Thursday, October 31, 2013

அம்மா

காய்கறி சாப்பிடவில்லையென்றால்
ஒரு கை மட்டுமே வளரும்
இன்னொரு கை குட்டையாகவே இருந்துவிடும்
பழத்தோடு கொட்டையை சேர்த்துச்சாப்பிட்டால்
வயிற்றில் மரம் முளைத்துவிடும்
இப்படியெல்லாம்
எனக்கு விளையாட்டுக்காட்டி
செல்லமாக பயமுறுத்திய
என் அம்மா இப்போது
உறங்கிக்கொண்டிருக்கிறாள்
எத்தனை கூப்பிட்டும் எழவில்லை
என் சின்னக்கைகள் கொண்டு
அசைத்தும் பார்த்துவிட்டேன்.
எழவேயில்லை.
இதற்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி
என்னை மகிழ்விப்பாள்
காத்திருக்கிறேன்
காலம் கடந்து கொண்டிருக்கிறது
அவளின் கைகள்
ஏன் குளிர்ந்துபோய்விட்டன
என்று மட்டும் தெரியவில்லை.


.

Monday, October 21, 2013

துளிப்பாக்கள்



குழந்தை கையில் பிடித்துப் பறக்கவிட்ட
பட்டாம்பூச்சிகள் தாமிழந்த
நிறங்களைப் பற்றி கவலை கொள்வதில்லை

-

நான் கடந்து வந்துவிட்டதால்
எதுவும் இன்னமும் நிகழாமல்
இருக்கப்போவதில்லை

-

உனக்கு என்ன வேண்டும் என
என்னுள்ளிருந்துகொண்டே
கேட்கிறாய்

-

மன்னிக்கவியலாத
தவறுகள் செய்தபோதும்
கவனியாது விட்டுவிடுவது
உன்னிருப்பை என்னுடன்
உறுதி செய்துகொள்ளத்தான்

-

படகைப் பற்றி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
அதன் போக்கில் நீரில்
அலைந்து ஆடிக்கொண்டிருந்தது.
ஆகட்டும் என்று
அதற்குள் புகுந்துவிட்ட
நீரைப் பற்றி எழுதுகிறேன்
படகும் கூர்ந்து கவனிக்கிறது
‘மிதப்பது மூழ்க மட்டுமே’ என்ற
என் வரியைப் பற்றி
சிலாகித்துச் சொல்லிக்கொண்டே
கடைசியாக நீரில் அமிழ்ந்து
மூழ்கி வெளிவிட்டது
ஒரு சிறுகுமிழியை
எனக்காக.

-


.

Saturday, October 12, 2013

கண்ணுறங்காக்கானகம்




ஓநாய் பரபரவென அலைகிறது.ஆட்டுக்குட்டி திருதிருவென விழிக்கிறது. அசட்டுத்தைரியத்தில் மாற நினைக்கும் அது கடைசியில் அடங்கித்தான் போகிறது. புலி’யின் உறுமலில் நல்ல மலையாள வாடை லால் என்ற பேருக்கேற்றாற்போல. படத்தின் முதற் காட்சியிலிருந்து கடைசியில் பங்குபெற்ற கலைஞர்களின் பெயர்கள் எழுத்துகளாக உருண்டு செல்லும்வரை ராஜா ராஜா ராஜா மட்டுந்தான் இந்தக்காட்டில் ஆட்சி செய்கிறார். பெயர்ப்பலகையில் ‘சிங்கம்’ ராஜா என்று வருமென எதிர்பார்த்து ஏமாந்தேன்.வழக்கமான தமிழ்த் திரைப்படத்திற்குரிய உச்சக்கட்ட காட்சிதான் என்றாலும் ராஜா’ங்கம் நம்மை மந்திபோல இருக்கை விளிம்பில் தொத்தி நிற்க வைக்கத்தான் செய்கிறது

இசை விமர்சகர் ஷாஜி’க்கு அவரின் இயல்பிற்கு கொஞ்சம் பொருந்தாத பாத்திரம். இசைப்பவனுக்கு துப்பாக்கி பிடிக்கத்தெரியாது :). இத்தனை வலுவான கதாபாத்திரத்திற்கு ஷாஜியால் புலிக்குட்டியின் பாங்கைக்கூட காட்ட இயலவில்லை. டீப்பாயில் கிடக்கும் அந்தப்புத்தகத்தை புரட்டிக்கொண்டே வசனம் பேசுவது , என்னவோ அவங்க வீட்டுக்கு காப்பி குடிக்க வந்தது போல உடல்மொழியில் அத்தனை கலவரமே இல்லை.அதேபோல் பள்ளிக்கூடப்பிள்ளை போல விரல்களை நீட்டி நீட்டி இபிகோ செக்ஷனைப்பற்றிப்பேசுவது என..! மெயின் வில்லனாக வருபவருக்கு அதற்கான உடல் மொழி கொஞ்சமும் வாய்க்கவில்லை. கூடவே மூத்திரப்பையை வேறு சுமந்துகொண்டே செல்கிறார். அவரைப்பார்த்து பயமோ இல்லை பரிதாபமோ கூட ஏற்படவில்லை நமக்கு. மானைப்பிடிக்க நினைக்கும் ஓநாய்க்கு ஒருபோதும் அது விரைவாக ஓடும்போது பிடிக்கவே முடியாது. இரவு முழுதும் அதன் கூடவே படுத்திருந்து காலை வேளையில் அதன் மூத்திரப்பை நிறைந்து காணும்போது விரைவில் துரத்திக் கொன்றுபோடுவது சுலபம். அதையே தான் இந்த ஓநாயும் செய்கிறது கடைசியில். 


அத்தனை நேரமும் ஒரே ஒரு வார்த்தை, இல்லையெனில் சைகை மூலமே பேசிக்கொண்டிருக்கும் ஓநாய் அந்த கல்லறைச்சுவரின் அருகே அமர்ந்து மூன்று-நான்கு நிமிடத்திற்கும் கூடுதலாக கண்ணிமைக்காமல் அதன் கதையைச்சொல்கிறது. பின்னணியில் இசைக்கும் அந்த அழுத்தமான வயலின் பார்ப்போர் மனதை அறுத்து நம்மையறியாமல் கண்ணில் நீர் வரவழைக்கிறது. கதையை முடிக்கும்போது வரும் இசை கேட்டுத்தான் அந்த ஓநாய் அழுதிருக்க வேண்டும். இசையின்றி அழவைக்கும் முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறுவதில்லை. பீத்தோவென்,மொஸார்ட் என்றெல்லாம் பேசிக் கொண்டேயிருக்கும் நமக்கு நம்ம கூடவே இருக்கிறானய்யா நம்ம ராஜா. அவனைத் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் அழுவதற்கும், கொண்டாடுவதற்கும்.

