மேடையில் தம் தாய்மொழியான இட்டாலியனிலேயே பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு கருத்து.
முதற்கணவர் உடல் நலக்குறைவால் விரைவில் இறந்துவிட்டதையும் பின்னர் ஒரு பெயின்டருடன் தாம் இணைந்து வாழ்ந்ததையும் குறிப்பிடுகிறார். இரண்டாவது உறவு அத்தனை சுகமாயில்லை. அந்த பெயின்ட்டர் இவரை கீழ்ப்படிந்து நடக்கும் படி பணித்ததையும் , தமது ஓவியங்களின் மீது பொறாமை கொண்டதாகவும் வருந்துகிறார். தம்பதியருக்குள் இப்படி ஒரு பிணக்கு. Jealous என்ற சொல்லை ஜெலூஸ் என்று உச்சரிக்கிறார். பெண்கள் ஆணை சார்ந்திருக்கவேணும் , பணம் சம்பாதிப்பது ஆணுக்குரியது(ஹ்ம் அங்குமாடா இதெல்லாம் ?!) இப்படிக்கும் இதெல்லாம் 70-80களில் நடக்கிறது. பின்னர் அந்த வலிகொடுக்கும் உறவிலிருந்து மிகுந்த பிரயாசையுடன் வெளிவந்து தம் மகள்களோடு ஓவியப்பணியை தொடர்ந்திருக்கிறார்.
Tapestry என்ற பல நிறங்கள் கொண்ட நூல்களை சட்டகத்தில் வைத்துக்கொண்டு அதில் ஓவியங்களை உருவாக்குதல் இவரின் சிறப்பு. க்ராபிக் டிசைன்ஸ், ஓவியங்கள் என பல படிப்புகளை கல்லூரியில் பயின்று பின்னர் அதையே தொழிலாக கொண்டிருக்கிறார் லீஸா. தமது முதற்கணவர் வேண்டுகோளுக்கிணங்க தாவரவியல் ஓவியங்களை வரைந்திருப்பதை காண்பிக்கிறார். அவர் ஒரு தாவரவியல் நிபுணராக இருந்திருக்கிறார் எனினும் 36 வயதில் இறந்து விட்டதை நினைவு கூர்கிறார். இந்த டாபிஸ்ட்ரி பெண்களுக்கான கலை என்பதில் உறுதியாக இருக்கிறார். இயல்பிலேயே நெய்தலில் பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்றும் கூறுகிறார்.
டாப்பிஸ்ட்ரி மட்டுமல்லாது கண்ணாடியை சிறு கத்தி கொண்டு கீறி அதில் ஓவியங்களை உண்டாக்கி பின் வண்ணம் தீட்டும் கலையும் இவருக்கு கைகூடி வந்திருக்கிறது. அத்தனை தேவாலயங்களிலும் இந்த வகை ஓவியங்களைக்காணலாம். வெளிப்புற வழி சூரிய ஒளி அக்கண்ணாடியில் பட்டு சர்ச்சுக்குள் படரும் நிழலில் ஓவியம் துலங்கும். அத்தனை வண்ணங்களும் ஜெகஜ்ஜோதியாக ஒளிரும். நான்கு காலங்கள் என்ற ஓவியம் நான்கு கண்ணாடிகளில் செய்து அதை சர்ச்சின் ஜன்னல்களில் பொருத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.பதினைந்துக்கு பத்தடி என்ற அளவில் இந்த ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.
கம்ப்யூட்டர் க்றாபிக்ஸ் பற்றி அத்தனை விருப்பின்றியே பேசுகிறார். 80களில் அப்போது வெளிவந்த தொழில் நுட்பத்தை அவர் வெறுத்திருக்கிறார். அந்தச்சமயமே அவர் மரபு நோக்கி நகர்ந்து ட்ரெடிஷனல் ஓவியங்களை டாபிஸ்ட்ரியில் நெய்யத்தொடங்கியிருக்கிறார். உலகம் முன்னோக்கி கலைகளை வேறு தளத்துக்கு எடுத்துச்செல்ல முற்படும் போது அவர் பின்னோக்கி தன்முனைப்புடன் தம் கைகள் கொண்டு உருவாக்கும் கைவினைக்கலஞராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார்.
அவர் கண்களில் அந்த வெறுப்பு மண்டிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. அதுவரை பென்சிலும் பேப்பருமாக வரைந்து கொண்டிருந்தவர் , மிகுந்த உடலை வருத்தும் டாப்பிஸ்ட்ட்ரியில் கவனம் செலுத்தத்தொடங்கி அவரின் புறங்கைகள் உள்ளுக்குள் வளைந்து போயிருக்கின்றன. கூன் விழுந்து நெஞ்சு முன்பக்கம் நகர்ந்து உருவம் சொல்லிக்கொள்ளும் படியாகவே இல்லை அவருக்கு, கணினியும் தொழில் நுட்பமும் எத்தனை வெறுப்பை அவருள் விதைத்திருக்க வேணும் என்பது தெளிவு. விரல்களும் புறங்கைகளும் அந்த க்றோஷா/கொண்டை ஊசிபோல வளைந்து போனதன் காரணமாக வழக்கமாக வாசிக்கும் பியானோவை இப்போதெல்லாம் வாசிக்க முடியவில்லை என வருந்துகிறார்.
