Sunday, February 21, 2016

பெயர் தெரியாப்பறவை


மிகை எதார்த்தத்தில்
சிறு கற்பனை
கலந்தே உள்ளது


*****

காற்றில் உன் துப்பட்டா
பறக்கிறது
இத்தனை பெரிய உடலை
சுமந்து செல்லும்
வண்ணத்துப்பூச்சியின்
இறக்கைகள் அவை.


******

மொழிக்கு முன்னரே
காதல் இருந்தது
இப்போது என்னிடம்
மொழியில்லை


*****

மொழி என்னைக்கொண்டு
தனக்கென எழுதிக்கொண்ட
கவிதை வரிகளில்
நீ எங்கனம் உட்புகுந்தாய் ?




******

பறவையின் அலகில்
சிறைப்பட்ட மண்புழு
பெய்த மழையின் சிறுதூறலில்
நெளிந்து நெளிந்து
நனைந்து கொள்கிறது


************

கடவுள் என் வீட்டில்
ஒளிந்துகொண்டிருக்கிறார்
என்னைக்கடவுள்
என்று யாருக்கும் அறிமுகப்படுத்திவிடாதே
என்று இரைஞ்சிக்கேட்டுக்கொண்டு


************

அம்மணக்குண்டி
நிலா
ஆடை அணிய அணிய
அமாவாசை


************

உன்னுள் அலைகளை
உருவாக்கியிருப்பின்
எனை மன்னித்துவிடு
எனினும் அவை
உன்னிழலால்
என்னுள் உருவானவை.


***********

யாரும் எளிதில்
தொட்டுவிடமுடியாத
இத்தனை உச்சியில்
பூத்துக்கிடக்கும் மலருக்கு
என்ன ஆசை
இருந்துவிடப்போகிறது ?


***********

பெயர் தெரியாவிட்டால் என்ன
அந்தப்பறவையின் குரல்
நன்றாகத்தானிருக்கிறது
என்ன ஒன்று
நான் எழுந்து போய்ப்பார்ப்பதற்குள்
பறந்துவிட்டது.



மலைகள் இதழில் வெளியானவை
http://malaigal.com/?p=7831

No comments:

Post a Comment