திரையில் எந்தக்காட்சியில் ராஜா இல்லை என்று தேடித்தான் பார்க்கவேண்டும். அத்தனை நிசப்தமான நள்ளிரவில் தொடர்ந்து இடைவிடாது ஒலிக்கும் சில்வண்டுகளின் ரீங்காரமும், அனாதையாக நின்றுகொண்டு ஒளியை உமிழ்ந்துகொண்டிருக்கும் அந்த மஞ்சள் சோடியம் வேப்பர் விளக்குகளும், மெல்ல மெல்லத்தயங்கி பின் ஓங்கி ஒலிக்கும் அந்த சுவர்க்கோழிகளின் ஒலிகளும் இதுதான் இரவு என்று உறங்கவைக்காது நம்மைப்பரிதவிக்க வைக்கிறது. என்னவோ எதிர்பாரதது நடக்கப்போகிறது என்று ஒரு தவிப்பிலேயே அமிழ்த்திவைக்கிறது முன்னணி இசை. பகலில் கூட வரும் காட்சிகளுக்கு தேவையான ஒலி மட்டுமே கொடுத்திருக்கிறார். காகம் கரைவதும், தூரத்துக்கோயில் மணி அடிப்பதுமென , இயல்பாக சப்தங்களை மட்டுமே கொடுத்து காட்சிகளுக்கு உரமேற்றியிருக்கிறார்.

எந்த இடங்களில் இசை தேவையில்லை என்பதை முடிவு செய்துவிட்டு ,அங்கெல்லாம் இசைக்காது அமைதி காத்து, ஏன் இவ்வளவு மயான அமைதியென நம்மைப்பயமுறுத்தும் இசை.!

தந்தி வாத்தியங்கள் (வயலின் Violin,செல்லோ Cello,டபுள் பாஸ் Double bass) இவையெல்லாம் நம்மை இருக்கையை விட்டு எழாதபடி சேவகம் பண்ணுகின்றன ராஜாவின் சொற்படி கேட்டு. மெல்லிய அழுகையை உடனே வெளிக்கொணரும் வயலின், இதயத்தின் அடியாழம் வரை சென்று நம்மையறியாமல் அறுத்துக்கூறு போடும் செல்லோ மற்றும் அழுந்த ஒலிக்க டபுள் பாஸ் என்று வெளுத்து வாங்கியிருக்கிறார் ராஜா. அடித்து தாளத்தை உருவாக்க வேண்டியதில்லை , இந்த டபுள் பாஸில் ஒரு முறை இழைத்தால் போதும் , அடிமட்ட ஒலி மனதை நிறைத்துவிடும் . ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தை அதிவேகமாகத் திருப்பும் போது ஏற்படும் அந்த அலைக்கழிக்கும் உணர்வை ஒரு இழைப்பு உணர்த்திவிடும். ஆனாலும் இது போன்ற அடித்து ஆடும் வன்முறைத்திரைப்படங்களுக்கு எப்போதும் மிகவும் வலிந்த Percussions வைத்துக்கொண்டு தான் இசைப்பது வழக்கம். பார்ப்பவனின் கண்களையும் காதுகளையும் ஒருசேரக்கட்டிப்போடும் அவை. அதற்கெல்லாம் எதுவும் அவசியமில்லை என கம்பியிழைக்கருவிகளை மட்டுமே வைத்துக்கொண்டு நர்த்தனம் ஆடியிருக்கிறார் ராஜா. விருது நிச்சயம்.

அத்தனை நேரமும் சோகம் இழையோடும் அந்தத்தந்திக்கருவிகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு கடைசி உச்சக்கட்டக்காட்சியில் அதிரவைக்கும் இசையை பொழிந்திருக்கிறார் ராஜா. அத்தனை பரபரப்புக்கும் இசை தான் காரணம். மிஷ்கினின் அந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் காட்சிகளுக்கு வெறுமனே வாத்தியக்கருவிகள் ஏதுமில்லாது காற்றைக்கிழிக்கும் இயல்பான சப்தங்களை வைத்துக் கொண்டு படையலே போட்டிருக்கிறார். இதே போல ஒரு காட்சி பழஸிராஜா’விலும் வரும். வாட்களின் காற்றைக்கிழிக்கும் சப்தங்கள் நம்மை இருக்கையின் பின்னில் சாய்ந்து கொள்ளவைக்கும் எங்கே நம்மீது வாட்களின் வீச்சுகள் பதிந்து விடுமோ என்ற பயத்தில். 


சேவகனுக்குத்தீனி போடுதல் வெகு சுலபம். ராஜா’வை விருந்துக்கழைத்தால்.. ?,அதைச்செவ்வனே செய்து தான் இருக்கிறார் மிஷ்கின். பழஸிராஜாவிற்குப்பிறகு நல்லதொரு வாய்ப்பு இந்தப்படத்தில் ராஜாவிற்கு. கிட்டத்தட்ட ‘ஆரண்யகாண்டம்’ போன்ற திரைக்கதை தான் இங்கும். யுவன் Spanish பின்னணியில் படம் முழுக்க இசைத்து ஒரு புதிய ட்ரென்டை உருவாக்கினார். ராஜாவோ தமக்கேயுரித்தான பாணியில் முழு சிம்ஃபொனியைத் தந்திருக்கிறார்.

இடையில் வந்து மாட்டிக்கொண்ட ஆட்டுக்குட்டி ஸ்ரீ’யின் கோபத்தை மௌனமாக உள்வாங்கிக் கொள்ளத்தான் செய்கிறது ஓநாய். ‘என் குடும்பத்தையே போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டுபோய் உக்காத்திவெச்சிட்டாண்டா’ எனும்போது அவரின் இயல்பான கோபமும், சாதாரண வாழ்க்கை வாழும் நடுத்தர வர்க்கத்தின் ஆற்றாமையும் இழைந்தோடுகிறது. அவரின் உடல்வாகும் அதற்கேற்றாற்போல் பொருந்திப்போகிறது. Chief Doctor செல்பேசியிலேயே சொல்லிக்கொடுக்கும் அத்தனை விஷயங்களும் துறை சார்ந்தவைகளாக இருப்பதால் அக்காட்சிகளில் நாம் கொஞ்சம் மௌனம் சாதிக்கத்தான் 
வேண்டியிருக்கிறது.புரியத்தானில்லை. ‘நாம உயிர் வாழணும்ல அதனால உல்ஃபக்கொல்றது ஒண்ணும் தப்பில்ல’ என்று போலிஸின் ஒரு வார்த்தைக்கு பயந்து அழும் ஆட்டுக்குட்டியின் அண்ணன் தைரியமாகச்சொல்கிறார்.

