புல்லாங்குழல் மனிதனின் ஆதி இசைக்கருவி. அதில ராசைய்யா செய்யாத சேட்டையில்லை. நத்திங் பட் விண்ட்’ல ஒரு ஃபுல் சிம்ஃபொனியே போட்டுருப்பார். அத எழுத ஆரம்பிச்சா பதினஞ்சு பக்கம் எழுதனும். அது வேணாம். இப்ப எல் வைத்தியநாதன் வாசித்த ‘மால்குடி டேஸ்’ முகப்பு இசை கேட்ருப்பீங்க. எத்தனை காலமானாலும் மறக்கவே இயலாத இசை அது. ஆர்கே நாராயண் கார்ட்டூன்களும், லக்ஷ்மன் கதையும் ஷங்கர் நாக்’கின் இயக்கமும் ஸ்வாமியின் கிராமத்துக்கே கூட்டிட்டுப்போகும் இசை. மாங்கா அடிச்சது, சைக்கிள் ஓட்டி கீழே விழுந்ததுனு ஏகத்துக்கு நம்ம பழைய ஞாபகங்களைக் கிளறி விட்டுவிடும். ரொம்பவே கட்டுப்பட்டித்தனமான அந்தக்காலங்களை நினைவு படுத்தக்கூடியதாக மிருதங்கமும் பின்னில் இசைக்கும்.
அப்புறம் யுவன் இசைத்த ஆரண்யகாண்ட பின்னணி இசையில் வெளிவந்த ‘கொடுக்காபுளி சென்று கஞ்சா பவுடரை மறைத்து வைத்த காதை’( Kodukkapuli goes and hides the Powder ) யில் கேட்டு மகிழ்ந்த காலம் ஒன்று. (எங்கய்யா போனீரு யுவன்..இருக்கிற பிரச்னைகளெல்லாம் சீக்கிரமா முடிச்சிட்டு திரும்பி வாருமய்யா... கனகாலமா காத்துக் கொண்டிருக்கினம் நாங்கள் ) அதில அவ்வளவு ஷார்ப்பா தொட்டால் குருதி வரும்படியான ஷார்ப்பில் இசைத்த இசைக்கோவை அது. நிறைய ஸ்பானிஷ் டச்சுடன் இசைத்தது. மனதில் உடனே பதிந்துபோகும் மறக்கவியலாத இசை அது. இத்தனை ஷார்ப்பில் ராசைய்யா இசைத்ததுண்டா என எனக்கொரு சந்தேகம் எப்போதும் உண்டு. எப்போதும் மெல்லிய உணர்வுகளைத் தூண்டக் கூடியதாகத்தான் அவரின் குழல் இசைக்கும். ‘புத்தம் புதுக்காலை’, ‘நிலவு தூங்கும் நேரம்’, ‘குழலூதும் கண்ணனுக்கு’ என இவையெல்லாமே எல்லாமே கொஞ்சி நம்மை உறங்கவைக்கும் அல்லது கிறங்க வைக்கும். ஒரு குரூரம் எப்போதும் இருக்காது அவரின் குழலோசையில்.
ஆனால் இங்கு யுவனின் குழல் குரூரத்தை இசைக்கிறது. எல்லாமே ஷார்ப் நோட்ஸ்களைக்கொண்டு இசைத்தால் குத்திக்கிழிக்கத்தான் செய்யும். திரைப்படமே கொஞ்சமும் ஈவிரக்கமில்லாதவர்களின் பின்னணி. அதனால் இசையும் அங்கனமே. அதிலும் ஒரு சிறிய பையன் அந்தப் பௌடரைக் கொண்டு செல்வதால் விளையாட்டுத்தனமும் இருக்கும்.
இப்ப தம்பி அனிருத் இசைத்த ‘கொக்கி போட்டுத்தான் சிக்க வெச்சுட்ட’ (காக்கி சட்டை) பாடலில் ஏறக்குறைய அதே போலான ஷார்ப் நோட்ஸ் கொண்ட குழல் பாடல் முழுக்க இடையிடையே பத்து செகண்டுகளுக்கு இசைத்து காதலின் கூர்மையை குழலில் ஷார்ப்பாக காட்டியிருக்கிறது. 1:22 to 1:32,1:48 to 2:00,3:11 to 3:22 , 3:33 to 3:44 , நான்கு இடங்களில் ஒலிக்கும் அந்தக்குழல். இதுவரை பின்னிலேயே இசைத்துக்கொண்டிருக்கும் அந்த ஷார்ப் குழல் 1:48 லிருந்து 2:00 வரை முன்னில் வந்து இன்னமும் ஆழமாகத்தைக்கும் நம்மை. ஆனாலும் எதற்கு இத்தனை ஷார்ப் ? காதலில் மென்மை தானே முக்கியம்?
அழுத்தமாக தைக்கவேண்டி இசைத்திருப்பார் போலும். பாட்டு என்னவோ சாதாரண ராப் ஸ்டைலில் அவர் ஏற்கனவே செய்து செய்து சலித்த பாணியானாலும் இதுபோன்ற சின்னச்சின்ன சில்லுண்டி விஷயங்களிலும் அவர் காட்டும் சிரத்தை அதோடு நிறைய அரேபியன் டச்சோடும் மிக்ஸ் ஆகி ஒலிக்கிறது இந்தப்பாடல். கேட்டு மகிழுங்கள் குழலோசை..அதுவும் கொஞ்சம் ஷார்ப்பாக #sharpflute
http://youtu.be/Lz5X2R-YaOw கொக்கி போட்டுத்தான் – காக்கி சட்டை
http://youtu.be/5TYZx1Xuxoc?t=7m49s - ஆரண்யகாண்டம் flute piece
http://youtu.be/Lz5X2R-YaOw கொக்கி போட்டுத்தான் – காக்கி சட்டை
No comments:
Post a Comment