Friday, August 11, 2023

Writing with Fire

 


’Writing with Fire ‘ என்ற ஒரு டாக்குமெண்டரி படம் நேற்று பார்த்தேன். உத்தர் பிரதேசத்தில் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நடத்தப்படும் பத்திரிக்கை/ யூட்யூப் சேனல் பற்றிய ஆவணப்படம். தாழ்த்தப்படுத்தப்பட்ட பெண்களால் முன்னெடுக்கப்பட்டு இப்போது அவர்களின் பத்திரிக்கையும், யூட்யூப் சேனலு நிறைய வாசகர்களை/சந்தாதாரர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

Khabar Lahariya (செய்தி அலைகள்) என்ற பெயரில் பத்திரிக்கை மற்றும் யூட்யூப் சேனல் செயல்படுகிறது. முழுக்க ஹிந்தியில் மட்டுமே செயல்படும் ஊடகம். உள்ளூர் பிரச்னைகளை, தலித்கள் படும் துயரினை, ஆணாதிக்கம் மற்றும் உள்ளூர் தாதாக்களால அவர்கள் நடத்தப்படும் முறை, ஏகப்பட்ட கோரிக்கைகள், முறைப்பாடுகள் போலீஸ் ஸ்டேஷன்களில் செய்யப்பட்டிருப்பினும் ஒன்றின் மேலும் நடவடிக்கைகள் எடுக்காதிருத்தல் என்பன போன்ற சாதாரண மக்களின் பிரச்னைகளை முன்னெடுத்து தம்மாலியன்றவரை அது பற்றிய செய்திகளை சேகரித்து பத்திரிக்கையிலும், சேனலிலுமாக அம்பலப்படுத்தி இருக்கின்றனர். அதற்கான தீர்வும் பல கேஸ்களில் கிடைத்திருக்கிறது. மேலும் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கவிதா என்ற பெண்ணின் முன்னேற்பாட்டில் இந்தச்செய்தி நிறுவனம் செயல்படுகிறது. ஜர்னலிஸம் படித்த யாரும் செய்தி தொகுப்பாளர்கள் எல்லாம் இல்லை. பள்ளிப்படிப்பை முடித்த இல்லை, அது போலும் படிக்க இயலாத கிராமத்துப்பெண்களின் சேனல் இது. இப்போது 1.54 லெட்சம் சந்தாதாரர்களைக் கடந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு ஃபோன் போலும் பயன்படுத்தத்தெரியாத கிராமத்துப் பெண்கள் அவற்றை உபயோகப்படுத்த கற்றுக்கொண்டு பின்னர் அது கொண்டு சேகரித்த வீடியோக்களை, செய்தியை பிரசுரிக்கின்றனர்.

இந்த ஆவணப்படம் Sundance Festival-ல் சிறந்த ஆவணப்படம் என தெரிவாகியிருக்கிறது. நிறைய இது போன்ற விருதுகளை வென்ற ஆவணப் படம் இது. ஆஸ்கார் பட்டியலிலும் இந்தப்படம் இடம் பிடித்திருந்தது. 2017ல் வெளியான இந்த ஆவணப்படம் இங்கு பெங்களூரில் திரையிட பல முறை முயன்றும் இயலாது போய் இப்போது கடைசியாக திரையிடப்பட்டது. ஏனெனில் உள்ளிருக்கும் விஷயம் அப்படி. அப்பட்டமாக உள்ளூர் பெரும்பான்மைக் காவிக்கட்சிக்கு எதிரான பல செய்திகள்/ பேட்டிகள் எல்லாம் படத்தில் காணக்கிடைக்கிறது.

எப்போதும் திரையிடல் முடிந்ததும், ஆவணப்படம் எடுத்தவர்களுடன் உரையாட வாய்ப்பு கிட்டும். இந்த திரையிடல் இரு முறை ஒரே நாளில் நடந்ததால் நான் கலந்துகொண்ட திரையிடலில் இயக்குநர்களை சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது. பெருவாரியான மக்கள் திரையிடலைப் பார்க்க ஆவல் கொண்டு பதிந்துவைத்ததால் இரு முறை திரையிடப்பட்டது.

#WritingwithFire


Sunday, August 6, 2023

Unknown Lost Pyramid

      

Unknown Lost Pyramid – நெட்ஃப்ளிக்ஸில் பார்த்தேன். தோழர் ராஜேஷ் பரிந்துரையில். ஆவணப்படம் தான். எதிர்பாரா நிகழ்வுகளோ திருப்பங்களோ இன்றி செல்கிறது முழுப்படமும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம். கல்லறைகளை தோண்டுவது உள்ளே என்ன இருக்கிறது எனப்பார்ப்பது அவ்வளவுதான். இருப்பினும் தொடர்ந்தும் பார்க்க வைக்கும் படம்.