படத்தில் ஒவ்வொரு காட்சியும் பரபரப்புடனும் அதே நேரத்தில் சரியான கால அளவுடனுமே பயணிக்கிறது. கதாபாத்திரங்கள் ஏதும் செய்யாது அனைத்தும் அமைதியாக இருக்கும்போது அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பவனின் மனதை தவிப்பிற்குள்ளாக்கும் ஒவ்வொரு காட்சியும் விருந்து. பல்வேறு காட்சிகளில், தொடர்ந்து வரவில்லையெனினும் கிட்டத்தட்ட அனைவருமே ஒத்துக்கொள்கின்றனர் இனி ஓநாயைப்பிடிக்க இயலாதென்று. ஒநாயைப்போட்டுத்தள்ளவென ஆட்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறான் அந்தத்’தம்பா.’ அத்தனை பேரையும் சமாளித்து திருப்பித்தாக்குகிறான் ஓநாய். வன்முறை அத்தனை வெளியே தெரியவில்லை. காட்சிகளில் காண்பிக்காது இசையால் அறுத்துக்கூறு போட்டுவிடுகிறார் ராஜா. இன்னோவா காரில் பயணிக்கும் அந்தப்பரபரப்பான காட்சிக்கு என்ன பெயரிட்டு அழைப்பது ?. தோட்டாவை குறைத்து எண்ணிக்கொண்டே கடக்கிறான் அத்தனை பெரிய சாலையையும். நமக்கே அந்தக்காரில் பயணித்தது போல கேமரா புகுந்து விளையாடுகிறது. எத்தனையோ ஆங்கிலப்படங்களில் பார்த்திருக்கும் காட்சி தானெனினும் சலிக்கவில்லை.

இத்தனை பரபரப்பிற்கிடையே கேமராவின் கோணங்கள் நம்மை உலுக்குகிறது. கதாபாத்திரங்கள் அருகே வந்து பேசும்போது கூட அவர்களின் முகத்தை டைட் க்ளோஸப்பில் காண்பிக்காது உடலின் சில பக்கங்களை மட்டுமே காண்பித்து அவர்கள் பேசும் வசனத்தை மட்டும் ஒலிக்கச்செய்திருப்பது நன்று.


ஓநாயை ஏற்றிப்பின்னில் வைத்துக்கொண்டு பைக்கில் தூரம் கடக்கக்கடக்க ஒவ்வொருமுறையும் அழுத்தமாகக்கூரான கத்தியை வைத்துக்கீறிவிடுவது போல ஒலிக்கும் அந்த Firefly . Hitchcock இன் Psycho வில் வரும் அந்த தொடர்கொலையின் போது கீறிக்கிழிக்கும் வயலின், இத்தனை நாட்களுக்குப்பிறகு இப்போது தான் கேட்கிறேன். சிலீரென்று பரவி ரோமக்கால்களைக்குத்திட்டு நிற்க வைக்கிறது. ஆப்பரேஷனின் போது பிரவாகமாக ஊற்றெடுக்கும் அந்த கற்றை போல ஒலிக்கும் வயலின். புகுந்து விளையாடியிருக்கிறார் ராஜா. உயிர் கொடுத்து நிமிர்ந்து நிற்க வைக்கும் இசை. உதவி செய்ய முடிவெடுக்கத்திணறும் அந்த சீஃப் டாக்டர் வீட்டில் பிணம் விழுந்து கிடக்கிறது. செகண்டி ஒலிக்கிறது பின்னில். இரண்டுக்கும் பொருந்திப்போகும் இசை அது. ஆப்பரேஷன் செய்யாது விட்டால் அங்கும் விழப்போகும் பிணம். ஹ்ம்... ஐயா..நீர் தான்யா ஞானி. காட்சிகளின் இடைவெளியில் நிரப்பவும்,அடுத்த காட்சிக்குப் பயணிக்கவும் மட்டுமே பயன்பட்ட இது நாள் வரையிலான இசை தோள் கொடுத்து நிற்கிறது படம் முழுக்க.

அத்தனை நேரமும் அழுது தீர்க்கும் வயலின்,அந்தக்கோவில் வாசலில் இழைந்து இழைந்து ஒலித்துக் கொஞ்சம் ஆறுதல் தருகிறது.மனதுக்கு இதமாக கொஞ்சநேரமே ஒலிக்கிறது அந்த இசை (ஒலித்தொகுப்பில் Compassion ) Just a sigh of relief.

மனம் மாறி வெளியில் வந்து அந்த இரவில் தோட்டத்தில் நின்றுகொண்டே இன்ஸ்ட்ரெக்ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கும்போது பின்னணியில் ஒலிக்கும் அந்தத்தவளைகள்,சில் வண்டுகள் என பயத்தை இன்னமும் அதிகப்படுத்தும் பிரமாதமான இசை. ஆப்பரேஷன் முடிந்துமான அந்தச்சிறு Flute Bit , மனதில் அமைதியைக்கொண்டு வந்து சேர்க்கிறது. மிஷ்கின் படம் எடுத்ததே ராஜாவின் இசைக்குத்தான் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியும் அவருக்கெனெவே அமைத்து வைத்தது போலவே இருக்கிறது. இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கொடுத்தவற்றிலும் கூடுதல் இசைத்துணுக்குகள் படத்தில் எங்கெங்கும் பரவிக்கிடக்கிறது. ‘ராக்கம்மா கையத்தட்டு’வில் கொஞ்சமே முன்னுரை காட்டிய அந்தக்கற்றை வயலின்கள் இங்கு மூன்று மணிநேர முழுக்கச்சேரியே செய்திருக்கின்றன.

