Saturday, July 16, 2016

'சித்தன்னவாசலின் ஓவியமே'



கேகே'வின் திருமணத்தையொட்டி திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. கடைசி வரை யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்றே அறியாதிருந்தது.பின்னர் ஒரு வழியாக நானும் செந்திலும் மட்டுமென முடிவானது சென்ற சனிக்கிழமை இரவு பெங்களூரிலிருந்து புறப்பட்டு விடிகாலை திருச்சி வந்தடைந்தோம்.கிளம்பியதே வெகு நேரம் கழித்து தான். ஆகவே சென்றடைந்ததும் அதிகாலை மூன்றரை மணிக்கு. முன்பதிவு செய்து வைத்திருந்த விடுதிக்கு சென்று 209 சாவி வேண்டும் என்று கேட்க எத்தனித்தேன். மூன்று பேரும் நல்ல உறக்கம். கூப்பிட்ட குரலுக்கு யாரும் எழவில்லை.பின்னர் அருகில் சென்று அழைத்ததில் ஒருவர் எழுந்து கொண்டார்.


'கல்யாண சீசனா' அதான் இப்டி..இப்பத்தான் எல்லோரும் படுத்தோம். என்ன நம்பர் சொன்னீங்க என்றார். 209 என்றேன். தூக்க கலக்கம், அவருக்கு இல்லியே காலியில்லியே என்றார். ஹ்ம்..கொஞ்சம் நல்லா பாருங்க..கேகே பதிவு செய்து வைத்திருப்பதாக கூறினார்.என்றேன்..ஆமாமா. டேய் தம்பி போய் ரூமக்காட்டுப்பா என்றார். கிர் கிர் என எரிந்துகொண்டிருந்த ட்யூப் லைட், சுவர்க்கோழி மிச்சம். லிஃப்ட்டுக்காக காத்திருந்த போது செந்தில் சும்மா ஏறலாம் ராம் என்றார். பின்னர் படியேறி சென்று தொப்பென அறையின் படுக்கையில் விழுந்தோம். எதுவும் வேணுமா சார் என்றவனிடம் ..ஹ்ம்..ஒன்றும் வேண்டாம் எனக்கூறிவிட்டு அப்படியே உறங்கிப்போனோம்.

செல்பேசி ஒலித்தது , சிரமப்பட்டு எழுந்து பேசியதில் , கேகே தான்,  ஜிமுருகன்(எழுத்தாளர்)  வர்லியா ராம் என்றார். இல்ல கேகே யாரும் வர்லியே என்றேன்..ஹ்ம்..சரி வந்து கொண்டிருப்பார்கள் என சமாதானப்படுத்திவிட்டு நேரம் பார்த்தென்..எட்டு மணி. சரி இப்ப கிளம்பினாத்தான் சரியாயிருக்கும் என நினைத்து 'செந்தில்' எழுந்திருங்க கிளம்பலாம். கொஞ்சம் தூங்கவிடுப்பா என சால்ஜாப்பு சொல்லாமல் எழுந்து கொண்டார்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரை சென்றோம். சித்தன்னவாசல் எங்கனம் செல்வது என யாருக்கும் தெரியவில்லை. டைம் ஆஃபீஸில் கேட்டபின் புதுக்கோட்டை சென்று பின்னர் இன்னுமொரு உள்ளூர் பேருந்தில் செல்லலாம் என்றார். புதுக்கோட்டை வண்டியில் ஏறி கடைசி சீட்டில் அமர்ந்துகொண்டோம். நமக்கும் இந்த கடைசி பெஞ்சுக்கும் இடைவிடா ஏழு ஜென்மத்தொடர்பு போல...ஹிஹி..கூட அமர்ந்திருந்தவர் பேசிக்கொண்டே வந்தார் . என்ன சார் சாஃட்வேரா என்றார். தெளிவா எப்டி தெரியுதுன்னே தெரியல. எழுதி ஒட்டிருக்கும்போல நம்ம மூஞ்சிகள்ல. என்ன ராத்திரி பஸ் புடிச்சு பெங்களூர்லருந்து வந்திருப்பீங்க , தெரியாதா என்றார். அடப்பாவி எல்லாத்தையும் புட்டு புட்டு வெக்கிறானே. நீங்க விவசாயமா என்றேன்..ஹ்ம்.. ரியல் எஸ்டேட்டு பிஸ்னெஸு என்றார். அதான் இப்பொதைக்கு நடக்குது என்று சலித்துக்கொண்டார். நாற்பன்தைந்து கிலோமீட்டர், ஒன்றரை மணிக்கும் மேலானது தான் ஆச்சரியம்.ஹ்ம்.. சரி அப்புறம் ..இன்னொரு பஸ் பிடிச்சா அது இதுக்கும் மேல. சாலைகளும் சரியில்லை. நிலவில் வண்டி ஒட்டுவது போல ஓட்டினார். இத்தனைக்கும் பதினைந்தே கிலோமீட்டர். ஒரு மணிக்கும் சற்றே குறைவாக சென்றடைந்தது. வாயிலில் இறக்கி விட்டார் ஓட்டுநர்.