டாப்பிஸ்ட்ரி தவிர, தனியாக உள்ளூர் ஸ்விஸ் கடிகார நிறுவனங்களுக்கு லெட்டர் பேடுகளும், லோகோக்களும் வரைந்து கொடுத்திருப்பதை ஆர்வத்துடன் காட்டுகிறார். எல்லாவற்றிலும் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. பின்னர் விஸ்வநாத்துடன் காரில் பயணித்து தமது ஓவியங்கள் நிறுவப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று காண்பிக்கிறார். ஒரு பெரிய டப்பிஸ்ட்ரி வொர்க், கிட்டத்தட்ட 40 அடிகள் உயரமும், 10 அடி அகலமும் கொண்ட டாப்பிஸ்ட்ரியை ஓவியக் கண்காட்சி நடக்கும் ஆர்ட் கேலரியில் காண்பிக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேலாக அதற்கென உழைத்திருப்பதாக கூறுகிறார்.
இப்படிப்பட்ட கலையால் சமூகத்திற்கு என்ன பயன் என்ற விஸ்வநாத்தின் கேள்விக்கு , இதனால் ஒரு பயனும் இல்லை எல்லாம் எனது விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டவையே எனத்தெளிவாக பதிலளிக்கிறார் லீஸா. இருப்பினும் ஸ்விஸ் உள்ளூர் கலைகளில் வேறு வெளிநாட்டுத்தாக்கங்களை குறித்து அச்சம் தெரிவிக்கும் அதே லீஸா, கொரியன் பாதிப்பில் தாம் ஒரு டாப்பிஸ்ட்ரி செய்திருப்பதையும் காண்பிப்பது நகை முரண். இருப்பினும் இவரின் மகள்கள் யாரும் இப்பணியை தொடராது இசை மற்றும் இன்னபிற கலைகளை பயிற்சி செய்பவர்களாகவே இருக்கின்றனர். ஒரு விஷயம் சொன்னார் விஸ்வநாத், பொதுவாக தாயை பேட்டி எடுக்கும்போது மகள்களோ/மகன்களோ கூட இருப்பதில்லை தாமுண்டு தம் வேலையுண்டு என்றேயிருப்பது மேற்கத்திய கலாச்சாரம், ஆனால் இங்கு தலைகீழ். கூடவே பயணிக்கின்றனர் ஆவணப்படம் முழுக்க.
பின்னர் படம் முடிந்ததும் விஸ்வநாத் பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நல்ல சுவாரசியமான கேள்விகள் வந்தன. அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார். எனது கேள்விகள் இவை, ஸ்விஸ்ஸீல் நிறைய கலைஞர்கள் இருந்த போதிலும் லீஸாவை தேர்ந்தெடுத்தது ஏன் ? சமூகத்திற்கு என் கலைகள் ஏதும் செய்யப்போவதில்லை என லீஸா கூறுகிறார். அதே கேள்வியை உங்களிடம் (விஸ்வநாத்திடம்) கேட்பின் என்ன பதிலுரைப்பீர்கள், இந்த டாக்குமென்ட்ரியை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததா (ஏனெனில் அவர் 2009-ல் மறைந்து விட்டார்). லீஸாவின் பணியில் அவர்தம் கலையில் ஏற்பட்ட ஈர்ப்பே அவரைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேணும் என்பதும், மேலும் மரபு வழி வந்த அவரின் கலைப்பயணம் குறித்தும் தாம் மகிழ்ந்ததாலும் படம் எடுக்கத்தோணியது என்றார். சமூகத்திற்கென , இந்தப்படத்தை ஒரு சிறுவன் பார்த்து அதன் மூலம் அவனின் கலையை வெளிக்கொணர இது உதவலாம் என்பதே எனது நோக்கம். இந்தப்படத்தின் ரஃப் கட்டை மட்டுமே அவரால் காண முடிந்தது,முழுக்க படம் எடுத்து/இசைக்கோர்ப்பெல்லாம் செய்து முடித்து முழுப்படமாக வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். பலமுறை இந்தப்படத்தின் பல வித நேரங்களில் அவரிடம் காண்பித்து பல மாற்றங்கள் செய்ததாகவும் தெரிவித்தார்.
இவ்வளவு பெரிய கலைஞர், ஒரு விக்கிப்பீடியா பக்கம் போலும் இல்லை.அவரைப்பற்றிய அவரின் ஓவியங்களின் படங்கள் எவையும் இணையத்தில் கிடைக்கவேயில்லை எனக்கு. (கிடைக்கும் படங்களும் வலைப்பூக்களும் இதே பெயரில் இருக்கும் வேறொரு அமேரிக்கப்பெண்மணியின் ஓவியங்களாகவே இருக்கிறது) ஒருவேளை அதுவே அவரின் எண்ணமாகக்கூட இருக்கலாம். ஏனெனில் கணினி கொண்டு உருவாக்கும் படைப்புகளில் அவருக்கு கிஞ்சித்தேனும் ஆர்வம் இருந்ததில்லை. விஸ்வநாத்தின் ஆவணம் மட்டுமே அந்தப்பணியை செய்திருக்கிறது. மேலும் கலை என்பது பிறரின் அங்கீகாரம் தேடுவதற்கெனச் செய்யப்படுவதில்லை , அது முட்டமுழுக்க அதை உருவாக்கும் கலைஞனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாகவே இருக்கவேணும் என்பதே விஸ்வநாத்தின் கூற்றாக இருக்கிறது.
.
No comments:
Post a Comment