தொடர்ந்தும் ஒலித்துக்கொண்டிருக்கும் இசை சடாரெனெ நிறுத்தப்படுகிறது என்றால், அதைத்தொடரும் காட்சியில் என்னவோ தகாதது நடக்கப்போகிறது என்றே நம்பவைத்து விடுகிறார் இயக்குநரும் இசை அமைப்பாளரும். இருப்பினும் ஒவ்வொரு தடவையும் சிலிர்த்துப்போகிறது காட்சிகள் நகரும் விதம். கல்லறைக்குள் தேடும் காட்சியில் அந்த ஷெனாய் Very Much Intriguing. பின்னர் குடும்பம் ஒன்றாகச்சேர்ந்தபின் பியானோவில் தொடங்கி ஒலிக்கும் Somebody Loves us all , ராஜ பாட்டையடா. துப்பாக்கிச்சூட்டை முன்னின்று அந்த திருநங்கை வாங்கிக்கொண்டு ஓநாயைக் காப்பாற்றும் காட்சியில், ஆட்டுக்குட்டி செய்வதறியாது திருதிருவென விழிக்கிறது. அவனைப்போலவே பார்வையாளனாகிய நாமும். (திரையில் அந்தக்காட்சிகள் வரும்போது என் செல்பேசியில் அந்தப்பத்து இசைக்கோவைகளையும் மீள மீள ஒலிக்க விட்டுக் கேட்டுக்கேட்டு ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தேன்)


இதே போல ஒரு மருத்துவப்பின்னணி கொண்ட ‘இதயம்’ படத்தில் வந்த அந்த தீம் ம்யூஸிக் இன்னமும் என் மனதுக்குள் நின்று கொண்டேதானிருக்கிறது. இதயத்துடிப்பை முதன்மையாகக் கொண்ட அந்த இசை. இவருக்கு வயதாகவே ஆகாதா..?! ஹ்ம்,,!? இத்தனை ஆர்ப்பரிப்போடு மிரள வைத்து வன்முறையைக் கிளப்பும் இசை ‘உதயம்’ (தெலுங்கில் ‘சிவா’)வில் தான் பார்த்திருக்கிறேன். இரண்டுமாகக்கலந்து ஒலிக்கிறது இங்கு.

சற்றும் எதிர்பாராத காட்சிகள் கொண்ட இடைவேளைக்கு முந்தினதான பகுதி , பின்னரும் அதே பாங்கில் தொடரும் பின் பகுதி அந்த ஷாப்பிங் மாலின் கீழ்த்தளத்தில் வந்து சேர்ந்ததும் இப்படித்தான் முடியப் போகிறது என்பது போல நொண்டியடிக்கிறது. அப்படித் தோணவிடாமல் பரபரவென இசைக்கும் அந்த செல்லோ இசை நம்மை இருக்கையின் நுனிக்குக்கொண்டுவந்து உட்கார வைக்கிறது. ஒநாய் அரற்றுகிறது , நிலை கொள்ளாமல் தவிக்கிறது. பிரமாதமான எடிட்டிங்கும், மார்ஷியல் ஆர்ட்ஸுமாக இன்னும் கொஞ்ச நேரம் நீளாதா எனத்தோணவைக்கிறது.

அத்தனை பெரிய அறுவை சிகிச்சைக்குப்பிறகு எல்லோரையும் அடித்து வீழ்த்துவதும், துப்பாக்கியால் குறி பார்த்துத்தவறாமல் சுடுவதும் ,தெளிவான யுக்திகளும், திட்டம் போட்டு அந்தப்பார்வையிழந்த குடும்பத்தை சேர்த்துவைக்க முயல்வதும் நாம் இன்னமும் தமிழ்த்திரைப்படந்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தத்தான் செய்கிறது. கூடுதலாக இத்தனை அழகான திரைப்படத்தின் இடைவேளையில் ‘இனி சந்திரமுகியின் ஆட்டம் ஆரம்பம்’ என்பன போன்ற வணிகக்குறியீடுகள்.

எனினும் உருவாக்க அழகியலில் மிஷ்கினை மிஞ்ச இனி யாரும் இல்லை, சில படங்கள் தோல்வியாக இருந்தபோதும் அதன் உருவாக்கம், தொய்வின்றிச்செல்லும் திரைக்கதை, வலிந்து திணிக்காத காட்சிகள் என அழகாகச்செய்து காட்டியிருப்பார்.
வகை தொகையில்லாத கொலைகள், அதீத வன்முறைக்காட்சிகள், என அவ்வப்போது மெஜீஷியனின் தொப்பிக்குள்ளிருந்து வெளிக்கிளம்பும் முயல் போல வெளித்தெரியும் குறைகள். இருப்பினும் அத்தனை குறைகளையும் மூடிமறைத்து கட்டி எழுப்பி நிற்க வைக்கிறது சிங்கமும் அதன் கர்ஜனையுமாக இசை. எத்தனையோ காட்சிகளைப்பற்றி எழுத நினைத்தாலும் இசை தான் முன் வந்து நிற்கிறது.

‘எனக்கொரு கதை சொல்லுங்க’ என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கும் குழந்தைக்குக் கல்லறையில் வைத்து கதை சொல்லுதல் யாருக்கும் வரக்கூடாதுதான். இங்கு ஓநாய் போல ஊளையிட்டு அழுகிறான் அந்த ஆட்டுக்குட்டி. (கல்லறைக்காட்சியில் ட்ரெம்ப்பெட்டும், செல்லோவும் சேர்ந்து அறைகின்றன. இந்தப்பார்வையிழந்த குடும்பத்தை இப்படி ஒரு கதிக்கு ஆளாக்கிவிட்டானே என்று வெறுப்பு மேலிடுகிறது நமக்கு.) கடைசிக்கு மிஞ்சுவது அந்தக் குழந்தையும் ஆட்டுக்குட்டியும் மட்டுமே. தனித்து விடப்பட்ட காட்டில் மிக எளிதாகக்கொல்லப்படும் உயிர்கள் இங்கு தப்பிப்பிழைத்திருக்கின்றன.



Friday, September 20, 2013

என் பிரிய எழுத்தாளர் வண்ணதாசன்

முகநூலில் நான் எழுதியிருந்த இந்தப்பதிவிற்கு என் பிரிய எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் ஆமோதிப்பும் கூடவே இணக்கமான பாராட்டுதலும். இத்தனை நுணுக்கமாக ஒரு பதிவை உற்றுநோக்கி அதனுள் உறைந்துகிடக்கும் அடிப்படை மனித உணர்வுகளை அவரின் என்றைக்குமான கவிதைகள் போலவே எடுத்துக்கூறிய என் பிரிய எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு என் நன்றிகள்.!