உள்ளே நடக்க ஒன்றரை கிலோமீட்டர். அறிவர் கோவிலும் சிற்பங்களும், ஓவியங்களும். சாலையில் யாரையும் காணவில்லை. நல்ல மதிய வேளை. அத்தனை சூரியன் இல்லை. மேக மூட்டம். மெதுவே நடந்துசென்று இடத்தை நெருங்கினோம். கழுத்தில் ஒரு குழாய் போன்று செருகி வைத்துக்கொண்டு அடித்தொண்டையில் பேசினார் (அவ்வப்போது தொட்டுக்கொண்டே ). பதினைந்து ரூபாய் டிக்கெட் சார் ஒரு ஆளுக்கு என்றார். சமணர் படுக்கைகள் பார்ப்பதற்கு, ஓவியங்களுக்கு தனியாக பணம் செலுத்த வேணும் என்றார். மேலே மலையில் இருந்த கைப்பிடிகளைக்காட்டி அது வழி போய் பின்னர் கொஞ்சம் கீழிறங்கினால் சமணர் படுக்கைகளை பார்க்கலாம் என்று இங்கிருந்தே சொன்னார். இரண்டு டிக்கெட் வாங்கி கொண்டு மலையேற முயற்சித்தோம்.


நல்ல காலம் வெய்யிலில்லை. வழியில் சின்டெக்ஸ் டேங்கிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு ஏறத்தொடங்கினோம்.படிகள் போல செதுக்கி வைத்திருக்கின்றனர், ஆனால் அது படியில்லை. போல மட்டுந்தான். விறுவிறுவென ஏறத்தலைப்பட்டேன். செந்திலும் கூடவே ஏறினார். சிறிது ஆசுவாசப்படுத்திக்கொள்ள கள்ளிச்செடி மரம் போல் வளர்ந்துகிடந்தது. இளைப்பாறினோம். போலாம் செந்தில் என்றேன். கைப்பிடிகள் பிடித்துக்கொண்டு ஏறினோம். அத்தனை கடினமில்லை. பலரும் நடந்து சென்று நல்ல பாதை போல ஆகிவிட்டிருந்தது பாறைகள். எனினும் மழை பெய்தால் வழுக்கத்தான் செய்யும் போல. காலை ஊன்றி நடக்க வேண்டியிருந்தது. களைத்தது கொஞ்சம். பெங்களூரிலிருந்து புறப்பட்டு வந்தது ஒரு கர்நாடகா பேருந்து.மோட்டலில் நிறுத்தினர் இருப்பினும் பயம் எங்கு சொல்லாமல் கொள்ளாமல் எடுத்துக்கொண்டு ஒடிவிடுவானோ என்று இரவில் ஒன்றும் சாப்பிடாது ஒரு நெஸ்கஃபேயொடு முடித்துக்கொண்டது இங்கு தெரிந்தது. அதோடு சரியான உறக்கமுமில்லை. நான்கு மணிக்கு உறங்கி காலை சரியாக 07:57க்கு கேகே வந்தவர்கள் பற்றிய விபரத்திற்கு அலாராம் வைத்து எழுப்பிவிட்டபடியால் .ஹ்ம்... காலை சிறிய சிற்றுண்டி எல்லாம் சமணருக்கே வெளிச்சம். ங்கொய்யால.. ஹ்ம்.. கையில் குடிநீர் போத்தல் என ஒன்றுமில்லை , கைவீசிக்கொண்டு நடக்கணும் என நினைத்து ஒன்றுமே கொண்டுவரவில்லை. எது வேணுமானாலும் மலையிறங்கித்தான் வாங்கவேணும். சமணர் கொஞ்சம் அருள் புரிந்து ஒரு மெக்டொனால்ட்ஸ், இல்லை ஒரு கேஎஃசி'யாவது திறந்து வைத்திருக்க கூடாதா..ஹ்ம்.

