விஜய் ஏசுதாஸ் மற்றும் யுவன்.
தெளிந்த நீரோடை. சலசலத்து செல்லும் கூழாங்கற்கள்
போல கிட்டாரின் இழைப்பு வரை வெளித்தெரிகிறது. பல்லவிக்கும் சரணத்துக்கும்
ராக வேறுபாடு இல்லை அதுதான் நீரோடை. எங்கும் மாறாது தானாக வழி
கொண்டோடும் அது. சரணங்களில் அங்கங்கு எதிரொலி கொடுத்து அழகு கூட்டியிருக்கிறார்
யுவன். விஜய் ஏசுதாஸின் குரலில் தந்தையின் குழைவு அங்கனமே தொடர்கிறது.
திசைகளை நீ மறந்துவிடு, பயணங்களை தொடர்ந்து விடு.
மிகுந்த வியர்வையில் எங்கிருந்தோ வந்த குளிர் தென்றல் வீசுவது போன்ற
இசையமைப்பு. யுவன் அவர் இடத்தில் எப்போதும் இருந்து கொண்டுதானிருக்கிறார்.
எத்தனை தான் கிழஞ்சிங்கம் வைரமுத்து எழுதியிருந்த
போதும்,
ராம் மற்றும் யுவனின் நாடித்துடிப்பு கண்டு வரிகளை அள்ளிக்கொடுக்கும்
நாமு’ இல்லாதது பெரும் குறை. தேற்றும் பாடல்
போல,எல்லாம் முடிந்தது என வீழ்ந்து கிடக்கையில், இன்னமும் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமா என கேட்பது போல அமைந்திருக்கிறது பாடல்.
”தண்ணீரில் வாழும் மீனுக்கு ஏது குளிர் காலமே”,
“சலவை செய்த பூங்காற்று”, “குழலோடு போன சிறுகாற்று
இசையாக மாறி வெளியேறும்” அத்தனையும் வைரமுத்துவின் அடித்து ஓய்ந்துபோன
துருப்பிடித்த பட்டறையின் வரிகள். ஐயா இப்படியெல்லாமா இன்னமும்
எழுதிக்கொண்டிருக்கிறீர்? அத்தனை பாடல்களிலும் உயிர் வரிகள் இல்லாது
இட்டு நிரப்பியவற்றவையே காணக்கிடைக்கிறது.
பாடலின் தொடக்கம் ஏகாந்த உணர்வைத்தர அதையே தொடர்ந்தும்
இழைத்து பாடல் முடிவு வரை அதே உணர்வில் வைத்திருக்கிறது யுவனின் இசை. பச்சைப்பசேலென எழுந்து நிற்கும் ராமின் கற்பனையும் அதில் மழை பொழியும்
யுவனின் இசையும், வைரமுத்துவின் வரிகள் மட்டுமே
காய்ந்து நிற்கிறது. இதையே நாள்பூராவும் ஓடவிட்டுக்கொண்டிருக்கலாம்
இசை மட்டுமே போதும் என உணர்வு மேலோங்குகிறது. மொழியற்ற பூமிக்கு
எதற்கு வரிகள் ?! இசை மட்டுமே போதுமே?!
.
No comments:
Post a Comment