Wednesday, October 31, 2018

'ரெட் ஹேட்'


'ரெட் ஹேட்' (Red Hat) நிறுவனத்தை ஐ பிஎம் (IBM) வாங்கிவிட்டது . ஒரு ஷேருக்கு 180 டாலர் கொடுத்து மொத்தமா வாங்கிப் போட்டுவிட்டது. இப்ப விலை 116 டாலர்லதான் இருக்கு ஒரு ரெட்ஹேட் ஷேர்.  கிட்டத்தட்ட பதினோரு மடங்கு விலை கொடுத்து உள்ள இருக்கிற அத்தனை பேரையும் கிட்டத்தட்ட பில்லியனாராக்கி விட்டான். சரி அதுக்கு இப்ப என்ன ? வழக்கமா எல்லா ஐ.ட்டீ. நிறுவனங்கள்ல நடக்கிற டேக் ஓவர்/அக்வையர் தானேன்னு சும்மா இருந்துவிட இயலாது. மைக்ரோசாஃப்ட் என்கிற மைட்டி மலையோட மோதி ஜெயிச்ச ஒரே நிறுவனம் ரெட் ஹேட் மட்டுந்தான். இயக்கச்செயலி சந்தையில் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) தன்னை மிஞ்ச ஆளே கிடையாதுன்னு மார்தட்டிக்கொண்டிருந்த நிறுவனம் பில் கேட்ஸோடது.  திறந்த ஆணை மூலத்தின் மூலமா (Open Source) ஒரு இயக்க செயலியை உருவாக்கி அதை வெற்றிகரமாக கார்ப்பொரேட் கூட மோதத்துணிந்த நிறுவனந்தான் ரெட் ஹேட். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலும் மைக்ரோஸாஃப்ட்டின் சர்வர்களூடன் ரெட்ஹேட் சர்வர்களும் இருந்தே தீர வேண்டிய அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சி. ஒரு கட்டத்தில் 85 சதமான சர்வர்கள் ரெட்ஹேட்/லினக்ஸ் சர்வர் மயமாகிவிட்டது.

ஐபிஎம்'மிடமும் ஒரு லினக்ஸ்/யுனிக்ஸ் இருக்கிறது, அது அத்தனை புகழ் பெறவில்லை. என்ன செய்யலாம் என நினைத்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ரெட்ஹேட்டை வளைத்துப்போடுவது என்ற எண்ணத்துடன் காரியம் கச்சிதமாக முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதை ஐபிஎம் வாங்கின செய்தி அறிந்ததும் திடுக்கிடத்தான் செய்கிறது. இனியும் திறந்த ஆணை மூலத்தை இத்தனை முனைப்புடன் வெற்றிகரமாக மேலும் லாபத்துடன் எடுத்துச்செல்லவென  யாரும் இல்லை என்பதே உண்மை. இதே ரெட்ஹேட் (சிவந்த தொப்பி) கொஞ்சம் கம்பூனிச சிந்தனையுள்ள நிறுவனம். எதிர்ப்பினைக்காட்ட அந்தக்காலத்தில் சிவப்பு தொப்பியை அணிவது வழக்கம். அதையே தனது கம்பனியின் லோகோவாக வைத்துக்கொண்டு சவால் விட்டுக்கொண்டிருந்த ரெட்ஹேட் இப்போது வாங்கிப்போடப்பட்டு விட்டது. அத்தனை பேரின் கவலையெல்லாம்  இனியும் இதே முனைப்புடன் ஐபிஎம் திறந்த ஆணை மூலத்தை தொடருமா என்பதே. லினஸ் டோர்வால்ட்ஸின் திறந்த ஆணை மூல ஐடியா வெகுவாக புழக்கத்தில் கொண்டு வரப்பட்டது ரெட்ஹேட் நிறுவனத்தின் மூலந்தான். இன்னமும் லினஸ் டோர்வால்ட்ஸின் திறந்த ஆணை மூலப்பொருள் கொண்டே ரெட்ஹேட் சர்வர்கள் கட்டமைக்கப் படுகின்றன.