சமணர்கள் அந்தக்காலத்தில் வெற்றுக்காலுடன், துளிக்கூட ஆடையின்றி ,வேறு எந்தவித உபகரண உதவியுமின்றி இத்தனை தூரமும் நடந்து மலையேறி வந்து கடுந்தவம் புரிந்தனர். ஹ்ம்.. பாக்கப்போறவாளூம் அப்படியே தான் போகணும்போல. நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். செம வ்யூ...ஆஹா.. ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு. பின்னர் ஒருவழியாக கைப்பிடிகள் முடியும் நிலையில் கீழிறங்கியது பாதை.மலையின் மறுபுறம் அது.கொஞ்சம் நின்று ஆலோசித்து பின்னர் இறங்கிச்செல்ல முயன்றோம். ஒரு ஆள் மட்டுமே செல்ல முடியும் வழி/பாதை.கைப்பிடி. பின்னர் செங்குத்தாக வழுக்குப்பாறை. வழுக்கினால் பின்னர் அதோகதி தான். கூப்பிட்ட குரலுக்கு வரவும் ஆட்களில்லை.யாருக்கும் குரல் சென்றடையாது.ஆபத்தான பாறைகள். தடுப்புச்சுவர்கள் என ஏதுமில்லை. கம்பிகள் மட்டுமே பிடித்துக்கொண்டுதான் நடந்தாக வேண்டும்.கரணம் தப்பினால் மரணம்..ஹ்ம்...

இறங்கி நடந்தோம். செல்லச்செல்ல இன்னும் குறுகியது பாதை.இடப்புறம் கம்பிக்கிராதிகள் வைத்து யாரும் உள்ளில் சென்றுவிட இயலாத வண்ணம் சமணர் படுக்கைகள் காணக்கிடைத்தன. எனக்கென்னவோ சமணர்களை கழுவேற்றிய கூர் வேல்கள் போலத்தான் தோன்றியது. அதை எண்ணித்தான் அமைத்தனரோ என்னவோ தெரியவில்லை. பதினேழு படுக்கைகள். பாறைகளில் சிறிதே செதுக்கி வைத்த படுக்கை போன்ற பாறை. அவ்வளவே. இதில் தான் படுத்து உறங்கி வாழ்ந்து சமணம் பரப்பினர். அந்தப்படுக்கைகளிலும் உளி  வைத்து அக்கால மொழியில் செதுக்கியிருந்தது. வாசிக்கத்தான் இயலவில்லை. கூடவே ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 'மணிமாறன் லவ்ஸ் வித்யா' 'அஸ்வின் லவ்ஸ் புனிதா' என காணக்கிடைக்காத வாக்கியங்களும், ஆர்ட்டின்களுமாக கண்டு பூரித்தேன். 


இந்தியர்களைப்போல புராதன சின்னங்களைப் பாதுகாப்போர் யாருமில்லை. ஹ்ம், என்று திருந்தும் இந்நாடு ?. உள்ளே சென்று இப்படி எழுதி வைக்கின்றனர் எனக்கருதி கம்பிக்கிராதிகளில் கூர் வேல் போல அமைப்பில் பாதுகாத்தும் அக்கூர் வேல்களை வளைத்து நிமிர்த்தி கூர் மழுங்கடித்து உள்ளில் செல்கின்றனர். பின்னர் இன்னபிற வஸ்துக்களையும் காண முடிந்தது உள்ளில். சுராபான போத்தல்களும் ,தடுப்பு உறைகளும்,, ஆஹா...!  நவீன எழுத்துகளை முடிந்தவரை அழிக்க முற்பட்டிருப்பது தெரிந்தது. பாறை என்பதால் உளி கொண்டு செதுக்கி வைத்தும் கெடுத்திருக்கின்றனர் இக்கால முனிவர்கள் ...ஹாஹா..

சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து விட்டு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பின்னரும் அந்த அபாயப்பாதை வழியாகவே வந்தோம். திரும்பி வரும் வழியில் இளம் காதல் ஜோடி ஒன்று வந்துகொண்டிருந்தது. நான் சுற்றியிருக்கும் காட்சிகளை புகைப்படம் எடுப்பதெற்கென முயற்சி செய்துகொண்டிருப்பதை பார்த்துவிட்டு அந்தப்பெண் முகத்தை துப்பட்டாவில் மூடிக்கொண்டே சென்றார் என்னைக்கடந்து செல்லும் வரை. காலமெல்லாம் காதல் வாழ்க..!