அந்தப்பதிவு



பெங்களூர் கோரமங்கலா 80 ஃபீட் ரோட்லருந்து சில்க் போர்டு வர்றதுக்கு எந்த ஆட்டோவாவது ஒத்துக்கொண்டதுன்னா அவர ஒபாமா ஆக்கீறலாம். ஆனாலும் எனக்கு ஒரு ஒபாமா கெடச்சார் அன்னிக்கு. ஏகத்துக்கு ட்ராஃபிக். வண்டி ஒரு இம்மி கூட நகரல. கைல வெச்சிருந்த ஃபைலை அப்படி ஆட்டோ சீட்டில் வைத்துவிட்டு, அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். இப்பல்லாம் எலெக்ட்ரானிக் மீட்டர், வெய்ட்டிங்க் டைம் ‘டிக்’கிக்கொண்டிருந்தது. ‘ஏகப்பட்ட ட்ராஃபிக் ஆயிப்போச்சு தம்பி, பெங்களூர்ல இருக்கிற அமைப்புக்கு 15 லெட்சம் வண்டி தான் ஓட முடியும் (?) ஆனா இப்ப 45 லெட்சம் வண்டிக ஓடுது. எங்கருந்து எடம் கெடைக்கும் ? தம்பி எப்டி போலாம்ங்க்றீங்க’ என்றார். ‘சேவா சதன் வழியா போயி அந்த கிருபாநிதி காலேஜ் கட்ல ரைட் எடுங்கன்னேன்.’ ‘இல்ல வர்றவங்க இந்த ரூட்ல போங்க அப்பதான் மீட்டர் கம்மியாவும்னு சொல்லுவாங்க அதான் கேட்டேன்னார்’. அப்பல்லாம் என்ன இத்தினி ஆட்டோ வண்டில்லாம் கெடயாது, பஸ்களோட ப்ளீமூத், மாரீஸ் மைனர், எப்பவாச்சும் ரோல்ஸ் ராய்ஸ், அப்பறம் நம்ம அம்பாஸிடர் இவ்வளவுதான் ஓடும். அப்பால பிரிமியர் பத்மினி வந்துச்சு, எடமும் விசாலமா இருந்துச்சு, ட்ராஃபிக்கும் கெடயாது. இப்ப இந்த ஐடி’காரங்க வந்ததுலருந்து சொம்மா பேங்க் லோன் குடுத்து குடுத்து வண்டிக பெருகிப்போச்சு.

64’ல HMTல வேலக்கி சேர்ந்தேன் தம்பி அப்ப எனக்கு 69 ரூபா மாசச்சம்பளம், ‘HMT-ன்னா வாட்ச் தயார் பண்ணுவீங்களோ’ இல்ல நான் டூல் செக்ஷன்ல இருந்தேன்’ என்றார். அப்ப தான் எனக்கு கல்யாணம் ஆச்சு. வாங்கிற சம்பளத்த பூரா எங்கப்பா கைல குடுத்துருவேன். ஒரு சினிமா பார்க் போகணுன்னா கூட அவர் கிட்ட தான் எதிர்பாக்கணும்.சனி ஞாயிறு தயங்கித்தயங்கி நிக்கிறத பாத்துட்டு அங்க அண்ணன்தான் அஞ்சுபத்து கொடுத்து ‘பொண்டாட்டிய சினிமா கினிமா கூட்டீட்டுப்போய்ட்டு வாடா’ன்னு அனுப்பி வெப்பார். எம்ஜியார் படம் ரெண்டு பேரும் பால்க்கனி டிக்கெட் வாங்கிட்டு போய் பாத்துட்டு , அப்டியே ஓட்டல்ல சாப்ட்டுட்டு வீடு வந்த சேர்ந்தா மிச்சம் சில்லறை கைல இருக்கும். இப்ப ?! ‘நேத்து ஐநூறு ரூபா குடுத்து வீட்டுக்காய்கறி , மளிகை எல்லாம் வாங்கிக்கன்னு சொல்லீட்டு சவாரி போயிட்டு சாயங்காலம் திரும்பி வந்தா இன்னும் கொஞ்சம் காசு குடூன்னு கேக்றா என் பொண்டாட்டி. என்னம்மான்னேன், என்னா செய்றது எல்லாம் செலவாயிட்டுதூங்கறா என்று கூறிச்சிரித்தார்.’ இத்தனைக்கும் நான் அவர எதுவுமே கேட்கல. அவராகவே சொல்லிக்கிட்டேயிருந்தார். ‘அப்புறம் 25 வருஷ சர்வீஸுக்கப்புறம் வீஆரெஸ் வாங்கிட்டு இந்த ஆட்டோவ வாங்கி ஓட்டிட்டிருக்கேன்.’ அவன் இப்பவே , இப்பந்தான் படிச்சிக்கிட்டிருக்கான் அதுக்குள்ள பல்ஸர் வேணூங்கறான்’ ‘யாரு ? ’ ‘என் மகன் தம்பி ‘

'எனக்கு ஒரே பையன் தம்பி , இங்க தான் KR-புரத்துல ஒரு எஞ்சீனியரிங் காலேஜ்ல சேத்துவிட்டுருக்கேன். காலை  டிஃபன்  வீட்டில சாப்ட்டுட்டு மத்தியானத்துக்கு வீட்டுலருந்தே கட்டீட்டும் போயிடுவான் , அப்டியும் தெனத்துக்கு அம்பது ரூபா கைல குடுத்துவிடுவா அவன் அம்மா. இப்ப அதுவும் பத்தல இன்னும் அம்பது குடூங்கறான் தம்பி. ‘ஒண்ணரை காலன் பெட்ரோல்,ரெண்டே கால் ரூபா அப்ப, இப்பத்தி கணக்குக்கு மூணேமுக்கா லிட்டர் வரும்,இப்ப பாரூங்க தம்பி 75-ரூபா விக்கிது பெட்ரோல் ஒரு லிட்டருக்கு.’ அவர் பேச்சில் முழுக்க கன்னட வாடை தான் அடித்தது. ஒரு திருப்பத்தில் நிறுத்தி ஒதுங்குப்புறமாகப்போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். பிறகு உட்கார உள்ளே நுழைந்தவர் கை இரண்டையும் சீட்டின் மேல் வைத்துக் கொண்டு, தலையை மட்டும் என் பக்கம் திருப்பி ‘எங்க தம்பி இப்ப இருக்கிற புள்ளைங்கல்லாம் கடுமையா ஓழச்சி வேல செஞ்சி சம்பாதிக்கிறதுன்னா அவ்வளவு யோசிக்கிதுங்க, ஆனா காசு மட்டும் நெறயக் கொட்டணும்னு எதிர்பாக்குதுங்க’ என்றார். 
 




