Friday, August 24, 2018

மசாலா ஜெட்டு

டெல்லியிலிருந்து திரும்பி வருவதற்கு ஸ்பைஸ்ஜெட்டில் பதிவு செய்திருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து அத்தனை அழைப்பு, குறுஞ்செய்திகள் என உட்பெட்டி நிறைந்து விடும். மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும். உங்கள் பறப்பு இத்தனை இத்தனை மணிக்கு என ஆனால் ஒரு நாள் கூட சொன்ன நேரத்துக்கு புறப்பட்டதுமில்லை, வந்தடைந்ததும் இல்லை தாமதம் அரைமணி நேரமெல்லாம் சர்வ சாதாரணம். இப்போது பறப்பு அத்தனை பெரிய விஷயமில்லை என்றாகி விட்டது. டெல்லி ஏர்போர்ட்டில் பெங்களூர் மெஜஸ்டிக் டவுன்பஸ் ஸ்டாண்டு தோற்றுவிடுமளவுக்கு கூட்டம் செம்மும். நகர முடியாத கூட்டம்.

வழக்கம்போல இந்த முறையும் வண்டி தாமதம். அரைமணிநேரம். சரி போனால் போகிறது என கொஞ்சம் சுற்றலாமெனக்கிளம்பினேன். தீபிகா படுகோன் அத்தனை பைகளையும் உடுப்புகளையும் அணிந்து நொடிக்கொருமுறை மாற்றிக் கொண்டேயிருந்தார் எதிரே இருக்கும் தொகா’வில். ஒரு 2000 இஞ்ச் டீவி இருக்குமென நினைக்கிறேன். விமானப்புறப்பாடு குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. ஒரு வழியாக போர்டிங் பாஸ் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். ’டெக்னிகல் ஸ்நாக்’ தொழில்நுட்ப குறைபாடு. அது சரி. உள்ளே ஏறி அமர்ந்த பிறகும் சரி செய்யப்படவில்லை. ஏற்கனெவே 40 நிமிடம் தாமதம். உள்ளே இருந்த விமான ஓட்டி பெங்காலி கலந்த ஆங்கிலத்தில் இன்னமும் பத்து நிமிடத்தில் சரி செய்து விடுவோம் கவலை கொள்ள வேண்டாம் என்றார். சரி என்ன செய்வது இவாளையெல்லாம் நம்பித்தானே நாம புறப்பட்டிருக்கம் என்று சமாதானம்.

உள்ளிருக்கும் விளக்குகளெல்லாம் ஒளி குறைக்கப்படும் என்று கொஞ்சினாள் மிட்டாய் கொடுப்பவள். என்ன நடக்குதுன்னு தெரியலை. இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிவிடும் என்றாள். அளவுக்கதிகமாக அதிர்ந்தது விமானம். கொண்டு போய் சேர்ப்பாரா இல்லை ஒருதிரியாக கொண்டு போய் சேர்த்துவிடுவாரா என நினைத்துக் கொண்டேன். வலப்பக்கம் 32 இடப்பக்கம் 32 ஒவ்வொரு வரிசையிலும் 3 இருக்கைகள். மொத்தம் 192 பயணிகள். மிட்டாய் கொடுக்கும் பெண்மணிகள் நால்வர், இரண்டு விமான ஓட்டிகள். எல்லாரும் கோவிந்தாதான்.

இன்னமும் ஓடு தளம் கிடைக்கவில்லை கொஞ்சநேரம் பொறுக்க வேணும் என்று மீண்டும் அந்த பெங்காலி. வயது முப்பதுக்குள் தான் இருக்கவேணும். இளமையான குரல். ஒருவழியாக அதிர்ந்தது கிளம்பியது. பெல்ட் அணியவும் அணியவும் என மெக்கானிக் குரல். கரும்மடா. ஒரு பெல்ட்தான் இருக்கு அதத்தான் அணியமுடியும். மொதல்ல வண்டியக் கிளப்புங்கடா ! போகும் வழியெல்லாம் வானம் பதற்றமாக இருக்கிறது என்று ஒரு அறிவிப்பு வேறு (turbulence) இந்தப்பயணம் தான் கடைசி போல என நினைக்க வைக்கும் சூழல். கண்ணைக்கட்டிக்கொண்டு உறங்க நினைத்தேன். வெளியில் எதையும் பார்க்க முடியவில்லை. அத்தனை கும்மிருட்டு. அவ்வப்போது மின்னல் வெட்டுகிறது. ஹாலிவுட் படங்களில் மின்னல் வெளிச்சத்தில் ட்ராகுலா கைகளில் பிணங்களை ஏந்திச்செல்லும் அது போல. ஜன்னல் பக்கமே பார்க்காது கண்ணை இறுக மூடிக்கொண்டேன்.

