Saturday, November 19, 2016

ராணுவவீரன்

எதுக்கெடுத்தாலும் ராணுவவீரன் எல்லைல நின்னு போராட்றான். ஒனக்கென்னடா வரிசைல நிக்க வலிக்குதுன்னு கெளம்பறது. எனக்குத்தெரிந்து ராணுவத்துல சேருவதுங்கறதெல்லாம் நிரந்தர வேலை,போதுமான அளவு சம்பளம், எக்ஸ் சர்வீஸ்மென் என்ற பலன்கள்,மேலும் பென்ஷன் கிடைக்கும்.அவ்வளவு தான். மேலும் அதற்கென அத்தனை பரீட்சைகள் எழுதி தேர்வாக வேணும்ங்கற அவசியம் இல்லை. கொஞ்சம் உடல்தகுதி பெற்றிருந்தால் போதும்,ரெண்டு மாசம் ஜிம் போய்,ஒக்காந்து சாப்ட்டு உடம்பத்தேத்திக்கிட்டு செலக்ஷனுக்கு போனால் போதும் என்ற மனநிலையில் சென்று ராணுவத்தில் சேர்ந்தவர் தான் அதிகம். 

எனது நெருங்கிய நண்பனுக்கு அத்தனை உடற்தகுதியோ,இல்லை கட்டுமத்தான உடலோ கிடையாது. இத்தனைக்கும் மரக்கறி மட்டுமே உண்டு வாழும் சீவன் அது, கெமிஸ்ட்ரில்லாம் படிச்சான் மதுரைல. எங்கயும் செலக்ட் ஆவல. அத்தனை பொதுத்தேர்வெல்லாம் எழுதிப் பாத்தான் ஒண்ணும் வேலக்காவல. கண்ணில் குறைபாடு எப்பவும் கண்ணாடி அணிந்து கொண்டிருப்பான். எனக்குத்தெரிந்து இரண்டு வயதிலிருந்தே கண்ணாடி தான். அதைக் கழற்றினால் எதுவுமே தெரியாது. காது ஏகத்துக்கு மந்தம். அதிக சத்தம் கூட அவனுக்கு கேட்காது, அப்படிப்பட்டவனை கோவையில் நடந்த ராணுவ செலக்ஷனுக்கு அவனோட அப்பா அனுப்பி வைத்து உள்ளில் கையூட்டு கொடுத்து ராணுவத்தில் சேர்த்தேவிட்டார். அவனைப் பொருத்தவரை ஒரு வேலை, குடும்பத்துக்கு தேவைக்கான சம்பளம்ன்னு அவனுண்டு அவன் வேலையுண்டுன்னு இருக்கிறான். உள்ளுக்குள் தாஜா செய்துகொண்டு அதிகம் பிரச்னையில்லாத இடங்களில் இருந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருப்பான்.

இப்ப இங்க ரியல் எஸ்டேட்ல வேல செய்யும் ஒரு பையன் அதே மாதிரிதான் காலை அஞ்சு மணிக்கு எழுந்து ஓடுவான். இன்னும் ரெண்டு மாசத்துல செலக்ஷன் வருது என்பான். வேல நிரந்தரம் இல்லை ராம், அதான் எப்டியாவது சேர்ந்து கொஞ்ச காலத்த ஓட்டிட்டு அப்பால வீஆரெஸ் வாங்கிட்டு வந்துரலாம்னு இருக்கேன் என்று வெளிப்படையாகவே சொல்வான். அதான் அவங்களும் நம்மப்போல சாதாரண ஆட்கள் தான். பெரிசா வானத்துல இருந்தெல்லாம் குதிக்கிறவன்லாம் இல்லை.பெரும்பாலும் ராணுவத்தில் வேலை செய்யும் எவரும் தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளவே விழைவர். இதுவும் நம்மல்லாம் நம்ம கம்பெனீல/நமக்குத்தெரிந்த இடங்கள்ல பயலுகள சேர்த்து விடுவது போலத்தான்.

இந்தப்பதிவின் மூலம் ராணுவவீரர்களை குறை கூறுவதோ/இல்லை சிறுமைப்படுத்துவதோ எனது நோக்கமில்லை. எனது குடும்பத்தில் கிட்டத்தட்ட ஆறு/ஏழு பேர் ராணுவத்தில் முப்படைகளிலும் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் தான். #ஆயிரம்ஐந்நூறுசம்பாத்தியம்

2 comments: