’கதா சங்கமா’ன்னு ஒரு குறும்படத்துண்டுகளாலான
ஒரு கன்னடத் தொகுப்புப்படம் பார்த்தேன். புட்டண்ணா கனகல் என்ற பழம்பெரும் கன்னட இயக்குநரின்
உத்தியில் ஏழு படங்கள், ஏழு இயக்குநர்கள்,ஏழு ஒளிப்பதிவாளர்கள் என ஏழு சிறு குறும்படங்களின்
தொகுப்பு. நம்ம பாலச்சந்தர் கூட இது போல ‘ஒரு வீடு இரு வாசல்’ன்னு இரண்டு படங்களை ஒரு
படத்தில் காட்டினார்.
புட்டண்ணா கனகல் இதே ’கதா சங்கமா’ங்கற
பெயரில் மூன்று குறும்படங்களை இயக்கி இருக்கிறார். அவரின் பின்னணியில் அவருக்கு புகழ்
சேர்க்கும் வகையில் இப்போது இந்த சங்கமா எடுக்கப் பட்டிருக்கிறது. புட்டண்ணா எடுத்த
அந்த மூன்று கதைகளில் (முனித்தாயி) ஒன்றுதான் ‘கை கொடுக்கும் கை’ என்ற பெயரில் தமிழிலும்
வெளிவந்தது. ஒரிஜினல் முனித்தாயி’யில் அந்த கண்ணிழந்த பெண்ணை வன்கலவி செய்த கதா பாத்திரத்தில்
ரஜினிகாந்த் நடித்திருந்தார்( அப்போல்லாம் அவர் வில்லன்ங்ணா :) ) ஆனால் தமிழின்
கை கொடுக்கும் கையில் அவர் தான் ஹீரோ.
சரி இப்ப 2019ல் வெளிவந்த கதா
சங்கமா’வைப்பற்றி பேசலாம். ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லை. அத்தனை படங்களும் அதனதன் ஜானர்களில்
அமைந்திருக்கின்றன. ஏழில் மிகப்பிடித்தவை என்று கூறினால் ’ரெயின்போலேண்ட்’, ’பதுவரஹள்ளி’,’வென்
மேஜிக் கெட்ஸ் ரியல்’, லச்சாவா’ என்ற குறும்படங்கள்.
மட்டுமே. மற்ற மூன்று படங்களான “கிர்கிட்டில், உத்தரா, கன்ஃப்ளூயன்ஸ் வித் ஓஷன்,” பத்தோடு
ஒன்றாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு படமும் அரை மணிக்கூறு மட்டுமே. இருப்பினும் எடுத்துக்கொண்ட
அரை மணிக்கூறில் எல்லாவற்றையும் விவரிக்க வேணுமே என்ற அவசரம் எதிலும் இல்லை. அதனதற்கான
கால நேரத்தில் எடுக்கப் பட்டிருக்கிறது.
’ரெயின்போ லேன்ட்’குறும்படத்தில்
கிஷோர்(’ஆடுகளம்’ வில்லன்) தனது மகளுக்கென ஒரு ரெயின்போ லேண்டை உருவாக்க நினைக்கிறார்.
மகள் நேற்றைய இரவில் கேட்டுக்கொண்டிருந்த கதையில் வரும் ரெயின்போ லேண்டுக்கு கூட்டிட்டுப்போ
என்ற அடம் பிடிப்பதைக்கண்டு ,அடுத்த நாள் காலையில் அலுவலகம் செல்லும் வழியில் , மேம்பாலங்களுக்கு
கீழுள்ள சுவர்களில் ஆர்வலர்கள் வண்ணம் தீட்டிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தாமும்
அது போலவே செய்யலாம் என்றெண்ணி கலர் காகிதங்கள், ஜிகினாக்கள், அட்டைப் பெட்டிகள் வண்ண
பலூன்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறார் அலுவலகத்துக்கு மட்டம் போட்டு
விட்டு. மீதமுள்ள நாள் முழுதும் ரெயின்போ லேண்டை உருவாக்கி விடுகிறார். மகள் பள்ளி
முடிந்து வீடு திரும்பும் வேளை வந்து விடுகிறது. ஆர்வத்துடன் காத்திருப்பவருக்கு இடியாய்
அதனுடன் கூடிய மழை பெய்து அத்தனை ரெயின்போ லேண்டையும் கலைத்து வண்ணங்களை நீராய் ஓட்டிக்
கொண்டு போய் விடுகிறது. அத்தனையும் வீணாகிவிட்டதே என்று சோர்ந்து போய்க் கிடப்பவருக்கு
மகள் வெளியிலிருந்து அழைப்பது கேட்கிறது.
அப்பா ரெயின்போ லேண்ட் ரெயின்போ
லேண்ட் எனக்கூவுகிறாள் மகிழ்ச்சியில். இல்லையே எல்லாம் கலைந்து போய்விட்டதே எனக் கலக்கத்துடன்
வெளியில் சென்று பார்ப்பவருக்கு மழை விட்டும் தூறல் நிற்காத இயற்கைத் தூவானம் அழகிய
வானவில்லை மகளுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. ஆஹா. என்ன அருமையான படமடா... :) கவிதை போல உள்ளக்கிளர்ச்சியைத்
தரும் படம்.!
அடுத்த இரண்டு படங்கள் பற்றி பிறகு.
No comments:
Post a Comment