Saturday, September 14, 2013

சருகுகள்



ஆறிய தேநீர்

நான் இல்லாமல் போகும்போது
நீங்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொள்வதற்கென
ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறேன்
ஒரு சிறு தேநீர் குடிக்கச் சென்று வரும்
நேரத்திற்குள் அதைப் பார்வையிட்டு விடுங்கள்
ஏனெனில் எனக்கு
ஆறிய தேநீர் அத்தனை பிடித்தமில்லை

சருகுகள்

அது வரை
சப்தமிட்டுக்கொண்டிருந்த
காய்ந்த சருகுகள்
மழை பெய்த ஈரத்தில்
தமக்குள் புழுங்கி
அமைதியாகிவிட்டன
கொஞ்சம் ஈரம்
எல்லா ஆற்றாமைகளையும்
அணைத்துத்தான் விடுகிறது.

வயது

என் வயதைக்கேட்கும்
அனைவரும்
தம் வயதில் இரண்டைக்கூட்டி
வைத்துக்கொண்டு
அதுதானே
என்றே கேட்கின்றனர்
உன் வயதை நான் எப்போதும்
என்னிலிருந்து
இரண்டைக்கழித்து விட்டே
நினைத்துக்கொள்கிறேன்


Wednesday, September 4, 2013

‘யுகம் யுகமாய் யுவன்’




அரவிந்தனி’ல் தொடங்கி ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’-ல் வெகுவாகப்பேசப்பட்ட யுவன் கடந்து வந்திருக்கும் தூரம் மிக அதிகம். தீபாவளி, மௌனம் பேசியதே, இரண்டு பில்லா’க்கள், 7G ரெயின்போ காலனி, ராம், கற்றது தமிழ்,மன்மதன்,புதுப்பேட்டை,பருத்திவீரன், என இன்னும் எத்தனையோ அற்புதமான ஆல்பங்களை கொடுத்து இன்னமும் இப்போது வந்திருக்கும் அனைத்து இளம் இசையமைப்பாளர்களுக்கும் சவால் விட்டுக்கொண்டு புதுசு புதுசாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் யுவன். ‘ஆரண்ய காண்டம்’ போன்ற ஒரு சப்ஜெக்ட் ராஜாவுக்கோ ஏன் ரஹ்மானுக்கோ கூட கிடைக்கவில்லை. அத்தனை அற்புதமான இசை எங்கும் கேட்டிராத ஸ்பானிஷ் பின்னணியில் இசைத்த இசைக்கோவை அது. பின்னணி இசையிலும் சாதனை படைத்திருக்கிறார். ‘புதுப்பேட்டை’ படத்தின் பின்னணி இசை ஒரு முழுமையான ஸிம்ஃபொனி போலவே ஒலிக்கும். இதைப்போல நிறைய Feathers அவரது Cap-ல். என்ன ஒரு குறை இன்னமும் தேசிய விருதுகள் அவரை எட்டிப்பார்க்கவில்லை என்பது மட்டுந்தான்.

சிலர் எப்போதும் யுவனின் மீது குற்றச்சாட்டு வைப்பதுண்டு, அவரின் இசையில் இரைச்சல் அதிகம் என்று. ராஜா’வும் அதே குற்றச்சாட்டிற்கு ஆளானவர் தான். வரிகளை அவரின் இசை விழுங்கிவிடுகிறது என்ற குறை ரஹ்மானையும் கூட விட்டுவைக்கவில்லை. இசைக்கலப்பில் தேவையற்ற இசைக்கருவிகள் மேலே ஒலிப்பது போன்ற தோற்றமே இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு காரணம். டெக்னிக்கலாக எல்லா விஷயத்தையும் ஒழுங்காகச்செய்து விட்டு, அற்புதமான ஒலிச் சேர்க்கையும் கூட்டி வைத்து பாடல் இதயத்தைத்தொடாமல் போனால் அந்தப்பாடலால் ஒரு பயனுமில்லை.

நூறு என்பது ஒரு மேஜிக்கல் ஃபிகர். அதை எட்டிப்பிடிப்பது என்பது உள்ளூர ஒரு பயத்தை உண்டுபண்ணக் கூடிய விஷயம் தான் எல்லாருக்கும். கிரிக்கெட்டிலும் பார்ப்பவர் மனதை படபடப்புக்குள்ளாக்கும் அந்தப் பரபரப்பு நிமிடங்கள். இருப்பினும் எண்ணிக்கையில் அத்தனை நம்பிக்கை கொண்டவரல்ல யுவன். அந்த நூறாவது ஆல்பமாக வெளிவந்திருக்கும் இந்த பிரியாணி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம்.

இதுவரை செய்யாத விஷயங்களை,புதியதான சங்கதிகளை கொண்டு வந்து சேர்த்திருக்கும் ஆல்பம் இந்தப் பிரியாணி. ‘புன்னகை மன்னன்’ வந்தபோது ராஜா எதோ புதிதாகச்செய்ய முயன்றிருக்கிறார் என்ற அத்தனை பேரின் விமர்சனங்களும் இப்போது யுவனை நோக்கி திரும்பியிருக்கிறது. புதிதாக ட்ரெண்ட் செட் செய்யவேணும் என்கிற ஆர்வம் எப்போதும் உள்ளது போல இந்த ஆல்பமும் முன்னதாக வந்த எதற்குள்ளும் சிக்காமல் ஒலிக்கிறது.

முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான ஆல்பம் இது. ஒரு ‘இதயம் இதயம்’ அல்லது ஒரு ‘ஆனந்த யாழை’யோ இங்கு எதிர்பார்க்கவியலாது. Out and Out Youth Album இது. முழுக்க முழுக்க கொண்ட்டாங்களுக்கென இசைக்கப்பட்ட ஆல்பம் இது.