இறங்குவது எளிதாகத்தான் இருந்தது.இறங்கிவந்தபோது அந்த "தொண்டைக்குழி பைப்" டிக்கட் விற்பவரைக்காணவில்லை. பின்னரும் அந்த டேங்கில் இருந்து தண்ணீர் குடித்துவிட்டு நடந்தோம். ஏறிக்கடந்த முழு மலையையும் சாலையில் நடந்து கடக்கவேண்டியிருந்தது ஓவியங்கள் பார்வையிடுவதற்கு. வழியில் சில மகளிர்  உதவிக்குழுக்களின் சின்ன பெட்டிக்கடைகளும் குளிர்பானங்களும் மட்டுமே கிடைக்கின்றன. நல்ல சாலை. நடப்பதற்கும் வண்டி ஓட்டிச்செல்லவும் எங்கெங்கினாதபடி காதலர்களும் , பின்னர் நம் மூதாதையர்களும். கையிலிருப்பதை தட்டிப்பறிக்கவே நினைக்கும் குரங்குகள்.அறிவர் ஆலயத்துக்கு செல்லவும் சிறிது ஏறத்தான் வேண்டியிருக்கிறது. வெளியில் ஒரு அறிவிப்புப்பலகை.கிமு 2-3 ஆம் நூற்றாண்டுகளில் குடையப்பட்டு 9-10 ஆம் நூற்றாண்டு மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது என.

செருப்புகளை கழற்றி வைத்துவிட்டு வாருங்க என்றார் அவர். கையிடுக்கில் ஒரு சிறிய தோலாலான பை.வாங்கும் பணத்தை அதில் போட்டு வைத்துக்கொள்கிறார். டிக்கெட் என ஏதுமில்லை கொடுக்கவில்லை நானும் வாங்கவில்லை. பதினைந்து ரூபாய் என சில்லறையாகக்கொடுத்தேன் வாங்கி உள்ளே போட்டுக்கொண்டார். எனினும் அந்த தொண்டைக்குழி பைப்காரர் டிக்கெட் கொடுத்தார். அத்தனை பேரையும் உள்ளே விடவில்லை. கொஞ்சம் பொறுங்க என நிறுத்திவைத்துவிட்டார் எனை. உள்ளே இருப்பவ்ர் வரட்டும் பின்னர் செல்லலாம் என. ஒரே ஒரு கோவில். ஒரு சுற்று கூட இல்லை. அவ்வளவே. வெளியில் அஜந்த எல்லோரா ஓவியங்களின் பாணியில் என அறிவிப்புகள் வேறு. எனது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது, உள்ளிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்தது. எனை உள்ளெ அனுமதித்தார் அந்த டிக்கெட்டே கொடுக்காதவர்.

நான்கு தூண்கள் அதிலும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. கம்பி கட்டி.மெதுவாகத்தான் அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. மேலே பாருங்க தம்பி என்று இன்னுமொருவர் குச்சி வைத்துக்கொண்டு சுட்டிக்காட்டினார். ஒன்றும் விளங்கவேயில்லை எனக்கு. அத்தனையும் ஓவியங்கள் தான். கிமு1ஆம் நூற்றாண்டு ஓவியம்.கருமை படிந்து காணப்பட்டது, ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டி அவர் சொல்லச்சொல்ல விளங்கிக்கொள்ள முடிந்தது.


தாமரைக்குளம், அதில் பூப்பறிக்கும் சமணர், அன்னப்பறவைகள், குளக்கரையின் சுவர்களில் வேலைப்பாடுகள் என ஒவ்வொன்றாக சொன்னார். ஆஹா.. என்ன ஒன்று அத்தனை கருமை படிந்து கூர்ந்து கவனித்தால் விளங்கிக்கொள்ள முடிகிறது.வலது புறம் ஜைனர் தீர்த்தங்கரர்களின் குடைவரை சிற்பம், நான்கு ஆள் உயரத்துக்கு உட்கார்ந்த உருவம், தொட்டுப்பார்க்கலாம் கற்சிற்பத்தை மட்டும் , ஓவியங்களை அல்ல. இருப்பினும் பல இடங்களில் காரை பெயர்ந்து ஒவியம் முழுமை பெறாதது போல. புகைப்படம் எடுக்காதீங்க என மென்மையாகச்சொன்னார். பின்னர் மூன்று தீர்த்தங்கரர்களின் குடைவர சிற்பங்கள் கருவறையில். புடைப்புச்சிற்பங்கள் , தொட்டுப்பார்க்க முடிந்தது. அறையில் துளிக்கூட வெளிச்சம் இல்லை. செல்ஃபோனின் டார்ச் லைட்டை ஆன் செய்து பார்த்தேன். கிட்டத்தட்ட மூன்றாயிரம் ஆண்டுப்பழமையான சிற்பம். சில இடங்களில் மூளியாக இருப்பினும் உருவம் இன்னும் சிதையாமல் அப்படியே உள்ளது. வெளியிலிருந்தவர் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார். தம்பி சீக்கிரம் வாங்க இன்னும் பல பேர் காத்திருக்காங்க என்றார். பின்னர் வெளியே வந்து ஓவியங்களை இன்னுமொருமுறை பார்வையிட்டேன். இவ்வளவுதானா என்றவனை நோக்கி 'நீங்க மட்டுமில்ல எல்லோரும் இப்டித்தான் சொல்வாங்க, இதையும் பாதுகாத்து வைத்திருக்கிறோமே' என்றார். பெருமைதான்.