இதுநாள் வரை ஆங்கிலேயர்கள் மட்டுமே பிரமிடுகளை தோண்டி எடுத்து அதன் அருமை பெருமைகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றனர். அந்த ஆதங்கம் தான் எகிப்தியர்களுக்கு. ஏன் நம் நிலத்தில் நாமே தோண்டிக் கண்டுபிடிக்கக்கூடாது என்ற ஆர்வம் தான் முழுப்படமும். தொல்லியல் துறை அதிகாரிகள் தான் செயலில் இறங்கி கண்டுபிடிக்க முற்படுகிறனர்.

50 மீட்டர்கள் கிட்டத்தட்ட 150 அடிகள், இன்னமும் தோண்டிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. 4000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் எனில் சும்மாவா?...அதிலும் எகிப்தின் காலநிலை ஒன்பது மாதங்களுக்கு மட்டுமே வேலை நடக்க இயலும். மீதநாட்கள் பாலைவனப்புயல் படுத்தி எடுத்துவிடும். நிற்கக்கூட இயலாது. மழை என்பது மருந்துக்கும் இல்லை. எங்கெங்கு காணினும் மணலடா.....அடடா...

சில மம்மிகள் சரியாக மம்மிஃபை செய்யப்பட்டு (எம்பால்மிங்) அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றை திறப்பதில் எந்தத் தொல்லையும் இல்லை. எக்கல்லறையையும் திறப்பதெனில் கிட்டத்தட்ட 500-700 கிலோ பாறாங்கல்லை நகர்த்தி பின் உள்ளே பார்க்கவியலும். அத்தனை உபகரணங்களையும் கயிறு கட்டி அத்தனை ஆழம் உள்ளே இறக்க வேணும்.மிகுந்த பொருட்செலவு மற்றும் பணியாட்கள் தேவைப்படும். அந்தப்பட்டப்பகல் வெய்யில் வெய்யில் மட்டுமே பொழியும் பாலையில் தொடர்ந்தும் கூலிப்பணி புரிய திடமும், உறுதியும் தேவைப்படும்.

சில மம்மிகள் சரியான முறையில் மம்மிஃபை செய்யாவிடில் உள்ளே வெறும் எலும்புக்கூடும், கூழான உறுப்புகளும், நுண்கிருமிகளுமே காணப்பெறும். அத்தனை பேரும் முகத்துக்கு மாஸ்க் இட்டு வேலை செய்கின்றனர். குபீரென எழும் முடைநாற்றம் குடலை பதம் பார்த்துவிடும்.

கடைசியாக ஆவணப்படத்தில் ஒரு மம்மி கிடைக்கிறது.மிகச்சரியான முறையில் எம்பால்மிங் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு உருவம் காணக்கிடைக்கிறது. கல்லை நகர்த்திப் பார்க்கும்போது மரப்பெட்டியில் உள்ளிருப்பவரின் பெயர் இன்னார் மகள் இன்ன இடத்தில் மரித்தார் என்ற செய்தி பொறிக்கப்பட்டிருக்கிறது. பெருந்தலைகள் தவிர இங்கனம் அத்தனை விவரங்களும் கிடைக்காது என தொல்லியல் நிபுணர் வஸீரி தெரிவிக்கிறார். அவர்களால் சரளமாக அந்தப்பழைய 4000 ஆண்டுகள் மொழியை குறியீடுகளை வாசிக்க இயல்கிறது.

உள்ளே இருப்பது ஒரு பெண். அரண்மனையில் வசித்தவர் போல இருக்கிறார். அணிகலன்கள், பாசியால் ஆன மாலைகள். முழுத்தங்கத்திலான ..ஆமாம். முழுக்க முழுக்க தங்கத்திலான இரண்டு கழிகள் அவர் உடலின் இருபுறமும் தலை முதல் கால்வரை சார்த்தி வைக்கப்பட்டிருக்கிறது. (ஒரு வேளை ராணியாக, அவரின் நெருக்கத்தோழியாகக்கூட இருக்கலாம்). வஸீரி அவரைப்பார்த்துவிட்டு சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. இவர் உயிருடன் இருந்த நாட்களில் இப்படி ஒரு சாதாரண ஆள் அவர் முன் நின்றிருக்கவியலுமா என..! உண்மை தான். அரண்மனையில் உள்ளோரைச் சந்திப்பதும் காண்பதும் அத்தனை எளிதா? கடைசியாக எல்லாவற்றையும் மூடி விட்டு வருவது அக்காலத்திய குருக்கள். அத்தனை சடங்கு சாங்கித்யம் எல்லாம் செய்து விட்டு மீண்டு மேலே வருகிறார். மீண்டும் யாரும் உள்ளே செல்லவியலாது. மந்திரக்கட்டுகள் உண்டென தெரிவிக்கிறார் வஸீரி. எல்லாக் கட்டுகளையும் ஒருசேர ஒன்றுமில்லாததாக்கிவிட்டு எல்லாவற்றையும் எடுத்துவருகிறேன் மேலே என்கிறார். சிரித்துக்கொண்டே.