பிரியாணி

பிரியாணி ,கொஞ்சமும் பிசிறில்லாமல் பின்னணியில் ஒலிக்கும் அந்த ‘Hypnotic Flute’ மயக்குகிறதப்பா. தொடர்ந்து வருகிறது என் மண்டைக்குள் சுற்றி சுற்றி வந்துகொண்டேயிருக்கிறது. தன்வி ஷா, பவதாரிணி மற்றும் விலாசினி பாடியபாடல். ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட ‘ராப்’ இது போகிற போக்கில் அத்தனை வேகம் பிடிக்காமல் அதே Tempo’ வுடனேயே பாட்டு முழுக்கச்செல்கிறது. Repeating Rhythm நம்மைக்கேட்கச் சொல்லிக்கட்டிப்போடுகிறது MTV and Channel V-ல்  எந்தவிதத் தயக்கமுமில்லாமல் ஒலிக்கச்செய்யலாம்.மொழிப்பிரச்னையே கிடையாது இந்தப்பாடலுக்கு, :) பாடிய மூன்று பெண்களின் குரல்களும் ஒரே சுதியில் ஒலிப்பது சிறப்பு. கூட இருந்து பாட வைத்திருப்பார் போல யுவன் ;)

ஓரளவு ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் வந்த அந்த ‘I Will Hide It’ ன் இன்ஸ்பிரேஷனில் ஒலித்தது போல இருக்கிறது இந்தப்பாடல். இதுவரை இசைத்த ராப்களில் இது விலகி நிற்கிறது.ஆதி பகவனில் அதிரடியாக ஒலிக்கச்செய்தது போல அல்லாமல் மறைந்திருந்து ஒலிக்கும் இந்த ராப்பாடல் ஆல்பத்திலேயே முதலிடத்தில் :) Truly International Song Indeed. வீட்டில Philips 5.1 DVD ல இந்தப் பாட்டைக் கேட்டேன். வரிகளால் விளக்கவியலாத இழைகள் எங்கெங்கும் பரவிக்கிடக்கிறது. இதுவரை எங்கும் கேட்டிராத சப்தங்களால் நிறைந்து கிடக்கிறது பாடல். தொடர்ந்தும் ஒரே ராகத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த Hypnotic Flute என்னமோ பண்ணுதுய்யா :)

‘Come and get some Biriyaani இந்தப்பக்கம் வந்து தரியா நீ ?

நா நா நா – தேவன்

முதல் பாடல் ராப்’ என்றால் அடுத்த பாடல் Pop. இந்தப்பாடலே மூன்று முறை ஒலிக்கிறது ஆல்பம் முழுக்க. Straight Pop version , New Jack Swing Version and Extended Dance Mix Version என மூன்று விதம். எனக்கென்னவோ அந்த யுவனின் New Jack Swing Pop Version தான் பிடித்திருக்கிறது. ( ‘பட்டியல்’ படத்தில் இதே முயற்சி செய்திருக்கிறார் யுவன். ‘கண்ணை விட்டுக்கண்ணிமைகள் விடை கேட்டால்’ ) மிகச்சரியாக பொருந்தும் தேவனின் குரல் தாளத்துடன் சேர்ந்து ஒலிக்கிறது. இந்தப்பாட்டு கேட்பதற்காக அல்ல. இதைப்பின்னணியில் ஒலிக்கவிட்டுவிட்டு எல்லோருமாகச்சேர்ந்து ஆடத்தான் வேண்டும் :) கேரளாவில் மாப்பிள்ளைப்பாடல் என்று ஒரு வகை உண்டு. கைகொட்டிப் பாடுவார்கள் அதுபோல் கைகொட்டிக்கொண்டு நன்கு பாடிக்களிக்கலாம் இந்தப்பாடலை. இந்த ஆல்பத்தில் அத்தனை பாடலும் ஏகத்துக்கு ஜாலி மூடில் இருந்து கொண்டு இசைத்தது போல ஒலிக்கிறது. ‘ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்’ :)

பொம் பொம் பெண்ணே

அருமையான பியானோவில் பாடலின் ராகத்தை வாசித்துக்கொண்டே ஆரம்பிக்கும் மனதைத்தொடும் பாடல் இது. ‘நெஞ்சைத்தாக்கிடும் இசையே நில்லடி உனக்காய்த்தீட்டிய வரியோ நானடி’  இது கொஞ்சம் ஜாஸ் கலந்து அடித்த இசை. Trumpets-ம், தடலாடியான Drums-ம் கொண்டு, பலவித தாளகதியில் ஒலிக்கும் இந்தப்பாடல். Perfect Jazz. நிறையப்பேர் இதை முயற்சி செய்திருக்கின்றனர். ரஹ்மான் கூட இதே போன்ற Genre ல் ஒலிக்கும் ஒரு பாடலை இசைத்திருக்கிறார். ‘ஸ்ட்ராபெர்ரிக் கண்ணேஎன மின்சாரக்கனவில். யுவன் அதையே எடுத்துப்போட்டுக் கொள்ளவில்லை அதே போல Genre  என்றுதான் சொல்லியிருக்கிறேன். இந்த மாதிரிப்பாடல்கள் கொஞ்சம் இடைவெளிவிட்டு வேறு தாளத்தில் ஆரம்பித்து பின்னரும் முதலில் பாடிய இடத்திற்கே வந்து சேரும். நமக்கு இந்த வடிவம் பிடிபடுவதில்லை பிடிப்பதில்லை, முழுக்க முழுக்க Western Style இது. அந்தக்காலங்களில் வந்த ஆங்கிலப்படங்களில் பாடல்களும் இடப்பெற்றிருந்த போது இந்த முறையிலான பாடல்கள் மிகவும் பிரபலம்.

மேடையில் ஆடிப்பாடிக்கொண்டிருப்பவர்கள் கீழேயும் இறங்கி பார்வையாளர்கள் மத்தியில் வந்து ஆடிவிட்டு பின்னரும் மேடையேறிச்செல்வது போல பல்வேறு இடங்களில் பயணிக்கும் இந்த வகைப்பாடல்கள் நமக்கு கொஞ்சம் அந்நியம் தான் எப்போதும். யுவனைப்பற்றிச் சொல்லவேணுமானால் இதுவே அவருக்கு முதல் முறை. இதுவரை இதுபோல் இசைத்ததில்லை அவர். ரொம்பத்தயங்குவதற்கான காரணமும் அதுவே. அத்தனை பிரபலமாவதில்லை , பலரால் விரும்பிக்கேட்கப்படுவதும் இல்லை :) ட்விஸ்ட் ஆடுவதற்கும் , கூடவே பாடிக்கொண்டே ஆடுவதற்குமான இந்த Jazz :) Enjoy .!