ஒரே ஒரு கோவில். நான்கு சுவர்கள். கொஞ்சமே ஓவியங்கள் , அவையும் கருமை படிந்து விளக்கிச்சொன்னபின்னரே விளங்கும் படியானவை என ஏகத்துக்கு எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிவிட்டன எனை.

'சித்தன்னவாசலின் ஓவியமே' என்று பாடல் எனக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது சிறிது ஏமாற்றமாக இருப்பினும். வியர்த்து ஊற்றியது எனக்கு. வெளியில் வந்தால் போதும் என்றாகிவிட்டது. வெளியில் வந்து காத்துக்கொண்டு இருந்தேன். செந்தில் உள்ளேயே நின்று கொண்டு இருந்தார். ராம் எனக்குரல்.. என்ன செந்தில் என்றேன் உள்ள வாங்க என்றார். இல்ல செந்தில் நான் பார்த்துட்டேன் எல்லாம் , வாங்க போலாம் என்று ஏமாற்றம் தொனிக்கும் குரலில் சொன்னேன். இல்ல வாங்க என்றார் விடப்பிடியாக. சரி உள்ளெ போய் பார்க்கலாம் என்று சென்றேன். உள்ளே அறிவர் கருவறையில் மேற்சுவரில் ஒரு தாமரை போன்ற புடைப்புச்சிற்பம். அதன் நேர்கீழே நடுவில் நின்று கொண்டு 'ஓம்' என்று சொல்லுங்களேன் என்றார் 'ஓம்' என்றேன். அதிர்ந்து அதிர்ந்து தீரவேயில்லை.அத்தனை எதிரொலி தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது உடல் சிலிர்க்கிறது எனக்கு.ஆஹா.. இருப்பினும் அந்த இடத்தை விட்டு சிறிது நகர்ந்து நின்று சொன்ன போதிலும் அந்த எதிரொலி இல்லவே இல்லை. ஆச்சரியம். பின்னரும் நடுவில் நகர்ந்து நின்று கொண்டு பின்னரும் ஓம் என்றேன்.அத்தனை சிலிர்ப்பு. நல்லவேளை அனுபவம் கிடைக்காது போயிருக்கும் எனக்கு.. ஆஹா இப்போது நினைத்தாலும் அந்த எதிரொலி எனக்குள் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.

பின்னர் அதை முழுவதுமாக அனுபவித்துவிட்டு வெளியெ வந்த போது அத்தனை ஓவியங்களின் புகைப்படங்களையும் செல்லில் எடுத்ததை காண்பித்தார். புகைப்படம் எடுக்கக்கூடாது என்றாரே , அதெல்லாம் அப்டித்தான் இன்னுமொரு இருபது கொடுத்தேன் . புகைப்படத்திற்கு தடையில்லை என சொல்லிவிட்டார் என்றார். இதுதான் டிக்கெட் கொடுக்காததற்கும்  காரணம் போலிருக்கிறது.


சமணம் அழிந்தொழிந்தது கடுமையான சட்டதிட்டங்களும், துறவு வாழ்க்கையும் தான் என அறியக்கிடைத்தது, திரும்பி வரும் வழியில் செல் ஃபோனில் நெட்' ஆன் செய்து பார்த்ததில் ஆஃபீஸ் மெயில்கள் ஏதும் அத்தனை அவசரமாக பதிலுரைக்க வேண்டாதவைகளாக அமைந்துவிட்டதே எனக்கு நிம்மதியாக இருந்தது. நம்ம கவலை நமக்கு...ஹ்ம்.!


 .

No comments:

Post a Comment