கொஞ்ச நாட்கள் முன்புதான் மைக்ரோசாஃப்ட் 'கிட்ஹப்'(GitHub)பை வாங்கிப்போட்டது. அப்போதே சாவு மணி தொடங்கி விட்டது தமக்காக எந்த ஒரு மென்பொருள் ப்ராஜெக்டையும் உருவாக்கி அழகு பார்த்து அதை பிறருக்கு கொடுத்து மகிழ்வது என்ற உன்னதம் மங்கிப் போகப்போகிறது . கிட்ஹப் மட்டுமே உலகின் பல லட்சக்கணக்கில் மென்பொறியாளர்களை இணைக்கும் ஹப். இப்போது முதலுக்கே மோசம்.  மைக்ரோசாஃப்ட்டின் உள் எண்ணங்கள் என்னவென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. எவரையும் அழித்தொழிப்பது. மடங்காதவரை விலைக்கு வாங்குவது. ஹாட்மெயிலின் கதை எல்லாவரும் அறிந்ததே. இப்போது எவருக்கேனும் ஹாட்மெயிலில் (hotmail) அக்கவுன்ட் இருக்கிறதா? 90களின் இறுதியில் அதை வாங்கிபோட்டு அதன் புகழை கெடுத்து குட்டிச்சுவராக்கியது மைக்ரோசாஃப்ட். அதே போல் வின்டோஸ் ஃபோன் என்ற பேரில் 'நோக்கியா'வை ஒன்றுமில்லாமல் ஆக்கியதும் இதே பில் கேட்ஸின் நிறுவனந்தான்.  குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல கிட்ஹப் ஆகியிருக்கிறது.

பற்றாக்குறைக்கு இப்போது ஐபிஎம் ரெட்ஹேட்டை வாங்கி விட்டது. இனியும் திறந்த ஆணை மூலம் என்பதெல்லாம் கனவு தான் போலிருக்கிறது. சைனா ஹாங்காங்கை தமதாக்கியவுடன் இத்தனை காலமும் ஹாங்க்காங் எப்படி இயங்கி வந்ததோ அதே போல இனியும் ஐம்பது ஆண்டுகளுக்கு இயங்கும் என்ற அறிக்கை இப்போது எங்கிருக்கிறது என்று தேடித்தான் பார்க்க வேணும். அதே கதை தான் ரெட்ஹெட்டுக்கும், கிட்ஹப்புக்கும் வாய்க்கும்.

எனது நிறுவனம் நிர்வகிக்கும் சர்வர்களில் 80 சதமானம் ரெட்ஹேட் வெளியிடும் சென்ட் ஓஸ் என்ற திறந்த ஆணை மூல சர்வர்கள் தான். பத்தாண்டுகளுக்கு புதுப்பிக்கும் உரிமை அனவைருக்கும் இலவசம். (இயக்க செயலி மட்டுந்தான் , அதனுள் இயங்கும் மற்ற ஆப்களுக்கு இல்லை ) இப்போது அப்ஸ்ட்ரீம் எனப்படும் மேல்நோக்கிய புதுப்பித்தல்கள், அவ்வப்போது கிடைக்கும் பழுதுநீக்கிகள் எல்லாவற்றிற்கும் கொட்டிக்கொடுத்து தான் சரி செய்து கொள்ள வேணும்.

இந்தக்கட்டுரை மட்டுமல்ல, நானெழுதும் அனைத்து எழுத்துகளும் சென்ட் ஓஸ்(Cent OS) எனப்படும் திறந்த ஆணை மூல கணினி மூலமே எழுதப்படுகிறது. எனது டெஸ்க்ட்டாப் எப்பவும் சென்ட் ஓஸ் தான். இனியும் இதைப்போலவே தொடருமா என்ற ஐயம் எனக்குள் அன்றே தொடங்கி விட்டது. உபுன்டு (Ubuntu) இருக்கிறதே அதில் எழுதலாம் தான். இருப்பினும் வழமையையும் பழக்கத்தையும் மாற்றிக்கொள்வது அத்தனை எளிதில்லை. அலுவலகத்தில் ரெட்ஹேட்/சென்ட் ஓஸ் என புழங்கியே பழகி விட்டது.

ஐபிஎம்மின் செய்திக்குறிப்பில் அத்தனை தெளிவில்லை. திறந்த ஆணை மூலம் இனியும் இதே வேகத்துடன் தொடருமா என்பது ஐயம் தான். மேலும் ரெட்ஹேட்டின் மேகக்கணினி அமைப்புகளை மட்டுமே வாங்கி இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் பலரோ இல்லை முழு ரெட்ஹேட்டுமே விலை பேசப்பட்டு விற்றுவிடப்பட்டது என்று. இதை நியாயமான விலையில் உள்ளுரில் ஆட்டோ/கார் ஓட்டிக்கொண்டிருந்த முகவர்களை மொத்தமாக ஓலா/ஊபர் அள்ளிக்கொண்டு போனதுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.'





No comments:

Post a Comment