நெருப்புடா - perfect rock, சரணங்களில் rap effect- பெர்ஃபெக்ட் ராக்' கேட்க யாருமில்லை என்பதால் கொஞ்சம் ராப்'கலந்தே இப்போதெல்லாம் இசைக்கின்றனர். முழு ராக்'கில் இசைத்திருக்கக்கூடாதா என ஏங்கவைக்கும் பாடல்.
'பொதுவாக என் மனசு தங்கம்' பாடல் தான் வணிக நாயகனுக்கு இன்று வரை முகப்புப்பாடலாக இருந்தது. ( இடையில் வந்த ஆர்ப்பாட்ட இசை தளபதியில் வந்த 'ராக்கம்மா கையத்தட்டு' ) கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது 'நெருப்புடா'. இடையில் ரஹ்மான் இசைத்த 'ஒருவன் ஒருவன்' கூட வழக்கமான ராசைய்யாவின் பாணியை ஒத்தது தான்.
அந்தக்காலங்களில் எம்ஜியாருக்கென முகப்புப்பாடல்கள் இசைத்த அத்தனை இசையமைப்பாளர்களும் ஒரே போன்ற பாணியை கைக்கொண்டனர் என்பதே உண்மை. எமெஸ்வி, கேவி மஹாதேவன் என யாருடைய பாடலைக்கேட்டாலும் ஒரே பாணியில் இசைத்திருப்பர். முதன் முறையாக கட்டுடைத்து ராக்/ராப்'பில் இசைத்திருக்கிறார் சநா. இப்பொது கொஞ்ச நாட்களுக்கு முன்னர் விஐபி'யில் தனுஷுக்காக தம்பி அநிருத் இசைத்திருந்தார் இதே பாணியில் ( வேலை இல்லாப்பட்டதாரீ ) . யுவனின் வானம் படத்தில் 'ஹூ ஆம் ஐ' பாடல் மற்றும் 'மெளனம் பேசியதே' படத்தில் 'சின்ன சின்னதாய்' பாடல் எல்லாம் மற்றும் தரண் குமார் இசைத்த விரட்டு படத்தில் இடம் பெற்ற ‘போதும் போதும்’ என்ற பாடல். ராக்' இசையை முயற்சி செய்தவை எனக்கூறலாம். இருப்பினும் யாரும் நெருங்கமுடியாத அளவு ஆர்ப்பாட்டம் இங்கு.
முக்கியமாக சில நண்பர்கள் குறிப்பிட்டது போல வழக்கமான எஸ்பிபி/மனோ என யாரையும் அழைக்காது புதுக்குரல்/முரட்டுக்குரல் ஒலிக்கிறது. வாயசைப்பு என ஏதும் இல்லையென்ற போதும் பின்னில் இசைக்கவும் இது போன்ற உறுதியான முடிவை எடுத்த சநாவுக்கும் ரஞ்சித்துக்கும் நன்றி அடுத்த கட்ட நகர்வு இது. இனியும் இது போன்ற பாடல்களை முகப்பிசைக்கென இசைத்தால் தான் உண்டு என ஓங்கி அறையும் இசை.
0:43,01:49,02:10,02:32,03:04 இந்த இடங்களில் பத்து செகன்டுக்கும் கூடுதலாக தளர்வுடன் இசைக்கும் அந்த எலெட்ரிக் கிட்டார் தந்திகள் நாயகனுக்கு வயசானாலும் இன்னும் மவுசு குறையவில்லை என பறைசாற்றுகிறது. ஆர்ப்பாட்டமாக இசைக்கும் அந்த ரிதம் கிட்டார் 0:31லிருந்து 0:41 வரை அதிர வைக்கும் இசை. ராக்' கிட்டாரின் இலக்கணம் அது.இத்தனை உறுதியுடன் இத்தனை வேகமும் அதிரடியும் தமிழ் தாங்கும் என இசைத்திருக்கிறார். மடை கொண்டு அடைக்கவியலாத வெள்ளம் போல் எங்கும் நிற்காது சீறிப்பாயும் காட்டாற்று இசை.
01:28,03:13 -இல் அந்த சீழ்க்கை/விசில் ஒலியைப்பற்றிக்குறிப்பிட்டே ஆகவேண்டும். எல்லோரும் இப்பொது அதை பயன்படுத்துவதேயில்லை. சீழ்க்கை ஒலியைப் பயன்படுத்தியது ஒரு ரெட்ரோ ஃபீல் கொண்டுவரும் என்பதற்காகவே இசைத்திருக்கலாம். ஆமப்பா , ரஜினியே ஒரு ஆன்டிக் பீஸ்தானே மச்சி.. 'நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்' பாடல் முழுக்க கூடவே பாடியதே கடைசியாக நாம் கேட்டது அந்த சீழ்க்கை ஒலி, இப்போது கேட்க வாய்த்திருக்கிறது.பொதுவாக சீழ்க்கை ஒலியை அதிரடி இசைக்கென பயன்படுத்துவது என்பது ஒத்து வராத விஷயம்.இத்தனை மென்மை எங்கனம் ஆர்ப்பாட்டத்துடன் பொருந்தும்? ...ஹ்ம்..நாயகனின் கதா பாத்திரம் அங்கனம் இருக்கலாம் ...பார்ப்போம். ! #நெருப்புடா
No comments:
Post a Comment