Run For Life

Psycho Unit-ம் கானாபாலாவும் கலந்து பாடிய பாடல் இது. Typical Hip Hop mixed with Perfect Rap and Local gana. 0.22 ல் ஆரம்பிக்கும் அந்த மேண்டலின் இஸ்லாமிய வீடுகளில் பிரியாணி சாப்பிடும் அனுபவத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது. ‘முத்தைத்திரு பத்தித்திரு’விலேயே அருணகிரிநாதர் ஆரம்பித்து வைத்த Rap Music இன்னும் நம்மை விட்டு அகல மறுக்கிறது. 2:40-ல் Local Chennai Beats வரும்போது இன்னும் பாடல் ருசிக்கிறது. இந்த வரிகள் வரும்போது , கானா பாலா’வின் குரல் ஊரில் திருவிழாவில் Loud Speaker குழாயில் ஒலிப்பதுபோல Effect இன்னும் பாடலை நமக்கு அருகில் கொண்டுவந்து சேர்க்கிறது :) ஈஸியாக ஹிப் ஹாப்’புடன் இந்த ராப் கலந்து விடுவதால் இன்னமும் உயிர் பிழைத்திருக்கிறது.

எதிர்த்து நில்

யுவன் 100-க்காக இப்போது பிரபலமாக இருக்கும் அத்தனை இசையமைப்பாளர்களும் சேர்ந்து பாடியது. ‘அடங்காதே அத்து மீறு’ வகையில் வெளிவந்திருக்கும் பாட்டு. ‘சரோஜா’வில் ஏற்கனவே வந்த பாடல் போல ஒலிக்கிறது..அங்க ‘நிமிர்ந்து நில்’ இங்க ‘எதிர்த்து நில்’ Same Genre , வேறொன்றும் இல்லை. நாடோடிகள் ‘சம்போ சிவ சம்போ’ வையும் கூட சொல்லலாம் எனக்கென்னவோ அந்த Stuff இதில் கொஞ்சம் குறைந்து போனது போலவே இருக்கிறது. யாருடைய குரல் எங்கு ஒலிக்கிறது என்பதிலும் குழப்பம். எனக்கென்னவோ ரஹ்மானின் குரலும் ஒலிப்பது போல இருக்கிறது. 3:25ல் கேளுங்க.! தொடர்ந்தும் மேலே ஏறிச்செல்லும் தாளகதி பாடலை அதன் இயல்பில் நியாயப்படுத்துகிறது. கீழிறங்கும் சுரங்களே இல்லை, கூர்ந்து கவனித்தால் தெரியும் :)

நா நா நா – யுவன் ரீமிக்ஸ்

தொண்ணூறுகளில் யுவனை ரீமிக்ஸ் மட்டுமே செய்யத்தெரிந்தவர் என்றே அழைத்த காலமும் உண்டு, இப்போது அது ரீக்றியேட் ஆகியிருக்கிறது. It’s a Perfect Remix , 90’s G-Funk Era reappeared again. மீள்கலவை’யில் எப்போதுமே அடித்துக்கொள்ள இயலாது யுவனை. பட்டியல் படத்தில் ‘ ஆடலுடன் பாடலை’ என்ற எம்ஜியாரின் பாடலை ‘நம்ம காட்டில’ என மீளுருவாக்கம் செய்தது, பின் அதே படத்தில் ‘தீப்பிடிக்க தீப்பிடிக்க’ என்று கலக்கியிருந்தார் யுவன். சொல்லப்போனால் அவர் செல்ல வேண்டிய இடங்களே வேறே..தமிழ் தெலுங்கு என்று மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கிறார். ரீமிக்ஸ் என்பது பாடலை அப்படியே எடுத்துக்கொண்டு 6-8ல் தாளத்தை வேகப்படுத்தி இசைப்பது மட்டுமல்ல. அதற்கும் மேலான விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஒரு இலக்கணமாகவே கொண்டு வந்தவர் யுவன். தீப்பிடித்த ஒரு பாடல் போதும்.

அவர் பாடலையே தானே ரீமிக்ஸ் செய்து அதே ஆல்பத்தில் வெளியிடுவது என்பது முன்னரே தொடங்கியது தான். ஆனாலும் இந்த ‘நா நா நா’ உட்கார்ந்து செய்தது போல அப்படியே அமிழ்த்துகிறது கேட்பவனை. ‘யா யா யா’ என்ற குரல் பின்னால் ஒலித்துக்கொண்டே இருக்கிறது நாமும் அதோடு சேர்ந்து கொஞ்ச நேரத்திலேயே சொல்ல ஆரம்பித்துவிடுவது பாடலுக்கு வெற்றி.

மூன்றாவது வெர்ஷனாக Extended Dance Mix ஆக உருவெடுத்திருக்கும் அந்த வெர்ஷன் அத்தனை பிடிக்கவில்லை எனக்கு.Night Pub-களில் என்ன பாடுகிறது என்றே தெரியாமல் ,விடாமல் எதேனும் சப்தம் வந்து கொண்டிருந்தால் போதும் என்ற மாஸு’க்காக வேணுமானால் இசைத்திருக்கலாம். அத்தனை ரசிக்கும்படியாக இல்லை. பாடலின் வேகம் தானாகக்கூடிவிட்ட கேஸட்டைப்போல ஒலிக்கிறது.

மிஸ்ஸிஸிப்பி

அத்தனை பாடல்களைக்காட்டிலும் ஒரு Off Beat- ஆக ஒலிக்கிறது இந்த மிஸ்ஸிஸிப்பி. அத்தனை சுரத்து இல்லாமல்,ஆல்பத்தில் கடைசி இடம் பெறுகிறது. ட்ரம்ஸும் அந்த தபேலாவும் ஏனோ ஒட்டவேயில்லை. தனியாக நிற்கிறது. கார்த்திக்’கின் குரல் எனக்கென்னவோ அவர் வசனம் பேசுவது போலவே இருக்கிறது. இந்தக்களேபரத்தில் பிறேம்ஜி வேறே. ஹ்ம்..! தண்ணியப்போட்டுவிட்டு பாடுவது போல பாடல் தள்ளாடுகிறது.