இதுபோல பல உடல்களின் மேலே வெகு சிறிய பறவை , மனித முகத்துடன் அதுவும் முழுத்தங்கத்தில் செய்யப்பட்ட ஒன்று வைக்கப்படிருக்கிறது. மேலுலகத்துக்கு பறந்து செல்வது என்ற குறியீடு. எகிப்தியர்களின் நம்பிக்கை இப்படி போகிறது. உடல் மம்மிஃபை செய்யப்பட்டு கல்லறை மிகச்சரியாக யாரும் அகழ்ந்துவிடாவண்ணம் மறைத்து மூடிவைக்கப் பட்டால் , இறந்தவர் மீண்டும் அந்த உடலை வந்தடைவர் என்பது.!

பகலில் உயிர் பிரிந்து பறந்து செல்கிறது உடலை விட்டு,ஓஸீரிஸ் கடவுளைக்கண்டு பின்னர் மீண்டும் அந்தியில் அதே இடத்தை கல்லறையை வந்தடைகிறது என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கை எகிப்தியர்களின்.

எல்லாம் சரி. அவரின் அருகில் ஒரு குடுவை, கிட்டத்தட்ட நம்முடைய ஒரு லிட்டர் மில்ட்டன் ஃப்ளாஸ்க் போன்ற நீளத்தில் ஒன்று வைக்கப் பட்டிருக்கிறது. பெரும் புதையல் கிடைத்தது போல ஒவ்வொருவரும் கைகளைத்தட்டி ஆரவாரம் செய்கின்றனர். அது தான் சீக்ரெட். அக்காலத்தில் என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டன...அவர்களின் ஓஸிரீஸ் கடவுள் படம் பொறிக்கப்பட்டு கிட்டத்தட்ட 16 மீட்டர் நீளமுள்ள பாப்பிரஸ் (Waziry Papyrus) கிடைக்கப்பெற்றது அந்த பெட்டியிலிருந்து. இதுவரை கிடைத்த இறப்புச்சான்று ஆவணம் இத்தனை பெரிய 50 அடி நீளமுள்ள ஒன்று கிடைப்பது இதுவே முதன் முறை.

அவருக்கு அதை முறையே எடுக்க அத்தனை தயக்கம் . பொடிப்பொடியாக உதிர்ந்துவிடுமோவென. அப்படியெல்லாம் ஆகவில்லை. முழுக்க லினன் துணியில் எழுதப்பட்ட ஆவணம். ( 4000 ஆண்டுகளுக்கு முன்னரே லினன் புழக்கத்தில் இருந்திருக்கிறது..! ) முழு உருவமாக எடுக்கப்பட்டு மேலே கொண்டுவந்து, கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஸ்டெரிலைஸ் செய்யப் பட்டு பின்னர் திறக்கப்பட்டது. ஆஹ்மோஸ் என்பவரின் மரணச்சாசனம்

113 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் ஆஹ்மோஸின் பெயர் பல இடங்களில் காணப்படுகிறது. அத்தனையும் கிளி, குயில், கோடு, தட்டு, க்ரேட்டர் தேன் சிம்பல், லெஸ்தேன் சிம்பல் என அத்தனையும் குழுஊக்குறிகளாக பொறிக்கப் பட்டிருக்கிறது. இறந்தவர் மேலுலகக் கடவுள் ஓஸீரிஸை வணங்குதல் போன்ற படங்களும் காணப்படுகின்றன.

இன்னமும் முழுமையாக அதனைப்பற்றிய விவரங்கள் வெளியிடப் படவில்லை. தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதானிருக்கின்றன.

க்ளியோப்பாட்ரா’வின் கல்லறை இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது இதுவாக இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் இறந்தவர் பெயர் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு 2023 ஜனவரியில் அகழ்ந்தெடுக்கப்பட்டது எகிப்து அருங்காட்சியகத்தில் இப்போது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது மில்ட்டன் ஃப்ளாஸ்க்கும் லினனும் :)

https://www.netflix.com/in/title/81473679