ஒரு வழியாக பெங்களூர் வந்து விட்டது இன்னமும் பத்து நிமிடங்களில் இறங்கி விடலாம் என்றார் பெங்காலி. எப்படியோ பிழைத்தால் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது தடாலென ஒரு சப்தம். எமெர்ஜன்ஸி எக்ஸிட் பக்கமிருந்து எதோ சப்தம் வந்தது. அத்தனை இரைச்சல் களுக்கிடையில் அதைக்கேட்க முடிந்தது ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை என்றார் விமானப்பெண்மணி. சொல்ல மறந்துவிட்டேன் அவர் பார்க்க தமன்னா போலவே இருந்தார். ஒரு வேளை தங்கச்சியாகக்கூட இருக்கலாம் யார் கண்டது ? ரணகளத்திலயும் ஒரு…ஹிஹி.

கொஞ்சம் குனிந்து பார்த்தேன். பளப்பளவென மின்விளக்குகள் தரையில் தெரிந்தன. இறங்கப்போகிறோம் என்ற ஆவலில் இருக்கும் போது பின்பக்க டயர்கள் சரேலென தரையில் பதிந்தன. அத்தனை வேகத்துடன், எதோ எங்கோ போய் மோதுவது போல.தரையை கிழித்துக்கொண்டு மோதியது விமான பின் சக்கரங்கள். அத்தனை வேகமாக வரும்போது கொஞ்சம் உராய்வு சாத்தியந்தான். இருப்பினும் இது எதோ சரியில்லை எனத்தோணியது. உட்கார்ந்திருந்த அனைவரும் முன்பக்க இருக்கையில் மோதிக்கொள்ளாத குறை. விழுந்த பின் சக்கரங்களை முந்திக்கொண்டு முன் சக்கரமும் மோதியது போன்ற ஒரு உணர்வு. சடாரென வேகம் குறைக்கப்பட்டு ப்ரேக் வலிமையாக அழுத்தியிருப்பார் போலும். ஓடு தளத்தில் இறங்கிய வேகத்துக்கு விமானம் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது ஓடவேணும், ஒரு நிமிடம் கூட ஓடவில்லை.. சடாரெனெ நிறுத்தி விட்டது போல உணர்வு. இது என்ன நடக்குது என்று கொஞ்ச நேரத்துக்கு மரண பயத்தைக்காட்டீட்டாய்ங்க பரமா!

எப்போதும் டிக்கட் பதிவு செய்யும்போது இன்ஷ்யூரன்ஸை தவிர்ப்பது வழக்கம். என்ன பெரிசா விபத்து வந்திரப்போகுது என்ற அலட்சியம் இனி வரும் அத்தனை பயணங்களுக்கும் அதற்கும் சேர்த்தே பணம் செலுத்திவிடுவது நல்லது என்ற இரண்டு மணிநேரத்தில் காட்டிவிட்டார் அந்தப்பெங்காலி.

இத்தனை மணிநேர பறத்தல் செய்த முன்னனுபவம் இருக்கவேணும் என்றெல்லாம் கட்டுப்பாடுகளெல்லாம் இந்த உள்ளுர் விமான ஓட்டிகளுக்கு கிடையாதா ?! எனது இந்தப்பறப்பு முழுதுமே எதோ ஒரு அமெச்சூர் விமானியிடம் விமானம் சிக்கிக் கொண்டதைப் போலவே உணர நேர்ந்தது.

பெங்களூர் விமான நிலையத்திலிருந்து வீடு வந்து சேர (கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் கூடுதலாகும்) உள்ளூர் பிஎம்டீசி வஜ்ராவில் ஏறி அமர்ந்தேன். வீடு வரும் வரை ஒரு குலுக்கலில்லை ஒரு சறுக்கலில்லை!
 

.

No comments:

Post a Comment